பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு உரிமை கொண்டாடப்படும் பெரியாரின் சொத்துக்கள், உண்மையிலேயே அந்நிறுவனத்துக்கு சட்டப்படியான உரிமையுள்ளவையல்ல என்று‘குடிஅரசு’ தொகுப்பு வெளியிட்டு விழாவில் கழகத்தின் வழக்கறிஞர் துரைசாமி அறிவித்தார்.
 
பெரியார் நூல்களுக்கு அறிவுசார் சொத்துரிமை கோரினார் கி.வீரமணி, இப்போது பெரியார் சொத்துகளே யாருக்கு சொந்தம் என்ற கேள்வி எழுந்து விட்டது. பெரியார் சொத்துகள் அறக்கட்டளைக்கு சட்டப்படி உரிமையாவதற்கு அந்த சொத்துக்களை பெரியார் அறக்கட்டளைக்கு ஒப்படைப்பதாக பத்திரம் எழுதித் தந்திருக்க வேண்டும். அப்படி பெரியார் எதையும் எழுதித் தராத நிலையில், பெரியாரின் சொத்துக்களை அறக்கட்டளைக்கு உரிமை கொண்டாட முடியாது. அந்த சொத்துக்களுக்கு பெரியார் உறவினர்கள் உரிமை கோர முடியும். அல்லது அரசு அதை எடுக்க வேண்டும். செம்மொழி மாநாட்டுக்குள் அரசு அந்த சொத்துக்களை எடுக்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று வழக்கறிஞர் துரைசாமி அறிவித்தார்.
 
வாதிடவே வராத வழக்கறிஞர்
 
• 61 பக்கங்களைக் கொண்ட தீர்ப்பில் சுமார் 83 இடங்களில் பெரியார் பெயர் குறிப்பிடப்படுகிறது. அத்தனை இடங்களிலும்‘தந்தை பெரியார்’ என்றே நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
 
• நீதிபதி சந்துரு வழங்கிய தீர்ப்பை, இலக்கியச் செறிவான தீர்ப்பு என்று நீதிபதிகள் பாராட்டியுள்ளனர்.
 
• வழக்கில் மனுதாரர் (வீரமணி) சார்பில் தன்னையும் இணைத்துக் கொண்டு தாக்கல் செய்த தஞ்சை இரத்தினகிரி மனுவை ஏற்கனவே தனி நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். அதற்கு நீதிபதி கூறிய காரணங்களை அப்படியே ஏற்கிறோம். அதற்கு மாறான கருத்துக்கு நாங்கள் தயாராக இல்லை என்று கூறிய நீதிபதிகள், ரத்தினகிரியின் கோரிக்கை மிகவும் வலுவற்ற பலவீனமானது (Slender claims) என்று குறிப்பிட்டுள்ளனர். தனி நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்ட இரத்தின கிரி மனுவை மேல்முறையீடு செய்வதற்கான தகுதியே இல்லை என்று (do no find any merit at all) நீதிபதிகள் கூறியுள்ளனர்.
 
• மனுதாரர்கள் சார்பில் முன் வைக்கப்பட்ட அத்தனை வாதங்களையும், தொகுத்துக் கூறி, அதற்கான தங்களது பதில்களையும் நீதிபதிகள் பதிவு செய்துள்ளனர்.
 
• பதிப்புரிமையை எழுத்து மூலம் நூலாசிரியர் வழங்கியிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தக்கூடிய, இரண்டு தீர்ப்புகளை நீதிபதிகள் எடுத்துக் காட்டியுள்ளனர்.
 
• கி. வீரமணியின் வழக்கறிஞர், தங்களுக்கு ஆதரவாக நான்கு நீதிமன்ற தீர்ப்புகளை எடுத்துக்காட்டியிருந்த அந்தத் தீர்ப்புகள் இந்த வழக்கிற்குப் பொருந்தாது என்று, உரிய காரணங்களைக் கூறி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
 
• மனுதாரார் (வீரமணி) கூறும் தொகுப்பு வேறு; பெரியார் திராவிடர் கழகத்தின் தொகுப்பு வேறு என்பதை விளக்குவதற்காக கழக சார்பில் அச்சடிக்கப்பட்ட 1925, 1926, 1930 குடிஅரசு தொகுப்புகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அதைப் பரிசீலித்த நீதிபதிகள் இரண்டும் வெவ்வேறானவை என்று கூறியுள்ளதோடு, மனுதாரரின் ஒரிஜினல் தொகுப்பைத்தான் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டது என்பதற்கு அடிப்படை முகாந்திரம் ஏதுமில்லை (there being no primafacie strong case) என்று திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
 
