பெரியாருக்கு டீசர்ட்டையும், ஜீன்ஸ் பேண்டையும் அணிவித்து ஓர் ஓவியர் தீட்டிய இளம் தோற்றத்துடனான ஓவியம் இன்று வரை ஏராளமாக பகிரப்படுகிறது. பெரியாருக்குப் போர்த்திய இளமைத் தோற்றம் அவரது சிந்தனைகளுடன் இணைந்து நிற்பதே இந்த ஈர்ப்புக்கு காரணம். உலகம் முழுதும் இளைஞர்களின் எழுச்சி தொடங்கியுள்ள காலம் இது. பொருளாதார நெருக்கடிகளும், வேலையில்லாத் திண்டாட்டமும், இளைஞர்களின் தன்னெழுச்சி உந்துதலுக்குக் காரணியாகி ஆட்சி மாற்றங்களை உருவாக்கி வருகின்றன. இந்திய அளவிலும் ’கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ கல்விக் கட்டமைப்பின் சீர்கேடுகளை எதிர்த்து களமிறங்கி இருக்கிறது. அரசியல் கட்சிகளின் எல்லைகளுக்கு அப்பால் நின்று தொடங்கி இருக்கிறது இந்த எழுச்சி. எனவேதான் இந்திய ஒன்றிய ஆட்சி இதை எதிர் கொள்வதில் திணறுகிறது.
கட்சிகளை அதிகார வலிமையால் ஒடுக்கியவர்கள் இளைஞர்கள் எழுச்சியை எதிர் கொள்ள இயலாது திணறுகிறார்கள். ஆதரவுக்கரம் நீட்டி அரவணைத்து இந்த எழுச்சியை பழமையை நோக்கி இழுத்துச் செல்லும் முயற்சிகளில் முனைப்புக் காட்டுகிறார்கள். பழமைகளைக் கட்டுடைத்து நவீனத்துவத்தை நோக்கி சமுதாயத்தை நகர்த்த விரும்பிய பெரியார் மாற்றங்களை ஒருபோதும் பின்னோக்கி இழுத்துச் செல்ல முடியாது என்றார்.
“எவ்வளவு மதவெறியரும் குரங்குப் பிடிவாதக்காரரும் இன்றைய வாழ்க்கையில் மாற்றம் அடைந்து கொண்டும் மாற்றத்தை ஏற்றுக் கொண்டும் தான் இங்கு வாழ்கின்றார்களே தவிர, தெய்வீகத்துக்கு தனது தத்துவத்திற்கு மாறுபட்டதென்று கருதி எதையும் விட்டுவிட்டு காட்டுக்குள் ஓடிப் போய்விடவில்லை, அல்லது தற்கொலை செய்து கொண்டு ஆண்டவனை அடைந்து விடவும் இல்லை”என்றார் பெரியார். மாற்றங்களை பின்னோக்கி இழுத்துச் செல்ல முடியாது.
சமூக மாற்றங்கள் நிகழாத வரை அவ்வப்போது ஏற்படும் அரசியல் மாற்றங்கள் நிலைத்திருக்காது என்ற உறுதிப்பாட்டுடன் அவர் பழமைகளைக் கட்டுடைத்து நவீன சமத்துவத்துக்கான கருத்துக்களை விதைத்தார். சுமார் 100 ஆண்டுகளுக்குமுன் சமூகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கிய அந்தச் சிந்தனைகள் இன்றைய சிந்திக்கும் இளம் தலைமுறையினரால் பின்பற்றப்படும் வரலாற்றுத் திருப்பத்தைப் பார்க்கிறோம். உதாரணத்திற்கு சிலவற்றைப் பட்டியலிட முடியும்.
‘இன்னார்க்கு இன்னார் என்றே தேவன் எழுதி வைத்தான் அன்றே’ என சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக கூறப்பட்ட திருமணத்தை பெரியார் கேள்வி கேட்டார். “மணமக்கள் தங்கள் வாழ்க்கை சவுகரியத்திற்காகச் செய்யும் ஒரு ஒப்பந்த ஏற்பாடுதான் திருமணம் என்று கூறிய பெரியார், இந்தத் திருமண அமைப்பே தேவையில்லை என்று கூறிய போது சமூகம் ஏற்கவில்லை. இப்போது திருமணம் செய்து கொள்ளாமலே இணைந்து வாழ்தல் (Living together) என்ற வாழ்க்கைக்கு இளைய தலைமுறை நகர்ந்து இருக்கிறது. நீதிமன்றங்களும் இதற்கு சட்ட அங்கீகாரம் வழங்கி உள்ளன.
விருப்பமில்லாத கட்டாய வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்வதை பெரியார் வலியுறுத்தினார். ஒரு காலத்தில் சமூக அவமானமாக கருதப்பட்ட விவாகரத்துகள் இப்போது சமூகத்தின் இயல்பாகவே மாறிவிட்டது.
பெண்,ஆண் உடலுறவு இன்றி குழந்தைகள் பிறக்கும் காலம் வரும் என்றார் பெரியார். ‘கற்பு’ என்று பெண்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட ‘புனிதத்தை’ கேள்வி கேட்ட பெரியார், ‘கற்பு’ ஆண்களுக்கு மட்டும் வேண்டாமா? என்றார். கற்பு என்ற ‘புனிதமே’ தமிழ்ப் பண்பாட்டின் பெருமைக்கான அடையாளம் என்ற பழமை கருத்தியல் இப்போது தகர்ந்து வருகிறது.
