பருவ வயது வந்ததும்
பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு
வீட்டு வேலை செய்யும்
வேலைக்காரி ஆக்கினீர்கள்.
வரதட்சனை கேட்காத
வரன்தான் வேண்டுமென்று
வந்த வரன்களை
விரட்டி விட்டீர்கள்.
விவாக வயது கடந்துபோனது.
தோழியின் இடுப்பில் குழந்தை
கனத்துப்போகுது என் இதயம்.
பக்கத்து வீட்டு பையனை
பார்த்தாலேபோதும்
வேசி என்று பேசுகின்றீர்கள்.
தனிமரமாய்
தமக்கை நானிருக்க
தம்பி திருமணத்திற்கு
துடி துடிக்கின்றீர்கள்
மகாலட்சுமி வருவதாய்
மகிழ்ந்து போகின்றீர்கள்
தம்பி திருமணத்திற்கு
தடையாக இருக்கிறேன் என்று
அரளிவிதையை அரைத்து வைத்து
“செத்துப்போ” என்றீர்கள்.
குடிக்க வைத்தீர்கள்
இதற்குப்பதிலாக
பிறந்தவுடன் கள்ளிப்பாலை
ஊற்றியிருக்கலாமே.
ஆனாலும்,
உங்கள் மகளாக பிறந்தபோதும்
உங்கள் மகளாக இறக்கும்போதும்
மகிழ்ந்து போகிறேன். போ...கி....றே....ன்.
இன்னும் நான்
முழுமையாக சாகவில்லை
அதற்குள்,
நடிப்போடு
உங்கள் அழுகை குரல் வெளியே
நான் தற்கொலை செய்துகொண்டதாக.

(இந்த மலர் உதிர்ந்தது 1970 அன்றைய, மதுரை மாவட்டம்,ஆண்டிபட்டி அருகே உள்ள வடுகபட்டி கிராமத்தில்,40 ஆண்டுகளுக்கு முன்பு எனது 13 வயதில் பார்த்தது.கள்ளிப்பாலுக்கு தப்பிய பெண்குழந்தைகள் கல்யாண வயதில் அரளிவிதைக்கு அழிந்துபோவது அப்போது எனக்கு புரியவில்லை.இத்தனை காலம் என் இதயத்தில் இருளாக இருந்த இது இன்றுதான் வெளிச்சத்திற்கு வந்தது.)

Comments

2 comments

2
சோமா
முத்து இராஜன்...தெக்குச் சீமைக்கான கவிதை...1990 க்கு முந்தியது. இன்றைக்கு நிறைய மாற்றங்கள்..கிராமத்து வசதியில்லாத பெண்களுக்கு இந்த அவலம் தொடரலாமேயொழிய நவயுக பெண்கள் இந்த உலகை அட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறார்கள் இன்று.
கி.பிரபா
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பெண்ணின் வாழ்வை ஆய்வு செய்தால் அதில் சோகமே 75% இருக்கும். சொன்னால் கேவலப்படுத்துவார்கள். சொல்லாமல் இருந்தால் அவளுடைய வாழ்வு முழுதும் புழுங்கிச் சாகும் நிலையில் தான் உள்ளாள். பெண்ணின் பெருந்தக்க யாவுள? எனச் சொல்லிய எந்த ஆசிரியரும் குறள் போல் வாழ்ந்த்தாகத் தெரியவில்லை! மரணம் வரை சார்ந்திருப்பதே அவளின் வாழ்வு எனில் அங்கேயே அவளைச் சிறைப்படுத்தி விட்டார்கள் என்றே பொருள்.ஒன்று மட்டும் உறுதி. எத்தனை வகை ஐயப்பாடுகளைச் சமுதாயம் அவளின் மேல் கொண்டாலும் அவளின் மன உறுதியே அவளை வாழ வைக்கும்.இலக்கியத்தில்மட்டுமே சிற்சில பெண்கள் பேசப்படுகிறார்கள் காலம் காலமாய்.உரை ஆசிரியர் மனம்போன போக்கில் வேறுபட்டும் இருக்கின்றனர்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.