நடுவண் அரசு நடத்தும் பள்ளிகளுக்கான பதினோராம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் அண்ணல் அம்பேத்காரை இழிவுபடுத்தும் கேலிப்படம் இடம் பெற்றிருப்பதை எதிர்த்து நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த படம்  பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் என்று அறிவித்த நடுவண் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில் சிபல், அந்த படம் பாடப்புத்தகத்தில் இடம் பெற்றதுக்காக மன்னிப்பும் கோரியுள்ளார்.

ambedkar_240இது போதாதா பார்ப்பனிய ஆதிக்க கும்பலுக்கு. கருத்து விடுதலையின் மீதான தாக்குதல் இது என விண்ணுக்கும் மண்ணுக்கும் தாவிக் குதிக்கிறார்கள். புகழ் பெற்ற வரலாற்று அறிஞர் கே.என்.பணிக்கரில் ஆரம்பித்து இந்து ஆங்கில ஏடு, புதிய தலைமுறை தொலைக்காட்சி அம்பிகள் வரை கேலிப்படத்தை எதிர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது பாய்ந்து குதறுகிறார்கள். கேலிப்படம் நீக்கப்பட்டதைக் கண்டித்து தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் [NCERT] தலைமை ஆலோசகர் யோகேந்திர யாதவ்வும் அதன் உறுப்பினர் சுகாசு பால்சிகரும் தங்கள் பதவியை விட்டு விலகி இருக்கிறார்கள்.
 
இவை அனைத்தும் மொத்தத்தில் நமக்கு உணர்த்துவது "இப்பல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க. அதெல்லாம் அந்த காலம். முதல்ல நீங்க இந்த சாதிவாரி கோட்டா ரிசர்வேசன் இதுலேர்ந்து வெளிய வாங்க, எல்லாருக்கும் சம வாய்ப்பு இருக்கணும் சார்" என்று நமக்கு அறிவுரை சொல்லும் யோக்கியர்கள் வாழும் இந்தியாவில் சாதீய கண்ணோட்டம் எந்த அளவுக்கு கெட்டித்து போய் கிடக்கிறது என்பதைத்தான்.

ஆண்டொன்றுக்கு பல லட்சம் உரூவாக்கள் கட்டணம் வசூலிக்கும் மேட்டுக்குடி பள்ளிகளின் மாணவர்களோடு, புழுத்துப்போன அரிசியில் சமைத்துப் போடும் இலவச மதிய உணவை சாப்பிட்டு விட்டு அரசுப் பள்ளி மாணவர்கள் சம அளவில் போட்டிபோட வேண்டும் எனச் சொல்லும் இந்த காரிய கிறுக்கன்கள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் ஒடுக்கப்பட்ட மக்களை இழிவுபடுத்தத் தவறுவதே இல்லை. அந்த வகையில்தான் தான் வாழ்ந்த காலமெல்லாம் பார்ப்பனிய ஆதிக்க கும்பலுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அண்ணல் அம்பேத்கர் பாடப்புத்தகத்தின் வாயிலாக இழிவுபடுத்தப்பட்டுள்ளார்.

சரி. அவர்கள் வாதம்தான் என்னவென பார்ப்போம்.

இது அறுபது ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டது. அப்போது உயிருடன் வாழ்ந்த அம்பேத்கரே எதிர்க்கவில்லை. இப்போது எதிர்க்கலாமா?

அந்தப் படத்தை நீக்குவது கருத்து விடுதலையை பறிப்பதாகும்.

இந்த கேலிப்படம் ஆறு ஆண்டுகளாக பாடத்தில் உள்ளதாம். இவ்வளவு காலம் அமைதியாக இருந்து விட்டு திடீரென எதிர்க்கலாமா?

இதைத்தான் நாக்கை சுழற்றி சுழற்றி, நீட்டி முழக்கிப் பேசியும், பக்கம் பக்கமாக எழுதியும் தள்ளுகிறார்கள்.

நாம் கேட்கிறோம். அய்யா, அறிவாளிகளே!

அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தப் படத்தை கால, இடப் பொருத்தமின்றி பாடத்தின் இடையில் சொருகி இருப்பது கெட்ட உள்நோக்கம் கொண்டதா இல்லையா? இந்த படம் "அரசியல் சட்ட செயல்பாடு" [constitution at work] என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ளது. அரசியல் சட்டத்தின் செயல்முறைகளை விளக்கும் பாடத்தில் அரசியல் சட்டம் வகுக்கும் பணி மிகவும் 'மெதுவாக' நடந்தது என்று சொல்வது பொருத்தப்பாடு உடையதா என்ன? அம்பேத்கர் குறித்து ஒரு மட்டமான அபிப்பிராயம் மாணவர்கள் மனதில் ஏற்படவேண்டும் என்ற இழிவான நோக்கமின்றி வேறு என்ன காரணத்திற்காக இந்தப் படம் வைக்கப்பட்டிருக்கும்?
 
