வெள்ளி 27 சித்திரை 1945- பேரழிவின் நாள், சனி முற்பகலில் எழுதியது

இரவு அமைதியாகத்தொடங்கியது. எதிரி வீட்டுத்தோட்டங்கள்வரை வந்துவிட்டான். டொச் இராணுவத்தினர் எங்கள் குடியிருப் பிற்கு முன்னே நிற்கின்றார்கள் என நள்ளிர வில் பென் சொன்னாள். செய்தியைக் கேட்டபின்பு வெகுநேரம் என்னால் உறங்க முடியவிலை. எனக்குத் தெரிந்த இரசிய மொழிச் சொற்களையும் வசனங்களையும் மனதில் மீள்அசைவு செய்து பார்த்தேன். இன்றுதான் முதல்முறையாக எனக்குச் சிறித ளவு இரசியமொழி பரீட்சம் உள்ளதெனச் சொன்னேன். இளமைக்காலத்தில் இரசியா ஐரோப்பாவின் ஓர் அங்கமாக இருந்ததும் அதற்குக் காரணம்.

எனது இரசியமொழியறிவு எளிமையானது, தேவைக்காக பிரயாணங்களின்போது அவ்வப்போது மனதில் பதித்துக்கொண்டவை. இரசியமொழியில் என்னால் எண்ணமுடியும் திகதியைக் குறிப்பிட முடியும் எழுத்துக்களை வாசிக்க முடியும். சிறிது பயிற்சி செய்தால் மீண்டும் இம்மொழியில் ஓரளவு உரையாட முடியும். இரசியமொழியில் ஒன்று இரண்டு எண்ணிக்கொண்டே தூங்கிப் போனேன்.

அதிகாலை ஐந்துமணி நிலவறையின் முன் பக்கத்தில் யாரோ நடமாடும் சத்தம் கேட்டு விழித்தேன். புத்தகக்கடைக்காரரின் மனைவி வெளியே போய்விட்டு நிலவறைக்குத் திரும்பி யிருந்தாள். எனதருகில் வந்து கையைப் பிடித்துக்கொண்டு அவர்கள் வந்து விட்டார்கள் என்றாள். யார்? இரசியர்கள்? என் கண்களைப் பார்க்காது தவிர்த்துக் கொண்டே ஆம் இப்போது மையரின் மதுபான வடிசாலைக்குள் சன்னலூடாகப் புகுந்துவிட்டார்கள். இரவு உடையைக் களைந்து வேறு உடுப்பு அணிந்து தலை வாரிக்கொள்ள புத்தகக் கடைக்காரி புதிய செய்தியை நிலவறையில் எல்லோருக்கும் அறிவிக்க முழுநிலவறையும் விழித்துக் கொண்டது. பின்படிக்கட்டு வழியாக ஏறி முதல் மாடிக்குச் சென்றேன். இதுவரை ஒளித்து வைக்காத சாப்பாட்டுப் பொருட்களை ஒளித்து வைத்தேன். உடைந்துபோய் பூட்டமுடியாத பின் கதவு காற்றில் அடிபடும் சத்தம் கேட்டது. பின்பு அமைதி, சமையலறையும் யாருமின்றி வெறுமையாகக் கிடந்தது. முழங்காலிலிருந்து மெதுமெதுவாக அசையாது சன்னல்பக்கம் போனேன். விடிகாலை வெளிச்சத்தில் வீதி யில் யாரையும் காணமுடியவில்லை குண்டு களின் விசில் சத்தமும் வெடிப்புக்களும் கேட்டன. வீதிமூலையில் நான்கு இரசிய விமான எதிர்ப்புப்பீரங்கிகள் , நான்கு இரும்பு ஒட்டகச்சிவிங்கிகள் பயமுறுத்தும் நீளமான குழல்கள். அகன்ற முதுகு, தோல்ஜக்கற், முழங்கால்வரை நீண்ட தோல்பூட்ஸ் அணிந்த இருவர் அவதானமாக சாலையில் நடந்து வந்தனர். பின்பு மோட்டார் வண்டிகள் வந்து சேர்ந்தன அவைகளும் வீதியோரங் களில் நிறுத்திவைக்கப்பட்டன. குண்டுகள் காலைவெய்யிலில் சாலையில் பறந்தன, சுவரின் பூச்சுக்கள் அதிர்வில் உதிர்ந்தன, உடைந்த கண்ணாடிச்சன்னலினூடு பெற்றோல் மணத்துடன் காற்று வீசியது.

