திருப்பூர் தொழிலாளர்களை அடிப்படையாகக் கொண்ட உரையாடல்

இந்தியாவில் புதிய தாராளமயச் சீர்திருத்தங்கள் பலசமயங்களில் முறைக்கு மாறாகச் செயல்படுத்தப்படுகின்றன என்றும் பல்வேறு வகையான அமைப்புகளால் உருக்கொடுக்கப்படுகின்றன என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது (ஜென்கின்ஸ் 1999). எடுத்துக்காட்டாக, தொழிலாளர் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மரபான கொள்கை மாற்றங்களை ஆராய்வதால் மட்டுமே கண்டுபிடித்துவிட முடியாது. எனினும் அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகள், நிறுவன மேலாண்மை மற்றும் நீதித்துறையின் நடவடிக்கைகள் மூலம் கொள்கை மாற்றங்களைக் கண்டுபிடித்துவிட முடியும் (ஜென்கின்ஸ் 2004, கோய்லோ மற்றும் விஜயபாஸ்கர் 2010). மேலும் பொது மக்கள் நலனுக்காக மாநில அரசுகள் அதிகம் செலவழிப்பதை முறைப்படுத்துவது கடினம். காலனியத்திற்குப் பிந்தைய சமுதாயங்களில் மக்களிடமிருந்து பெறும் வளங்களை அவர்களுக்கான நலத்திட்டங்களில் முதலீடு செய்ய மாநில அரசுகள் பல கட்டாயங்களுக்கு உட்படுத்தப்படுகின்றன (சன்யால் 2007, சாட்டர்ஜி 2008). இதனால் ஐஎம்எப் - உலக வங்கி ஆகியவற்றின் கட்டாயங்களுக்கு அவை உட்படுகின்றன. மத்திய மாநில அரசாங்கங்களின் நல்லாட்சியின் அடையாளமாக ‘நிதி ஒழுங்கு’ ஆக்கப்பட்டுவிட்ட பின்னரும் சமூக நலத்துறையில் உண்மையில் செலவிடப்படும் தொகை திட்டமிட்ட நிதி செலவழிக்கும் மரபில் செயல்படுவதில்லை. எனினும் அதிகாரத்திலிருக்கும் எந்த அரசாங்கமும் நிதி ஒழுங்கு என்பதை மிக முக்கியமாகக் கடைப்பிடிக்கும்படி இடைவிடாமல் கட்டாயப்படுத்தப்படுகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

மாநில அரசாங்கங்கள் சமூக நலத் திட்டங்களில் முதலீடு செய்த போதிலும் தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்காக அவை ஒன்றுடன் ஒன்று இடையறாது போட்டியிட்டுக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. அதற்காக அவை முதலீடு செய்வதற்கு ஏற்ற நல்ல சூழலை உருவாக்குகின்றன. குறைந்த கூலியில் உழைப்பாளர்கள் கிடைக்கச் செய்வது, மூலதனக் குவியலை நோக்கிய அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பது ஆகியவை இதில் அடங்கும். உலகளாவிய வர்த்தகப் போட்டி, நிதிச் சிக்கனம், தனியார்மயமாக்கல், சந்தை மயமாக்கல் ஆகியவற்றைக் காரணம் காட்டி நடத்தப்படும் மூலதனக் குவியலை உருவாக்கும் ஆட்சியாளர் நாட்டு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதும் இருக்கின்றது. ஏககாலத்தில் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்துவதும் நீக்குவதும் முரணாகத் தோன்றுகின்றது. சமூக நல்வாழ்விற்குக் கொடுக்கப்படும் இந்த அழுத்தம் புதிய தாராளமய வளர்ச்சித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதை அல்லது அதற்கு இசைவு தெரிவிப்பதைக் குறிக்கிறதா? உலகளாவிய உற்பத்தி வலைப்பின்னல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களில் இத்தகைய சமூகநலத் திட்டங்கள் எவ்விதம் செல்வாக்குச் செலுத்துகின்றன? பின் காலனியச் சூழலில் சமூக ஒழுங்கமைப்பின் ஒரு புதிய கட்டத்தை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோமா? அத்தகைய தவிர்க்க முடியாத ஒழுங்கமைப்புகள் மக்களைத் திரட்டுவதற்கான என்னென்ன புதிய வெளிகளைத் திறந்து விடுகின்றன? அரசு திருப்பூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களையும் கீழ்மட்ட அளவில் ஒழுங்குபடுத்துதலையும் ஆராய்வதன் மூலம் இந்தக் கேள்விகளுக்குப் பதில் காண இக்கட்டுரையில் முயற்சிக்கிறேன்.

குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியின் மூலம் உலகளாவிய சரக்கு உற்பத்தி வலைப்பின்னல் அமைப்புகளோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஒரு நகரமாகும் திருப்பூர். தற்போது உலகில் பொருளாதார நெருக்கடி நிகழ்ந்து கொண்டிருக்கின்றது; இந்த வேளையில் அரசாங்கம் அளிக்கும் நலத்திட்ட நடவடிக்கைகள் எப்படி உலக வர்த்தகப் போட்டியின் நெருக்கடியைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களின் மீதான பொருளாதார நெருக்கடி எப்படி வடிவமைக்கின்றது என்றும் இந்த நெருக்கடிக்குத் தொழிலாளர்கள் எப்படி எதிர் வினையாற்றுகின்றார்கள் என்பதையும் அறிவது அவசியம். பொது நீரோட்ட அரசியல் கொள்கை உரையாடல்களிலும் கூட இத்தகைய நலத்திட்ட நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் புதிய வெளிகளை இந்த நெருக்கடி திறந்து விட்டுள்ளதுபோல் தெரிகின்றது என்றும், உலகச் சந்தையில் போட்டியிடுவதற்குத் தேவையான மலிவான உழைப்பாளர்களை உற்பத்தி செய்ய வேண்டிய தேவையுடன் அத்தகைய நலத்திட்ட நடவடிக்கைகளும் இணைந்து தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனையைப் பணியிடத்திலிருந்து தொழிலாளர்களின் குடியிருக்கும் இடத்திற்கு மாற்றிவிட்டது என்றும் நான் வாதிடுகின்றேன்.

சமூக நலத் திட்டங்கள் எங்களது உரிமை என்ற மக்களது கோரிக்கையானது பணியிடங்களை விடவும் வாழுமிடங்களில்தான் எதிர்கொள்ளப்படுகின்றது என்றும், அதே நேரத்தில் பணியிடங்களில் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கும், பணியிடங்களுக்கு வெளியே அரசியல் சமுதாயத்தின் உறுப்பினர்கள் என்கிற வகையில் தொழிலாளர்கள் தங்களது உரிமைகளைக் கோருவதற்கும் இடமளிக்கின்றது என்பதையும் இந்தக் கட்டுரை மேலும் சுட்டிக் காட்டுகின்றது. இத்தகைய நடவடிக்கைகள் புதிய தாராளமய வளர்ச்சிக் கோட்பாடுகளை மேலும் கீழறுக்கிறது என்பதில் சந்தேகமில்லை; அதே வேளையில் சந்தையால் வழிநடத்தப்படும் வளர்ச்சி உத்திகளுக்கு அவை எந்த வகையிலும் ஒரு மாற்றாக அமையவில்லை. பதிலாக, பின் காலனிய சமுதாயங்களில் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அளிக்கும் சுமை எதுவும் இல்லாமல் மூலதனம் தன்னை குவித்துக் கொள்ளும் போக்கை அனுமதிக்கும் ஒரு சமூக ஒழுங்கமைப்பு தோன்றி எழும் கூறுகளை இந்த நிகழ்முறை கொண்டிருக்கின்றது என்றபோதிலும், பணியிடங்களில் தொழிலாளர்களின் உரிமைகளை அரசு பறிக்கும் அதே வேளையில் அரசாங்கத்தின் இத்தகைய தேவைகள் தொழிலாளர்கள் அணி திரள்வதற்கும் உரிமைகள் கோரிப் போராடுவதற்குமான வெளிகளைத் திறந்து விடுகின்றன.

இந்த ஆய்வுக் கட்டுரை பின்வருமாறு கட்டமைக்கப்பட்டுள்ளது. உலகளாவிய ஆயத்த ஆடைத் தயாரிப்பு வலைப் பின்னல் அமைப்பில் ஒரு கண்ணியாகத் திருப்பூரின் தோற்றத்தைப் பின்வரும் பகுதியில் சித்திரிக்கின்றோம்; அத்துடன் உள்ளூர் மூலதனத்தின் இன்றியமையாத தன்மையில் ஏற்படும் மாற்றங்களையும் சித்திரிக்கின்றோம். அடுத்து, அந்தப் பகுதியில் உழைப்புச் சந்தை ஒழுங்கமைக்கப்படும் விதத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் ஆகியவை குறித்த கருத்துருவாக்கத்தின்பால் நமது கவனத்தைத் திருப்புகிறோம். ஒழுங்கமைக்கப்படாத பரப்புகளின் எண்ணிக்கை (முறைசாராத் தொழிலாளர்கள் அல்லது தொழில்களின் எண்ணிக்கை -மொ - ர்) பெருகிக் கொண்டிருக்கும் அதே வேளையில் அரசாங்கத்தால் வழக்கமாக நிர்வகிக்கப்படும் பொருளாதாரப் பரப்புகளில் கூட ஒழுங்கமைப்பு கட்டு குலைக்கப்படுவது முறைகேடாக நடந்து கொண்டிருக்கின்றது. தொழிலாளர்களை அத்துக்கூலிகளாக ஆக்குவது, தொழிற்சங்கங்களின் ஆற்றலைப்பலவீனப்படுத்துவது, தொழிலாளர்களின் போராட்டங்கள் வளர்ச்சிக்குப் பாதகமானவை என்ற கருத்தைக் கட்டமைப்பது இவையெல்லாம் நடப்பிலுள்ள நிகழ்முறையின் கூறுகளாகும். அதே நேரத்தில் பல வகையான பொதுச் சேவைகளையும் அத்தியாவசியப் பொருட்களையும் சந்தை விலையினும் குறைவாகக் கொடுப்பதன் மூலம் ஏழைகளின் நலனில் கவனம் செலுத்தும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் எடுத்து வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகள் உழைப்பின் அடிப்படை விலையை உயர்த்துவதன் மூலம் உழைப்புச் சந்தையின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

மேலும், பல்வேறு அரசுக் கொள்கைகள், அந்தந்த நேரத்துப் பொருளாதாரத் தேவைகள், உலகப் பொருளுற்பத்திச் சந்தையின் நெகிழ்வுத் தன்மை ஆகியவற்றால் திருப்பூர் பின்னலாடைத் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை வேலையில் அமர்த்தப்படுவதன் பக்கம் நமது கவனத்தைத் திருப்புகிறோம். அதைத் தொடர்ந்து, உலகப் பொருளாதார நெருக்கடியின் தொடக்கத்தையும் அது திருப்பூரின் பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் இல்லங்களில் தொழிலாளர்களின் மீது ஏற்படுத்திய தாக்கத்தையும் இக்கட்டுரை சித்திரிக்கின்றது. அடுத்த பகுதி, நிலைமையைச் சமாளிக்க தொழிலாளர்கள் கடைப்பிடிக்கும் பல்வேறு உத்திகளைச் சித்திரிக்கின்றது. இந்த உத்திகள் அரசு தலையிடும்விதத்தைப் பொறுத்து அமைந்திருக்கின்றன; தொழிற்சாலைகள் முறைப்படுத்தப்படாத அதே வேளையில் மக்களை ஆள்வதற்கு அரசாங்கம் கைகொள்ளும் வழிமுறைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து அமைந்திருக்கின்றது. தேசிய கிராமப்புற வேலை உத்தரவாதச் சட்டம், மானிய விலையில் உணவுப் பொருட்கள் மற்றும் இதர நலத்திட்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதானது தொழிலாளர்கள் இந்த நெருக்கடியைச் சமாளிக்க உதவியது அதே போல் உலக மற்றும் உள்நாட்டு மூலதனம் அதிகக் கூலிச் சுமையின்றி மூலதனத் திரட்டலில் தொடர்ந்து ஈடுபடவும் உதவியது. இறுதியாக, நான் முன்னர் எழுப்பிய கேள்விகளுடன் இந்தக் கருத்துக்களை இணைக்கின்றேன்.

பின்புலம்:

தென்னிந்தியாவில் உள்ள திருப்பூர், இந்தியாவின் மிகப் பெரும் பின்னலாடை ஏற்றுமதி மையமாகும்; வளர்முக நாடுகளின் மிகவும் இயங்காற்றல் கொண்ட ஆடைத் தயாரிப்புத் தொழிற்சாலைகள் நிறைந்த நகரங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது. 2006 - 07ஆம் ஆண்டில் மட்டும் 11,000 கோடி ரூபாய் அளவிற்கு ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட திருப்பூர் நகரத்தில் பல்வேறு பெரிய ஏற்றுமதி நிறுவனங்களும் நூற்றுக்கணக்கான துணை நிறுவனங்களும், பதப்படுத்தும் நிறுவனங்களும் இருக்கின்றன; அவற்றில் மூன்றிலிருந்து ஐந்து இலட்சம் தொழிலாளர்கள் வரை வேலை பார்க்கின்றனர். முக்கியமாக, புதிய பொருளாதாரச் சீர்திருத்தக் காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள திருப்பூரின் வளர்ச்சியானது உலகச் சந்தையுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்ட ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுகின்றது. உலகமயம் எப்படி வளர்ச்சிக்கும் வேலை வாய்ப்பிற்கும் உதவுகின்றது என்பதற்கு ஒரு எடுத்துக் காட்டாகவும் கருதப்படுகின்றது. திருப்பூருக்கு அருகிலிருந்தும் தமிழ்நாட்டின் தொலைதூர உள்பகுதிகளிலிருந்தும் விரிவான வலைப்பின்னல் அமைப்புகளின் மூலம் வரும் தொழிலாளர்களால் இந்த வளர்ச்சி தொடர்ந்து சாத்தியமாக்கப்படுகின்றது; இது நகர மற்றும் கிராமப் புறங்களுக்கு இடையில் புது வடிவிலான நடமாட்டங்களையும் தொடர்புகளையும் உண்டாக்குகின்றது.

