
முற்றுறா தீயசொல்லின் சாரம்
என்னைத் தீண்டி
செவ்விழியோரம் நடைபயில்கிறது
பனித்துளி தாங்கிய மென்கசிவு
உன்செவிவழி உட்கொண்டு
உயிரொன்று பிரியும்
ஓசையின் வாதையுடன்
பதைத்துக் கேவுகிறாய்
மென்கசிவு கண்டுணர்ந்து
உன் கருவிழிகளில் திரளும்
அழுகுணிக் கண்ணீரின்
சிறுதுளிகள்
வனாந்தரக் காட்டிடையில்
பெருகிப்போகும்
வெள்ளப் பெருக்கினை
என்னுள் பிரவகித்து
ஊற்றெடுக்க வைக்கின்றன
யுகங்களைக் கடக்கும்
வெற்றிகளைத் தேடி
2
கரையும் தூரம்
கால்வைக்க இடமில்லை
என்றபோதும்
உட்கார்ந்த மகிழ்ச்சி
காணாமல் போகிறது
நிமிடங்கள் கரைகையில்
அருகருகேதான் அமரமுடியும்
என்றபோதும்
விலகி அமர்கிறோம்
ஜன்னலோரத்திற்கும்
நடைபாதைக் கம்பிக்கும்
ஆடை நுனி படாமல்!
நெடுநேரம் காத்த
எச்சரிக்கை தொலைத்து
அருகிச் சாய்கிறோம்
தீண்டும் உறக்கத்தில்
அச்சமுற்று ஆடைதிருத்தி
விலகி அமர்கிறோம்
மன்னிப்புகள் கேட்டபடி
தொலைகிறது தூரம்...
அமர்ந்து சென்றாலும்
அவஸ்தையாகிப் போகிறது
பேருந்துப் பயணம்
அறிமுகமற்ற எதிர்பாலினத்தருகே
- செந்தமிழ்மாரி