(இன்னுமின்னும் அறியாத சேதிகள்
அந்தப் பெருநிலத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன)
நேற்று உனது புகைப்படம் புதர் ஒன்றிற்குள்ளிருந்து
எடுக்கப்பட்டு காட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது
சகோதரியே! உன்னை உரித்து
சிதைத்தவர்களின் கைகளிலிருந்து
எங்கள் காலம் நீண்டு கொண்டிருக்கிறது.

கண்டெடுக்கப்படாதவர்களின் சடலங்களுக்கு
என்ன நேர்ந்திருக்குமென்று
தலைமகளை இடித்தழும் தாய்மார்களுக்கு
இரத்தத்தால் முடிவுறுத்தப்பட்ட சகோதரிகளுக்கு
உன்னை சிதைத்திருக்கிற புகைப்படம்
எண்ணிக்கையற்ற முனைகளில்
நடந்த கதைகளை சொல்லிக் கொண்டேயிருக்கிறது.

உன்னை சிதைந்து எங்கு எறிந்திருக்கிறார்கள் என்பதையும்
யார் உன்னை தின்றார்கள் என்பதையும்
உனது தொலைக்காட்சியில்
நீயே செய்தியாக வாசித்துக் கொண்டிருக்கிறாய்.
நீ நடித்த பாடல்களும் படங்களும்
ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிற அலைவரிசையில்
உனது பாதிப்படம் ஒரு மூலையில்
பார்க்கப் பொறுக்க முடியாத கோலமாக தொங்குகிறது.

அதே படைகளினால் கவலிடப்பட்ட
நிலத்தில் எங்கோ ஒரு மூலையில் உனது
தாயைப் போலவே ஒருத்தி
தன் மகனைத் தேடித் துடித்துக் கொண்டிருக்கிறாள்.

ஆண்குறிகளை வளர்த்து
இரத்தத்தை படையிலிட்டிருக்கிற
படைகளின் யுத்த முனைகளில்
உன் சீருடைகளை
கழற்றி எறிந்திருக்கிறார்கள்.
உன் வீரத்தை கரைத்துவிட்டார்கள்.
தொலைந்துபோன உன் துப்பாக்கி படைகளின் கையிலிருக்கிறது.

முன்னர் வெற்றியடைந்த களமொன்றிலேயே
நீ சரணடைந்திருக்கிறாய்
துப்பாக்கிகளும் ஆண்குறிகளும்
ஒரே மாதிரியாய்
வாயைப் பிளந்து உன்னை தின்று போட்டிருக்கிறது.
முற்றத்தில் தெருவில் வயல்களில்
கண்ணி வெடிகளுக்கு கீழாகவும் மண் பிரளும் இடங்களிலெல்லாம்
சீருடைகள் முதலான உடைகளும்
இரத்தமும் சைனைட் குப்பிகளும் புகைப்படங்களும்
மற்றும் சில குறிப்புகளும் கிளம்பி வந்து கொண்டிருக்கின்றன.
என்னிடம் வாங்கிச் சென்ற
கவிதையை எங்கு போட்டிருப்பாய்?

(இசைப்பிரியாவுக்கு) 25.12.2009

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.