எந்தப் போராட்டத்துக்கும் பணியமாட்டோம் என்ற ஒன்றிய ஆட்சியின் ஆணவத்தைப் பணிய வைத்திருக்கிறது இளைஞர்களின் சக்தி. டெல்லி ஜந்தர் மந்தரில் 25 நாட்கள் நடந்த போராட்டத்தை அலட்சியம் செய்து புறக்கணித்தவர்கள் சோனம்வாங்சூக் பட்டினிப் போராட்டம் திவீரமடைந்த நிலையிலே தான் திரும்பிப் பார்த்தார்கள். விவசாய சட்டங்களை எதிர்த்து ஒன்றிய அரசுக்கு எதிராக டெல்லியில் ஓராண்டு விவசாயிகள் போராடினார்கள்; அதற்குப் பிறகுதான் ஒன்றிய ஆட்சி பணிந்தது. இப்போது இளைஞர்கள் போராட்டத்திற்கு ஒரு மாதத்திற்குள்ளே பணிந்து வந்திருப்பது மகத்தான வெற்றிதான். ஒன்றிய ஆட்சியினுடைய ஆதிக்கத்தை இளைஞர்களின் சக்தி குலைத்திருக்கிறது என்ற கண்ணோட்டத்தில் இது வரவேற்க வேண்டியதுதான். ஆனால் இந்த வெற்றி சமூக நீதிக்கு வலிமை சேர்த்திருக்கிறதா? என்றால் இல்லை. `சிகிச்சை வெற்றி; நோயாளி மரணம்’ என்றுதான் கூறவேண்டும்.
போராட்டக் குழுவினர் முதன்மையாக முன்வைத்த கோரிக்கை ஒன்றிய அமைச்சர் பதவி விலக வேண்டும்; நீட் தேர்வுகளை முறையாக நடத்த வேண்டும் என்பதாகவே இருந்தது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இதற்கு மாறாக நீட்தேர்வே வேண்டாம் என்ற கோரிக்கையுடன் போராட்டங்கள் நடந்தன. போராட்டத்தில் இறங்கிய இளைஞர்கள் மோடி ஆட்சியை மட்டுமே நேரில் பார்த்தவர்களாக இருந்ததால் நீட்தேர்வில் நிகழ்ந்த குளறுபடிகள் மட்டுமே அவர்களுக்கு தெரிந்தன. நீட்தேர்வு என்ற அமைப்பே ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கு எதிரானது என்ற புரிதல் அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
இந்தியாவை பார்ப்பனிய மயமாக்கும் முயற்சியில் இந்துத்துவ சக்திகளுக்கு முதலில் தேவைப்படுவது கல்வியை தங்களின் வேதமத சிந்தனைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதுதான். அந்த நோக்கத்தில்தான் கல்வியை மாநில உரிமைகளிலிருந்து படிப்படியாக பறித்து வருகிறார்கள். மாநிலங்களின் கட்டுப்பாட்டில் கல்வி இருந்தால் அது மாநிலங்களின் இயல்பான உணர்வை உள்வாங்கி சமூகநீதிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும். ஒன்றிய ஆட்சியின் கீழ் இதைக் கொண்டு வந்துவிட்டால் அது தேசிய உணர்வாக மாற்றப்பட்டு பார்ப்பனியமயமாகி விடுகிறது. பார்ப்பனியத்தின் முகமூடிதான் தேசியம்.
கல்விக்கான நிதியும் படிப்படியாக குறைக்கப்படுகிறது. பள்ளிக் கல்விக்கு 50-விழுக்காடும், உயர்கல்விக்கு 33-விழுக்காடும் நிதி வெட்டப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களுக்கு நிதி ஒதுக்குவதற்காக உருவாக்கப்பட்ட மானியக்குழு கடுமையான நிதிநெருக்கடிகளை உருவாக்கி வருகிறது. நிதி ஒதுக்குவது குறைந்ததால் பல்கலைக்கழகங்கள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டு வட்டிகட்ட வேண்டிய நிலையில் கல்விக் கட்டணங்களை உயர்த்தி வருகின்றன. கடந்த 12 ஆண்டுகளில் ஒரு இலட்சம் அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 43,000 தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இவை ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்புகளால் நடத்தப்படுபவை.
