கர்நாடகத்தில் தசரா பண்டிகைகளில் யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கம். வழக்கமாக இந்தப் பணியைச் செய்துவந்த யானையின் காலில் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 36 வயதான வேறொரு யானை அந்தப் பணிக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், விழாக்களில் அந்த யானை பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 650 கிலோ எடையுள்ள வெள்ளியிலான அம்பாரியைச் சுமந்து சென்றபோது யானை திடீரென மிரட்சியடைந்ததால் இந்தச் சம்பவம் நேர்ந்தது தெரிய வந்திருக்கிறது.
இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. 2026, மே.1 இல் கேரளத்தின் கிடங்கூர் மகாவிஷ்ணு கோயில் திருவிழாவின்போது, யானைக்கு மதம் பிடித்து மிரண்டு ஓடியதில் லாரி ஓட்டுநர் விஷ்ணு (40) உயிரிழந்தார். அக்டோபர் 18இல் வாராணசியின் ராம்நகரில் ராம்லீலா நிகழ்வுக்காகக் கொண்டுவரப்பட்ட யானை, கட்டுப்பாட்டை இழந்து நடத்திய தாக்குதலில் பாகன் படுகாயமடைந்தார். இத்தகைய திருவிழாக் களின்போது யானையின் முதுகின் மேல் நான்கைந்து பேர் அமர்ந்து கொள்வது, அதிக எடை கொண்ட சுமைகளை ஏற்றுவது போன்றவை நிகழ்த்தப்படுகின்றன. அதிக ஒலி எழுப்பும் வாணவேடிக்கைகள், மேளதாளங்கள் போன்றவையும் யானைகளுக்குத் தொந்தரவு அளிக்கக் கூடியவை.
கேரளத்தில், யானைகள் இணைசேரும் டிசம்பர் முதல் மே வரையிலான காலகட்டத்தில் பல கோயில் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. அத்தகைய சூழலில் யானைகள் தொடர்ந்து வேலை வாங்கப்படும்போது. அவற்றுக்கு இயல்பாக உள்ள மதநீர் சுரக்கும் காலத்தில் தேவையற்ற தொந்தரவாகிறது. இதனால் அவை தாக்குதலில் இறங்குவது போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. யானைகள் கட்டுப்படுத்தப்பட்ட பின் `கட்டி அடிக்கை' என்னும் பெயரில் கடுமையாகத் தாக்கப்படுவதும் உண்டு. இதில் பல யானைகள் உயிர் இழந்திருக்கின்றன.
- விடுதலை இராசேந்திரன்