தொடர்புடைய படைப்புகள்

“எங்கே செல்கிறது சேலம் பெரியார்

பல்கலைக் கழகம்?”

“சமூக நீதியை ஒழிக்கத் திட்டமா?”

“அரசு உடனே தலையிட வேண்டும்!”

சேலம் பெரியார் பல்கலைக் கழகம் இட‌ஒதுக்கீட்டைக் கடைபிடிக்கத் தொடர்ந்து மறுப்பது இயல்பான ஒன்றாக மாறி விட்டது.

நூலகர், உடற்கல்வி இயக்குனர் போன்ற பதவிகள் பட்டியலினத்திற்கு வழங்க மறுத்து, பொதுப் போட்டிக்கு சென்றதை திராவிடர் விடுதலைக் கழகம் கடுமையாக எதிர்த்து வரும் நிலையில், தற்போது பதிவாளர் தேர்வும் அப்பட்டமாக விதிகள் மீறப்பட்டு இன்று நேர்காணல் நடைபெறுவதாக அறிகிறோம்.

பல்கலைக் கழக ஆசிரியர்கள் சங்கம், அரசுக் கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்புக் குரல் கொடுத்தும் துணை வேந்தர் கண்டு கொள்ளாமல் நேர்காணல் நடைபெறுவதாக அறிகிறோம்.

பல்கலைக் கழகங்கள் சமூக நீதியைக் கண்ணாகப் போற்றும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பது துணை வேந்தருக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.

தேர்வாணையருக்கு ஒருவரே விண்ணப்பித்த நிலையில் போட்டி இல்லை எனில் நேர்காணல் நடத்த கூடாது என்ற விதியையும் மறந்துவிட்டாரா துணை வேந்தர் என்பதும் புரியவில்லை.

ஏற்கெனவே‌ ஒரு துறையில்‌ ஒருவர் மட்டும் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தார் என்ற காரணத்தால் நேர்காணலை நடத்தாத இதே பெரியார் பல்கலைக் கழகம், இன்று தேர்வாணையருக்கு நேர்காணல் நடத்த வேண்டியது ஏன்?

பேரம் படிந்து விட்டது. பதிவாளர் விசுவநாத மூர்த்தி, தேர்வாணையர் சந்திரசேகர் என்பது பரவலாக பேசும் பொருளாக மாறியுள்ளது.

சமூக நீதியை மட்டுமல்ல; ஒற்றை விண்ணப்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு நேர்காணல் குறித்த விதிகளையும் மீறி அப்பட்டமாக செயல்படும் துணை வேந்தர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

அரசின் அனுமதியோடு பட்டமளிப்பு விழா நடைபெறுவது தான் மரபு. ஆனால் நவம்பர் 24 பட்டமளிப்பு விழா என்று பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது அரசின் அனுமதியோடு தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் வரும் 6ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடைபெறுவதாக பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இதில் அரசுத் துறை செயலாளர்கள் எட்டு பேர்‌ ஆட்சிக்குழு உறுப்பினராக உள்ளனர். இவர்கள் கட்டாயம் ஆட்சிக் குழுவில் கலந்து கொண்டு பல்கலைக் கழகத்தின் மீது அரசுக்கு உள்ள எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். இல்லையேல் சிண்டிகேட் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அரசின் பிரதிநிதிகள் இல்லாமல் பதிவாளர் நேர்காணல் நடத்துவது மறைமுகமாக பல்கலைக் கழகம் அரசுக்கு விடுக்கும் சவாலாகும்.

நேற்று மூத்த பேராசிரியர் பதவிக்கு போலி சான்றிதழ் மற்றும் அரசு அமைத்த விசாரணை வளையத்தில்‌ உள்ள தமிழ்த் துறை பெரியசாமிக்கு நேர்காணல் நடத்துகிறார் துணை வேந்தர். ஏற்கெனவே பதிவாளர் பொறுப்பு தங்கவேலுவுக்கு மூத்த பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப் பட்டு உள்ளது. அவர் மீதும் அரசு விசாரணை நிலுவையில்‌ உள்ளது. இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்; காலம் தாழ்த்தாமல் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அவர்களை பணிநீக்கமோ அல்லது பணியிடை நீக்கமோ செய்து, ஏற்கனவே ஒருமுறை இந்திய ஆட்சிப் பணியில் உள்ள ஒருவர் தலைமையில் பல்கலை நிர்வாகத்தை ஒப்படைத்தது போல இப்போதும் நியமித்து முறைகேடுகளைக் களைய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசினரையும், குறிப்பாக உயர்கல்வித்துறை அமைச்சகத்தையும் திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இங்கணம்,

கொளத்தூர் தா.செ.மணி,

தலைவர்,

திராவிடர் விடுதலைக் கழகம்.

31.10.2023

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.