சி.பி.எஸ்.இ என்ற ஒன்றிய அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பில் மும்மொழியைக் கட்டாயமாக்கி இந்தி, சமஸ்கிருத்தைத் திணிக்கிறார்கள். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பெற்றோர்கள் சார்பாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதி 6-ம் வகுப்பில் இருந்தே மும்மொழித் திட்டத்தை கொண்டு வரலாம் என்று ஆலோசனை வழங்குகிறார். முன்றாவது மொழியாக சமஸ்கிருதம் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என்று ஒன்றிய ஆட்சி உறுதி காட்டுகிறது. அனைத்து சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத ஆசிரியர்களும் வகுப்புகளும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அறிவித்துள்ளது. 24,000 பேர் பேசும் சமஸ்கிருதத்தை கற்பிக்க 6,102 பார்ப்பன ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 7கோடி மக்கள் பேசும் தமிழை கற்பிக்க 12 ஆசிரியர்கள் மட்டுமே நியமனம். இது நாடாளுமன்றத்தில் கல்வி இணை அமைச்சர் ஜெய்ந்த் சவுத்திரி மதுரை நாடாளுமன்ற சு.வெங்கடேசன் கேள்விக்கு அளித்த பதில்.
உயர்கல்வி முழுவதும் ஒன்றிய ஆட்சியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் `விக்சித் பாரத் சிக்ஷா அதிஷ்டான் (VBSA)’ என்ற மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு அது இப்போது பரிசீலனைக்காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பாஜக ஆட்சி நடக்கும் மாநிலங்களும், ஆட்சிக்கு ஆதரவு தரும் ஆந்திரா அரசும் கூட இந்த மசோதாவை ஏற்க முடியாமல் எதிர்ப்புகளைத் தெரிவித்தன. ஆனாலும் சில திருத்தங்களோடு நாடாளுமன்றக் குழு ஒப்புதல் தந்துவிட்டது.
பாடத் திட்டங்கள், வரலாறுகள் மாற்றியமைக்கப்படுகின்றன; சனாதனத்திற்கு புதிய விளக்கங்கள் தரப்படுகின்றன. இஸ்ஸாமிய வரலாறுகள் முழுமையாக நீக்கப்பட்டுவிட்டன. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் இந்துக் கடவுள்களின் பெருமைகளை பாடநூல்களில் சேர்க்க வேண்டும் என்று கூறுகிறார். இந்திய பாரம்பரிய கல்விமுறை என்று புதியகல்வித் திட்டத்தில் புதிய பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். காலனிய சிந்தனையிலிருந்து விடுவிப்பதே இந்தக் கல்விமுறையின் நோக்கம் என்றுகூறி மறுபிறப்பு, சோதிட மூடநம்பிக்கைகளுக்கு அறிவியல் விளக்கம் தரும் ஆய்வுகள் கான்பூர், காரக்பூர் போன்ற அய்.அய்.டி-களில் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் பிண்ணனியில் நீட் தேர்வையும் இணைத்துப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து மட்டுமே ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மருத்துவர்களும் மருத்துவ நிபுணர்களும் பெருமளவில் வருகிறார்கள். நீட் தேர்வுமுறை இதை சீர்குலைக்கிறது. `சூத்திரர்’கல்வியை மனுநீதி தடை போட்டது. `நீட்’ கட்டுப்படுத்துகிறது. சமூக நீதிக்கான கல்வி அமைப்பை சனாதனத்திற்கான கல்விமுறையாக்கும் சூழ்ச்சி அரங்கேற்றப்படுவதோடு சமஸ்கிருதம் வழியாக பார்ப்பனியம் தொடர்ந்து திணிக்கப்படுகிறது. இந்த ஆபத்துகளை மாற்றத்தை விரும்பும் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய தேவை இருக்கிறது. நீட் எதிர்ப்பு இயக்கத்தை மாநில உரிமையோடும் பார்ப்பனிய எதிர்ப்போடும் இணைத்து இளைஞர்களிடம் கொண்டு சென்று அதற்கான வலிமையான இயக்கத்தை உருவாக்க வேண்டும்.
புரட்சியாளர் அம்பேத்கரை முன்னிறுத்தியே இளைஞர்கள் போராடினார்கள். அந்த எழுச்சி அம்பேத்கர் சிந்தனை வழியிலும் தொடர வேண்டும் என்பதே சமூகநீதியாளர்களின் எதிர்பார்ப்பு!
- விடுதலை இராசேந்திரன்