(1970ஆம் ஆண்டில் “தமிழ்ப் பாடமொழித் திட்டத்தை” கலைஞர் அமல்படுத்தியபோது அதனை வரவேற்று பெரியார் அளித்த அறிக்கை.)

தமிழ்நாட்டில் வீழ்ச்சி அடைந்த காங்கிரஸ் இயக்கம் தலை எடுக்க, வளர நான் காரணமாக இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டு நீதிக்கட்சித் தலைவரானதன் காரணமே பார்ப்பனரல்லாத தமிழர்களின் எதிர்கால வாழ்வை ஒளிமயமாக ஆக்குவதற்காகவேயாகும்.

அதற்காக அன்றிலிருந்து இன்றுவரை நான் ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறியும் ஒரு நிமிடமும் ஓய்வு கொள்ளாமல் பணியாற்றிக் கொண்டுள்ளேன்.

லட்சியங்களில் வெற்றி பலருக்குக் கிடைத்தது போல், எனக்கு இளமைக் காலத்தில் கிடைக்காவிட்டாலும் எனது முதுமைக் காலத்திலாவது கிடைத்தது என்பதற்கு அடையாளமாகத்தான் என்னோடு இருந்து வளர்ந்தவர்களால் ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

periyar 325தமிழ்ப் பாட மொழி என்ற யுத்த தளவாடம்:

இந்த ஆட்சியுனுடைய சாதனைகளில் எந்தவித ஓட்டை உடைசல்களையும் குறிப்பிட்டுக் காட்டி எதிர்க்க முடியாமல் தமிழ்ப் பாட மொழிப் பயற்சியைத் தங்கள் யுத்த தளவாடமாக எடுத்துக் கொண்டு, ஆச்சாரியாருடைய சுதந்திராக்கட்சியும், ஆரிய ஏடுகளும் இந்த ஆட்சியைக் கவிழ்க்கக் காரணம் காட்டி, மாணவர்களை தூண்டி விடுகின்றன.

இதற்கு பார்ப்பனரல்லாத இனத்து விபீஷணர்களும் ஆளாகி விட்டிருக்கிறார்கள். ஆச்சாரியரோடு திமுக தொடர்பு கொண்ட நேரத்திலும் அது தன்னுடைய கொள்கையை எந்த நேரத்திலும் ஆச்சாரியாருக்கு விட்டுக் கொடுத்ததில்லை.

உதாரணமாக இந்தி எதிர்ப்புக் கொள்கைக்கு ஆச்சாரியாரை திமுக தன் பக்கம் திமுக இழுத்து வந்ததே அல்லாமல் சுதந்தரா வழிக்கு போய்விடவில்லை.

எதிர்காலம் பற்றி மிகவும் அச்சம் :

பொது உடைமை தத்துவ விசயங்களிலும் ஆச்சாரியாருக்கு முரண்பட்ட நிலையில்தான் திமுக நடந்து வருகிறது. தமிழ்ப்பாட மொழி விசயத்திலும், தான் வகுத்த கொள்கைப்படிதான் இருந்திருக்கிறதே அல்லாமல், ஆச்சாரியாக் கோஷ்டிக்கு கொஞ்சமும் விட்டுக் கொடுக்கவில்லை. இதற்கு ஆதாரம் இன்றைக்கு ஆச்சாரியார் காங்கிரசுடன் அளவளாவி, அதற்கு கைகொடுப்பதே போதுமானது. அன்றியும் அவர்களது இன்றுள்ள நிலைமை எப்படியாவது திமுகவை தோற்கடிக்க வேண்டும். 72 தேர்தலில் காங்கிரஸ் ஜெயிக்க வேண்டும்; அது பதவியில் அமர வேண்டும் என்பதேயாகும். மற்றும் காமராசர் போன்றவர்கள் தாங்கள் முன்பு சொல்லி வந்த சோஷலிசக் கொள்கை, தமிழ்ப்பாட மொழிக் கொள்கை - எல்லாவற்றையும் பார்ப்பனர்களின் காலடியில் வைத்து விட்டதைப் பார்க்கும் போது எனக்குப் பார்ப்பனரல்லாத மக்களின் எதிர்காலத்தைப் பற்றி மிகவும் அச்சம் ஏற்படுகிறது.

