பேய், பிசாசு, ஆவிகள் உண்மையில் இருக்கின்றனவா? இவற்றை ஏவி விடவும் தடுக்கவும் பில்லி, சூனியம், செய்வினை மூலம் முடியுமா?

இந்து, முஸ்லிம், கிறித்துவம் உள்ளிட்ட எல்லா மதத்தாரும் பேய், பிசாசு, ஆவிகளை நம்புகிறார்கள். இந்து மதத்தில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒவ்வொரு விசேடமான பேய் பிசாசு இருப்பதும், பூசாரிகளைக் கொண்டு அவற்றை விரட்ட முயல்வதும் பொதுவான அம்சமாகும். கிறித்துவ மதத்தின் 'புனித' நூலாகக் கருதப்படும் பைபிளிலும், இஸ்லாம் மதத்தின் 'புனித' நூலாகக் கருதப்படும் குர்-ஆனிலும் பேய் பிசாசுகள் உண்டு. இன்றும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் கிறித்துவ மத போதகர்களால் 'சரீர சுகமளிக்கும்' கூட்டங்களில் பேய் விரட்டும் நிகழ்ச்சிகளைக் காணலாம். கத்தோலிக்க மதத் தலைவர் 'போப்பும்' பேய் விரட்டலுக்கான சில நெறிமுறைகளை அறிவித்திருக்கிறார். ஏர்வாடி ஊரிலுள்ள முஸ்லீம் தர்கா பேய் விரட்டலுக்குப் பிரபலமான இடமாகக் கருதப்படுகிறது.

இந்த 'பேய் விரட்டல்' போட்டியில் வெற்றி பெற்றவர் யார் என்று சொல்லமுடியாத வண்ணம் மூன்று மதத்தைச் சேர்ந்தவர்களாலும் பேய் விரட்டல் இன்றும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

பொதுவாகத் தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், விபத்தால் இறந்தவர்கள் போன்றோர் பேயாக. ஆவியாக உலவுவதாக நம்பப்படுகிறது. விபத்தால் அல்லது உணவுக்காகக் கொல்லப்படும் ஆடுகள், கோழிகள், மாடுகள் போன்ற பிராணிகள் 'ஆவியாக, பேயாக' உலவுவதாக பொதுவாக யாரும் நம்புவதில்லை. இதுபோல் கொல்லப்படும் தாவரங்களும் பேயாக, ஆவியாக உலவுவதாக யாரும் நம்புவதில்லை. "பேயைப் பார்த்தேன்" எனத் தனி நபர்கள்தான் கூறி உள்ளனர். ஒரு குழுவினரோ அல்லது நான்கைந்து நபர் சேர்ந்தோ இதுவரை பார்த்ததாகத் தகவல் இல்லை.

இந்தப் பேய், பிசாசு, ஆவிகள் படித்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை, அய்.பி.எஸ். அதிகாரிகளை, மருத்துவர்களை, பொதுவாகப் படித்த ஆண்களைத் தொல்லை செய்வதில்லை. அதேபோல் பார்ப்பனஆண்களையும், பெண்களையும் தொல்லை செய்வதில்லை. இன்றுவரை இவர்களையெல்லாம் ஏன் பேய், பிசாசு ஆவிகள் தொல்லை செய்யவில்லை என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் இதேபோல், பிசாசு ஆவிகள் கிராமப்புற மக்களை அதிலும் படிப்பு அறிவு இல்லாதவர்களை அதிலும் பெரும்பாலும் பெண்களையே தொல்லை செய்வது ஏன்? இவையெல்லாம் தோழர் பெரியார் இந்நாட்டு மக்களை நோக்கி எழுப்பிய கேள்விகள் ஆகும்.