• கழக சார்பில் வாதாடிய வழக்கறிஞர் துரைசாமி, கிளாடிஸ்டேனியல், மூத்த வழக்கறிஞர் ஆர். தியாகராஜன் ஆகியோர் முன் வைத்த பல வாதங்களை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
 
• கி.வீரமணியின் சார்பில் மனுதாக்கல் செய்த வழக்கறிஞர் பெயர் வீரசேகரன். நீதிபதி சொக்கலிங்கம் அவர்கள் முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அவர் நேர்மையான நீதிபதி என்பதால் வழக்கை அவரிடமிருந்து மாற்ற, புதிய தந்திரத்தை மனுதாரர் அரங்கேற்றினார். நீதிபதி சொக்கலிங்கத்தின் நெருங்கிய உறவினரான வழக்கறிஞர் சண்முக சுந்தரம், வீரசேகரனுக்கு பதிலாக மாற்றப்பட்டார். நெருங்கிய உறவினர் வாதாடும் வழக்கை நீதிபதிகள் விசாரிப்பது இல்லை. அந்த மரபுப்படி, நீதிபதி சொக்கலிங்கம் வழக்கை விசாரிக்க மறுத்துவிட்டார். வழக்கறிஞர் சண்முகசுந்தரம் என்பவர் ஒரு நாள்கூட இந்த வழக்கில் ஆஜராகவில்லை. ஆனாலும் வழக்கின் மனுவில் மட்டும் அவரது பெயரே வீரசேகரனுக்கு பதிலாக இடம் பெற்றிருந்தது. “சாணக்கியனே” இவர்களிடம் தோற்றுப் போவான்.

- பெரியார் முழக்கம் செய்தியாளர்

Comments

4 comments

4
தமிழ் ஓவியா
பெரியார் சொத்து யாருக்கு? பெரியார் விளக்கம்

எங்களை மக்கள் ஆதரிக்கிறார்கள்; பணம் தருகின்றார்கள் என்றால், மக்களிடத்தில் ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு இருக்கின்றது என்றே சொல்ல வேண்டும். சங்கராச்சாரியார் பணம் வசூல் செய்கின்றார் என்றால், நாட்டில் எவ்வளவு முட்டாள் பசங்கள் இருக்கின்றார்கள் என்று கணக்குப் பார்க்கவே வசூலிக்கின்றார். ஆங்காங்கு உள்ள பார்ப்பனர்களும், பார்ப்பன உத்தியோகஸ்தர்களும் (அதிகாரிகளும்) பணம் வசூல் செய்கின்றனர்.

நம் பணக்கார மடையர்கள் எல்லாரும் "பாத காணிக்கை" என்றும், பிச்சை என்றும் அள்ளிக் கொடுத்துவிட்டு, அந்தப் பார்ப்பான் கால் கழுவிய தண்ணீரை மான, வெட்கம் இல்லாமல் வாங்கிக் குடிக்கின்றார்கள். இதன் மூலம் நாட்டில் எவ்வளவு மடையர்கள், முட்டாள்கள் இருக்கின்றார்கள் நம்முடைய பேச்சைக் கேட்க, என்று கணக்குப் பார்க்கின்றான்! அதன் மூலம் "நம் இனத்திற்குச் சீக்கிரத்தில் அழிவு என்பது இல்லை; நம்மை ஆதரிக்க இவ்வளவு மடையர்கள் இருக்கின்றார்கள்" என்று எண்ணித் திருப்தி அடைகின்றான்!

நான் பணம் வசூல் செய்கிறேன் என்றால், என்னுடைய சொந்தத்திற்கா? என்னுடைய பிள்ளை குட்டிகளுக்கா? நான் தான் எனக்கு உள்ள
சொத்தையும்கூட கழகத்துக்கு ஒப்பித்துப் போட்டுவிட்டு இப்படி ஊர் ஊராகச் சுற்றுகிறேனே!

பின் எதற்கு? இப்படி வசூல் செய்வதன் மூலம் நாட்டில் எத்தனை மக்களுக்குப் புத்தி வந்து உள்ளது என்று சென்சஸ் (மக்கள் தொகைக் கணக்கு) எடுக்கவேயாகும்.