நான் திரும்பி நிலவறைக்குப்போனேன். காலை உணவை, அல்ப்ஸ் மலையின் கனம் எங்களை அழுத்துவதுபோன்ற உணர்வுடன் சாப்பிட்டோம். அந்நிலையிலும் விதவை நிறைய பாண்துண்டுகளை வெட்டியதை ஆச்சரியத்துடன் பார்த்தேன். பாணைக் கண்டதும் வயிறு விறாண்டியது. சிறுமியாக இருந்தபோது கணிதப்பயிற்சி செய்வதற்கு முதலில் மனம் படபடக்குமே அதுபோன்றும், முடிந்ததும் சந்தோசமாக இருக்குமென்ற எதிர்பார்ப்பை ஒத்த உணர்வு இப்போது என்னுள் ஓடியது.

நானும் விதவையும் முதல்மாடிக்குச்சென்று வீட்டைத் தூசிதட்டி கூட்டி கழுவித் துடைத்ததில் கையிருப்புத்தண்ணீர் இன்னுமொரு பாவ னைக்கு மட்டுமே மிஞ்சியது. ஏன் எங்களை நாங்களே இப்படி வருத்திக்கொண்டோம் என்பதற்கான விடை எங்களிடமில்லை. சில வேளை இன்றைய யதார்த்தத்தில் இருந்து விடுபடும் முயற்சியாகக்கூட இருக்கலாம்.

துப்பரவுவேலையினிடையே அவ்வப்போது சன்னல் பக்கம் பதுங்கி பதுங்கிப்போய் பார்ப்போம். முடிவே காணமுடியாது வரிசை யாய் இராணுவத்தின் சேவைப்பரிவாரங்கள் வந்து கொண்டே இருந்தன. கொழுத்த பசுக்களை பால்மடிகள் கனக்க ஓட்டி வந்த னர்.அதி லொன்றை அவர்களது திறந்த வெளிச் சமையலறையின் முன்னே இருந்த கராஜிற்குள் கொன்று சமையலுக்கு எடுத்துக் கொண்டார் கள். முதல்முறையாக அவர்க ளது உருவங்களைத் தெளிவாகப்பார்த்தோம். எல்லோருமே திடகாத்திரமாய் எதைப் பற்றி யும் கவலைப்படாதவர்களாய் தெரிந்தார்கள். தலைமுடியைக் கட்டையாக வெட்டியதால் மொட்டைத்தலைகள் பெரிதாகத் தெரிந்தன. இராணுவமல்லாதவர்கள் யாரும் வீதியில் இல்லை. இதுவரையும் அவர்கள் மாத்திரமே வீதியில். எல்லாவீடுகளிலும் அவர்கள் பற்றிய கதைதான். பயத்துடன் ஒரு பெரிய நகரமே நிலத்தின்கீழ் வாழ்வதை யாராவது கற்பனை செய்துகூடப் பார்த்திருப்பார்களா? யார் யாரென்று தெரியாமலே சிறுசிறு குழுக்களாக உடம்பைக் குறுக்கி நிலவறையினுள் வெந்து கொண்டு வாழ்வதை யாரும் நினைத்துக் கூடப் பார்த்திருக்கமாட்டார்கள்.

வெளியே மேகங்களற்ற நீலவானம் வெய்யி லில் மின்னிக்கொண்டு. மதிய உணவிற்கு பேக்கரியில் சமைத்த சூப் பானையை நானும் ஹம்பேர்க் பெண்ணுமாக தூக்கிவந்தபோது முதல்முதலாக இரசியன் ஒருவன் எங்கள் நில வறையுள் நிற்பதைக் கண்டோம். முதல் பார்வையிலேயே விவசாயி எனத்தெரிந்தது. பருத்த சிவந்த கன்னங்கள், கண்களைச் சிமிட்டிக்கொண்டு பெற்றோமக்ஸ் விளக்கைப் பார்த்துக்கொண்டு நின்றான். எங்களைக் கண்டதும் கவனமாக ஓரிரு அடி எடுத்துவைத்து முன்னே வந்தான். இதயம் வேகமாக அடிக்க பயத்துடன் நிலவறைக் குடிகள் தங்கள் சூப்கோப்பையை அவனை நோக்கி நீட்டினர். அவன் தலையை அசைத்துக் கொண்டே சிரித்தான். இன்னும் அவனிடமிருந்து ஒரு வார்த்தையும் வரவில்லை.