திருப்பூரைச் சுற்றி 50 கி.மீ சுற்றளவிற்குள் உள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து தொழிலாளர்கள் பஸ்கள் மற்றும் ரயில்களில் வந்து போகும் தொழிலாளர்களுடன் தொலைதூரக் கிராமங்களிலிருந்து குடிபெயர்ந்து அருகிலுள்ள கிராமங்களில் வசிக்கும் தொழிலாளர்களும் வேலைக்கு வந்து போகின்றனர். கிராமங்களில் உள்ள தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் தொழிலாளர்களின் போக்குவரத்தைக் குறைப்பதற்காகவும் பெரிய ஏற்றுமதி நிறுவனங்களும் இந்தக் கிராமங்களில் தொழிற்சாலைகள் அமைத்துள்ளனச். 1990 திலிருந்து 15 வருடங்களாக வருடத்திற்குச் சராசரியாகச் சுமார் 20% என்கிற அளவிற்கு அந்நகரிலிருந்து ஏற்றுமதி அதிகரித்து வந்துள்ளது. அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் தான் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றது; தற்போது நடப்பிலுள்ள பொருளாதார மந்தநிலை ஏற்றுமதியைப் பாதித்துள்ளது. அது பொருளாதாரச் செயல்பாடு குறைக்கப்படுவதற்கும் அதனால் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது குறைக்கப்படுவதற்கும் இட்டுச் சென்றுள்ளது.1

தனியார் துறையின் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காகப் புதிய தாராளமயக் கொள்கைகளைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில் ஏழைக் குடும்பங்களுக்கான நலத் திட்டங்கள் பலவற்றை வகுப்பதில் முன்னணியில் இருக்கும் மாநிலமான தமிழ்நாட்டில்தான் திருப்பூர் இருக்கின்றது. உண்மையில், தற்போதைய அரசாங்கம் கடந்த தேர்தலில் (2009 மக்களவைத் தேர்தல் - மொ-ர்) வெற்றி பெற்றதற்கு இந்த நலத்திட்டங்களைப் பயனளிக்கும் வகையில் செயல்படுத்தியதே காரணம் என்று பல தரப்பினர் கூறுகின்றனர். தேச அளவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் அதிகாரத்திற்கு வந்ததற்குத் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்புச் சட்டம் போன்ற திட்டங்களைச் செயல்படுத்தியது ஓரளவிற்குக் காரணம் என்று கருதப் படுகின்றது. மக்களை நிர்வகிப்பதில் எடுக்கப்படும் அத்தகைய நடவடிக்கைகள் திருப்பூரின் உள்ளூர்த் தொழிலாளர் சந்தையின் மீதும், நெருக்கடிகளைச் சமாளிக்கப்படும் விதத்திலும் கணிசமான செல்வாக்குச் செலுத்தக்கூடும். உலகளாவிய வலைப்பின்னல் அமைப்புகளில் பதியப்பட்டுள்ளதும் அதே வேளையில் தொழிலாளர்களின் பெருக்கம் மற்றும் மூலதனத்தின் பெருக்கம் ஆகிய அடர்த்தியான வலைப்பின்னல் அமைப்புகள் மூலம் கிராமப்புறத்துடனும் இணைக்கப்பட்டுள்ள வேகமாக வளர்ந்து வரும் நகரம்; உலகளாவிய பணியிடங்களில் நிலவும் நிச்சயமற்ற தன்மைகளையும் பாதுகாப்பற்ற தன்மைகளையும் பிரதேச அளவிலான சமூகநல ஆட்சிகளுக்கு உட்பட்ட தொழிலாளர்கள் எப்படிச் சமாளிக்கின்றனர் என்பதை ஆராய்வதற்கு மிகப் பொருத்தமான கண்ணியாகும் இது.

திருப்பூரில் உள்ள பல்வேறு தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை ஆய்வுக்கு உட்படுத்திய கள ஆய்வு ஒரு வருட காலம் நடத்தப்பட்டபோதிலும், உலகளாவிய நெருக்கடி தொடர்பான பிரச்சனை கள் 2009 மே முதல் ஜுலை வரையிலான மாதங்களில் நடத்தப்பட்டது. 400 தொழிலாளர்கள் நேரடி ஆய்வு செய்யப்பட்டனர்; அத்துடன் ஆயத்த ஆடைத் தயாரிப்பின் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் குறிப்பாக ஆராயப்பட்டனர்; பெரிய ஏற்றுமதியாளர்கள், சிறிய துணை ஒப்பந்தக்காரர்கள் மற்றும் இந்நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடம் நேர்காணல்கள் எடுக்கப்பட்டன ஆகியவை திருப்பூரில் நடத்தப்பட்ட இந்தக்கள ஆய்வில் அடங்கும். உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களிடமும், தொழிற்சங்க உறுப்பினர்களிடமும் பேட்டி எடுக்கப்பட்டது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் இருந்ததனால், அவர்களது வாழ்க்கையின் மீது பொருளாதார மந்தநிலை ஏற்படுத்திய தாக்கத்தை ஆராய்வது கடினமாக இருந்தது. அதன் விளைவாக, ஜுலை 2009இல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 25 தொழிலாளர்களை ஆய்விற்கு உட்படுத்தினோம்; திருப்பூருக்குத் தேவையான தொழிலாளர்களை சப்ளை செய்யும் ஒரு முக்கிய கேந்திரம் அக்கிராமம். இத்துடன், திருப்பூரை அடுத்து உள்ள கிராமங்களில் உள்ள தொழிலாளர்களிடம் 2009 ஜனவரி முதல் ஜுன் வரையில் நடத்தப்பட்ட கள ஆய்விலிருந்தும் நான் தரவுகளைப் பெற்றேன். பொதுவாக இந்தக் கள ஆய்வு ஏற்றுமதியைச் சார்ந்திருப்பதன் விளைவாக உழைப்புச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சித்திரிக்கப் பயன்படுகின்ற அதே நேரத்தில், நெருக்கடி காலத்தில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தொழிலாளர்களின் சமாளிக்கும் உத்திகளுக்கும் நலத் திட்ட உதவிகள் வழங்கப்படுவதற்கும் உள்ள தொடர்பை ஆராய்வதற்குக் கள ஆய்வை எடுத்துக் கொள்கின்றேன். பின்வரும் பகுதியில், தமிழ்நாட்டில் சமூக நல ஆட்சியின் தோற்றத்தையும் உழைப்பு சந்தையின் ஒழுங்கமைப்பு குலைக்கப்படு வதையும் அடையாளம் காண்கிறேன்.

உடமைப் பறித்தல் எதிர்ப்புப் பொருளாதாரச் சீர்திருத்த யுகத்தில் நலத்திட்டங்கள் பற்றிய கருத்துருவாக்கம்

பின்காலனிய அரசாங்கம் தவிர்க்க இயலாத வகையில் நலத்திட்ட உதவிகள் அளிக்க வேண்டியிருப்பதைப் புரிந்து கொள்வதற்காக நான் சன்யாலின் (2007) விளக்கத்தைப் பின்பற்றுகின்றேன். பின் காலனிய ஜனநாயகங்களில் ஆதிமூலதனத் திரட்டலையும் முன்னுக்குத்தள்ளுவதற்கு அரசியல்எல்லைகள் இருக்கின்றன என்பதைச் சன்யால் சுட்டிக்காட்டுகின்றார். இந்திய அரசு குறித்த கிராம்சியப் புரிதலின் குறிப்பறிந்து, பெரும்பாலான சமுதாயங்களில் முதலாளித்துவ வளர்ச்சிக்கு முன்னதாக நடக்கும் ஆதிமூலதனத் திரட்டலையும் கூலி உழைப்பாளர்கள் உருவாவதற்கான நிலைமையை உண்டாக்குவதையும் அரசியல் நிர்ப்பந்தங்கள் காரணமாக முழுமையாகச் செய்ய முடியாது என்று அவர் சுட்டிக் காட்டுகிறார். மக்களிடமிருந்து உற்பத்திசாதனங்கள் பறிக்கப்பட்டு, கிராமப்புறங்களை விட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டாலும் அவர்களில் பெரும்பாலோரால் மூலதனத்தின் செயற்களத்திற்குள் நுழைய முடியவில்லை. அதற்குப் பதிலாக அவர்கள் ‘தேவைப் பொருளாதாரம்’ என்று அவரால் அழைக்கப்படும் ஒரு பொருளாதாரத்தில் கால் வைக்கின்றனர்; அதில் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்வதற்காக அவர்கள் பல்வேறு வகையான வேலைகளைச் செய்கிறார்கள் என்ற போதிலும், நவீன மூலதனத் திரட்டலை நீட்டிக்க வேண்டும் என்றால் அரசு இந்த அனைத்தையும் இழந்த மக்கள் பிரிவினரைப் புறக்கணிக்க முடியாது. இந்த நிர்ப்பந்தம் ஆதி மூலதனத் திரட்டல் தடுக்கப்படுவதற்கு இட்டுச் செல்கின்றது என்று அவர் வாதிடுகின்றார்.

வளர்ச்சி அடைந்த முதலாளித்துவப் பொருளாதாரங்களில் பல்வேறு செய்முறைகளின் மூலம் முதலாளித்துவமல்லாத துறைகளிலிருந்து மூலதனம் தன்வசப்படுத்தப்பட்டு, முதலாளித்துவத் துறைக்கு மாற்றப்படுவது, மூலதனத் திரட்டலின் ஆரம்ப கால வரலாறாக இருக்கிறது என்றால், பின்காலனியச் சமுதாயங்களில் ஆதி மூலதனத் திரட்டலின் பாதகமான விளைவுகளை எதிர்கொள்வதற்காக முதலாளித்துவத்துறையிலிருந்து மூலதனத்தை முதலாளித்துவமல்லாத துறைக்கு மாற்றும் போக்கு ஏககாலத்தில் நடைபெறுகின்றது. ஜனநாயக அரசியலின் நிர்ப்பந்தங்கள் மூலதனத்தின் செயல்தளத்திற்கு வெளியேயும் வழக்கமான ஜீவனோபாயங்களுக்கும் வெளியேயும் சிக்கிக் கொண்டவர்களின் நலனுக்காக வரிசையாகப் பல திட்டங்களைச் செயல்படுத்துமாறு அரசைக் கட்டாயப்படுத்துகின்றன. வேறு வார்த்தைகளில் கூறினால், மூலதனம் தொடர்ந்து உருவாகிக் கொண்டிருக்கும் நிலையிலேயே இருக்கும் பொழுது முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் காணப்பட்டது போன்ற பாதையில் இங்கு முதலாளித்துவ வளர்ச்சி என்பது எப்போதும் இருக்க முடியாது என்று அவர் வாதிடுகின்றார். உடைமைப் பறித்தலின் தாக்கங்களைத் தடுத்து நிறுத்தம் முயற்சிகளில் சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி மற்றும் ஐநாவின் துணை அமைப்புகள் போன்ற உலக நிர்வாக முகவர்கள், தங்களின் உத்திகள் மற்றும் திட்டங்களைக் கொண்ட நீண்ட பட்டியலின் மூலம் தேசிய அரசாங்கங்களுக்குப் பொருளாதார ரீதியாகவும் கருத்துகள் ரீதியாகவும் உதவி செய்கின்றன. உலகளாவிய நூற்றாண்டு வளர்ச்சி இலக்குகள், அடிப்படை உரிமைகள் மற்றும் மனித வளர்ச்சியை உரிமைகள் அடிப்படையில் அணுகுதல் ஆகியவற்றைப் பிரயோகித்து மூலதனத்தின் செயல் பரப்பிற்கு வெளியே இத்தகைய முறைசாரா வெளிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை நிர்வகிப்பதற்குப் புதிய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

நல உதவிகள் வழங்கப்பட வேண்டிய அவசியம் பற்றிய இத்தகைய புரிதல் அத்தகைய திட்டங்கள் இருப்பதற்கான விளக்கத்தை அளிக்கும் அதே வேளையில், இந்த நலத்திட்ட ஆட்சி முறை உழைப்புச் சந்தையின் மீது செலுத்தக் கூடிய செல்வாக்கு மூலம் எப்படி மூலதனத்தின் செயல்பரப்பிற்கு உருவம் கொடுக்கின்றது என்பதைப் பற்றி அது கூறுவதில்லை. மலிவான உழைப்பு உள்ளிட்ட பல்வேறு கூறுகளின் மூலம் உலகச் சந்தையில் போட்டியிடுவதற்காக மூலதனத் திரட்டலுக்கான உத்திகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள பின்னணியில் இது குறிப்பாக முக்கியத்துவம் மிக்கது. இந்தியாவில் தற்போது மூலதனத் திரட்டல் முறைப் படுத்தப்பட்ட தொழில் பரப்பிற்குள் கூட முறை சாராத் தொழிலாளர்கள் பிரிவைப் பெரிதும் சார்ந்திருக்கும் உண்மை நிலையானது, இந்த விளக்கத்திற்குக் குறிப்பான முக்கியத்துவம் அளிக்கின்றது. மேலும், மேற்குறிப்பிட்ட விளக்கம் அடிப்படையில் நல உதவிகள் அளிக்கும் திட்டங்களுக்கு அரசாங்க உந்துதலே காரணம் என்று கருதிக் கொள்ளும் அதே வேளையில், இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் பிரதேச சமூக இயக்கங்களின், பல்வேறு உள்ளூர் அமைப்புகளின் பாத்திரத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இத்தகைய நலத் திட்டங்களின் தன்மையையும் அளவையும் இத்தகைய உள்ளூர்க் காரணிகள் எப்படி வடிவமைக்கின்றன என்பதைச் சன்யால் முழுமையாக விளக்கவில்லை. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டில் ஆதிக்கசாதி எதிர்ப்பு இயக்கத்தின் நீண்ட வரலாறு, குறிப்பாகக் கீழ் சாதி மக்களுக்கான இடஒதுக்கீடு போன்ற பல்வேறு திட்டங்களாகப் பரிணமித்தது. நாட்டிலுள்ள இது போன்ற இதர மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்படும் நலத்திட்டங்கள் பலவற்றை வகுப்பதில் தமிழ்நாட்டின் ஆற்றல் பிரசித்தி பெற்றது. உண்மையில், பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம், பொது விநியோக முறையின் ஒப்பீட்டளவில் சிறந்த செயல்பாடு, மேம்பட்ட ஆரம்பச் சுகாதார நலன், செயல்வழிக் கற்றல் அமல்படுத்தப்படுதல் மற்றும் மிகச் சமீபத்தில் ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு போன்ற திட்டங்களைப் பயனளிக்கும் வகையில் செயல் படுத்தப்படுவதற்காகத் தமிழ்நாடு பல்வேறு வகையான அமைப்புகளால் பாராட்டப்பட்டுள்ளது.