---------------- - 16-01-1960- நாகப்பட்டினத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு. "விடுதலை", 25-01-1960
தமிழ் ஓவியா
பெரியார் சொத்து யாருக்கு? பெரியார் விளக்கம் - 2

நான் பெரிய செல்வவான், நல்ல செல்வாக்குள்ள வியாபாரி. எங்கள் ஈரோட்டைப் பொறுத்தவரை எல்லா கவுரப் பதவிகளையும் வைத்துக் கொண்டிருந்தவன். அதையெல்லாம் விட்டு எதற்காக இந்த வேலைக்கு வந்தேன் என்றால் நம் மக்கள் உழைப்பாளி மக்கள் -சூத்திரத் தன்மையோடு இழிநிலையில் இருக்கிறார்களே, இதை மாற்றி நம்மாலானதைச் செய்யலாம் என்று கருதித்தான் இதில் இறங்கினேன்.

என் சொத்துக்கள் பூராவையும் இயக்கத்திற்கே எழுதி வைத்து விட்டேன். இப்போது எனக்கு ஒரு காசு சொத்து கிடையாது.என்னை நம்பியே என் மீது உள்ள பற்றாலோ அன்பாலோ கழகத் தோழர்கள் என்னிடம் நிதி கொடுக்கின்றார்கள். அவற்றையெல்லாம் கொஞ்சங் கொஞ்சமாக செர்த்து வைக்கின்றேன். அப்படிச் சேர்த்த பணத்தை மக்களுக்குப் பயன்படும் படி ஏதாவது செய்ய வேண்டுமே என்று கருதி கல்லூரிக்கும் மருத்துவ மனைக்கும் கொடுத்தேன்.

----------------தந்தைபெரியார் - “விடுதலை” 15-8-1968
Guest
பெரியார் சொத்து யாருக்கு? பெரியார் விளக்கம் - 3

நான் செய்து வந்த தொண்டும் செய்து வருகின்ற தொண்டும் நீங்கள் அறிந்ததேயாகும். அத்தொண்டு யாருக்காக என்பதும், அதனால் நான் ஏதாவது நன்மை, சுயநலம் அடைந்தேனா என்பதும் உங்களுக்குத் தெரியும். எனது நலத்தை, செல்வத்தை, செல்வாக்கை பொதுநலத்தொண்டுக்குக் கொடுத்தேனா அல்லது எனது பொதுத் தொண்டால் எனது நலத்தை, செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டேனா என்பது உங்களுக்குத் தெரியும்!

இராஜாஜி அவர்களும், இரு கவர்னர்களும், இரு கவர்னர் ஜெனரல்களும் வேண்டியும், கேட்டுக் கொண்டும் மந்திரிப் பதவியை வெறுத்தவன் நான். தவிர, எந்தப்பதவியையும் நான் விரும்பியவன் அல்லன். இன்னும் இனியும் நண்பர்களால், பெரியோர்களால் புகழுரை பெற்றதைத் தவிர யாராலும் ஒரு நலனும் பெற்றதில்லை; விரும்பியதில்லை.