அங்குதான் முதல்முதலாக இரசியபாசையில் பேசினேன். உங்களுக்கு என்ன வேண்டும்? திடுக்கிட்டுப்போன அவன் குழப்பத்துடன் என்னைப் பார்த்தான். இன்னும் நான் அவன் மொழியில் பேசியதை அவனால் விளங்கிக் கொள்ளமுடியவில்லை. 500 வருடங்களுக்கு முன்னர் வாய் பேசமுடியாதவர்கள் இரசியர் களுடன் சைகைமொழியில் வியாபாரம் செய் ததைப்போல் இவனும் வாய்பேசாமொழியே பேசினான். எனது கேள்விக்கு மறுமொழியாக அவன் சொன்னதும் வாய்பேசாமொழி கருத்துப்படவே இருந்தது.இன்னும் எனது கேள்விக்குப் பதில் சொல்லாததால் சாப்பாடு வேண்டுமா எனக்கேட்க சிரித்துக்கொண்டு டொச்மொழியில் ஸ்சினப்ஸ்(மது).

ஸ்சினப்ஸ் ? நிலவறைக்குடியினர் எல்லோ ருமே இல்லையெனத் தலையாட்டினர். நிலவ றையில் எந்த மதுவகையுமில்லை. யாரிடமா வது மது இருந்தால் அதை அவர் கவனமாக எங்கோ ஒளித்து வைத்திருப்பார். இவான் திரும்பி வந்த வழியைத் தேடிப்போனான்.

எங்கள் வீதியில் இராணுவம் நிரம்பிவழிந்தது. இன்னும் இரண்டு மூன்று பெண்களுடன் வெளியே என்ன நடக்கின்றதெனப் பார்ப்ப தற்குப்புறப்பட்டேன். வீட்டுவாசலில் இளம் இராணுவத்தினன் ஒருவன் டொச் தயாரிப்பான மோட்டார்சைக்கிளை புதிய துணியால் துடைத் தான். என்னைக்கண்டதும் துணியை நீட்டி சைகையில் மோட்டார் சைக்கிளை துடைக்கும் படி சொன்னான். நான் சிரித்துக்கொண்டே இரசிய மொழியில் மோட்டார் சைக்கிளைத் துடைக்கும் நோக்கமே என்னிடமில்லை எனச் சொல்ல ஆச்சரியமாக பார்த்துவிட்டு சிரித்தான்.

திருடிய சைக்கிள்களில் இரசியர்கள் அங்கு மிங்குமாக ஓடித்திரிந்தார்கள். ஒருவருக்கு ஒருவர் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுத்தனர். மிக விறைப்பாக அவர்கள் சைக்கிளில் இருப் பதைப் பார்க்க மிருக்காட்சிசாலையில் சிம்பன்சி சைக்கிள் ஓடுவதுபோல் இருந்தது. மரங்களில் மோதுவதும் எக்காளமிட்டுச் சிரிப்பதுமாக சைக்கிள் பழகிக் கொண்டிருந்தனர்.

இரசியர்களைப் பற்றிய பயம் சிறிது விலகு வதை உணர்ந்தேன்.அவர்களும் என்ன சொன்னாலும் ஆண்கள்தானே. பெண் களால் ஏதோ ஒருவழியில் ஆண்களைச் சமாளிக்க முடியும்.

நடைபாதைமுழுவதும் குதிரைகள் சாணமிடு வதும் கனைப்பதுமாக இருந்தது. குதிரை லயத்தில் இருப்பதுபோன்று மணந்தது. இரு இராணுவத்தினர் தங்கள் குதிரை களைத்துப் போய் விட்டதாகவும் அருகில் நீர் இருக்கின் றதா என என்னிடம் கேட்டனர். அவர்களும் நானும் கால்மணிநேரம் நடந்து தோட்டத்துப் பைப் இருக்குமிடத்திற்கு வந்தோம். சிநேகித மான உரையாடல் சிரித்த முகங்கள். இனி வரும் காலங்களில் மீண்டும் மீண்டும் என் னிடம் கேட்கப்படும் கேள்வியை அவர்களில் ஒருவனிடமிருந்து முதல்முறையாகக் கேட் டேன். உங்களுக்குத் திருமணமாகி விட்டதா ஆம் என்றால் கேள்வி தொடரும் அவர் இப்போது எங்கே? இல்லையென்றால் இரசியர் ஒருவரை திருமணம் செய்ய விருப்பமா என்ற கேள்வி வரும்.