அடுத்து இந்தப் பேய், பிசாசு, ஆவிகள் ஆகியவற்றின் தொல்லைக்கு உள்ளானவர்கள் நிலையைப் பார்ப்போம். இவர்களில் சிலர் பேய், பிசாசு, ஆவியைப் பார்த்ததாகவும், சலங்கை ஒலியைக் கேட்டதாகவும், கடவுள் காட்சி கொடுத்ததாகவும் சொல்வார்கள். இவர்கள் பொய் சொல்லவில்லை. தாம் உணர்ந்ததைச் சொல்கிறார்கள், எனவே இவர்களைப் பொய்யர்கள் என்று அவசரப்பட்டு முடிவுசெய்ய வேண்டியதில்லை. அப்படியென்றால் இவையெல்லாம் உண்மையா? அதாவது பேய். பிசாசு, ஆவிகள் இருப்பது உண்மையா? என்ற கேள்விகள் எழலாம். மேற்சொன்னவை எல்லாம் புலன்களை ஏமாற்றும் உணர்ச்சிகளே (Deceptive Perceptions) ஆகும்.

ஜாதகம் மூலம் எதிர்காலத்தைக் கணிப்பது உண்மையா?

`பேய்', பிசாசு, ஆவிகள் பெரும்பாலும் கிராமப்புறங்களைப் பாதிப்பவை ஆகும். நகர்ப்புறம், கிராமப்புறம், படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடு இன்றி நிலைபெற்றுள்ள மூடநம்பிக்கை ஜாதகமாகும்.

கி.மு.3000க்கு முன்பே இந்தியா, சீனா, பாபிலோன், மெசபட்டோமியா ஆகிய நாடுகளில் 'ஜாதகம்' வளர்ந்த நிலையில் இருந்தது. ஒரு மனிதன் பிறக்கும்போது கோள்கள் (கிரகங்கள்) இருக்கும் நிலைகளைக் கணித்து, அவன் வாழ்வை நிர்ணயிக்கும் முயற்சியே 'ஜாதகம்' எனப்படுகிறது. மிகப் பழங்காலத்தில் வானவியல் பற்றிய சரியான உண்மைகள் தெரியாத காலத்தில் உருவான ஜாதகம் இன்னும் அதேநிலையில் இருக்கின்றது.

எடுத்துக்காட்டாக சூரியன் என்பது ஒரு நட்சத்திரம் என்ற உண்மையும், சந்திரன் ஒரு துணைக்கோள் என்ற உண்மையும் ஜாதகக் கணிப்பில் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. பூமியைப்போல சூரியனையும், சந்திரனையும் கோள்களாகவே ஜாதகக் கணிப்பில் எடுத்துக்கொள்கின்றனர். ஜாதகத்தில் கூறப்படும் பன்னிரெண்டு வீடுகளும் உண்மையில் கிடையாது. வானத்தையும் தமது விருப்பத்திற்கு ஏற்றவகையில் பிரித்து வைத்துள்ளனர். உண்மையில் இருக்கும் நெப்டியூன், யுரேனஸ், புளுட்டோ ஆகிய கோள்களை ஜாதகக் கணிப்பில் எடுத்துக்கொள்வது இல்லை. இராகு கேது என்று இல்லாத இரண்டு கோள்களும் ஜாதகக் கணிப்பாளர்களின் கற்பனையில் மட்டுமே இருக்கும்.

ஜாதகக் கணிப்பாளர்கள் ஒரு வினாடி தவறினால்கூட கணிப்பு தவறும் என்கிறார்கள். ஜாதகக் கணிப்பில் உள்ள சில நட்சத்திரங்களில் இருந்து நமக்கு ஒளி வந்து சேருவதற்கு பல ஆண்டுகள் ஆகும். மேலும் வீனஸ் என்ற கோளின் உண்மை நிலைக்கும், நமக்குத் தெரியும் நிலைக்கும் இடையில், ஆறு நிமிட நேர வேறுபாடு இருக்கிறது. இதுமட்டுமல்ல மகப்பேறு மருத்துவமும், அறுவை சிகிச்சையும் குழந்தை பிறக்கும் காலத்தினை விரைவுபடுத்தவோ நீட்டிக்கச் செய்யவோ இயலும் அளவுக்கு வளர்ந்துள்ளது. 'நல்ல நேரத்தில்' அறுவை சிகிச்சை செய்து குழந்தையைப் பெற்றெடுக்கும் நடைமுறை தற்போது உள்ளது. எனவே, ஒரு குழந்தையின் எதிர்காலத்தை மகப்பேறு மருத்துவர் நிர்ணயிக்க முடியும் என்று சொல்லலாமா? மேலும் குழந்தை பிறக்கும் நேரம் எது என்பதை ஜாதகக் கணிப்பாளர்கள் சரியாகச் சொல்வதில்லை. பிறப்பு உறுப்பில் இருந்து குழந்தையின் தலை வெளியில் வரும் நேரமா? கால் வெளியில் வரும் நேரமா? தொப்பூழ் கொடியை வெட்டும் நேரமா? இவற்றுள் எது குழந்தை பிறந்த நேரம்?