எனக்குப் பொதுத் தொண்டு வரும்படி என்பது என் சொந்தக் காசில் பிரயாணம் செய்து 1930 இல் கூட்டமொன்றுக்கு 50 ரூபாய் வாங்கி, 1950 இல் 100 ரூபாய் வாங்கி 1960 இல் 150 ரூபாய் வாங்கி, 1970 இல் 200 ரூபாய் வாங்கினதுதான். மற்றும், மாநாடுகள் நடத்தியதில் சுமார் 1,00,000 ரூபாய் மீதமிருக்கும். மற்றபடி, எனக்கு இன்றுள்ள அவ்வளவும், மற்றும் இயக்கத்தின் பேரில் உள்ள சொத்துக்கள், செல்வங்கள் அவ்வளவும் என்னால் என் தகப்பனாரைக் கொண்டு செய்யப்பட்ட டிரஸ்ட் தர்ம சாசனம் ஆக்கப்பட்ட எங்கள் குடும்பச் சொத்தே அல்லாமல் பிறர் சொத்து, ஒரு காசளவும் இல்லை. அப்படி இருந்தாலும் நான் அவைகளில் இருந்து பொதுநலத்திற்கு என்று திருச்சியில் காலேஜுக்கு 5 இலட்சமும், திருச்சி குழந்தைகள் ஆஸ்பத்திரிக்கு ஒரு இலட்சமும், ஈரோடு பொது ஆஸ்பத்திரிக்கு - குழந்தைகள் வார்டுக்கு ஒரு இலட்சமும், மற்றும் இந்த 50, 60 வருடகாலமாக 1000 ரூபாய், 2000 ரூபாய், 3000 ரூபாய், 10,000 ரூபாய் என்கிற கணக்கில் பொதுநலத்திற்கு (தர்மத்துக்கு) என்று கொடுத்துவந்தது 2,3 இலட்ச ரூபாய்க்கும் குறையாது. இயக்கத்திற்கு நான் வாங்கி இருக்கின்ற சொத்துக்கள் இன்று, 30,00,000 (முப்பது இலட்சம்) ரூபாய்க்கும் குறையாமல் பெறும். எங்கள் டிரஸ்ட் சொத்துக்கள் சுமார் 20,00,000 ரூபாய் 30,00,000 ரூபாய் பெறும்.
இவ்வளவும் இயக்கத்தின் பெயராலேயே இருக்கின்றன. இருந்தாலும், தலைவன் என்கிற முறையில் என் ஆதிக்கத்தில் தான் இருக்கின்றன. இதனால் இயக்கத்திற்கு இலாபம் என்னவென்றால் வருமானம் பெருகுகின்றது; சொத்து வளருகின்றது; அவ்வளவு தான். எனக்கென்ன பயன் என்றால் கவலை, தொல்லை அதிகமாக இருப்பதுதான். ரொக்கமும் பல இலட்சம் இருக்கின்றது.சர்க்கார் சட்டத்தால், இன்கம்டாக்ஸ் கொடுமையால் இவற்றில் எவ்வளவு குறைந்தாலும் குறையலாம்.

இனி எனது தொண்டினால் ஏற்பட்ட பலன் என்ன என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் ! மற்றும் எனது தொண்டில் எனக்கு உதவியாய் இருந்தவர்கள் பலர் - அவர்களால் கனவில் கூட நினைத்திருக்க முடியாத பதவியையும், அந்தஸ்தையும் செல்வாக்கையும் அடைந்தார்கள்; அடைந்து வருகிறார்கள். இந்த நிலையில் கூட நான் யாரையும் ஒரு காசு அளவுகூடக் கேட்காமலும், எவரிடத்திலும் நானாகக் கைநீட்டாமலும் இயக்கத்துக்காக வருவாய் சம்பாதித்துக் கொண்டு தான் வருகிறேன்.

எந்த நிலையிலும் எனது நிலை ஒரு சிறிது கூடத் தாழாமல் ஏதோ சிறிதாவது வளர்ந்து கொண்டே தான் வருகிறது. நண்பர்களே! இவற்றையயல்லாம் ஏன் சொல்லுகின்றேன்? யாரிடத்திலும் எவ்வித உதவியையும் கேட்பதற்கல்ல. மற்ற எதற்கு? மன்னிப்பு கேட்பதற்கு என்ன மன்னிப்பு என்றால், நான் இனிச் சுற்றுப்பிரயாணப் பிரச்சாரத்திலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.

சென்னையிலோ, திருச்சியிலோ வேறு தொல்லையற்ற இடத்திலோ இருந்து கொண்டு துண்டுப் பிரசுரம், வால் போஸ்டர், சிறு சித்திரப் புத்தகம் முதலியவை பிரசுரித்துக் கொண்டு இருக்கலாம்; அலையவேண்டாம் என்று கருதுகிறேன்.ஆகஸ்ட் முடிந்தால் 93 வயது முடிந்துவிட்டது; செப்டம்பர் பிறந்தால் 94 வயது ஆண்டு பிறக்கின்றது.