தற்போது ஆட்சியிலுள்ள திமுக கடந்த தேர்தலில் தன்னைத் தேர்ந்தெடுத்தால் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதாக வாக்குறுதி அளித்தது. கிலோ ஒரு ரூபாய்க்கு அரிசி, பொது விநியோக முறையின் கீழ் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்களில் சமையல் எண்ணைய், மசாலா வகைகள், பருப்பு வகைகள் போன்றவற்றைச் சேர்ப்பது, இலவச கேஸ் அடுப்பு, மானிய விலையில் கேஸ் சிலிண்டர், இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டி, நிலமற்ற குடும்பங்களுக்கு 2 ஏக்கர் நிலம் போன்றவை அவற்றில் அடங்கும். அந்தக் கட்சியின் வெற்றிக்குப் பிரச்சாரமே பெரும் காரணம் என்று கருதப்படுகின்றது; அதிகாரத்திற்கு வந்தவுடன் தன்னுடைய வாக்குறுதிகளை வெற்றிகரமாக நிறைவேற்றத் தொடங்கியது; வெற்றி வெவ்வேறு அளவுடையதாக இருந்தபோதிலும். அதற்குப் பின்னர் பக்கத்து மாநிலமான ஆந்திராவில் செயல்படுத்தப்படுவது போன்ற ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்தியது. விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்குப் பேறு கால பலன்கள், விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு, குழந்தைகளுக்குக் கல்வி உதவித் தொகை, முதியோருக்கு ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்கும் தமிழக விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டத்தை 2006இல் தொடங்கியது. வேலை கேட்கும் கிராமப்புறக் குடும்பங்களுக்குக் குறைந்தபட்சக் கூலியுடன் வருடத்திற்கு 100 நாட்கள் வேலை வழங்கும் மத்திய அரசாங்கத்தின் கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டமும் இவற்றுடன் சேர்ந்து கொள்ள, இந்த மாநிலம் நாட்டிலேயே மிகச் சிறந்த சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஒன்றைக் கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

மாநில அரசாங்கத்தின் மொத்த வரிவருவாய்ச் செலவினத்தில் சமூகத் துறைக்குச் செலவழிக்கப்படும் தொகையின் பங்கு விகிதத்தைப் பார்த்தாலும் 1999-2000க்கும் 2007-2008க்கும் இடையில் அது கிட்டத்தட்ட மாறாமல் நிலையாக இருந்திருக்கின்றது. ஆனால், அதற்கு முந்தைய பத்தாண்டுகளில் 1990-91இல் 46ரூஇலிருந்து 1999 - 2000இல் 37% ஆகக் கடும் வீழ்ச்சி அடைந்திருந்தது. இதில், சமூகப் பாதுகாப்பிற்காகச் செலவழிக்கப்பட்ட தொகையின் பங்கு விகிதம் உண்மையில் 1999-2000இல் 2.55% இலிருந்து 2007-08இல் 5.3ரூஆக அதிகரித்திருந்தது. அவ்வருடங்களுக்கு இடையே ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதிலும் அதிகரித்திருந்தது. மேலும், தமிழ்நாட்டில் தேசிய கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்திற்குச் செலவழிக்கப்படும் தொகை இந்தச் செலவின் ஒரு பகுதி அல்ல; அந்தத் தொகை முழுவதும் அத்திட்டத்தில் கூலி வழங்குவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என்பது இந்தப் போக்கையே சுட்டுகின்றது. என்றபோதிலும் இத்தகைய புள்ளி விவரங்களில் பிரச்சனை எதுவும் இல்லை என்று நாம் சொல்வதாக அர்த்தமில்லை. முதலாவதாக, இத்துறைகளில் செலவழிக்கப்படும் தொகையின் தனிநபர் சராசரி விகிதம் செலவிடப்படும் தொகை நிச்சயமற்ற தன்மையின் அளவுடன் அல்லது இழப்பின் அளவுடன் பொருந்திப் போவதில்லை என்பதை வெளிப்படுத்தலாம். மேலும், இத்தகைய சந்தர்ப்பங்களில் கசிவு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததுதான். நிதிச் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்த போதிலும் அரசாங்கங்கள் அத்தகைய நலத்திட்டங்களில் செலவிடும்படி கட்டாயப்படுத்தப் படுகின்றன என்பதையே நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

அதே வேளையில், தனியார்மயம் மற்றும் சந்தைமயம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஆட்சி முறையைக் குறிக்கின்ற வகையிலான பல தொடர் நடவடிக்கைகள் எடுப்பதில் மாநிலம் முன்னணியில் இருக்கின்றது (கென்னடி 2004; விஜய பாஸ்கர் 2010). தனியார் மூலதனத்தை ஈர்ப்பதற்கான போட்டியில், மாநிலத்தின் வளர்ச்சியை வழிநடத்துவதில் தனியார் மூலதனத்திற்குப் பெரிய பங்கு அளிக்கும் வகையில் மாநில அரசாங்கம் கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு சட்டங்களை இயற்றியிருக்கின்றது. அதனால் மாநிலத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காகப் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களை வெற்றிகரமாக ஈர்க்க முடிந்திருக்கின்றது. நீர், சாலைகள் மற்றும் நகர்ப்புற அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் போன்ற பொது சேவைகளைத் தனியார் மயமாக்கியும் இருக்கின்றது. மேலும், அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் தொழில் வளர்ச்சி போன்ற காரணங்களுக்காக விவசாயிகளிடமிருந்து நிலத்தை அரசாங்கம் விரைவாக எடுத்துக் கொள்வதற்கு வகை செய்யும் சட்டத்தையும் நிறைவேற்றியிருக்கின்றது. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நிலத்தை கையக்கப்படுத்தும் அரசாங்கம் அதை மான்ய விலையில் தனியார் மூலதனத்திற்கு அளிக்கின்றது. மேலும், இந்தக் காலகட்டத்தில் தொழிலாளர் நலச்சட்டங்கள் அமல்படுத்தப்படும் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றது.

வேலை வாய்ப்பிலும் கூட, முறை சார்ந்த தொழில் துறையில் வேலை பார்ப்போரின் விகிதம் 1993-04இல் 8.46% இலிருந்து 2004-05இல் 7.42% ஆகவும், 1999-2000இல் பொருளுற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு 20.46% என்பதிலிருந்து 2004-05இல் 17.92% ஆகக் குறைந்திருக்கின்றது. (சியாம் சுந்தர் 2009-10). மேலும் மொத்த தொழிலாளர்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 2000-01இல் 7.82% இலிருந்து 2004-05இல் 13.3% ஆக அதிவிரைவாக அதிகரித்திருக்கின்றது (மே.குநூல் 27). மேலும், சமூகப் பாதுகாப்பு வலையத்திற்குள் வராத சிறிய தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையும் சியாம் சுந்தர் சுட்டிக் காட்டுகின்றார். தமிழ்நாட்டில் முறைசார்ந்த தொழிலாளர்களின் உண்மை ஊதிய விகிதமும் கூட 1993க்கும் 2003க்கும் இடைப்பட்ட காலத்தில் குறைந்திருக்கின்றது; ஆனால், அலுவலகப்பணியாற்றும் தொழிலாளர்களின் சராசரி சம்பள விகிதம் 6.6% ஆக உயர்ந்திருக்கின்றது. இது பொருளாதாரச் சீர்திருத்தக் காலத்தில் உழைப்புச் சந்தை இரு துருவங்களாகப் பிரிந்து அதிகரிப்பதைக் குறிக்கின்றது.

புதிய தொழிலுற்பத்தித் தளங்களில் எல்லாம் தொழிலாளர்கள் பேரம் பேசுவதற்கு அரசு இடமளிக்காதவையாக இருக்கின்றது. பழையமுறை சார்ந்த தொழிற்சாலைகளிலும் கூடத் தொழிலுறவுகளில் தொழிலாளர்களுக்கு எதிராகத் திருப்பத்தைக் குறிக்கும் வகையிலான பணி நடைமுறைகள் கைகொள்ளப்படுகின்றன. இத்தகைய வளர்ச்சி மற்றும் முன்னேற்ற நிர்வாகத்தில்தான் திருப்பூரில் உலக நெருக்கடிகளின் விளைவுகள் வெளிப்படுகின்றன. முந்தைய மூலதனக் குவிப்பு நிர்வாகத்திலும் உலக மூலதனத்தின் தற்போதைய அவசரத் தேவையிலும் ஒரு தேச அரசின் முன்னுரிமைகளால் உருக்கொடுக்கப்படுகின்ற தொழில் ஒழுங்கமைப்பு மற்றும் தொழிலாளர் நிர்வாகம் ஆகியவை பற்றி அடுத்த பகுதி சித்திரிக்கின்றது.

அடிமண்டி உற்பத்தி முறையும் பருத்தி பின்னலாடை உற்பத்தியை முறைசாராததாக ஆக்குவதும்

பல்வேறு ஆய்வுகளில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளபடி, இந்திய ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலில் வெவ்வேறு நோக்கங்களுக்காக அரசு பல முறை தலையிட்டுள்ளது; இது குறிப்பிட்ட அமைப்பு வகை மற்றும் தனித்துவமான திறனின் தோற்றத்திற்கும் இட்டுச் சென்றது (திவாரி 2004; பேடி மற்றும் கோரோடோனன் 2008). ஆயத்த ஆடைத் தயாரிப்புத் துறை வேலைவாய்ப்புகளை உண்டாக்கக் கூடிய ஆற்றல் கொண்டது என்பதால் 2001ஆம் ஆண்டு வரை அந்தத் துறை சிறு தொழில் பிரிவுக்குள் வரும் வகையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய இந்தியாவில் இறக்குமதியை நம்பி இருப்பதற்குப் பதிலாகத் தொழில் மயமாக்க வேண்டும் என்கிற அவசியத் தேவையின் காரணமாக மூல வளங்களைப் பெரிய தொழிற்சாலைகளுக்கு ஒதுக்குவதற்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருந்தது; எனவே குறுகிய கால நோக்கில் அந்தத் துறையில் அதிகரித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களை உள்வாங்கிக் கொள்ள முடியாது என்கிற உண்மையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு கொள்கைகளை வகுக்க வேண்டியிருந்தது. ஆதலால், தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் ஆயத்த ஆடைத் தயாரிப்பு உள்ளிட்ட சில துறைகளைச் சிறு தொழில்கள் எனத் தனியாக ஒதுக்கி வைக்க வேண்டியிருந்தது. சிறு தொழில் பிரிவுக்கு முதலீட்டு உச்ச வரம்பு இருந்த காரணத்தால் ஆயத்த ஆடை நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்வது சிரமமாக இருந்தது; ஏனெனில், அப்படிச் செய்யப் போனால் சிறு தொழில்களுக்கு என விதிக்கப்பட்டிருந்த உச்ச வரம்பை மீற வேண்டியிருக்கும். ஆதலால் ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் குறைவான வருவாய் உள்ள இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்திய ஆயத்த ஆடைத் துறை மிகச் சிறிய நிறுவனங்களைக் கொண்டதாக இருந்தது. நிறுவனங்கள் வளர வளர அவை மேலும் சிறு நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டன; போட்டியிடும் இதர நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிக அளவில் துணை ஒப்பந்தக்காரர்களுக்கு உற்பத்தியைப் பிரித்துக் கொடுக்கும் ஒரு உற்பத்திக் கட்டமைப்பை இது உண்டாக்கியது. இந்தக் கட்டமைப்பின் விளைவாக, ஆயத்த ஆடைத் தொழிலில் வேலை என்பது பிரதானமாக முறைசாராத் தன்மை கொண்டதாக இருந்தது.

ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் உற்பத்தி பெருகப் பெருக உற்பத்திச் செலவு குறைகின்ற அடிப்படையில் போட்டியிடுவதை இத்தகைய கொள்கைகள் தடுக்கின்றன; அதே வேளையில், தங்களுடைய உற்பத்திப் பொருட்களுக்கு கூடுதலான நெகிழ்வுத் தன்மையுள்ள சந்தைக்கு உற்பத்தி செய்வதை எளிதாக்குகிற ஒரு கட்டமைப்பை அவர்கள் பேணி வளர்த்தனர். அத்தகைய பரவலாக்கப்பட்ட, வலைப்பின்னல் உற்பத்திக் கட்டமைப்பின் அனுகூலங்களைப் பயன்படுத்திக் கொண்டு மேம்படுத்தப்பட்ட வடிவமைப்பு உள்ளடக்கத்துடன் கூடிய உற்பத்தியின் அளவு குறைவாக இருக்கின்ற பிரிவுகளில் போட்டியிடுகின்ற வழியை இந்த நிறுவனங்கள் கண்டன. ஒப்பீட்டு நோக்கில் செயல்திறன் அளவு (உற்பத்தியின் அளவு - மொ-ர்) சீனா அல்லது வங்கதேசம் போன்ற போட்டி நாடுகளில் மிக அதிகமாக இருக்கின்றது. இந்தத் தொழிலின் போட்டியிடும் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கத்துடன் சிறு தொழில் என்கிற ஒதுக்கீட்டின் விளைவுகளை வலுவிழக்கச் செய்யும் பல கொள்கைச்சீர்திருத்தங்கள் 2000ஆம் ஆண்டிலிருந்து மேற் கொள்ளப்பட்டன. 2000இல் பின்னலாடைப் பிரிவு உள்பட ஆயத்த ஆடைத் தொழிலின் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது; அதாவது அவை இனியும் சிறுதொழில் பிரிவுக்கு என்று தனியாக ஒதுக்கப்பட்டவை அல்ல. செயல் திறனில் பெருமளவு விரிவாக் கத்திற்கும், பெரிய நிறுவனங்கள் தோன்றுவதற்கும் இது வழி வகுத்தது.2 என்றபோதிலும் இந்திய ஆயத்த ஆடைத் தொழிலின் கணிசமான பகுதி தொடர்ந்து முறைசாராத் துறைக்கு உட்பட்ட தாகவே இருப்பதால் தொழிலாளர்களின் உழைப்பு சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருக்கவில்லை.