ஜாதகக் கணிப்பில் உள்ள விவரங்கள் வானவியல் உண்மைகளுக்குப் புறம்பானவை, பிறந்த நேரத்தினை நிர்ணயிப்பதில் கோளாறு. மேலும் ஜாதகம். கைரேகை போன்ற எதிர்கால நிர்ணயிப்பாளர்கள் தமது கணிப்புகளை சற்றே குழப்பமான மயக்கமான சொற்களைக் கொண்டே சொல்வர். கணிப்பு தவறினால் சோதிடர் தப்பிக்க பிறந்த நேரக் கோளாறும், குழப்ப வார்த்தைகளும் ஜாதகக் கணிப்பாளர்களுக்கு துணைபுரிகின்றன. ஜாதகக் கணிப்பு கைரேகை முறையைக் கற்றுத் தேர்ந்த டாக்டர் கோவூர். ஜாதகம், கைரேகை மோசடிகளைத் துணிச்சலுடன் அம்பலப்படுத்தி சவால் விட்டார். பெங்களூர் பி.வி.ராமன் உள்ளிட்ட எந்த ஜாதக கைரேகை கணிப்பாளர்களும் கோவூரின் சவாலை சந்திக்கத் துணியவில்லை. கைரேகை பலன் உண்மையானால் கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடை கிடைக்குமா? இராணுவத்தில் சேருவதற்கான தகுதியாக ஆயுள் ரேகை பலமாக இருக்கவேண்டும் என்பதை அரசு கடைப்பிடிக்குமா? ஆயுள் ரேகை பலமாக உள்ளவர்கள் விமானத்தில் இருந்து பாராசூட் இல்லாமல் குதித்து ஆயுள் ரேகையின் மகிமையை மெய்ப்பிப்பார்களா?

இதேபோன்ற மோசடிதான் கம்ப்யூட்டர் சாதகமும் ஆகும். அறிவியல் முன்னேற்ற நவீன கருவியான 'கம்ப்யூட்டர்' மூலம் தற்போது மக்களிடையே மூடநம்பிக்கையைப் பரப்பி வருகின்றனர். கம்ப்யூட்டரில் மனிதனே தேவையான செய்திகளைச் செலுத்தி அவரவர் சாதகத்திற்குத் தகுந்தாற்போல் செய்தியை வரவழைப்பது ஒரு நூதன மோசடியாகும்.

தீ மிதித்தலை அறிவியல் மூலம் விளக்க முடியுமா?

முடியும். இது கடவுள் சக்தியால் விரதம் இருந்து செய்யப்படும் செயலாக நீண்டநாட்களாக நம்பப்பட்டு வந்தது. இந்த மூடநம்பிக்கையை பகுத்தறிவாளர்கள் அம்பலப்படுத்தி வருகின்றனர். எல்லோராலும் செய்யக்கூடிய செயலே இது என்பது நிரூபித்துக் காட்டப்பட்டாகி விட்டது.thee mithi vizhaநெருப்பின்மீது நடக்கும்போது காலில் உள்ள ஈரமானது நெருப்பில் பட்டு ஆவியாகி காலுக்கும் நெருப்புக்கும் இடையே ஆவித்திரை உருவாகிறது. இந்த ஆவித்திரையைக் கடந்து வெப்பம் காலைச் சுடுவதற்கு சில வினாடிகள் ஆகும். அதற்குள் காலை எடுத்து விட்டால் ஆபத்தில்லை.