ஆரம்பத்திலேயே இருவரும் என்னை ஒருமை யில் அழைக்க, உங்களை நான் மரியாதை யாகத்தானே அழைக்கின்றேன் நீங்களும் அதேமாதிரி என்னை மரியாதையாக அழைக்கவேண்டும் என்றேன். தோட்டத்தி னூடு நடந்துசென்றபோது எங்களைக்கடந்து விமானங்கள் அணிவகுத்து பறந்து போயின. டொச் இராணுவத்தினர் எங்களது இருப்பிடத் திலிருந்து பத்துமீற்றர் தொலைவில். டொச் விமானங்கள் எதையும் வானத்தில் காண வில்லை, விமானப்பிரங்கி எதிர்ப்பும் டொச் பக்கத்திலிருந்து கேட்கவில்லை, பைப்புகளில் தண்ணீரில்லை, மின்சாரமில்லை, எரிவாயு இல்லை இவான்கள்மாத்திரம் எங்கள் பக்கத்தில் நிறைந்திருந்தனர்.

குதிரைகள் தண்ணீர் குடிப்பதை சந்தோசமாக குதிரைக்காரர்கள் பார்த்துக்கொண்டு நின்ற னர்.அங்குமிங்கும் நடந்தும் இரசியர்களுடன் கதைத்தும் நேரத்தைப்போக்கினேன்.சூரியன் கோடையின் தீவிரத்துடன் சுட்டெரித்தது, என்னால் சமாளிக்கமுடியாத கெடுதி நடக்கப் போகிறதென மனதில் நெருடல். சில இரசிய இளைஞர்கள் கூச்சமாக பார்த்தும் சிலர் உற்றுப்பார்த்தும் என்னைக் கடந்து போனார் கள். குட்டையான ஒருவன் மதுவின் நெடியு டன் என்னிடம் பேச்சுக்கொடுத்தான். என்னை ஒதுக்குப்புறமாக ஏதாவது கட்டிடமொன்றிற்கு கூட்டிப்போவதில் குறியாக இருந்தான். மயிர் நிறைந்த கையில் கட்டியிருந்த இரு கடிகா ரங்களைக்காட்டி அதிலொன்றை எனக்குத் தருவதாகவும் அதற்குப்பதிலாக நான் அவனுடன்.

அவனைவிட்டு நழுவி நிலவறைபக்கம் வந் தேன், அவனிடமிருந்து தப்பிய சந்தோசத்து டன் நிலவறையுள் நுழைய எங்கிருந்தோ வந்த அவனும் நிலவறையுள் என்னுடன் நுழைந்தான். அங்குமிங்கும் தள்ளாடிக் கொண்டே இராணுவத்தினர் பாவிக்கும் பந்தம் போன்ற விளக்கைக் கொழுத்தி கையில் பிடித்தான். நிலவறையில் இருந்த நாற்பதுபேரும் விளக்குவெளிச்சத்தில் திடுக்கிட்டுப்போனார்கள். பெண்களின் முகங்களில் குழப்பமும் பயமும்.

யாரும் பேசவில்லை ஆடாது அசையாது நில வறை உறைந்து போயிற்று. மூச்சை அடக்கி விடும் ஒலி மட்டும் கேட்டது. வெளிச்சம் 18 வயது ஹம்பேர்க்காரியின் முகத்தில் நிலைக்க அவளது தலையில் போட்டிருந்த கட்டு மின் னியது. அவளினருகே போன இரசியன் மிரட் டல் தொனியில் டொச்சில் எத்தனை வயது. யாரும் அவனுக்குப் பதில் சொல்லவில்லை. அந்த இளம்பெண் பயத்தில் விறைத்துக் கிடந்தாள். மீண்டும் ஆத்திரதொனியில் எத்தனை வயது எனக் கத்தினான். அவள் மாணவி 18 வயது என்று சொல்லி தலையில் காயம்பட்டதைச் சொல்ல இரசிய மொழியில் சொற்களைத் தேடி முடியாமல் போக வெளி நாட்டவர் டொச் பேசுவதுபோல் குண்டு விழுந்து மண்டை உடைந்து என்றேன்.