எடுத்துக்காட்டாக, மொத்த ஆயத்த ஆடை உற்பத்தியில் 25% மட்டுமே தொழிற்சாலைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகின்றவை என்று குப்தா அறிக்கை கூறுகின்றது. மற்ற பல நாடுகளைப் போலவே, மோசமான பணி நிலைமைகள் நிலவும் இடமாக ஆயத்த ஆடைத் தொழில் இருந்து வருவதை நாம் மீண்டும் மீண்டும் காண்கிறோம் (கல்பகம் 1993; ஆலம் 1994; விஜயபாஸ்கர் 2005). திருப்பூர் விஷயத்தில், உலகச் சந்தையின் நிர்ப்பந்தங்கள் ஓய்வு நேர உடைகள் தயாரிப்புக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தை மேலும் அதிகரித்திருக்கின்றன; மற்றும் சில பழைய போக்குகளை வலுப்படுத்தியிருக்கின்றன. திருப்பூரில் பிரத்தியேகமாகக் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குறைந்த அளவில் விற்பனையாகும் அவ்வளவு நவநாகரீகமல்லாத ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. அவை முன்னணி சில்லறை வர்த்தக நிறுவனங்களான மார்க்ஸ், ஸ்பென்சர்ஸ், பிரிமார்க், சாரா லீ, வால்மார்ட் போன்ற நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன.

திருப்பூர் அரை நவநாகரீக ஆடைகள் தயாரிப்பிலேயே பிரத்தியேகமாக ஈடுபடுவதால், தரம் மற்றும் காலம் ஆகியவற்றின் விஷயத்தில் உற்பத்தியாளர்கள் மிகப் பெரும் சவால்களைச் சந்திக்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில், ஆடை பாணிகள் அடிக்கடி மாறுவது தடாலடியாக அதிகரித்துள்ளது; ஜாரா போன்ற ஆடை கொள்முதலாளர்கள் ஒரே வருடத்தில் 12 முறை புதுப்புது பாணி ஆடைகளைக் கேட்டுள்ளனர். மேலும், உலக ஆயத்த ஆடைச் சந்தையைத் திட்டமிட்டு இயக்கும் கொள்முதலாளர்களும் முன்னணிப் பெரும் நிறுவனங்களும் விலை விவரப் பட்டியலைப் பராமரிக்கும் செலவைத் தவிர்ப்பதற்காக விற்கப்படும் நேரம் அருகில் வந்த பின்னர்தான் தங்கள் தேவையைத் தெரிவிக்கின்றனர். இதனுடன் கடந்த பத்தாண்டுகளில் திருப்பூரில் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு ஆடைகள் தாயாரித்துக் கொடுப்பதற்கு இந்த நிறுவனங்கள் கொடுக்கும் கால அவகாசம் தடாலடியாகக் குறைந்து விட்டது; கடந்த நான்கைந்து ஆண்டுகளில் அது பாதியாகக் குறைந்து விட்டதாக ஏற்றுமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்தகைய குறைந்த கால அவகாசம் பணி மும்முரத்தின் மீது விளைவுகளை உண்டாக்கும் என்பது கண்கூடு.

இதனுடன் ஏற்கனவே குறிப்பிட்டது போல, பருத்தி பின்னலாடைத் தயாரிப்பிலேயே பிரத்தியேகமாக ஈடுபடுவதால் பருவத்திற்கு ஏற்றபடியே தேவை ஏற்படுகின்றது; இதனால் வருடம் முழுவதும் தொழிலாளர் தேவையில் ஏற்ற இறக்கம் இருந்து கொண்டே இருக்கின்றது. இந்தத் தேவையில் இருக்கும் ஏற்ற இறக்கத்துடன் வருடா வருடம் நூல் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களும் குளிர் காலம் நீள்வது போன்றவை மேலும் சேர்ந்து கொள்கின்றன. உற்பத்தியின் அளவை அதிகரித்து உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டிய தேவையானது நிறுவனங்களுக்கு இடையிலான வலைப் பின்னலைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையை அதிகரிக்கின்றது; கச்சாப் பொருளில் இருந்து இறுதி உற்பத்திப் பொருளை விற்பது வரையில் ஒரே நிறுவனம் செய்வதற்கான தூண்டுதலை இது பலவீனப்படுத்துகின்றது. சிறு தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற அரசுக்கு இருந்த பழைய கட்டாயத்தின் காரணமாக உற்பத்திக் கட்டமைப்புகள் ஒன்றின் மேல் ஒன்று கவிந்திருப்பதும் உலகச் சந்தையில் போட்டியிடுவதன் மூலம் மூலதனக் குவிப்பில் ஈடுபட வேண்டிய தற்போதைய கட்டாயமும் சேர்ந்து ஒரு நெருக்கமான உற்பத்தி வலைப்பின்னல்கள் அடுக்கை உண்டாக்கிவிட்டன.

வீட்டிலிருந்தபடியே வேலை பார்ப்பவர்கள் வசம் ஆடைகளைச் சோதிப்பது அல்லது தைப்பது போன்ற வேலைகளை ஒப்படைப்பது முதல் கச்சாப் பொருள் மற்றும் தொழிலாளர்களின் வரத்தால் இணைக்கப்பட்டுள்ள பெரும் தொழிற்சாலைகள் எனப் பல வகை வேலைகள் இந்த உற்பத்தி வலைப்பின்னல்களின் அடுக்கில் உள்ளன; இவற்றை இரண்டு சக்கர வாகனங்கள், பேருந்துகள், ரயில்கள் போன்ற போக்குவரத்துச் சாதனங்கள் இடை நின்றிணைக்கின்றன; மற்றும் மிகச் சமீபத்தில் எங்கெங்கும் காணப்படுகின்ற செல்போன்களால் தகவல் தொடர்பும் அப்பணியைச் செய்கின்றது. சமீப காலமாகப் பெரிய ஏற்றுமதி நிறுனவங்கள் ஒரு பக்கம் விலை உயர்ந்த நவீன ஆடைகள் உற்பத்திப் பிரிவுகளுக்கு நகர்வதற்கும் மற்றொரு பக்கம் பெருந்திரள் மக்களின் சந்தையை நோக்கி நகர்வதற்கும் முயற்சித்து வருகின்றன. ஒப்பீட்டளவில் பெரிய நிறுனவங்கள் 500-700 தொழிலாளர்களை வேலைக்கமர்த்திக் கொள்ளும் அதே வேளையில், அத்தகைய நிறுவனங்களும் கூடத் தங்களது தொழிலாளர் தேவையின் பெரும்பகுதிக்கு ஒப்பந்தக்காரர்

களையே பெரும்பாலும் சார்ந்திருக்கின்றன. அடுத்த பிரிவில் நான் வாதிடுவதைப் போல இந்த உற்பத்தி முறைமை (order) தற்காலிகத் தொழிலாளர்கள் மற்றும் பணிப் பாதுகாப்பற்ற தொழிலாளர்கள் நிறைந்த மிகவும் ஏற்ற இறக்கம் கொண்ட தொழிலாளர் சந்தையாலும் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவது மற்றும் ஒரு பிரதேசத்திலிருந்து மற்றொரு பிரதேசத்திற்கு அதிக அளவில் மாறுவது போன்றவற்றாலும் தொடர்ந்து நீடிக்கும்படி தாங்கிப் பிடிக்கப்படுகின்றது.

விதிவிலக்காக வேலையின்மை: தொழிலாளர் கட்டுப்பாட்டு நிர்வாகம் மற்றும் நெருக்கடியின் அன்றாடத் தன்மை

சிறு அளவிலான தேவைகள் பல்கிப் பெருகுவதற்கு மத்தியில் குறைந்த கால அவகாசத்திற்குள் உற்பத்தி செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்ற இறக்கமான தேவையும் திருப்பூரின் ஏற்றுமதியாளர்களை இரண்டு திசைகளில் தள்ளுகின்றன. ஒரு பக்கம் அவர்கள் இயந்திரமயமாக்கல் மூலமும் மேம்பட்ட பதப்படுத்தும் உத்திகள் மூலமும் உற்பத்தி வேகத்தை அதிகரிக்க முயற்சிக்கின்றனர். அத்துடன் குறுகிய கால அவகாசத்தில் தேவையான அளவு தொழிலாளர்களை எளிதில் பெறுவதற்காக அவர்கள் எப்போது தேவையோ அப்போது சரியாக அந்த நேரத்தில் தொழிலாளர்களை வேலைக்கமர்த்திக் கொள்வதைச் சார்ந்திருக்கத் தொடங்கினார்கள். உற்பத்திப் பொருளுக்கான சந்தையின் நெகிழ்வுத் தன்மையின் அதிகரிப்புடன் உற்பத்தி அதிவிரைவாக அதிகரிப்பதும் சேர்ந்தே நிகழ்ந்தது. திருப்பூரிலிருந்து ஏற்றுமதி பாய்ச்சல் வேகத்தில் அதிகரித்ததானது தொழிலாளர்களின் தேவையைக் கணிசமான அளவு அதிகிரிப்பதற்கு இட்டுச் சென்றது; இது அந்தப் பகுதியில் வேலை வாய்ப்புகள் மிதமிஞ்சி இருப்பது போன்றதொரு தோற்றத்தை அதற்குக் கொடுத்தது. தொழிலாளர்களின் தேவை அதிகரித்தது மூன்று முக்கிய மூலாதாரங்களின் மூலம் எதிர் கொள்ளப்பட்டது. முதலாவதாக, 1980களின் மத்தியிலிருந்து பக்கத்திலிருந்த கிராமங்களிலும் மாநிலத்தின் இதர வறண்ட பகுதிகள் மற்றும் மழையற்ற பகுதிகளிலும் விவசாயத் தொழிலாளர்களாக வேலை பார்த்தவர்கள், இதர துண்டு துக்காணி வேலைகளைச் செய்து கொண்டிருந்தவர்களும் பெரும் எண்ணிக்கையில் பின்னலாடைத் துறைக்கு நகர்ந்தனர். இந்தப் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்குள் இரண்டு தனித்தனி வகையினரை அடையாளம் காணமுடியும். இந்தத் தொழிலாளர்களில் ஒரு பகுதியினர் நிரந்தரமாகக் குடிபெயர்ந்து விட்டவர்கள். குடம்பத்தோடு வரும் அவர்கள் தொழிலில் வெவ்வேறு வகையான வேலைகள் பார்த்தவாறு இங்கேயே தங்கிவிடுகிறார்கள். புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் மற்றொரு பிரிவினர் தற்காலிகத் தொழிலாளர்களாவர்; புலம் பெயர்ந்தவர்களில் சுமார் 40% இருக்கும். அவர்கள் கிராமப்புற வேலைகளையும் நகர்ப்புற வேலைகளையும் மாற்றி மாற்றிச் செய்பவர்கள்.

அத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் பெரும்பாலும் தொடர்ந்து கிராமத்திலேயே வசிக்கின்றனர்; குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் அல்லது இருவர் வேலைக்காகத் திருப்பூருக்குக் குடிபெயர்கின்றனர். அவர்களில் சிலர் திருப்பூரில் வேலை பார்க்கின்றனர்; மற்ற சிலர் பூர்வீக கிராமத்தில் விவசாய வேலையும் திருப்பூரில் வேலையும் மாறி மாறிப்பார்க்கின்றனர். மழை பொய்த்தல் அல்லது குடும்பக் கடன் போன்ற நிர்ப்பந்தங்கன் காரணமாகத் திருப்பூர் வருகின்றனர்; ஆனால், கிராமங்களில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டால் ஊருக்குத் திரும்பிச் செல்கின்றனர்; பின்னர் தங்களது குடும்ப வருமானத்தை அதிகரிப்பதற்காக மீண்டும் திருப்பூர் வருகின்றனர். மாறி மாறிக் குடிபெயரும் இந்தச் சுழற்சி பெரும்பாலும் அவர்களது கிராமங்களில் அறுவடை நிகழும் காலத்திலேயே நடக்கின்றது; இந்தக் கிராமப்புற - நகர்ப்புப் பணி ஊடாட்டமும் நகர்தல்களும் வேறு இடங்களில் காணப்பட்டவற்றை நினைவூட்டுகின்றன (பிரெமன் 2008). அவர்கள் திருமணமாகாத இளம் பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட இளைஞர்களாக இருக்கின்றனர். இவ்வளவு பெரிய அளவில் மக்கள் குடிபெயர்ந்தாலும், திருப்பூர் தொழிலாளர் பற்றாக்குறையைத் தொடர்ந்து அனுபவித்து வருகின்றது; குறிப்பாக, தேவை உச்சத்தில் இருக்கும் காலங்களில் இந்தப் பற்றாக்குறைகள் மற்றும் தொழிலாளர் சந்தையில் நிலவும் இறுக் கத்தின் விளைவாகப் பெயரளவிலான கூலி கடந்த பத்து வருடங்களில் அதிகரித்துள்ளது. இந்தக் கூலி அதிகரிப்பைச் சரிகட்ட முதலாளிகள் எடுத்துள்ள பல நடவடிக்கைகளில் வெளி மாநிலங்களிலிருந்து புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களை அதிகம் பணிக்கமர்த்துவதும் ஒன்றாகும். தொழிலாளர் சந்தையின் இறுக்கம் ஒரு புறமும் எந்த ஒரு தனி நிறுவனத்திலும் வேலைவாய்ப்பின் தற்காலிகத் தன்மை மறுபுறமும் தொழிலாளர்கள் பலவிதமாக இடம் மாறுவதற்கு இட்டுச் செல்கின்றன. நகரத்திற்குள்ளேயும், நகரத்தில் வேலைவாய்ப்பு குறையும் போது நகரத்திலிருந்து கிராமத்திற்கு எனவும் இடம் மாறுகின்றனர்.