தீ மிதிக்கும் முன் நன்கு கிளறி, தட்டிவிட்டு சாம்பல் இல்லாமல் இருக்கும்போதுதான் நடக்கவேண்டும். சாம்பல் இருந்தால் அது காலில் ஒட்டிக்கொண்டு காலைச் சுடும். (தீமிதி நடக்கும் இடங்களில் இதுபோல் சாம்பல் இல்லாமல் நெருப்பு சிவப்பாக இருக்கும் காட்சியைக் காணலாம்).

1. தீயின்மேல் நடக்கும் பக்தர்கள் அதன்மேல் தொடர்ந்து குறைந்தபட்சம் 10 நிமிடம் நிற்பார்களா? இயலாது.

2. மரத்துண்டால் ஆக்கப்பட்ட நெருப்பில் நடக்கும் பக்தர்கள் உலோகத் தகட்டை வெப்பப்படுத்தி அதன்மீது நடக்கத் தயாரா? - முடியாது.

(தாய்லாந்து போன்ற வெளிநாடுகளில் பக்தி முற்றிய நிலையில் சில புத்த பிட்சுகள் எரியும் நெருப்பில் தாண்டி வருவதாக கூறி இறந்து போயுள்ளனர்.)

தீச்சட்டி எடுத்தலை அறிவியல்மூலம் விளக்க முடியுமா?

முடியும். சட்டியின் அடியில் வெப்பம் கடத்தாப் பொருள்களைப் போட்டு அதன்மேல் நெருப்பினை எரியச்செய்து தூக்கினால் சட்டி பொறுக்க முடியாத அளவுக்கு சுடாது. மேலும் தீச்சட்டி ஏந்துபவர்கள் சட்டியை அடிக்கடி அடுத்த கைக்கு மாற்றிக் கொள்வார்கள், மண்பானைக்குள் தெருப்பைப் போட்டு தீச்சட்டி எடுக்கும் பக்தர்கள் உலோகத்தால் ஆன (செம்பு, எவர்சில்வர்) குடத்தில் நெருப்பைப் போட்டோ அல்லது சுடுதண்ணீரை ஊற்றியோ கையில் ஏந்திவர இயலாது

பூப்பு நீராட்டு விழா நடத்துவதும், மாத விலக்கு நேரங்களில் பெண்களை `தீட்டு' என்று ஒதுக்கி வைப்பதும் சரியா?

பூப்பு நீராட்டு விழா என்பது சம்பந்தப்பட்ட பெண் உடற்கூறு ரீதியில் உடலுறவிற்கும் அதன்மூலம் கருவுருவதற்கும் தயாராகி விட்டாள் என்பதை உணர்த்தும் அறிவிப்பேயாகும். நாகரீகம் வளர்ச்சி பெறாத நிலையில் தகவல் தொடர்புமுறை பின்தங்கி இருந்த நிலையில் பழங்காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த இச்சடங்கினை இன்றும் தொடர்வது அநாகரீகமான, பெண்களை இழிவுபடுத்தும் செயலாகும். இதுபோல் உடற்கூறு ரீதியில் உடலுறவிற்கும், பெண்ணைக் கருவுறச் செய்வதற்கும் தயாரான ஆணிற்கு இத்தகைய சடங்குகள் செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களைப் பொருளாக பாவிக்கும் ஆண் ஆதிக்க செயல்பாடே - இந்நிகழ்ச்சியின் வெளிப்பாடு ஆகும்.

மாத விலக்கு என்பது சிறுநீரைப்போல், மலத்தைப்போல் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருளேயாகும். (சிறுநீரையும் மலத்தையும் சுகாதாரமான முறையில் தூய்மைப்படுத்துவதுபோல், மாதவிலக்கையும் சுகாதார முறையில் தூய்மைப்படுத்த பல்வேறு வசதிகள் வந்துவிட்டன) இத்தகைய மாத விலக்கு காலத்தை 'தீட்டு' என்று கூறுவது பெண்களை இழிவுபடுத்தும் மூடநம்பிக்கையாகும்.

 நன்றி: பெரியார் மய்யம் வெளியீடு

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.