அவனுக்கும் எனக்குமிடையில் ஒரு சிறு தர்க் கம் தொடங்கியது கேள்விகள் மறுமொழி களென மாறிமாறி தர்க்கித்தோம். அவனது கேள்விகளில் ஒன்றுமேயில்லை அதை இங்கு எழுதுவதில் எந்தப்பயனுமில்லை. ஒரே ஒரு விடயத்தைச் சுற்றித்தான் பேச்சு இருந் தது.காதல், உண்மையான காதல், கொழுந்து விட்டெரியும் காதல். அவன் என்னைக் காத லிப்பதாகவும் நான் அவனைக் காதலிக்கி றேனா என்றும் எங்கள் காதலைக் கொண் டாட முடியுமா எனவும் கேட்டான். அதைப் பின்பு பார்ப்போமே சொல்லிக் கொண்டே கதவுப்பக்கமாக நகர்ந்தேன். இவன் என்னை விடாது துன்புறுத்திக் கொண்டிருந்தான். பயத் திலிருந்து இன்னும் விடு படாத நிலவறைக் குடிகளுக்கு இங்கு என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. பயத்தில் கைகள் நடுங்க இதயம் பலமாக அடித்துக் கொள்ள அவனின் கண்களைப் பார்த்து அந்த இரு வார்த்தைகளையும் சொல்வதற்குள் எனக்குப் போதும் போதுமென்றாகிவிட் டது. அவனைப் பார்த்துக் கொண்டே பின்புறமாக நடந்த என்னைத் தொடர்ந்து வந்தான். இந்த வழி சிக்கலானது அவனுக்குத் தெரியாத வழி. இரகசியக்குரலில் அவனைப் பார்த்து அந்தப்பக்கம் போவோம் அங்கு யாருமே இல்லை குசுகுசுத்தேன். இன்னும் மூன்று எட்டுக்கள் இரண்டு படிக்கட்டுக்கள். இப்போது வீதிக்கு வந்துவிட்டோம் மதிய நேரச்சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்தது.

தங்கள் குதிரைகளை தடவிக்கொண்டிருந்த இரு குதிரைகாரர்களை நோக்கி ஓடினேன். அவர்களுக்கு என்னைத் தொடர்ந்தவனைச் சுட்டிக்காட்டி இவன் பொல்லாதவனாக இருக் கிறான். அவன் கோபமும் வன்மமுமாக என்னை முறைத்துவிட்டு அவ்விடத்தைவிட்டு ஓடிப்போனான். குதிரைக்காரர்கள் பரிகாச மாக சிரித்தனர். அவர்களுடன் சிறிது உரை யாடியதில் படபடப்பு அடங்கி கை நடுக்கமும் குறைந்தது. நான் வெளியே பேசிக்கொண்டிருந்த நேரத் தில் பெண்களைத்தேடி மணிக்கூடுகளுடன் பலவீரர்கள் வந்துபோயிருந்தனர். கைகளில் ஐந்து ஆறு மணிக்கூடுகளைக் கட்டிக்கொண் டும் சிறுபிள்ளைத்தனமாக அவற்றைக்காட்டி தாங்கள் களவாடியதை வெளிப்படையாகக் கொண்டாடியவர்களையும் இதன் பின்பு நான் பலதடவைகளில் கண்டேன்.

எங்கள் பகுதி சேவைப்படையினரின் குடி யிருப்பாக மாறிவிட்டது. கடைகள் கராஜ் களென கைவிடப்பட்ட பகுதிகளையெல்லாம் அவர்கள் ஆக்கிரமித்துவிட்டார்கள். கடை களில் குதிரைகள் வைக்கோலைத் தின்று கொண்டும் தலையை ஆட்டிக்கொண்டும் நிற்பதை கடைகளின் பெரிய சன்னல்களி னூடாகப் பார்க்க முடிந்தது. அமைதி நிலவு வதுபோல் நம்பினோம். மணிக்கூட்டு வியா பாரமும் பிசுபிசுத்துப்போய்விட்டது வெய்னா கப்பூத் (மணிக்கூடு உடைந்து விட்டது) எனச் சொன்னார்கள். போர் சூறாவளி எங்களைக் கடந்து போய்விட்டது என்றுதான் நம்பினோம். போர் எங்களை அழிக்கிறது.