சுமார் 40,50 பெரிய நிறுவனங்களால் பணிக்கமர்த்தப் பட்டுள்ள சுமார் 40000 ஆதாரமான இடம் மாறுகின்றனர். தொழிலாளர்கள் தவிர வேலைவாய்ப்பு என்பது பொதுவாகத் தற்காலிகத் தன்மை கொண்டதாகவே இருக்கின்றது. தொழிலாளர்களுக்கான தேவையில் இருக்கும் ஏற்றஇறக்கம் பெரும் எண்ணிக்கையில் நிரந்தரத் தொழிலாளர்களை வைத்துக்கொள்ள வேண்டும் என்று நிறுவனங்களைத் தூண்டவில்லை. ஆதலால், நிறுவனங்கள் ஆதாரமான தொழிலாளர்கள் தவிர மேலும் தொழிலாளர்களைத் தேவை ஏற்படும் போது பணிக்கமர்த்திக் கொள்வதையே விரும்புகின்றன. தொழிலாளர்களின் பூர்வீக கிராமங்கள் வரை செல்லும் ஒப்பந்தக்காரர்களின் வலைப்பின்னல் அமைப்பு தோன்றியுள்ளது. அது எங்கிருந்தெல்லாம் தொழிலாளர்கள் வேலைக்கமர்த்திக் கொள்ளப்படலாம் என்கிற ஒரு பரந்த நிலப்பரப்பை உண்டாக்குகின்றது; அது மட்டுமின்றி, அதனினும் முக்கியமாக, உயர்ந்த பதப்படுத்தும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மற்றும் விலை உயர்ந்த ஆடைகள் தயாரிப்பு ஆகியவற்றுக்கு திருப்பூர் மாறிச் செல்வதைப் பொய்யாக்குகின்ற ஒரு புது வகையான உற்பத்தி உறவுகளையும் உண்டாக்குகிறது. நிச்சயமற்ற தன்மையும் சந்தைகளை அணுகமுடியாமையும் பெரும் எண்ணிக்கையில் தற்காலிகத் தொழிலாளர்களையும் அதைவிட மிகக் குறைவான எண்ணிக்கையில் நிரந்தரத் தொழிலாளர்களையும் வைத்துக் கொள்ளுமாறு நிறுவனங்களைத் தூண்டுகின்றன. தொழிற்சங்கங்கள், கடந்த காலங்களில் வேலை வாய்ப்பிற்காகவும் சமூகப் பாதுகாப்பிற்காகவும் போராடியிருந்த போதிலும் ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் தற்காலிகத் தொழிலாளர்களையே பணிக்கு அமர்த்திக் கொள்ள வேண்டும் என்கிற போக்கை எதிர்த்து அவற்றால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தற்காலிகமயமாக்கல் மற்றும் நெகிழ்வுத் தன்மை கொண்டதாக ஆக்குதல் ஆகிய இந்தப் போக்கு தொழிலாளர்களைத் திரட்டுவதில் உள்ள தடைகளில் ஏற்படும் மாற்றங்களுடன் சேர்ந்தே செல்கின்றது.

தொழிலாளர்களுக்குச் சங்கம் அமைத்தல்: அன்றும் இன்றும்

இந்தத் துறை சிறுதொழில் பிரிவுக்கு என்று ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் இவற்றில் பணியாற்றுவோருக்குச் சங்கம் அமைக்கப்பட்ட வரலாறு இந்த நகரத்திற்கு உண்டு. ஜவுளி உற்பத்தி செய்யும் பெரிய தொழிற்சாலைகளின் மையமாகவும் தொழிலாளர்கள் அதிக அளவில் தொழிற்சங்கமயமாக்கப் பட்டிருந்த கோயம்புத்தூருக்கு அருகில் திருப்பூர் இருப்பதும்,திருப்பூரிலேயே மூன்று நூற்பாலைகள் இருப்பதும் பின்னலாடைத் தொழிலாளர்களும் சங்கங்களின் அணி திரள்வதற்கு இட்டுச் சென்றது (விஜயபாஸ்கர் 2001; சாரி 2004). இந்தத் தொழிலில் 1950களில் இருந்தே தொழிற்சங்கங்கள் இருக்கின்றன; இஎஸ்ஐ, பிராவிடென்ட் பன்ட் ஆகிய பிற சமூகப் பாதுகாப்புகளைத் தொழிலாளர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளன. 1983ஆம் ஆண்டு திருப்பூரில் ஏற்றுமதிக் கட்டம் தொடங்கிக் கொண்டிருந்தபோது பஞ்சப்படி கொடுப்பதற்காகக் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நீடித்த வேலை நிறுத்தம்தான் கடைசியாக நடந்த பெரிய வேலை நிறுத்தம். அதற்குப் பின்னர், புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வருகை விரைவாக அதிகரித்ததும் பெண் தொழிலாளர்கள் அதிகமாக வேலைக்கமர்த்தப்பட்டதும் அத்துடன் ஏற்ற இறக்கம் நிறைந்த உற்பத்திப் பொருளுக்கான சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் துணை ஒப்பந்தக்காரர்களிடம் உற்பத்தியை ஒப்படைப்பது அதிகரித்துக் கொண்டிருந்ததும் சேர்ந்து சங்கங்களின் அணி திரட்டும் ஆற்றலைப் பலவீனப்படுத்தின. உள்நாட்டுச் சந்தைக்காக உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் தொடர்ந்து இருக்கின்றன. ஆனால் உற்பத்தியாளர்கள் சங்கத்துடன் அவ்வப்போது சம்பளப் பேச்சு வார்த்தைகள் நடத்திய போதிலும் ஒப்பந்தங்கள் போட்ட போதிலும் ஏற்றுமதிப் பிரிவில் தொழிலாளர் சந்தையைப் பாதிக்கும் அவர்களது ஆற்றல் குறைந்துவிட்டது. நிறுவன மட்டத்திலோ அல்லது ஒப்பந்தக்காரருக்கும் முதலாளிக்கும் இடையிலோ சம்பள விகிதங்கள் பற்றிய பேச்சு வார்த்தைகள் நடக்கும்போது இந்த சம்பள ஒப்பந்தங்கள் ஒரு தர அளவாகப் பயன்பட்டபோதிலும் இந்த ஒப்பந்தங்களுக்குச் சில நிறுவனங்கள் மட்டுமே உண்மையாக இருந்தன (சாரி 2004).

சம்பளப் பேச்சு வார்த்தைகளும் முதலாளிகளுடன் போட்டுக் கொள்ளும் ஒப்பந்தங்களும் தொழிலாளர்களுக்கு ஓரளவிற்கு உதவிய போதிலும் வேலை நேரத்திற்கு வரம்புகள், கட்டாய விடுமுறை நாட்கள், மருத்துவ விடுப்பு அல்லது வேலைப் பாதுகாப்பு போன்றவற்றைத் தொழிற்சங்கங்களால் பெற முடியவில்லை. சாதாரண நிலைமைகளில் திருப்பூர் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 10 மணி (ஒன்றரை ஷிப்ட்) நேரம் வேலை பார்க்கின்றார்கள். உற்பத்திச் சரக்கை விநியோகிக்க வேண்டிய நேரம் நெருங்கும்போது வேலை நேரம் 12-16 மணி நேரம் என அதிகரிக்கின்றது; சிறு சிறு இடைவேளைகள் தவிரத் தொழிலாளர்கள் தொடர்ந்து பல நாட்கள் வேலை பார்ப்பதும் உண்டு. தொழிலாளர்களும் தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவோ அல்லது கொஞ்சம் பணத்தைச் சேமித்து வீட்டுக்கு அனுப்பவோ ஒரு நாளைக்கு ஒன்றரை ஷிப்ட் வேலை பார்க்க வேண்டிய தேவை இருப்பதாக உணர்கிறார்கள். பலருக்கு வெறும் ஒரு ஷிப்ட் மட்டும் வேலை பார்ப்பது சேமிப்பதற்கு எதுவும் மிச்சமில்லாமல் திருப்பூரில் பிழைப்பை ஓட்டுவதற்கு மட்டுமே உதவுகின்றது. பொதுவாகக் குறைந்தபட்சக் கூலியை விட அதிகமாகவே தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படுகின்றது என்ற போதிலும் வாழ்க்கைச் செலவு, குறிப்பாக வீட்டு வாடகை, அவர்களது உண்மையான ஊதியத்தைக் குறைத்து விடுகின்றது. எனவே, தொழிலாளர்கள் பற்றாக்குறையால் கொடுக்கப்படும் சம்பளம் அதிகரித்துள்ள போதிலும் உண்மையான சம்பளம் போதுமானதாக இல்லை என்றும், வாழ்க்கையை நடத்துவதற்கான சம்பளமாக அது இல்லை என்றும் தொழிலாளர்கள் எண்ணுகிறார்கள்.

தையல் கலைஞர்கள் மற்றும் துணிவெட்டும் தொழிலாளர்கள் தவிர மற்ற தொழிலாளர்கள் குடும்பத்தில் குறைந்தபட்சம் இரண்டு பேர் வேலை பார்த்தால்தான் பிழைப்பை நடத்த முடியும் என்று கருதுகிறார்கள். வேலைப் பாதுகாப்பு இல்லாத நிலைமையில் இது தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிறது. இந்த அனைத்துக் காரணிகளும் முதலாளிகளுடனான தங்களது பேரம் பேசும் சக்தியைக் குறைத்து விட்டன என்று சங்க நிர்வாகிகள் கருதுகின்றனர். சங்கம் அமைத்துக் கொள்ளும் ஆர்வம் தொழிலாளர்கள் மத்தியில் இல்லாததும் ஒரு முக்கியமான காரணமாகக் கூறப்படுகின்றது. “அவர்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், அவர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் போகின்றார்கள் அல்லது வேறு ஒரு நிறுவனத்திற்கு நகர்ந்து விடுகின்றார்கள்; அல்லது வீட்டுக்குத் திரும்பி விடுகின்றார்கள். எங்களிடம் வருவது கால விரயம் என்று அவர்கள் நினைப்பதால் எங்களிடம் வருவதில்லை. நிர்வாகத்திற்குத் தெரிந்து விடும் என்று கவலைப்படுகின்றார்கள். அவர்கள் சங்க உறுப்பினர்கள் என்பது தெரிந்தால் தங்களது தொழிற்சாலையிலிருந்து முதலாளிகள் அவர்களை வெளியேற்றி விடுகிறார்கள்” என்று பெரிய தொழிற்சங்கம் ஒன்றின் நிர்வாகி குறிப்பிட்டார். நீண்ட நேரம் கடுமையாக உழைப்பது மற்றும் ஆர்டர் செய்யப்பட்ட நேரத்திற்கும் சப்ளை செய்ய வேண்டிய நேரத்திற்கும் இடையிலான கால அவகாசம் குறைவாக இருப்பதால் ஏற்படும் தற்காலிக வேலையின்மை என இரண்டு நிலைமைகளையும் தொழிலாளர்கள் மாறி மாறி சந்திக்கின்றார்கள். தற்காலிகத் தன்மை மற்றும் வேலை கிடைப்பதில் உள்ள மாறிக் கொண்டே இருக்கும் நிலைமை ஆகியவற்றின் அளவிற்கு ஏற்ப அன்றாட வாழ்க்கையின் தரம் இருக்கின்றது; உலகளாவிய நெருக்கடியை ஒரு அசாதாரண நிகழ்வாக அரசும் முதலாளிகளும் சித்திரிக்க முயன்ற போதிலும் தொழிலாளர்கள் அப்படிக் கருதவில்லை.

உலக நெருக்கடியும் உள்ளூர்த் தொழிலாளர்களும்

ஏற்கனவே குறிப்பிட்டபடி திருப்பூரின் ஏற்றுமதியில் பெரும் பகுதி அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமே செல்கின்றது. அமெரிக்கப் பொருளாதாரம் ஒரு பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது என்று அறிவித்த மூன்று மாதங்களுக்குள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சுமார் 20000 தொழிலாளர்கள் தங்களது வேலையை இழப்பார்கள் என்று அறிவித்தார்; பொருளாதார மந்த நிலையில் ஏற்றுமதி நிறுவனங்களில் போதுமான வேலை வாய்ப்புகள் இல்லை என்பதால் புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்களில் பலர் திரும்பச் சென்று விட்டனர் என்றும் அறிவித்தார். ஆர்டர்களில் 20% குறைந்து விட்டது எனவும் தொழிலையும் வேலைகளையும் காப்பாற்ற மத்திய அரசாங்கம் தலையிட வேண்டும் என்றும் தலைவர் கூறினார். வட்டி விகிதங்களில் இருந்து வரி குறைப்பு வரை மேலும் சலுகைகள் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டது. ‘ஸ்டைல்மேன் எக்ஸ்போர்ட்ஸ்’ போன்ற தனி நிறுவனங்கள் 200 தொழிலாளர்களைக் குறைத்து விட்டதாக அறிவித்தது; மேலும் நிலைமை மோசமடையும் என்று அஞ்சியது. வேலை இழப்புகளுக்கு ஏற்றுமதியாளர்கள் எந்தப் பொறுப்பும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது இவ்விடத்தில் கவனித்தக்கது. அரசு மற்றும் உற்பத்தியாளர்கள் சங்கம் இரண்டுமே வேலைகளைப் பாதுகாப்பதற்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் வேலை இழப்புகளை அறிவித்தன.