கருத்து விடுதலையை நாங்களும் மதிக்கிறோம். அந்தப் படத்தை வரைந்த சங்கர் பிள்ளையை யாரும் தகாத சொற்களால் திட்டவில்லை. அந்த கால கட்டத்தில் இருந்த அரசியல் நிலைமை குறித்த ஒரு கருத்தை சொல்லும் கேலிப்படம் என்ற அளவில் அதனை ஏற்கிறோம். ஆனால் அதனை பாடப்புத்தகங்களில் கொண்டு வந்து திணிப்பதைத்தான் ஏற்க முடியாது. இதே போன்று நேருவை, காந்தியாரை, படேலை,
சாவர்க்கரை விமர்சிக்கும் பல கருத்துப்படங்களை நாம் காட்ட முடியும். அவற்றையெல்லாம் அரசியல் பாடத்தில் வைப்பார்களா?

மாட்டார்கள். காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆறு ஆண்டுகள் ஏன் எதிர்ப்பின்றி கழிந்தனவென்றால் அந்தப் படம் தலித் விடுதலையை உண்மையாக நேசிப்போரின் கண்ணில் படவில்லை என்று பொருள். அவ்வளவுதான். இப்போது எதிர்ப்பவர்கள் முன்னர் யாருக்காகவும் அஞ்சி அமைதி காக்க வேண்டிய அவசியம் இல்லை.

அம்பேத்கர் தனது ஆடையையே ஒரு ஆதிக்க எதிர்ப்புக் குறியீடாக பயன்படுத்தினார். மேற்கத்திய உடையை பார்ப்பனமயமாக்கி, பஞ்சகச்சம் டர்பன் மேற்சட்டை [மேல்கோட்டு] என அணிந்த அன்றைய பெரும்புள்ளிகள் நடுவே முழுமையாக மேற்கத்திய பாணியில் ஆடை அணிந்து கால் மேல் கால் போட்டு அவர் அமர்ந்திருக்கும் கம்பீரம் கண் கொள்ளா காட்சியாகும். அவரது இறப்புக்கு முன்னும் பின்னும் அந்த அம்பேத்கர் என்ற சொல்லே சாதி ஆதிக்க எதிர்ப்பின் குறியீடாக திகழ்கிறது. அந்த குறியீட்டின் மீது இழிவை சுமத்த வேண்டும் என்ற வெறியோடு செய்யப்படும் இத்தகைய‌ அடாத செயல்களை உண்மையான தலித் விடுதலையை நேசிப்போர் அனுமதிக்க முடியாது.