மாலை 6 மணியளவில் மிகுந்த பலசாலி யான ஒருவன் நிறைபோதையில் கையில் ரிவோல்வருடன் நிலவறைக்குள் புகுந்தான். அங்குமிங்கும் நகர்ந்துவிட்டு மதுதயாரிப்பவ ரின் மனைவியை நோக்கிப்போனான். அவள் தான் அவன் குறி. ரிவோல்வருடன் நிலவறை முழுவதும் அவளைக் கலைத்து வாசலுக்கு நெட்டித்தள்ளினான். தன்னைப் பாதுகாக்க கைகளை அங்குமிங்கும் வீசியதில் ரிவோல் வர் வெடிக்க அவள் பெரிதாக அலறினாள். ரிவோல்வரின் குண்டு இரண்டு மரச்சட்டங் களுக்கிடையிலான சுவரை துளைத்திருந் தது. யாருக்கும் எந்தக்காயமுமில்லை. நிலவறை முழுவதும் ஓடுவதும் கத்துவதுமாக ஒரே குழப்பம். ரிவோல்வர் வீரன் குழப்பத்தில் நிலவறையைவிட்டு ஓடிவிட்டான்.

மாலை 7 மணி. நானும் விதவையும் மாலைச் சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டி ருந்தோம், போர்ற்றியெர்ஸ் பெண்களில் இளையவள் கத்திக்கொண்டே உள்ளே வந்தாள். உடனே கீழே வாருங்கள் திரும்ப வும் திருமதி பி.யைத்தேடி யாரோ வந்திருக் கிறார்கள். ம் திரும்பவும். மது தயாரிப்பவரின் மனைவி எங்கள் எல்லோரையும்விட உடற் பருமன் கூடியவள், அவளது மார்பகங்கள் பருத்து சரிந்திருக்கும். இரசியர்கள் பருத்தப் பெண்க்ளையே விரும்புவதாகக் கேள்விப் பட்டிருந்தோம். பருத்த அழகியப் பெண்கள் ஆணின் உடலைவிட வித்தியாசமாக இருப் பதால் அதிகம் விரும்பப்படுவார்கள். ஆதிக் குடிகளிடையே பருத்த பெண்கள் செல்வத்தி னதும் மறு உற்பத்தியினதும் அடையாளமாக மதிக்கப்பட்டதாகச் சொல்வார்கள். எங்கள் நாட்டில் பருத்த பெண்களைத்தேடினாலும் காணமுடியாது முன்பு பருமனாக இருந்த பெண்களெல்லாம் போரின் நெருக்கடியில் சுருங்கிப்போய்விட்டனர். மது தயாரிப்பவரின் மனைவி போர்க்காலங்களில் எந்தக் குறை யுமில்லாது வாழ்ந்தவள். எனவே இப்போது கொழுப்பே அவளது விரோதி.

நான் கீழே இறங்கிவந்தபோது வீட்டுக் கதவடி யில் விம்மலும் நடுங்கலுமாக அவள் நின் றாள். நிலவறையிலிருந்து தப்பி ஓடிவந்த அவள் நிலவறைக்குப்போகப் பயந்து அங்கேயே நின்றாள். நான்கு படிக்கட்டுக்கள் மேலே ஏறி தனது வீட்டுக்குப்போகவும் பயம் டொச் ஆட்லறியின் எதிர்ப்பு அவள் வீட்டை யும் தாக்கலாம் அதுமட்டுமல்ல இரசியர்கள் அவளைப் பின்தொடர்வார்கள் என்ற பயமும் கூட. என் கையை இறுகப் பற்றியவளது நகங்கள் என் தோலை விறாண்டின. நானும் அவளும் இராணுவத்தளபதியிடம் போக வேண்டுமென்றும் தனக்குப் பாதுகாப்பாக என்னை வருமாறும் கேட்டாள். அவள் என்ன பாதுகாப்புக் கேட்கப்போகிறாள் என்று எனக்குப் புரியவில்லை.