பொருட்களுக்கான தேவையில் ஏற்படும் வீழ்ச்சியின் பாதிப்புகள் அவற்றைத் தயாரித்துத் தரும் நிறுவனங்களுக்கும் அதைத் தொடர்ந்து தொழிலாளர்களுக்கும் எடுத்துச் செல்லப்படும் பொதுவான பாதைகள் சில இருக்கின்றன. தேவையில் ஏற்படும் வீழ்ச்சி ஆர்டர்கள் குறைவதற்கும் உற்பத்தி அளவுகள் குறைவதற்கும் அதனால் வேலை வாய்ப்புகள் குறைவதற்கும் இட்டுச் செல்வதுதான் முதலாவதும் மிக நேரடியான பாதிப்பும் ஆகும். நுகரப்படும் பகுதிகளில் தேவையை அதிகரிப்பதற்காக இறுதி விற்பனை விலையைக் குறைப்பது மற்றொரு சாத்தியக் கூறாகும்; எனவே நிறுவனங்களுக்குக் குறைந்த விலைகளே கொடுக்கப்படும்; அதன் காரணமாகக் கூலிச் செலவுகளைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். இந்தக் கீழ் நோக்கிய நிர்ப்பந்தம் செலவுகளைக் குறைப்பதற்காக வேலைகளை ஒப்பந்தக்காரர்களிடம் அளிப்பது மற்றும் வேலையைத் தற்காலிகத் தன்மை கொண்டதாக ஆக்குவது போன்றவற்றை மேலும் சார்ந்திருக்கும்படி கட்டாயப்படுத்தலாம். பொருட்களை வாங்கும் நிறுவனங்களுக்கும் நட்டம் ஏற்படுவதன் காரணமாகத் தாங்கள் கொடுக்க வேண்டிய பாக்கியைக் கொடுப்பதில் தாமதம் செய்வது அல்லது பாக்கியைக் கொடுக்காமலே இருப்பது மற்றொரு சாத்தியக் கூறாகும். இதன் விளைவாக ஏற்றுமதி நிறுவனங்களின் வருமானத்தில் இழப்பு ஏற்படும்.

திருப்பூரில் முதல் இரண்டு போக்குகளுக்கான சான்றுகளையும் கொள்முதல் செய்பவர்கள் பாக்கிப் பணத்தைக் கொடுக்காமல் போகலாம் என்கிற அச்சம் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் இருப்பதற்கான சான்றுகளையும் நாம் காண்கிறோம். பாக்கி தாமதமாகக் கொடுக்கப்படுவதையும் கண்டோம் என்றபோதிலும் தேவை இல்லாததன் காரணமாக நிறுவனங்கள் மூடப்படுவதற்குத் தெளிவான சான்றுகள் இல்லை. தேவையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதைப் பலர் உணர்ந்திருந்த போதிலும் துணை ஒப்பந்த நிறுவனங்கள் கூடச் செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தன. ஏராளமான நிறுவனங்கள் புதிதாக வருவதும் வெளியேறுவதும் இந்த மொத்த தொழில் தொகுப்பின் அடையாளமாக எப்போதுமே இருந்து வருகின்றது என்பதையும் நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். சிறு நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் நிறுவனங்கள் மூடப்படுவது அதிகமாகவே இருக்கின்றது; தேவை சீரற்று இருக்கும் நிலைமையை நிறுவனங்கள் எப்போதுமே சந்தித்து வருகின்றன. அதன் பலனாக, விரைவில் நிலைமை சீராகும் என்கிற நம்பிக்கையில் பல முதலாளிகள் தேவையில் வீழ்ச்சி ஏற்படுவது வழக்கமாக நடப்பதுதான் என்று அதற்குப் பழகிப் போய்விட்டார்கள். என்றபோதிலும் திருப்பூரில் பல நிறுவனங்கள் வேலை நேரத்தையும் ஏன் வேலை நாட்களையும் கூட வெட்டிக் குறைத்து விட்டதாகக் கூறப்படுகின்றது. வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை கொடுப்பது அல்லது ஒரு நாளுக்கு ஒரு ஷிப்ட் மட்டும் வேலை கொடுப்பது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் நிறுவனங்கள் நிலைமைக்கு ஏற்றவாறு தங்களைத் தகவமைத்துக் கொண்டுள்ளன. கிராமத்திலிருந்து தொழிலாளர்களை நிறுவனத்திற்குக் கூட்டிச் சென்று திருப்பிக் கொண்டு வந்து விடும் ஒரு நிறுவனத்தின் தொழிலாளர் ``முன்னர் பஸ்கள் இரவு 9மணிக்கு முன்னால் வரும். ஆனால் இப்போது அவை மாலை 6.30க்கு முன்னரே வந்துவிடுகின்றன” என்று கூறினார்.

 நேரடி ஏற்றுமதியாளர்கள் உற்பத்தியில் நிச்சயம் 10% இலிருந்து 15% வரை வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது என்பதை உறுதி செய்கின்றார்கள்; அதற்கு ஏற்ற அளவு வேலை வாய்ப்பும் குறைந்திருக்கின்றது. திருப்பூரில் அவ்வப்பேது தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுவதும் வேலைவாய்ப்பு குறைவதால் தொழிலாளர்கள் தங்களது கிராமங்களுக்குத் திரும்புவதும் வழக்கமாக நடப்பதால் பொருளாதார மந்தநிலையின் காரணமாக ஏற்பட்ட வேலையிழப்பைத் துல்லியமாக மதிப்பிடுவது கடினமாக இருக்கின்றது என்ற போதிலும் தொழிலாளர்கள் கிராமத்திற்குத் திரும்பிச் செல்வதை ஏற்று மதியாளர்களும் தொழிற்சங்க உறுப்பினர்களும் உறுதி செய் கின்றனர்.`தமிழ்நாட்டில் உள்ள ஒரு பெரிய ஆயத்த ஆடை ஏற்றுமதி மையமான திருப்பூரில் மட்டும் சுமார் 40,000 லிருந்து 1,00,000 தொழிலாளர்கள் (பெரும்பாலும் பெண்கள்)டிசம்பர் 2008 வரை வேலையிழந்திருப்பதாக வெவ்வேறு மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன’ என்று ஜா சுட்டிக் காட்டுகின்றார் (2009 : 12). குறைந்த ஷிப்டுகள் வேலை பார்ப்பது என்றால் வருமானம் குறைவாகவே இருக்கும் என்று பொருள்;ஆதலால், திருப்பூருக்குச் செல்லலாமா வேண்டாமா என்ற தொழிலாளர்களின் முடிவின் மீது இது தாக்கம் செலுத்துகின்றது.

திருப்பூரில் வருமானம் குறைந்து விட்டதால் தங்களது சகாக்கள் சிலர் கிராமங்களிலிருந்து திரும்பி வரவில்லை என்று பேட்டி காணப்பட்ட தொழிலாளர்கள் கூறினர். 2009 ஜூனில் பேட்டி காணப்பட்ட 20 தொழிலாளர்களில் இரண்டு பேர் கடந்த இரண்டு மாதங்களாகத் தங்களுக்கு ஒரே நிலையாக வேலை கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த அவர்கள், ஒரு மாத காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பதாகக் கூறினர். ஷிப்டுகளையோ அல்லது வேலை நேரமோ குறைக்கப்பட்டிருப்பதாக ஐந்து தொழிலாளர்கள் தெரிவித்தனர். சிறு நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பெரும்பாலானோருக்கு எப்போதுமே வேலை ஒரு நிலையான அளவு கிடைத்ததில்லை என்பதால் இந்த நெருக்கடியினால்தான் இப்போது வேலையிழப்பு ஏற்பட்டிருக்கின்றது என்பதைப் பிரித்துணர முடியவில்லை என்று தெரிகிறது. அந்த 5பேரில் 3பேர் பீஸ் ரேட் அடிப்படையில் (ஒரு ஆடைக்கு இவ்வளவு என்கிற அடிப்படையில் எத்தனை ஆடைகள் தைக்கிறார்களோ அவ்வளவு கூலி-மொ - ர்) வேலை பார்க்கிறார்கள்; ஆனால் நிறுவனத்தால் நேரடியாக வேலைக்கு வைத்துக் கொள்ளப்பட்டவர்கள். கடந்த வருடத்துடன் ஒப்பிடும்போது தங்களால் போதுமான அளவு கூலி ஈட்ட முடிய வில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்; பெரும்பாலும் ஆறுமணி நேரம் அல்லது அதற்கும் குறைவான நேரம் வேலை பார்த்த பின்னர் அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். பெரிய தொழிற்சாலைகளில் ஆர்டர்கள் குறைந்தது ஷிப்டுகள் குறைந்ததற்கு இட்டுச் சென்றது என்றால், இங்கே பீஸ் ரேட் வருமானம் ஈட்டும் தொழிலாளர்கள் வேறு வேலைகளைத் தேடும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.

வேலையின்மையை எதிர்கொள்வதில் நலத்திட்டங்கள் வகிக்கும் பாத்திரம்

பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் ஆர்டர்கள் குறைந்ததால் அந்த நிறுவனத்தில் 200 தொழிலாளர்கள் வேலையை விட்டு நிறுத்தப்பட்டபோது அதில் தன்னுடைய பெயர் இல்லாதது கண்டு முருகன் மகிழ்ச்சி அடைந்தார். ஒரு ஒப்பந்ததாரர் மூலம் ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்திற்கு அடிக்கடி மாறுவது அவருக்குப் பழக்கப்பட்டிருந்தபோதிலும் ஒரு பெரிய ஏற்றுமதி நிறுவனத்தில் கடந்த இரண்டு வருடங்களாக அவருக்கு நிலையான வேலை இருந்தது. ஆறு வருடங்களாக ஒரு ஒப்பந்தக்காரருடன் ஏராளமான நிறுவனங்களில் வேலை பார்த்த பின்னர் தற்போது அவர் அந்த நிறுவனத்தால் டைலராக நேரடியாகப் பணிக்கமர்த்தப் பட்டுள்ளார்; தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை இப்போது திருப்பூருக்கு அழைத்து வந்துவிட்டார். குடியிருக்கும் வாடகை வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு நிறுவனத்தில் அவரது மனைவி செக்கராக வேலை பார்க்கின்றார். அவரது வருமானம் நிலையானது இல்லை என்ற போதிலும் வீட்டு வேலைகளைப் பார்க்க வேண்டி இருப்பதால் அவர் இந்த வேலையை விரும்புகிறார். மாதத்தில் ஒரு நாள் முருகன் கடலூர் மாவட்டத்தில் உள்ள தன்னுடைய கிராமத்திற்குச் சென்று பொது விநியோகத் திட்டத்தின் கீழ் அரிசியும் மற்ற பொருட்களும் வாங்கி வருகிறார். அவரது சொந்த கிராமத்திலேயே அவரது பெயர் குடும்ப அட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவர் அங்குதான் ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.திருப்பூருக்கு அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த மற்ற சில தொழிலாளர்கள் ரேஷன் பொருட்களை எடுத்து வருவதற்காகப் பஸ் ஓட்டுநருக்கு ஒரு சிறு தொகை கொடுக்கின்றனர். முருகன் 900 ரூபாய் வீட்டு வாடகை கொடுக்கிறார்; மேலும் 100/200 தண்ணீருக்காகக் கொடுக்கிறார். அவரது முதல் குழந்தை அருகிலுள்ள அரசுப் பள்ளிக்குச் செல்கின்றது; இரண்டு வயது இரண்டாவது குழந்தையை அவரது தாய் கவனித்துக் கொள்கிறார்.

 ஒரு மாதமாக அவர் ஒரு ஷிப்ட் மட்டுமே வேலை பார்க்கிறார்; முன்னர் ஒன்றரை அல்லது இரண்டு ஷிப்டுகள் வேலை பார்த்தார். இதன் பொருள் அவரது ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கு குறைந்து விட்டது. ``இப்போது நான் மாதம் ரூ4000 சம்பாதிக்கிறேன். என் மனைவி 1000-1500 சம்பாதிக்கிறார். வீட்டு வாடகை கொடுத்த பின்னர் என்னிடம் சேமிப்பதற்கு எதுவும் இருப்பதில்லை. நான் கிராமத்தில் உள்ள என்னுடைய வீட்டிற்குச் சென்று அமைதியாக வாழலாம். நான் வீட்டு வாடகை கொடுக்க வேண்டியதில்லை. நான் என்னுடைய நிலத்தில் வேலை பார்க்கலாம். என் மனைவி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை பார்க்கலாம்” என்று முருகன் கூறுகிறார். அவருக்குச் சுமார் ஒரு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் அவருடைய சகோதரர் தன்னுடைய நிலத்துடன் சேர்த்து விவசாயம் செய்து வருகிறார். தன்னுடைய தாயின் மருத்துவச் செலவுகளுக்காக அவர் கடன் வாங்கியிருக்கின்றார். அதைத் திருப்பிச் செலுத்த அவர் மீண்டும் கடன் வாங்க நேரலாம்.

புலம் பெயர்ந்தவர்களின் சில கிராமங்களுக்கு நாங்கள் சென்றபோது கிராமத்திலிருந்து நகரத்திற்கு, மீண்டும் நகரத்திலிருந்து கிராமத்திற்கு என்று மக்கள் மாறி மாறி நகர்ந்து கொண்டே இருப்பது இப்பகுதியின் வழக்கமான அம்சமாக இருப்பதைக் கண்டோம். பொருளாதார நெருக்கடி உடனடிக் காரணமாக இருக்கும் அதே வேளையில். பல்வேறு இதர காரணங்களுக்காவும் பலர் இந்த வாழ்க்கை நடத்தும் உத்தியைப் பயன்படுத்துகிறார்கள். கடுமையான வேலை நேரங்கள் அவர்களது ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. தங்களைக் குணப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் கிராமத்திற்குத் திரும்புகிறார்கள். திரும்பி வந்தவுடன் தங்களது கிராமத்திற்கு அருகில் இருக்கும் நகரங்களில் வேலை தேடுகிறார்கள்; ஒன்றும் கிடைக்கவில்லை என்றால் திருப்பூருக்கே மீண்டும் வருகிறார்கள். சிலர் கிராமத்திலேயே குடும்பத்தை விட்டு விட்டுத் திருப்பூரில் வேலை பார்க்க வருகிறார்கள்; இது கூடுதலாகச் சேமிக்க உதவும் என்று நம்புகிறார்கள். தொலை தூரத்திற்குப் புலம்பெயர்பவர்கள் மற்றும் அன்றாடம் வேலைக்காக நகரத்திற்கு வந்து போகின்றவர்கள் என இரு தரப்பினரின் வாழ்வாதார உத்திகளிலும் பொது விநியோகத் திட்டத்தைச் சார்ந்திருப்பது முக்கியமான இடத்தை வகிக்கின்றது.

