தொல்பழம் வரலாற்றுத் தரவுகளைத் தொடர்ச்சியாகக் கொண்டுள்ள இனக்குழுக்களில் ஒன்றாகத் தமிழ்மொழி பேசும் இனக்குழு கருதப்படுகிறது. இக்குழுவினரின் வாழ்விடம், மொழி, வாழ்முறைகள் குறித்தப் பல்வேறு புதிய தரவுகள் பத்தொன்ப தாம் நூற்றாண்டின் இறுதி தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் இறுதி வரை கண்டறியப்பட்டன. இவை குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
இப்பின்புலத்தில் இச்சிறப்பிதழை உருவாக்கத் திட்டமிட்டோம். இவ்விதழின் அழைப்பாசிரியர் தோழர் செந்தில்பாபு அப்பணியை ஏற்றுச் சில கட்டுரைகளைத் தேர்வு செய்து கொடுத்தார். இதழின் பக்க அளவு எனும் நெருக்கடியால் அவை அனைத்தையும் வெளியிட இயலவில்லை. நான்கு கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். செந்தில்பாபு ஆங்கிலத்தில் தாம் எழுதிய கட்டுரையை மொழியாக்கம் செய்து தந்தார். மூன்று கட்டுரைகள் ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டன. ஆங்கிலத்தில் வாசிப்பவர்களுக்குத் தேவைப்படும் சில விவரணங்கள், தமிழ் வாசகர்களுக்குத் தேவைப்படுவதில்லை. இக்கண்ணோட்டத்தில் கட்டுரைகளில் சில பகுதிகளைத் தவிர்த்துள்ளோம்.
இக்கட்டுரைகளில் இரண்டு, நவீனத் தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கம் தொடர்பானது. வேறு இரண்டு, தமிழ்ச் சமூகத்தில் செயல்பட்ட கல்வி முறை குறித்தது. நவீன அறிவு உருவாக்கத்தில் கல்விமுறைகளின் பங்களிப்பைப் புரிந்து கொள்ளத் திண்ணைப் பள்ளிகளின் செய்திகள் உதவுகின்றன. தமிழகத்தில் திருப்பூர் நகரச் செயல்பாடு பல்வேறு தனித்துவங்களைக் கொண்டது. அந்நகரம் குறித்தப் புரிதலுக்கு விஜயபாஸ்கர் கட்டுரை பெரிதும் உதவுகிறது. தமிழ்ச் சமூகத்தின் ஊடகச் செயல்பாடுகள் தனித்துவம் மிக்கவை. அச்சு ஊடகச் செயல்பாடுகள் குறித்து விரிவாக உரையாடலுக்கு உட்படுத்தும் தேவையுண்டு. பிரான்சிஸ் கோடி அவர்களின் தினத்தந்தி, தினமலர் அடிப்படையில் அமைந்த கட்டுரை தமிழ்ச் சமூகத்தின் அடித்தள மக்களின் அசைவியக்கத்தைப் புரிந்துகொள்ள உதவுகிறது.
தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பான புதிய பார்வைகள் மற்றும் அணுகுமுறைகளுக்கான மாதிரிகளாக இவற்றை வெளியிட்டுள் ளோம். இவ்வகையில் ஈழம், மலேசியா மற்றும் பிற இடங்களில் செயல்படும் தமிழ்ச் சமூகம் தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ள வேண்டும். விரிவான தமிழ்ச் சமூக ஆய்விற்கானத் தேடலின் சிறிய புள்ளியாக இவ்விதழைக் கருதுகிறோம்.
கட்டுரைகளைத் தேர்வுசெய்து, இவ்விதழின் அழைப்பாசிரியராகச் செயல்பட்ட தோழர் த.செந்தில்பாபு அவர்களுக்கு எங்களது நன்றி.
- சிறப்பாசிரியர்