யார் தயவையும் விரும்பாமல், யார் விசயத்திலும் தயவு தாட்சண்யம் காட்டாமல் சுதந்திரமாய் இருந்து பார்க்கலாம் என்று கருதுகின்றேன்.நான் சென்னைக்கு வந்தால் “உண்மை” மாத இதழையும் சென்னைக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று கருதுகின்றேன். சென்னைக்கு வருவதில் வேறு பல சங்கடங்களும் இருக்கின்றன. திருச்சியில் பயிற்சிப் பள்ளிகள் இரண்டு இருக்கின்றன; பிரைமரிப் பள்ளி ஒன்று இருக்கின்றது; அநாதைப் பிள்ளைகள் விடுதி ஒன்று இருக்கின்றது; வரும் ஆண்டு முதல் உயர்நிலைப் பள்ளி ஒன்று ஏற்படுத்த அனுமதி பெற்று நடத்தப்படப்போகின்றது. ஈரோட்டில் ஒன்று ஏற்படுத்த உத்தேசம். இவையயல்லாம் திருமதி. மணியம்மையார் முயற்சியில் தான் நடை பெறுகின்றன. 10, 12 ஏக்கர் தோட்டப்பண்ணை ஒன்றும் நடை பெறுகின்றது. பல ஆயிரக்கணக்கில் வாடகை வரும் பல கட்டிடங்களும் திருச்சியில் இருக்கின்றன. ஆகவே, மணியம்மை அவர்கள் திருச்சியில் இருக்க வேண்டி இருக்கிறது. நான் சென்னைக்கு வந்தால் மணியம்மையார் என்னைத் தனியாய் இருக்கச் சம்மதிக்கமாட்டார்கள்; அவர்கள் சென்னைக்கு வந்து விட்டால், திருச்சி நடப்புக்கள் பாதிக்கப்பட்டு விடும்.இது ஒரு சங்கடமான நிலைமை என்றாலும் ஏதாவது செய்தாக வேண்டியிருக்கிறது.எனது உடல்நிலை, மனநிலையைப் பொறுத்துத்தான் இந்தச் சிந்தனைகள் ஏற்பட்டன.

தமிழ்ப் படிப்புள்ள புலவர் ஒருவர் எனக்கு உதவிக்கு வேண்டியிருக்கிறது. பேச்சில் இருக்கின்றவைகளை எழுத்தில் புத்தகத்தில் ஏற்படுத்திவிட்டுப் போக வேண்டும் என்று கருதுகின்றேன். ஆகவே, தோழர்களே ! என்னைக் கூப்பிடாதீர்கள் ! கூப்பிட்டால் அது மாநாடாக இருக்க வேண்டும், பணம் ரூ.500 கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கின்றேன். மன்னியுங்கள்!

நாடு பூராவும் நல்ல பேச்சாளர்கள் இருக்கின்றார்கள். நான் எதையும் குறைவில் விட்டு விட்டுப் போகவில்லை. மக்கள் நல்ல உணர்ச்சி பெற்று இருக்கிறார்கள். ஆனால் காரியத்தில் இறங்க வில்லை. அதற்குத் துண்டுப் பிரசுரம் செய்யலாம் என்று இருக்கின்றேன். மற்றொரு முக்கிய விசயம்; நமக்கு இப்போது சினிமா ஒரு தொல்லையாக ஆகிவிட்டது. அதற்காக ஒரு சினிமா பகிஷ்கார மாநாடு போட்டு சினிமா பார்க்காதே என்று வேண்டுகோள் பிரச்சாரம் ஆரம்பிக்க வேண்டும்.

கோவில் பகிஸ்காரம் சாதித்து விட்டாயா என்ற கேட்பார்கள். அது எனக்கு அவமானம்தான். ஆனாலும், நான் கலைஞர் அவர்களுக்கு ஆட்பட்டதால் ஏற்பட்ட நிலை என்றாலும், கலைஞர் தடையை நீக்கும் போது ஆரம்பிப்பேன். ஆனால், சினிமா பகிஷ்காரத்திற்கு யாருக்கும் ஆட்பட மாட்டேன். அது அண்மையில் துவக்கப்படும். இவை பற்றிய திட்டங்களை அடுத்து வெளியிட இருக்கிறேன்.
---------------- தந்தை பெரியார் - “விடுதலை” - 19-07-1972
தமிழ் ஓவியா
பெரியார் சொத்து யாருக்கு? பெரியார் விளக்கம் - 4

பெரியார் சொத்து யாருக்கு

நான் பணம் சம்பாதிக்கின்றேன் தகாத வழிகளில் என்கின்றார்கள். நான் என்ன, இவர்கள் பணம் சம்பாதிப்பது போலவா பிள்ளைகுட்டிகளுக்கு என்று சம்பாதிக்கின்றேன்? இப்படிப்பட்ட விஷமப் பிரச்சாரங்களுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 
  
பணம் எல்லாம் கழகத்துக்குத்தானே? 
 