கடந்த வருடம் நல்ல மழையின் காரணமாகவும் திருப்பூரில் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லை என்கிற எண்ணத்தின் காரணமாகவும் ஜனவரி மாதம் அறுவடைத் திருநாளான பொங்கலுக்குப் பின்னர் பலர் திரும்பவும் திருப்பூருக்கு வேலைக்கு வரவில்லை என்று ஒப்பந்தக்காரர்களும் கருதுகின்றனர். கிராமத்தில் உள்ள தங்கள் நிலங்களில் வேலை பார்க்கவோ அல்லது விவசாயக் கூலிகளாக வேலை பார்க்கவோ பெண்கள் மட்டும் கிராமத்திற்குத் திரும்புபவர்களாகவும் ஆண்கள் திருப்பூரிலேயே இருக்கும் குடும்பங்களும் உண்டு. விசைத்தறித் துறையில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விஷயத்திலும் இது உண்மையாக இருக்கின்றது. தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கையைச் சமாளிக்கும் உத்திகளைத் தீர்மானிப்பதில் தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டமும் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் மக்களுக்கு மான்ய விலையில் அரிசி வழங்கும் தற்போதைய மாநில அரசாங்கத்தின் முடிவும் முக்கிய பாத்திரம் வகித்திருக்கின்றன போல் தெரிகின்றது. கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டத்தைப் பொறுத்த வரையில் முந்தைய வருடங்களில் ஏற்றுமதித் தொழிற்சாலைகளில் தொழிலாளர்களின் தேவை மிக அதிகமாக இருந்ததனாலும் ஊதிய விகிதங்களில் வேறுபாடு அதிகமாக இருந்ததனாலும் திருப்பூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் வாழ்ந்த குடும்பங்கள் கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டத்தின் அடிப்படையில் வேலை கேட்பதற்கான ஊக்கம் சிறிதும் இருக்கவில்லை.

கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டம் செயல்படுத்தப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகளில் திருப்பூரைச் சுற்றியுள்ள பல்லடம், அவினாசி, திருப்பூர் ஆகிய மூன்று வட்டங்களிலிருந்து எவருமே வேலை கேட்கவில்லை என்கிற உண்மையிலிருந்து இது தெளிவாகிறது.3 2008-09ஆம் ஆண்டு மொத்த கோவை மாவட்டத்திற்கும் கிட்டத்தட்ட 7.3 இலட்சம் வேலை நாட்கள் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டபோது இது மேலும் பட்டவர்த்தனமானது. ஆனால் 2009 - 10ஆம் ஆண்டில் 2009 ஆகஸ்டு வரையில் இந்த மூன்று வட்டங்களிலிருந்து வேலை கேட்பது திடீரென அதிகரித்தது. கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டத்தின் கண்காணிப்புப் பிரிவு அளித்துள்ள தரவுகளின்படி, பல்லடம் வட்டத்தில் 10380 குடும்பங்களுக்கும் அவினாசி வட்டத்தில் 1898 குடும்பங்களுக்கும் திருப்பூர் வட்டத்தில் 1097 குடும்பங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்பட்டிருக்கின்றது. இத்திட்டத்தைச் செயல்படுத்து பவர்கள் எடுத்த சிறந்த முயற்சிகளின் காரணமாக ஓரளவிற்கு இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்ற போதிலும் விவசாயம் அல்லது கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டத்தின் ஈர்ப்பைவிடவும் ஆயத்த ஆடைத் தொழில் நெருக்கடியால் தொழிலாளர்கள் உந்தித் தள்ளப்பட்டதையே இது அதிகமாகக் குறிக்கின்றது.

புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து திருப்பூருக்குத் தொழிலாளர்கள் நீண்ட காலமாகப் புலம் பெயர்கின்றனர். அங்குத் தொழிலாளர்களிடம் பேட்டி கண்டதில் அவர்கள் தங்கள் சொந்த கிராமங்களுக்குத் திரும்பியதற்கு உடல்நலக் கேடு என்கிற காரணம் தவிர்த்து, எதிர்ப்பார்க்கும் வருமானம் கிடைப்பதில்லை என்பது ஒரு பெரிய காரணமாக இருந்தது. மோசமான பருவ மழை, விவசாயத்திற்காக வாங்கிய கடன்கள் அல்லது மருத்துவச் செலவு, திருமணம் மற்றும் இதர குடும்ப விழாக்கள் போன்ற காரணங்களுக்காக அவர்கள் அனைவருமே திருப்பூருக்குச் செல்ல விழைகின்றனர். ஆதலால், திருப்பூருக்கு அவர்கள் புலம் பெயர்வது வெறும் பிழைப்புக்காக என்பதைவிட, தங்களது கடனை அடைப்பதற்காகத்தான். அதன் விளைவாக, கடனைத் திருப்பிச் செலுத்தவதற்காகச் சேமிக்க அதிக நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று அவர்கள் கருதுகிறார்கள்; அதற்குத் தயாராகவும் இருக்கிறார்கள். வேலையின் அளவு குறையும்போது, இத்தகைய கடுமையான வேலையைத் தாங்கிக் கொள்கின்ற அளவிற்குத் தேவையான பணத்தைத் தாங்களால் சேமிக்க முடியவில்லை என்று அவர்கள் கருதுகிறார்கள். மேலும், தங்களது கடனையும் தீர்க்கும் நிலையிலும் அவர்கள் இல்லை. ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் தினம் 80ரூ கூலிக்கு விவசாயக் கூலியாகவோ அல்லது கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டத்திலோ வேலை பார்க்கின்றனர்.

திருப்பூரில் அவர்கள் எவ்வளவு சம்பாதித்துக் கொண்டிருந்தார்களோ அதைவிட இந்த வருமானம் மிகக் குறைவு. பெண் தொழிலாளர்களுக்கு ஒரு ஷிப்டுக்கு வெறும் 70 -80ரூ கூலி கொடுக்கப்பட்டபோதும், ஓவர்டைம் பார்ப்பதன் மூலம் அவர்களால் அதிகமாகச் சம்பாதிக்க முடியும். அப்படி ஓவர்டைம் வேலை இல்லாமலிருப்பதால் திருப்பூரில் வேலை பார்க்கும் ஊக்கத்தை அவர்களுக்கு அளிப்பதில்லை. குறைந்தபட்சம் பத்தில் ஆறு ஆண் தொழிலாளர்கள் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் போது திருப்பூருக்குச் செல்லும் திட்டமிட்டுள்ளார்கள். இரண்டு குடும்பங்களில் மற்ற உறுப்பினர்கள் கட்டுமான வேலை கிடைக்கும் என்றோ அல்லது சிறு வியாபாரம் செய்யலாம் என்றோ சென்னைக்கும் பெங்களூருக்கும் சென்றுள்ளார்கள். தொழிலாளர்கள் இப்படி இடம்பெயரக் கூடிய வாய்ப்பை உண்டாக்குவதில் மாநில அரசாங்கத்தின் சமூக நலத்திட்டங்கள் வகிக்கும் பாத்திரத்தைக் குறிப்பிட வேண்டும். கிலோ 1 ரூபாய்க்கு 20 கிலோ அரிசி மற்றும் மான்ய விலையில் இதர உணவுப் பொருட்கள் வழங்கும் ஏற்பாடு தொழிலாளர் குடும்பங்களிற்குக் குறைந்தபட்ச உண்மையான வருமானத்தை உறுதி செய்வதில் கணிசமான பங்கு வகிக்கின்றது. நகர்ப்புறப் பணியிடங்களில் பணிப் பாதுகாப்பு எதுவும் இல்லாத நிலைக்கு மாறாக மான்ய விலையில் சேவைகளும் பொருட்களும் இந்த இடங்களில் கிடைப்பது தொழிலாளர்கள் கிராமப்புறத்திற்குத் திரும்புவதற்குப் பெருமளவு காரணமாக இருக்கிறது.

முன்னர், கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டம் செயல் படுத்தப்பட்டபோது ஏற்றுமதியாளர்கள் அதை எதிர்த்தார்கள். இந்தத் திட்டம் தொழிலாளர்கள் வேலை தேடி நகரத்திற்கு வருவதைத் தடுப்பதால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படுகின்றது என்றார்கள். “அவர்கள் வேலை பார்க்க வேண்டிய தேவை எங்கே இருக்கிறது? அவர்கள் ஒரு நாள் வேலை பார்த்தால் ஒரு வாரத்திற்கு அவர்களால் உயிர் வாழ முடியும். அரிசிக்கு மாதம் 20 ரூபாயும் பருப்பு உள்ளிட்ட இதர உணவுப் பொருட்களுக்கு மேலும் 200 ரூபாயும் செலவழிக்க வேண்டும். அவ்வளவுதான். சமையல் எண்ணெய் கூட மான்ய விலையில் கிடைக்கிறது. இலவச மின்சாரம் கிடைக்கின்ற வரை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இலவசத் தொலைக்காட்சியை ரசிக்கலாம். இதே மாதிரிப் போனால், ஆயத்த ஆடைத் தயாரிப்புத் தொழிலில் வேலை பார்க்கத் தயாராக யாரும் இருக்க மாட்டார்கள். ஏற்கனவே, விவசாய வேலைகளுக்குத் தொழிலாளர்கள் இல்லாத கடும் பற்றாக்குறைக்கு இது இட்டுச் சென்றுள்ளது” என்று ஒரு ஏற்றுமதியாளர் கூறினார். ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டதனாலும் தொழிலாளர்களுக்கான தேவை குறைந்ததாலும் இத்தகைய கொள்கைத் தலையீடுகளினால் ஆபத்து ஏற்படும் என்று அவர்கள் இப்போது நினைப்பதில்லை. அதற்குப் பதிலாக, தங்களுக்குத் தேவையான தொழிலாளர்கள் கிடைப்பதையும் தொழிலாளர்கள் வெளியேறுவதைத் தடுக்கப்படுவதையும் உறுதி செய்யும் வகையில் கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டம் போன்றதொரு திட்டம் நகர்ப்புறத்திலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்கிறார்கள். நகர்ப்புறங்களில் வேலை பார்ப்போரையும் கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் அல்லது பொருளாதாரத் தேக்க நிலையால் வேலையிழப்போரைப் பாதுகாப்பதற்காக ஒரு புதிய நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என்றும் அரசாங்கத்தின் சில துறைகள் கோருகின்றன.4

ஆட்குறைப்பிற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய தேவையையோ அல்லது மருத்துவச் செலவுகளை ஈடு செய்யும் ஏற்பாடுகள் வேண்டும் என்று கோரும் தேவையையோ அல்லது விடுப்பு கோருவதன் தேவையையோ ஆய்வு செய்யப்பட்ட தொழிலாளர்களில் சிலர் மட்டுமே உணர்ந்திருந்தார்கள். பணி யிடத்தில் ஏற்படும் எந்தப் பின்னடைவும் குடிமகன் என்கிற முறையில் கிடைக்கும் உரிமைகள் மூலம் ஈடு செய்யப்படுகின்றது. இத்தகைய பாதுகாப்பற்ற, சுரண்டுகின்ற வேலை கிட்டத்தட்ட கடந்த இரண்டு பத்தாண்டுகளாக இருந்தபோதிலும் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் தொழிற்சங்கங்களால் பெரிய அளவிற்கு முன்னேற முடியவில்லை. வேலையில் நிரந்தரமற்ற தன்மையும் தொழிலாளர்கள் நிறுவனங்களிலிருந்து நிறுவனங்களுக்குப் பெரிய அளவில் மாறுவதும் ஒரு தொழிற்சாலையில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதையே மிகக் கடினமாக்கிவிட்டன. வாழ்வதற்காகக் கிராமத்திலிருந்து நகரத்திற்கும் நகரத்திலிருந்து கிராமத்திற்கும் நகர்ந்து கொண்டே இருக்கும் தொழிலாளர்கள் பெருமளவில் இருப்பதானது இதை மேலும் கடினமாக்குகின்றது.

திருப்பூர் வேலையை ஒரு நீண்ட கால வாழ்க்கைத் தொழிலாகப் பலர் பார்ப்பதில்லை; கடனை அடைப்பதற்காகக் கடுமையாக உழைத்து, வேகமாகச் சம்பாதிக்கும் ஒரு வழியாக மட்டுமே பார்க்கிறார்கள். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்களின் தேவையை உணர்கிறார்கள்; ஆனால், அந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்களா என்பது குறித்து அவர்களால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. தொழிற்சங்கங்கள் தங்கள் பங்கிற்குத் தொழிலாளர்களை அணி திரட்டும் இடத்தைத் தொழிற்சாலையிலிருந்து வாழுமிடத்திற்கும் நகர்த்தத் தொடங்கிவிட்டன. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் குறிப்பாகத் தென்னாப்பிரிக்காவிலும் எடுக்கப்படும் இது போன்ற முன்முயற்சிகளிலிருந்து குறிப்பறிந்து பெரிய தொழிற்சங்கங்கள் உறுப்பாக உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் குடிநீர், சாலை, தெருவிளக்கு, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வாழும் சேரிகளில் வீட்டு மனைப்பட்டா போன்ற சேவைகளுக்காகத் தொழிலாளர் குடும்பங்களை அணிதிரட்ட முயற்சிக்கின்றன. என்றபோதிலும் தொழிலாளர் நலனுக்காக எடுக்கப்படும் அத்தகைய முயற்சிகள் பணியிடத்தில் உண்டாக்கும் பலன்கள் இப்போது அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை.

