ஊழல் ஒழிப்பு பேசும் விஜய் கட்சி, மாபெரும் அரசியல் ஊழலை முன்வைத்து மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்கு கேட்கிறது. கடந்த தேர்தலில் விசில் சின்னத்தை எதிர்த்து இரட்டை இலைக்கு வாக்கு கேட்டவர்கள் இப்போது அதே மக்களிடம் வந்து விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார்கள். இது வாக்களித்த மக்களுக்கு இழைக்கின்ற மாபெரும் துரோகம் என்று நாம் கூறவில்லை; உயர்நீதிமன்றமே பொறுக்க முடியாமல் மனம் திறந்து கூறியிருக்கிறது. கூறியது உயர்நீதிமன்றம் என்பதால் இது திமுகவின் சதி என்று கூற முடியவில்லையே என்று கலங்கி நிற்கிறார்கள் விஜய் பிரச்சார பீரங்கிகள். கடந்த தேர்தலில் நாட்டில் அன்றாடம் நடக்கும் வன்முறைகளை எல்லாம் திமுக ஆட்சியின் மீது பழி போட்டு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக மேடை தோறும் முழங்கினார் விஜய். இப்போது வன்முறைகள் பன்மடங்கு அதிகரித்த நிலையில் பதில் கூற முடியவில்லை.

மீனவர்கள் பகுதியில் கல்வி நிறுவனங்கள் மக்கள் குடியிருப்புகள் நெருக்கமாக இருப்பதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் ஐந்து நாட்களில் அவசரமாக பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டப் போகும் அறிவிப்பு அரசாணையாக வெளிவந்தது. ஜோதிடர்களின் ஆலோசனையாக இருக்கலாம். இந்த ஆலோசனைகள் மக்கள் எதிர்ப்பலைகளில் மூழ்கிவிடும் என்று அவர்களுக்குத் தெரியாமல் போய்விட்டது.பல்கலைக்கழகங்கள் துவங்குவதற்கான இடத்தின் அளவு கட்ட வேண்டிய தொகை ஆகியவற்றை கணிசமாகக் குறைத்து, தனியார் பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் பெருகுவதற்கு அவசரமாக எந்த விவாதமும் இன்றி தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டு விட்டது. தனியார் பல்கலைக்கழகங்களின் கீழ் கல்லூரிகள் கொண்டுவரப்பட்டு விட்டால் அது வணிகமயமாகும்; இட ஒதுக்கீடு கொள்கை முறையாக பின்பற்றப்படாமல் சீர்குலைக்கப்படும்.

விமான நிலையங்களை அதானிக்கு கையளித்து வரும் மோடி ஆட்சிக்கு சிவப்புக் கம்பளம் விரித்து ஆதரவுக் கரம் நீட்டுகிறார் முதல்வர் விஜய். சென்னை விமான நிலையத்தை தனியாரிடம் ஒப்படைக்க பரிந்துரைத்து ஒன்றிய அரசுக்கு கடந்த ஆகஸ்ட் மாதமே கடிதம் எழுதி அந்தச் செய்தியை தமிழ்நாட்டு மக்களிடம் வெளிப்படுத்தாமல் மறைத்திருக்கிறார் முதலமைச்சர் விஜய். இதற்காக அரசு ரகசியத்தை வெளிப்படுத்தித் தேசத்துரோகம் இழைத்து விட்டது திமுக என்று வழக்கு போட்டாலும் ஆச்சரியமில்லை. தேர்தல் முடிந்த குறுகிய காலத்திலேயே கட்சிமாறி வந்தவர்களை அவர்கள் சொந்த விருப்பத்தில் வருகிறார்கள்; எங்களுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று சாதித்தார்கள். இப்போது அதே கட்சி மாறிகளை தங்கள் கட்சி சின்னத்தில் தேர்தலில் நிற்க வைத்து தாங்கள் நடத்திய பேரத்தின் அடிப்படையில் தான் கட்சியில் சேர்ந்தார்கள் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 திமுக கூட்டணியில் வெற்றி பெற்று ஓட்டுகளை வாங்கி பிறகு தவெக கூட்டணிக்கு மாறி பதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்த இடைத்தேர்தலில் கட்சி மாறி வேட்பாளர்களுக்காக பிரச்சாரக் களத்தில் இறங்கப் போகிறார்கள். சமூகத்தில் மிகப்பெரும் ஊழல் ஜாதி; அரசியலில் மிகப்பெரும் ஊழல் கட்சித் தாவல். இப்போது அரசியல் ஊழலுக்கு வாக்கு கேட்க வந்திருக்கிறது; ஊழலை ஒழிக்கப் போவதாக தம்பட்டம் அடிக்கும் விஜய் கட்சியும் அதன் கூட்டணி விசுவாசிகளுக்கும் மக்கள் பாடம் புகட்ட வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.