தமிழ் மீது எனக்கு தனி வெறுப்பில்லை :

தமிழ்மொழி, ஆங்கில மொழி இரண்டைப் பற்றியும் எனது கருத்தை பலமுறை சொல்லியிருக்கிறேன்.

ஆங்கிலம் வளர்ந்த மொழி - விஞ்ஞான மொழி என்பதும் தமிழ் மொழி வளர்ச்சியடையாத பழமையான மொழி என்பதும் என்னுடைய மதிப்பீடாகும். இதை நான் சொன்னதற்கான முக்கிய நோக்கம், தமிழ் மொழி ஆங்கில மொழி அளவுக்கு விஞ்ஞான மொழியாகவும், பகுத்தறிவு மொழியாகவும் ஆகவில்லை என்பதுதானே தவிர, தமிழ் மீது எனக்குத் தனி வெறுப்பில்லை.

நான் பேசுவதும் எழுதுவதும் தமிழில்தான். தமிழ் எழுத்துக்களில் நான் பல சீர்திருத்தங்களை எனது இயக்கப் பத்திரிக்கைகளான “குடிஅரசு” “பகுத்தறிவு” “விடுதலை” “உண்மை” ஆகியவற்றில் புகுத்தியிருக்கிறேன்.

இதில் புதிய செயல் எதுவும் இல்லை :

இன்றுள்ள திமுக அரசு நெடுநாளைக்கு முன்பு காமராஜ் முதலமைச்சராக இருந்த போது தமிழ்ப் பாட மொழித் திட்டமாக ஆக வேண்டும் என்று எடுத்த முடிவைத் துரிதப்படுத்துகிறதே ஒழிய, இதில் புதிய செயல் ஏதும் இல்லை. ஆகவேதான் அதற்கான புதிய சொற்களைக் கொண்ட புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையைப் போக்க, சமீபத்தில் அரசாங்க அலுவல்களில் தமிழில் படித்தவர்களுக்கு நிறைய வாய்ப்பு என முதலமைச்சர் தந்துள்ள உத்தரவாதம் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு எதிர்காலத்தில் தமிழ் நாட்டு அரசாங்க அலுவல்களில் நிறைய இடம் கிடைக்கும் என்பதற்கான முன் அறிவிப்பாகும்.

டில்லியில் பார்ப்பன ஆதிக்கம் :

ஆங்கிலம் படித்தவர்கள் தான் வெளிமாநில வேலைக்குச் செல்ல முடியும், என்று சொல்லுகிற விதத்தில் பசை இருப்பது போல் தோன்றினாலும் அந்த வேலைவாய்ப்புகளை இதுவரை பெற்றிருப்பவர்கள் யார்? இனிமேல் பெறக் கூடியவர்கள் யார்? எதை படித்தாலாவது வேலை கிடைக்குமா? என்று பார்த்தால் 100க்கு 50 பேர் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தானே வேலை கொடுப்பவர்களாக இருக்கிறார்கள் எப்படி எனில் டெல்லியில் ஆண்டு கொண்டிருக்கின்ற அதிகாரிகளில் பல பேர் பார்ப்பனர்கள் தான். அங்கு முருகன் கோயிலையும் கட்டி, அதற்கு நமது முதலமைச்சர் கலைஞர் அவர்களையும் அழைத்துக் கொண்டு போய்க் காட்டுகின்ற அளவுக்கு டெல்லியை ஆக்கரமித்துக் கொண்டுள்ளனர் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள்.

தமிழ்நாடு அரசு அலுவலகங்களிலும் அவர்கள் தான் நிரம்பியிருக்கிறார்கள்.

நாட்டுக்குப் பெரிய அபாயமாகும் :

பொல்லாத வாய்ப்பால் ஆச்சாரியார் கனவு காண்பதுபோல் காங்கிரஸ் பார்ப்பனர் கூட்டணியுடன் ஆட்சி பீடம் ஏறும் வாய்ப்பு ஏற்பட்டு விட்டால், பார்ப்பனரல்லாத பிள்ளைகள் என்ன படித்தாலும், என்ன தகுதி இருந்தாலும் பார்ப்பனப் பிள்ளைகளுக்குத்தான் முதல் உரிமை இருக்குமே தவிர, பார்ப்பனரல்லாதப் பிள்ளைகளுக்கு வாய்ப்பு எப்படி இருக்க முடியும்?