Comments

6 comments

6
jayabal
என்னதான் அறிவாளியாக இருந்தாலும் ஒரு மனிதனை அளவிட சாதியைதான் அளவுகோலாக வைத்திருக்கிறது இந்த இந்திய சாதிய சமூகம். ஊடகங்களும் அதற்கு தூபம் போட்டுக் கொன்டிருகிறது. சமூக நீதி என்பது இங்கு இன்றும் கேள்விக் குறியாகவே இருக்கிறது.
ஆறுமுகம்
இந்திய அரசியல் சட்டம் என்பதே பல நாடுகளில் இருந்தும் கடன் வாங்கி உருவாக்கியது என்றும் கூறப்படுகிறது. படம் ”அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில் ” - கருத்து படம் அரசியல் அறிவியல் பாடத்தில் உள்ளது தெளிவு எனவே இது திட்டமி்ட்ட திணிப்பல்ல உரிய பாடத்தில் அதோடு தொடர்புடையவர்கள் குறித்தே உள்ளது. அது அம்பேத்காரை குறிவைத்து உருவாக்க படவி்ல்லை. ”அண்ணல் அம்பேத்காரை இழிவுபடுத்தும் கேலிப்படம் இடம் பெற்றிருப்பதை” - கருத்து படம் இழிவு படுத்தும் விதமாக உள்ளது என்பதே தவறானது. அரசயில் சட்டம் இலக்கை நோக்கி மெதுவாத்தான் (நத்தையாக சித்தரிக்கப்பட்டுள்ளது) செல்ல முடியும் (!) என்பதை அதனை நேருவும் அம்பேத்காரும் சாட்டையால் விரைவு படுத்துவது போல்தான் காட்டப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக ரிசர்வேசன் இருந்தும் முன்னேற்றம் இல்லை , சிலர் 100 சதம் ஒதுக்கீட்டை , அம்பேத்காரின் கருத்துக்கு மாற்றாக, கேட்கவே செய்கின்றனர். சிலர் தேவையின்றி நேரு அம்பேத்காரை சாட்டையால் அடிப்பதாக உள்ளது என்று அதற்க்கு உள்நோக்கம் கற்பித்து அதை எதிர்க்கின்றனர் - காரணம் எதிர்ப்பதற்க்கு ஒரு காரணம் கிடைத்தது. அரசயில் சட்ட வரைவு குழுவின் முக்கிய பொறுப்பில் இருந்ததால் தான் அம்பேத்காரை குறிப்பிட பட்டுள்ளார். மேலும் படத்தோடு தொர்புடைய பாடத்தில் இடம்பெற்ற வரிகளும் இணைந்தே அந்த பாடம் உள்ளது இந்நிலையில் படத்தை மட்டும் இழிவு படுத்துவதாக கூறிவது மலிவான விளம்பர அரசியல் தவிற வேறு இல்லை. காந்தி நேதாஜி பெரியார் , அண்ணா, காமராசரை, நேரு, இந்திரா கருணாநிதி ஜெயலலிதா விமர்சனங்கள் எழுகின்றன. அரசியல் தலைவர்களை விமர்சனங்களுக்கு அப்பாற் பட்ட சாதிய தலைவராக்குவதாலேயே திறமைசாலிகளின் திறனை உழைப்பை அவர்கள் மழுங்கடிப்பதோடு ”ஒரு சாதிய” தோற்றத்தை ஏற்படுத்தவே செய்கிறார்கள். கட்டுரை கருத்துபடத்தையே பாடத்தையே உள்வாங்கி எழுதியதாக தெரியவில்லை.
நடராசன்
அம்பேத்கர் அரசியலமைப்பு உருவாக்கும் தலைவராக்கப் பட்டவுடனேயே பொருமிக் கொண்டிருந்தனர் உயர்ந்தவர்கள்/உயர் ஜாதியினர்
.( உண்மையில் அவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல, உயர்ந்தவர்கள் என்று தங்களை தாங்களே எண்ணிக் கொள்பவர்கள்.) வரைவு அரசியலமைப்பு சட்டம் 66 நாட்களில் உருவானது. கிட்டத் தட்ட இரண்டு வருடங்கள் அதன் மேல் விவாதம் நடந்தது.

பின்பு நவம்பர் 1949 ல் நிறைவுற்றது. சோசியம் பார்த்து 1950 ஜனவரி 26 அன்று இந்தியா குடி அரசானது. அரசியல் அமைப்பு உருவாக்க மேலும் ஆறு அங்கத்தினர்கள் இருந்தனர். அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கோபாலசாமி அய்யங்கார் போன்றவர்கள். இந்த நத்தைகள் வெகு வேகமாகப் பணியாற்றியதோ? அம்பேத்கர் மட்டுமே அரசியலமைப்பு உருவாக்க அமர்த்தப் பட்டது போல் ஒரு எண்ணத்தை உருவாக்கி உள்ளனர்.

இன்னும் ஒரு கேலிச் சித்திரம் வரைந்திருக்கலாம். நேரு அவர்கள் சாட்டையை வீசுவது போலவும், அம்பேத்கர் நத்தை மேல் உட்கார்ந்து கொண்டு அவர் கீழ் பணி செய்த மற்று ஆறு நத்தைகளை-- அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், கோபாலசாமி ஐயங்கார் போன்றவர்களை-- சாட்டையால் அடிப்பது போல் காட்டியிருந்தால் இது போன்ற கேலிச் சித்திரத்தை புத்தகங்களில் புகுத்தி இருந்திருக்க மாட்டார்கள். அன்றே கண்டித்திருப்பார்கள்.
திப்பு
ஆறுமுகம்,
கட்டுரையை முழுவதுமாக படித்து உள்வாங்காமல் முதல் பத்தியை மட்டும் எடுத்துக்காட்டி மறுமொழி எழுதியுள்ளீர்கள்.

”அண்ணல் அம்பேத்காரை இழிவுபடுத்தும் கேலிப்படம் இடம் பெற்றிருப்பதை” - கருத்து படம் இழிவு படுத்தும் விதமாக உள்ளது என்பதே தவறானது. //
நீங்கள் மேற்கோள் காட்டும் இந்த வரிகளுக்கு அடுத்தடுத்து உள்ள பத்திகளில் இடம் பெறும் இந்த வரிகளுக்கு என்ன பொருள்.