‘விந்துசேமிப்பு மய்யங்களும், கருத்தரிப்பு மய்யங்களும்’ ஏராளமாக வந்துவிட்டன. கருவை சுமக்கும் வாடகைத் தாய்கள் வந்து விட்டார்கள். மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு பணம் கட்ட முடியாத நிலையில் ஒரு மாணவி வாடகைத் தாயாக மாறி பணம் ஈட்டிய கதையுடன் ‘விசுவநாதன் அண்ட் சன்ஸ்’ என்ற திரைப்படம் அண்மையில் வெளிவந்த போது எதிர்ப்புகள் இல்லாத வெற்றிப் படமாகவே அது ஓடியது. அண்மையில் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் ஈவ்வைலி என்ற பெண் தனது தாய்க்கு தனக்கான விந்துகொடை வழங்கியவரை தேடும் முயற்சிகளில் ஈடுபட்டு, அதற்காக சந்தித்த கடும் சவால்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்த செய்தியாக மாறியது.
ஆண், பெண் உடைகளில் பாகுபாடுகளை எதிர்த்தார் பெரியார். புடவை கட்டும் பெண்களின் ஒரு கை எப்போதும் சரி செய்யவே பயன்படுவதை சுட்டிக் காட்டினார். இப்போது இளம் பெண்கள் புடவை, பாவாடை, தாவணி, சுடிதார் என்று மாறி வசதியான ஜீன்ஸ், டீசர்ட்-க்கு மாறிவிட்டார்கள். கிராமங்களிலும் பாவாடை, தாவணி விடைபெற்று சுடிதார் என்ற மாற்றம் நோக்கி நகருகிறது.
மறுமண உரிமையை வலியுறுத்திய பெரியார் கைம்பெண் (விதவை) கோலத்தை கடுமையாக எதிர்த்தார். சட்டங்கள் அனுமதித்தாலும் சமூகம் மாற்றங்களை ஏற்க மறுத்தது. ஜாதி பார்த்து நடந்த முதல் திருமணம், தோல்வியுற்றப் பிறகு, இரண்டாவது திருமணத்துக்கு வரன் தேடும் போது மணமகன் படித்தவனாக, நல்லவனாக இருக்க வேண்டும் எந்த ஜாதியானாலும் பரவாயில்லை என்று ஜாதிக்கு எதிராக ஜாதி ஆதரவாளர்களே பச்சைக் கொடி காட்டுகிறார்கள்.
கிராம, நகர பேதங்களை எதிர்த்தவர் பெரியார். பழமையின் பிடிக்குள் ஜாதியையும், பெண்ணடிமையையும் கட்டிக்காக்கும் கிராம அமைப்பு முறையை உடைத்து நகரமயமாக்க வேண்டும் என்றார் பெரியார். கிராமப் பெருமைகளின் மோகம் குறையத் தொடங்கி இந்தியாவிலேயே நகரமயமாதலில் முதல் இடத்தில் நிற்கிறது தமிழ்நாடு.
வீட்டுக்கு ஒரு சமயலறை வேண்டாம், பொது சமயலறை வேண்டும் என்றார் பெரியார். இளைய சமுதாயம் சமயலறையிலிருந்து மெல்ல விலகி ‘சுகிக்கும், ஜொமெட்டோவுக்கும்’ ஆன்லைன் ஆர்டர்களை ஆர்வத்துடன் போடுகிறது. பெண்களிடமிருந்து சமையல் கரண்டியைப் பிடுங்கி புத்தகங்களைக் கொடுங்கள் என்ற பெரியாரின் கூற்றை இளம் தலைமுறை பெண்கள் கவிதைகளாகவும் இலக்கியங்களாகவும் கொண்டாடுகிறார்கள்.
சமூகத்தையே அதிர்ச்சி அடையச் செய்த பெரியாரின் மற்றொரு கருத்து பிள்ளைப் பேறு வேண்டாம் என்பதாகும். படித்த இளம் தலைமுறையின் புரட்சிகர இணையர்கள் இந்தக் கருத்தை கொண்டாடி வருவதையும் சமூகத்தில் பார்க்க முடிகிறது.
“திருமணத்துக்கு முன்பு ஒரு பெண்ணும், ஆணும் சேர்ந்து பழகி ஒருவரையொருவர் அறிந்து கொண்டபிறகுதான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பெண்களை ஆண்களோடு சாதாரணமாகப் பழகச் சொல்ல வேண்டும். அன்பு, குணம், பழக்க வழக்கம் இவைகள் உணர்ந்து பழகினால்தானே தெரியும்?” என்று 50 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் கூறிய கருத்தை இளம் தலைமுறை இப்போது முழுமையாக பின்பற்றுகிறது. திருமணம் நிச்சயமாகிவிட்டால் அடுத்து திருமணம் நிகழ்கிற வரை மணமக்கள் சந்தித்துப் பேசவே கூடாது என்ற தடைகளை இளைய சமூகம் ஏற்கத் தயாராக இல்லை. கலந்து பேசவே விரும்புகிறது.
இளைய தலைமுறையின் எழுச்சியில் ஜாதி, மத அடையாளங்கள் காணமல் போகின்றன. பெண், ஆண் பேதங்கள் உடைகின்றன. கட்சி அமைப்புகளில் இவர்கள் அடைபடுவதும் இல்லை. இவையெல்லாம் தொலைநோக்கு பார்வையோடு பெரியார் இளைய சமுதாயத்திற்கு முன்வைத்த சிந்தனைகள்தான். இந்தச் சமூக மாற்றங்கள் கடவுள்,மத, சடங்கு, சம்பிரதாய நம்பிக்கையில் ஆழமாக ஊறிபோய் உள்ள சமூகத்தை உள்ளடக்கி பயணிக்கத் தொடங்கிவிட்டன என்பதுதான் இதில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
(புதிய தலைமுறை இணைய இதழுக்கு எழுதிய கட்டுரை)
- விடுதலை இராசேந்திரன்