விளைவுகள்

தமிழ்நாட்டில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் சமூக நடைமுறை, அரசாங்கங்கள் சமூகநலத் திட்டங்களுக்காகச் செலவிடுவதை வெட்டிச் சுருக்க வேண்டும் என்றும் அத்தகைய அடிப்படைத் தேவைகளுக்குச் சந்தை சக்திகளையே சார்ந்திருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகின்ற புதிய தாராளமயச் சீர்திருத்தத்தின் கோட்பாடுகளுக்கு எதிராக இருப்பது போல் தெரிகின்றது. சமூக நலத் திட்டங்கள் விரிவாக்கப்படுவதற்கு எதிரான கட்டுப்பாடுகளை நிலைகுலையச் செய்வது, தொழிலாளர் சந்தையைக் கட்டு குலைக்கும் புதிய தாராளமயக் கொள்கைகளை முற்றிலும் ஆதாரமாகக் கொண்டிருக்கும் மூலதனக் குவிப்பு உத்திகளைக் கடைப்பிடிப்பது என இரண்டையும் ஏககாலத்தில் செய்யும் ஒரு கலப்பு நடைமுறையாகும் இது. உலகப் பொருளாதார நெருக்கடி ‘உபரி மனிதர்களின்’ எண்ணிக்கையை (வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை-மொ-ர்) அதிகரிக்கின்றது; ஆதலால் காலனியாதிக்கத்திற்குப் பிந்தைய அரசாங்கங்கள் உலகளாவிய உரிமைகளின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் அவர்களை நிர்வகிக்கும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றன. என்றாலும், பணியிடங்களில் தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற தேவை கண்கூடாக இருந்தபோதிலும் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள், தொழிலாளர் நலம் ஆகிய பிரச்சனைகளைப் பணியிடங்களிலிருந்து வாழ்விடங்களுக்கு மாற்றுவதற்கு அரசால் முடிந்திருக்கின்றது; மூலதனத்தின் பரப்பிலிருந்து தேவைப் பொருளாதாரப்பரப்பிற்கு மாற்ற முடிந்திருக்கின்றது. இந்த மாற்றம் தொழிலாளர் நலன் எனும் பிரச்சனையை மூலதனத்தின் சுற்றெல்லைக்கு வெளியே, மக்களை நிர்வகிக்கும் அரசாங்கத்தின் எல்லைக்கு உள்ளே நகர்த்துகின்றது. இப்போது தொழிலாளர்களுக்கு வாழ்வாதரங்களை உறுதி செய்ய வேண்டிய சுமை இல்லாமலேயே மூலதனத் திரட்டல் தொடரலாம்.

சந்தையால் வழிநடத்தப்படும் வளர்ச்சியை ஒழுங்கமைக்கும் ஒரு சமூக மாதிரியாகத் தமிழ்நாடு உருவாகிக் கொண்டிருப்பது போல் தெரிகின்றது. கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டத்துடன் கூடுதலாக, உணவு உரிமைச் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக மான்ய விலையில் கோதுமை வழங்க மத்திய அரசாங்கம் எடுத்து வரும் சமீபத்திய முயற்சிகள் இத்தகைய ஏற்பாடுகள் எப்படித் தேச அளவிற்கு உயர்த்தப்படுகின்றன என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டாகும். என்றபோதிலும் அத்தகைய திட்டங்கள் பல்வேறு சமூக இயக்கங்கள் நடத்திய போராட்டங்களிலிருந்தே தோன்றியவை; அரசாங்கம் அத்தகைய கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தபோதிலும், உலகப் பொருளாதார நெருக்கடி தொடங்கியிருக்கும் பின்னணியில், உணவுப் பொருட் களின் விலை உயர்வு அதிகரிக்கும் நிலையில் அத்தகைய அதிர்ச்சிகளைத் தாங்குவதில் இத்தகைய நலத்திட்டங்கள் வகிக்கும் பாத்திரம் மேலும் மேலும் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது; அது மட்டுமின்றி, ஒரு பக்கம் கூலிகளைக் குறைப்பதையும் மறுபக்கம் பாரம்பரியமான வாழ்வாதாரங்களைப் பறிப்பதையும் அடிப்படையாகக் கொண்ட மூலதனத்திரட்டல் உத்திகளால் மேலும் மேலும் ஓரங்கட்டப்படும் மக்களை நிர்வகிப்பதிலும் அத்திட்டங்கள் வகிக்கும் பாத்திரம் மேலும் மேலும் அதிகமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.

ஆதலால், ஏற்றுமதித் தொழிற்சாலைகளில் உள்ள தேவைக்கு அதிகமான தொழிலாளர்களுக்கு ஒரு பாதுகாப்பு வலையத்தை வழங்கும் அரசாங்கத்தின் ஆற்றல், விலைக் குறைப்பின் மூலம் சர்வதேச சந்தையில் போட்டியிடும் நடப்பிலுள்ள உத்திக்குக் காட்டப்படும் எதிர்ப்பாக எந்த வகையிலும் அமையவில்லை. முக்கியமாக, பார்ரியன்டோஸ் மற்றும் ஹீல்மே (2009) ஆகியோர் சுட்டிக்காட்டுவது போல இந்த நிகழ்வு உலகளாவிய பரிமாணத்தை அடைந்துகொண்டிருக்கிறது. தற்கால முதலாளித்துவ மூலதனக் குவிப்பைச் சமூக ரீதியாக ஒழுங்கமைக்கும் ஒரு புதிய ஆட்சி முறை மேலும் மேலும் பலப்படுத்தப்படுவதையே இத்தகைய நடவடிக்கைகள் குறிக்கின்றன. அப்படியெனில், இத்தகைய பலப்படுத்தும் போக்கிற்கு எதிராக வாதிட என்னென்னன வெளிகள் இருக்கின்றன? இந்த முறைசாராப் பொருளாதாரத்தைச் சேர்ந்த மேலும் மேலும் பல பிரிவுகளுக்கு (பிரிவினருக்கு) இந்தப் பாதுகாப்பு வலையத்தை விரிவாக்க வேண்டும் என்பது போதுமனாதா? இந்தக் கட்டுரையில் நாம் இரண்டுக்கும் இருக்கும் இந்தத் தொடர்பை நிரூபிக்கவில்லை என்றபோதிலும் கிராமப்புற வேலை உத்திரவாதத் திட்டமும் அது போன்ற மற்ற நடவடிக்கைகளும் உழைப்பின் நிர்ணயிக்கப்பட்ட விலையை அதிகரிப்பதற்கு உதவியிருக்கக் கூடும். திருப்பூரில் பெயரளவிலான ஊதியம் அதிகரித்திருப்பதற்கும் ஏற்றுமதியாளர்களால் மறைமுகமாகக் குறிப்பிடப்படும் அவ்வபோது ஏற்படும் தொழிலாளர் பற்றாக் குறைக்கும் இத்தகைய நடவடிக்கைகள் ஓரளவிற்குக் காரணமாக இருக்கலாம். ஆதலால், அத்தகைய அரசு நடவடிக்கைகள் பொருளுற்பத்தித் துறையில் உழைப்புச் சந்தையுடன் நேர்மையான உறவை வளர்த்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டவையாகவும் புது வகைகளில் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கான வெளிகளைத் திறந்துவிடும் ஆற்றல் கொண்டவையாகவும் தெரிகின்றன. குடிநீர், குடும்ப அட்டை, சாலை மற்றும் தெருவிளக்கு போன்ற பிரச்சனைகளின் அடிப்படையில் குடியிருப்புப் பகுதிகளில் தொழிலாளர்களைத் திரட்டத் திருப்பூர் தொழிற்சங்கங்கள் சமீபத்தில் எடுத்து வரும் முயற்சிகள் இத்தகைய சாத்தியக் கூறுகளையே குறிக்கின்றன.

1) “Tirupur knitwear exports show 10% dip”, The Hindu Business Line, April 8, 2008. The data is compiled by the Tirupur Exporters Association (TEA) based on shipment details provided by the banks based in Tirupur. The export figure for 2007-08 has marginally declined to Rs 9,950 crore.

Calculated from the Handbook of Statistics on State Government Finances (2004) and other yearly volumes published by the Reserve Bank of India.

2) Bed and Cororaton (2008 52)* http://www.ifpri.org/pubs/dp/IFPRIDP00801.pdf

'Fraying at the Seams', by Rasheeda Bhagat and L.N. Revathi, Business line,February 13, 2009,

3) http://www.thehindubusinessline.com/life/2009/02/13/stories/2009021350010101.htm.

Secondary Data on employment demanded in the Tiruppur area from http://nrega.nic.in//

4) http://www.isidelhi.org.in/hrnews/isidownload/Labour/Labour-2009.pdf

References:

Barrientos, A and Hulme, D (2009) 'Social Protection for the Poor and Poorest in Developing Countries: Reflections on a Quiet Revolution', Oxford Development Studies, 37: 4, 439 — 456

Bedi, Jatinder S., and Caesar B. Cororaton. 2008. “Cotton TextileApparel Sectors of India: Situations and Challenges Faced.” International Food Policy Research Institute Discussion Paper No.00801. Washington.D.C.

Bremen (2008), Poverty Regime in Village India,: Half a Century of Work and Life at the Bottom of the Rural Economy in south Gujarat, N. Delhi: Oxford University Press.

Chari.S (2004), Fraternal Capital: Peasant-Workers, Self-Made Men, and Globalization in Provincial India, Delhi: Permanent Black.

Chatterjee, P (2008), Democracy and Economic Transformation in India, Economic and Political Weekly; April 19-26, 43(16): 53-62.

Jenkins, R (2004): Democratic Politics and Economic Reform in India, Cambridge University Press, Cambridge.

Jenkins.R (2004), Labor Policy and the Second Generation of Economic Reform in India, paper presented at the Institute of Commonwealth Studies (University of London), in February.

Kalpagam.U (1981), Labour in Small Industry: Case of Export Garment Industry in Madras, 1Economic and Political Weekly, 16/48: 1957-1968.

Kennedy, L (2004), The Political Determinants of Reforming Packaging: Contrasting Responses to Economic Liberalisation in Andhra Pradesh and Tamil Nadu, in Jenkins R (ed.) Regional Reflections: Comparing Politics across India's States, New Delhi: Oxford University Press, pp: 29-65.

Mooij, J (ed.) (2005): The Politics of Economic Reform in India, Sage: New Delhi

Praveen Jha (2009), The well-being of labour I n contemporary Indian economy: What's active labour market policy got to do with it? Employment Working Paper No. 39, Employment Analysis and Research Unit, Economic and Labour Market Analysis, Department, ILO: Geneva.

http://www.ilo.org/wcmsp5/groups/public/---ed_emp/---emp_elm/---analysis/documents/ publication/ wcms _113734. pdf

Leitner.H, J. Peck and E.S Sheppard (eds.) (2007), Contesting Neoliberalism: Urban Frontiers, (New York: The Guilford Press).

Sanyal.K (2007), Rethinking Capitalist Development : Primitive Accumulation, Governmentality and Post-Colonial Capitalism, Routledge, N. Delhi.

Shyam Sundar.K.R (2009), The Current State of Industrial Relations in Tamil Nadu, report prepared for ILO, N. Delhi.

Tewari, M. 2004. “The Challenge of Reform: How India's Textile and Apparel Industry is Facing the Pressures of Liberalization.” revised version of a policy paper originally prepared for the India Program, Center for International Development, Harvard University, Cambridge MA.

Vijayabaskar.M (2010), “Saving Agricultural Labour from Agriculture”: Special Economic Zones and the Politics of Silence in Tamil Nadu, Economic and Political Weekly, XLV:6, 36-43.

Vijayabaskar, M. 2005. “Labour under Flexible Accumulation: Case of Tiruppur Knitwear Cluster.” in Das, K., ed. 2005. Industrial Clusters: Cases and Perspectives. Aldershot: Ashgate.

Vijayabaskar, M (2001): Industrial Formation under Conditions of Flexible Accumulation: The Case of a Global Knitwear Node in southern India, unpublished Ph.D dissertation, Centre for Development Studies, Thiruvananthapuram; Jawaharlal Nehru University, New Delhi.

- எம்.விஜயபாஸ்கர்

மொழியாக்கம்: அசோகன் முத்துசாமி

****

மணல்கடிகை

ஜ.சிவக்குமார்

திருப்பூர் நகரப் பின்னணியில் மக்களின் வாழ்வைச் சித்திரிக்கும் வகையில் அண்மையில் வெளிவந்த நாவல் மணல்கடிகை. பனியன் உற்பத்தித்தொழில் மூலம் பணம் புழங்கும் நகரமாகத் திருப்பூர் நகரப் பின்னணியில் ஐந்து நண்பர்களின் வாழ்வு மணல்கடிகையில் சித்திரிக்கப்பட்டுள்ளது. ஐந்து நண்பர்களுக்கு இடையேயான நட்பும் திருப்பூரில் எந்திர வாழ்க்கையில் அவர்கள் அடையும் வெற்றி தோல்விகளுமே நாவலின் மையம். வாழ்க்கையே எந்திரமயமாகிவிட்ட சூழலில் அவர்களை மனிதர்களாக உணர வைப்பதற்கோ, அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப நடப்பதற்கோ காமம் மட்டும் தான் உறுதுணை போலும். இந்நாவலின் பல பக்கங்களில் காமஉணர்வு பற்றி நுட்பமாகவும் நூதனமாகவும் சித்திரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாகக் காமஉறவுகளை விளையாட்டாக, தனது திறமையாக எண்ணி இறுமாந்து இருக்கும் சண்முகத்திற்கு அவனது மனைவி மூலம் பலத்த அடி விழுகிறது. தொழில் வாய்ப்புகள் மிகுந்த திருப்பூரில் பெண்களும் சுயசார்பு உடையவர்களாக இருப்பதனால் அனைத்துக் கட்டுக்களையும் சுலபமாகத் தூக்கியெறிகின்றனர். எனவேதான் அவர்களுக்குக் கணவனோ காமமோ சாதாரண விஷயங்களாகிவிடுகின்றன. என்னதான் பெண்கள் சுயசார்புத் தன்மையுடன் இருந்தாலும் ஆண்களின் பாலியல் சுரண்டல்களும் வெவ்வேறு முறைமைகளில் தொடரவே செய்கின்றன.

நாளெல்லாம் உழைத்தும் குறைகூலியும் அடிமைத்தனமுமே கிடைக்கப்பெற்ற விவசாயக் கூலிகளுக்குத் திருப்பூர் நகரம் ஒரு வரப்பிரசாதமே. அதேசமயம் சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் சரும நோய்களும் எந்திரத்தனமான வாழ்க்கையும் அதன் மறுபக்கம். விவசாயமோ பனியன் தொழிலோ எப்படி இருந்தாலும் நிலவுடைமையாளர்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டே இருப்பதனை எம். கோபாலகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். எத்தனையோ வாழ்வனுபவங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் சந்தித்த ஐந்து நண்பர்களின் வாழ்வில் கிடைப்பதென்னவோ வெறுமைதான். அந்த வெறுமையை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதுதான் மணல்கடிகை.