உடல் உறுப்பு கொடையில் தமிழ்நாடு தேசிய சராசரியை விட ஏழு மடங்கு கூடுதலாக இருக்கிறது என்று பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் எம்.ஜி.எம் மருத்துவமனை நடத்திய உறுப்பு கொடையாளர் பாராட்டு விழாவில் குறிப்பிட்டார். கடந்த ஆகஸ்ட் 23-ஆம் தேதி காலை 9 மணி அளவில் எம்.ஜி.எம் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில் உரையாற்ற மருத்துவமனை நிர்வாகம் விடுதலை ராசேந்திரனை அழைத்து இருந்தது.

மருத்துவமனையிலேயே மிக அதிக வயதில் (அதாவது 77 வயதில்) கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் என்று, அறுவை சிகிச்சை செய்த குழுவின் தலைவர் மருத்துவர் டாக்டர் தியாகராஜன் விடுதலை இராசேந்திரனை அறிமுகப்படுத்தினார்.viduthalai rajendran and kid

(அறுவை சிகிச்சை செய்த 5 மாத பயனாளியுடன் 77 வயது பயனாளி)

மிகக் குறைந்த வயதுள்ள ஐந்து மாத குழந்தைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு இதே மருத்துவமனை வெற்றிகரமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடத்தி சாதனை புரிந்தது. தாயும் குழந்தையும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள். விடுதலை ராசேந்திரன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

“எனக்கு உறுப்பை கொடையாக தந்த தோழர் விஜயகுமார் கனடாவில் இருக்கிறார், இங்கு வர இயலவில்லை. எந்த உறுப்பும் குருதிப் பிரிவை சார்ந்ததாக இருந்தால் போதும் மற்றவர்களுக்கு அதை பொருத்த முடியும். ஜாதியோ, மதமோ, பாலின வேறுபாடோ தடை இல்லை. இந்த கொடை “மனிதத்தை” வெளிப்படுத்துகிறது. மரணம் அடைந்த ஒருவரின் உறுப்புகள் ஏழு பேர் உயிரை காப்பாற்றுகின்றன. மரணத்தின் துயரம் மனதை அழுத்தும் போது பாசத்துக்கு உரியவர்களின் உறுப்புகள் மற்றவர்களிடம் உயிர்த் துடிப்போடு இயங்குகின்றன என்பதில் ஆறுதலும் அமைதியும் கிடைக்கிறது.

உறுப்புகளை எடுக்கும் மருத்துவர்கள் உரிய மரியாதையுடனும் கவனத்துடனும் அதை கையாளுகிறார்கள். உருவச் சிதைவு வந்துவிடும் என்ற அச்சம் தேவையில்லை. இறுதிச் சடங்குகளுக்கு எதிரானது என்ற மத நம்பிக்கையும் இதில் குறுக்கிட வேண்டிய அவசியம் இல்லை.

ஸ்பெயின், குரேஷியா போன்ற நாடுகளில் உறுப்புக்கொடை குடியுரிமையுடன் இணைக்கப்பட்டுள்ளது. உடன்படாதவர்கள் மட்டுமே தங்களை தனியாக பதிவு செய்து கொள்ள முடியும். தமிழ்நாட்டில் மூளைச்சாவு அடைந்து உறுப்புக்கொடை வழங்குவோர்க்கு அரசு மரியாதையுடன் இறுதி நிகழ்வுகள் நடத்தப்படும் என்ற அரசின் திட்டத்தால் கொடை வழங்குபவர்களின் எண்ணிக்கை கூடுதலாகியுள்ளது.

ஓட்டுநர்கள் உரிமைக்காக விண்ணப்பிக்கும் படிவங்களில் உறுப்புக்கொடை பற்றிய ஒரு கேள்வி இருக்கிறது. போக்குவரத்து துறையினர் இது குறித்து விண்ணப்பதாரர்களிடம் கருத்து கேட்காமலேயே ‘இல்லை’ என்று பதிவு செய்து விடுகிறார்கள். இது குறித்து கண்டிப்பாக கருத்து கேட்க வேண்டும் என்று துறையினருக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன்” என்றார் விடுதலை ராசேந்திரன்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.