இதையெல்லாம் வெளியில் சொல்ல முடியாமல் மனதில் வைத்துத்தான் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கு நன்மைகள் செய்யும் நோக்கத்தோடு தமிழ்ப் பாட மொழித் திட்டம் தீவிரமாக அமுல்படுத்தப்படுகிறது என்று கருதுகிறேன்.

இந்த நோக்கத்திற்கு இடையூறாக காமராஜ் போன்றவர்கள் வெறும் அரசியல் காரணங்களுக்காகத் தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு, மறைமுகமாகப் பார்ப்பனர்களுக்குத் துணைபோவது நாட்டுக்கு பெரிய அபாயமாகும்.

இதைப் பார்ப்பனரல்லாத மாணவர்கள் நல்லவண்ணம் சிந்தித்து நடந்து கொள்ள வேண்டும்.

8500 பள்ளிகளை மூடியது யார் ஆட்சி ?

எந்த காரணத்தாலோ இன்றைய ஆட்சிக்கு மாற்றமேற்பட்டால், நாடு வர்ணாசிரம ஆட்சிக்குத்தான் ஆளாகிவிடும். உதராணமாக சொல்லுகிறேன். என்னவென்றால் இதை மாணவர்களும் பெற்றோர்களும் உணர்ந்து பொறுத்துக்கொண்டால், அடுத்த ஆட்சிக்காலத்தில் சரி படுத்திக்கொள்ள முடியும் என்பது எனது உறுதியான கருத்தாகும். ஜஸ்டிஸ் கட்சி ஆட்சிக்குப் பின், 1938ல் காங்கிரஸ் ஆட்சி ஏற்பட்ட உடன், என்ன நிலை ஏற்பட்டது என்று பார்த்தால் காங்கிரஸ் ஆட்சி உத்தியோகத்தை மனதில் வைத்து 2500 பள்ளிகளை மூடியதோடு, மீதி உள்ள பள்ளி மாணவர்களை கட்டாயமாக இந்தி படிக்க வேண்டுமென்று உத்தரவு போடவில்லையா?

இதன் காரணமாக காங்கிரஸில் பார்ப்பன ஆதிக்கம் இல்லாமல் செய்ததுடன், காங்கிரசை ஒழிக்க பார்ப்பனர் ஆச்சாரியார் முயற்சிக்கவில்லையா?

காங்கிரஸ் ஆட்சி வந்தால் தமிழர் கதி என்ன?

இந்த அனுபவத்தைக் கொண்டே பார்ப்பனரல்லாத பொதுமக்களே! மாணவர்களே! சிந்தித்துப் பாருங்கள். நாளைக்கும் சுதந்தரா ஜனசங்கம் முதலிய பார்ப்பன வர்ணாசிரமக் கட்சிகளின் ஆதிக்க ஆதரவு கொண்ட காங்கிரஸ் ஆட்சி பீடமேறும் வாய்ப்பு ஏற்பட்டால் தமிழர் கதி என்ன ஆகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

தமிழர்களாகிய நாம் 40,50 ஆண்டுகளாகவே “காங்கிரஸ் ஒழிக” என்ற கோஷத்துடன் காங்கிரஸ் ஒழிய தொண்டாற்றி வந்திருக்கிறோம். அதன் பயனாக தமிழர் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறார்கள் தமிழ் மாணவர்களும் இன்றைய நிலைக்கு வர முடிந்தது. இதை மனதில் வைத்து எதிர்காலத்தைப் பற்றி சிந்தியுங்கள் என்று வேண்டிக் கொள்ளத்தான் இந்த அறிக்கையாகும். தமிழர்களே! ஒன்று மனதில் வையுங்கள் இந்த ஆட்சி கடுகளவு பார்ப்பன ஆதிக்கமுள்ள எந்தக் கட்சிக்குப் போனாலும் நமது கதி பழைய கதிதான், போராட ஆள் இல்லை; சுத்தமாக ஆளே இல்லை எனக்கும் எழுந்து நிற்க முடியாத வயதாகிவிட்டது; முன் எச்சரிக்கையோடு நம்மவர்கள் நடந்துகொள்ள வேண்டும்.

- பெரியார், 02.12.1970

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.