நான் சம்பாதித்த பணத்தை எல்லாம் நானா எடுத்துக் கொள்ளுகிறேன்? எல்லாம் கழகத்துக்குத் தானே ஒப்படைத்துப் போட்டு எளிய வாழ்வு வாழ்கின்றேன்? கலியாணம் என்று கூப்பிட்டால் 150 கொடு என்று வாங்குகின்றேன். பொதுக்கூட்டம் என்று கூப்பிட்டால் 100; விருந்துக்குப் பணம் கொடு; கையெழுத்து, போட்டோ இதுகளுக்கும் பணம் கொடு என்று வாங்குகின்றேன். மாநாடு கூட்டினால் 1000, 2000 மிச்சம் வருகின்றாற்போல் செய்கின்றேன். இதுகள் எல்லாம் சேர்ந்தால் எங்கே போய் விடப்போகின்றது? இன்று கழகத்துக்கு உள்ள பணத்தில் பகுதிக்கு மேல் என்னுடைய சொந்தப்பணத்தைத்தான் சேர்த்து இருப்பேன்.  
 
சொத்துக்கள் வாங்கி சேர்க்கப்படுகிறது 
  
தோழர்களே! இந்த வருஷத்தில் திருச்சியில் கழகத்துக்கு 3 லட்சம் ரூபாய்க்கு சொத்துக்கள், கட்டிடங்கள் வாங்கப்பட்டுள்ளது. கட்டப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 50 ஏக்கரா நஞ்சை தஞ்சை மாவட்டத்தில் வாங்கப்பட்டு உள்ளது. மாதம் 1,200 ரூபாய் வாடகை வருகின்றாற்போல திருச்சியில் பெரிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. பள்ளிக்கூடம் சம்பந்தமாக ஆஸ்டல் கட்டிடங்களும் கட்டப்பட்டு உள்ளது. யார் திருடிக் கொண்டார்கள்? இந்த சுமார் 5, 6 ஆண்டில் மட்டும் கழகத்துக்கு 30, 40 சொத்துக்களுக்கு மேல் சேர்க்கப்பட்டு உள்ளது!
 
விஷமத்தனமான புகார்கள்!
  
பெண்டாட்டிக்குக் கொடுத்து விடுவேன் என்கின்றனர். எதற்காக கொடுக்கப் போகின்றேன். இந்தக் கழக சொத்து தவிர வேறு எனக்கு சொந்தத்தில் சொத்து கிடையாதா? நான் செத்தாலும் மாதம் ரூ.500, ரூ.1000 வருமானம் வரும்படியான சொத்து அந்த அம்மாளுக்கு இருக்குமே!
 
அடுத்து சம்பத்துக்குக் கொடுத்து விடப் போகின்றேன் என்று சொல்லித் திரிகின்றார்கள். அவன் முட்டாள்தனத்தினால் கேட்பார் பேச்சைக் கேட்டதனால் அவனுக்கு என் சொத்து கிடைக்க வழி இல்லாமற் போயிற்று. இல்லையானால் அவனுக்குத் தானே என் சொத்து சேர்ந்து இருக்கும்? நான் சம்பத்தை தத்து எடுத்துக் கொள்ளுவது என்று குடும்பத்தில் முடிவு செய்து அன்று பத்திரம் முதலியன வாங்கியது யாருக்குத் தெரியாது? இன்னும் அந்தப் பத்திரம் என்னிடத்திலேயே இருக்கின்றதே! தத்து செல்லும்படியாக சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று ரிஜிஸ்டிரார் சொன்னதனால் ரிஜிஸ்டர் ஆகவில்லை.
 
 சம்பத் நடவடிக்கையால் டிரஸ்ட் ஏற்படுத்தலானேன்
 
அவனும் சதிகாரர் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு நமக்கு விரோதமாக நடக்க ஆரம்பித்ததன் காரணமாக நான் அந்த முயற்சியைக் கைவிட்டு டிரஸ்ட் ஏற்படுத்தி கழகத்துக்குச் சேரும்படி செய்துவிட்டேன்.
 
-----------------------தந்தை பெரியார் அவர்கள் திருநெல்வேலியில் 29.01.1963 அன்றும், பண்ருட்டியில் 13.02.1963 அன்றும் திராவிடர் கழகம் பற்றி, கழகத் தோழர்களுக்கும், பொது மக்களுக்கும் ஆற்றிய தெளிவுரையிலிருந்து ஒரு பகுதி

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.