அறுபது ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தப் படத்தை கால, இடப் பொருத்தமின்றி பாடத்தின் இடையில் சொருகி இருப்பது கெட்ட உள்நோக்கம் கொண்டதா இல்லையா? இந்த படம் "அரசியல் சட்ட செயல்பாடு" [constitution at work] என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ளது. அரசியல் சட்டத்தின் செயல்முறைகளை விளக்கும் பாடத்தில் அரசியல் சட்டம் வகுக்கும் பணி மிகவும் 'மெதுவாக' நடந்தது என்று சொல்வது பொருத்தப்பாடு உடையதா என்ன? அம்பேத்கர் குறித்து ஒரு மட்டமான அபிப்பிராயம் மாணவர்கள் மனதில் ஏற்படவேண்டும் என்ற இழிவான நோக்கமின்றி வேறு என்ன காரணத்திற்காக இந்தப் படம் வைக்கப்பட்டிருக்கும்?

கருத்து விடுதலையை நாங்களும் மதிக்கிறோம். அந்தப் படத்தை வரைந்த சங்கர் பிள்ளையை யாரும் தகாத சொற்களால் திட்டவில்லை. அந்த கால கட்டத்தில் இருந்த அரசியல் நிலைமை குறித்த ஒரு கருத்தை சொல்லும் கேலிப்படம் என்ற அளவில் அதனை ஏற்கிறோம். ஆனால் அதனை பாடப்புத்தகங்களில் கொண்டு வந்து திணிப்பதைத்தான் ஏற்க முடியாது. //

அரசமைப்பு சட்ட செயல்பாட்டு முறை குறித்த பாடத்தில் அதனை வகுக்கும் பணியின் வேகம் குறித்த கருத்துப்படம் எந்த வகையில் பொருத்தமானது .ஆக,40 களில் இருந்த நிலவரம் குறித்த ஒரு கருத்துப்படம் பொருத்தமற்ற வகையில் பாடப்புத்தகத்தில் இடம் பெறுவது திணிப்பு ஆகாது என்ற உங்கள் ''நாட்டாமை''தீர்ப்பை மீளாய்வு செய்து கொள்ளுங்கள்.

இத்தனை ஆண்டுகளாக ரிசர்வேசன் இருந்தும் முன்னேற்றம் இல்லை , சிலர் 100 சதம் ஒதுக்கீட்டை , அம்பேத்காரின் கருத்துக்கு மாற்றாக, கேட்கவே செய்கின்றனர். //

இதோ பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது.அரசமைப்பு சட்டம் பெரும்பாலும் ஆதிக்கவாதிகளுக்கு தேனாக இனிக்கும்போது இடஒதுக்கீடு மட்டும் தொண்டையில் சிக்கிய முள்ளாக உறுத்துகிறது.ஒரு பக்கம் இட ஒதுக்கீடு காரணமாக நாடே கெட்டு குட்டி சுவராக போகிறது என்று ஒரு பக்கம் ஊளை சத்தம் காதை பிளக்கிறது.இன்னொரு பக்கம் முன்னேற்றம் இல்லை என்ற புலம்பல்.

நாடு முன்னேறவில்லை என்று சொல்கிறீர்களா.''சூத்திர பஞ்சம'' சாதியினர் முன்னேறவில்லை என சொல்கிறீர்களா.கொஞ்சம் தெளிவாக சொன்னால் மேற்கொண்டு விவாதிக்க வசதியாக இருக்கும்.
திப்பு
ஆறுமுகம்,
கருத்து படம் இழிவு படுத்தும் விதமாக உள்ளது என்பதே தவறானது.//
கருத்துப்படம் அதன் தன்மையிலேயே இழிவு படுத்துவதாக உள்ளது எனபது எமது வாதமல்ல. கால இடப்பொருத்தமின்றி பாடப்புத்தகத்தில் திணிக்கப்படும்போது அதன் மீது இழிவுபடுத்தும் தன்மை ஏற்றப்படுகிறது என்பதை திறந்த மனதோடு அணுகினால் புரிந்து கொள்ள முடியும்.
ஆறுமுகம்
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியதில் அம்பேத்கார் பங்களிப்பு அதிகம் என்னும் விதமாகவே அவர் முன் நிருத்தப்படுகிறார் மற்றும் விமர்சனங்கள் செய்யப்படுகின்றன. அதை அவர் தாழ்தபட்ட சமுகத்தினராக இல்லாமல் அதன் பிரதிநிதியாக இல்லாமல் தனது திறமையினால் நிறுபித்தவர். அவரை சாதி வட்டத்தில் அடைத்து அவர் மீதான விமர்சனங்களை மறுப்பது அவரது திறனை மட்டம் தட்டும் செயல். எனவே, அரசியல் சட்ட வரைவு குழு உருப்பினர்கள் அய்யர்கள் மற்றும் அய்யங்கார்கள் தான் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதை தவிர்க்கவும். விமர்சனங்கள் ஒவ்வொன்றுக்கும் சாதி சாயம் பூசி திறமையை குறைத்து மதிப்பிட செய்யாதீர்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.