தளபதிக்கு அடுத்தபதவியிலுள்ள ஓர் அதிகாரி யுடன் நான் கதைத்தேன். இந்தப் பெண்ணின் பயம் என்ன என விளக்குகையில் பயம் என்ற சொல்லிற்கான இரசியச் சொல் நினைவில் வரவில்லை. பொறுமையின்றி கேட்டுக்கொண்ட அதிகாரி யாரும் உங்க ளுக்கு ஒரு கெடுதலும் செய்ய மாட்டார்கள் வீட்டுக்குப்போங்கள் எனத் திருப்பி அனுப்பி னார். படியில் மெதுவாக மேலே ஏறிப்போன அவளை நான் பின்பு காணவே இல்லை. மேலே முடங்கிக் கிடக்கி றாள் போலும். அது தான் நல்லது. அவளைத் தேடித்தானே இரசியர்கள் நிலவறைக்குள் நுழைகிறார்கள்.

மேலே போய் அறைக்குள் நுழையும்போது போர்ற்றியெர்ஸ் இளையவள் ஓடிவந்தாள் இவளுக்கு செய்தி அறிவிக்கும் வேலை கொடுத்திருக்கிறார்கள்போலும். மீண்டும் பெண்கள் தேடி இரசியர்கள் நிலவறைக்குள் நுழைந்துவிட்டார்கள். இம்முறை பேக்கறிப் பெண் அவர்கள்குறி. இவளும் பருத்தபெண்.

பேக்கறி மாஸ்ரர் என்னை எதிர்கொண்டார். பேக்கறி மா போல் அவர் முகம் வெளுத்தி ருந்தது. கையால் நிலவறை பக்கம் காட்டி விம்மிக்கொண்டே அவர்கள் என் மனை வியைச் சுற்றி நிற்கின்றார்கள் உடைந்தக் குரலில் சொன்னார். ஏதோ நாடக அரங்கில் நானும் ஒரு பாத்திரமாக நடிப்பதுபோல் இருந்தது. ஒரு பேக்கறி மாஸ்ரர் சமூகத்தில் மதிக்கப்படுபவர் இதயபூர்வமாகக் கதைப்பது எந்த அதிகார ஆணவமுமின்றி சாதாரணவர் போல இறைஞ்சுவதை என்னால் நம்பமுடிய வில்லை. நாடகங்களில் மாத்திரம் தான் இவ்வாறான உணர்ச்சிமயமான காட்சிகளை நான் பார்த்திருக்கின்றேன்.

நிலவறையில் பெற்றோல் விளக்குகள் எரிய வில்லை. எரிபொருள் முடிந்துவிட்டது. மெழுகுதிரி ஒன்று மங்கலாக எரிந்து கொண் டிருந்தது. மாஸ்ரரின் மனைவியைச் சுற்றி மூன்றுபேர், அவளின் உதடுகள் நடுங்கின. சாய்மனக்கதிரையில் படுத்திருந்தவளை கையில் பிடித்து ஒருவன் இழுத்தான் இன் னொருவன் அவளை எழும்பச் சொல்லி கைகளால் தள்ளினான். ஒரு பொம்மை போல உயிரற்ற சடப்பொருள் போல் அவர்கள் அவளைக் கையாண்டார்கள்.

முவரும் தங்களது பிராந்திய மொழியில் அவசர அவசரமாக ஏதோ பேசிக்கொண்ட னர். அவர்கள் பேசியது ஒன்றுமே எனக்குப் புரியவில்லை.என்ன செய்யலாம்?அதிகாரி. விக்கி விக்கி பேக்கறி மாஸ்ரர் சொன்னார். அதிகாரி என்றால் யாராவது இவர்களுக்கு மேலுள்ளவர். வீதியை நோக்கி ஓடினேன். சாலை அமைதியாக இருந்தது, குண்டுகள் துப்பாக்கிச்சூடுகள், எரியும் கட்டிடங்கள் எதுவுமின்றி அமைதி. மதுவடிசாலைக்கார ரின் மனைவியின் முறைப்பாட்டைக் கேட்ட அதிகாரிதான் மீண்டும் கிடைத்தார். எனக்குத் தெரிந்த இரசியமொழியில் மிக மரியாதை யாக அவரிடம் விடயத்தைச் சொல்லி உதவி கேட்டேன். நான் சொன்னதெல்லாம் அவருக்கு விளங்கியது, முதலில் அதிருப்தி தழும்ப அரைமனதுடன் என்னுடன் வந்தார்.

நிலவறை இன்னும் அமைதியாகவே இருந் தது. வெறித்தபார்வையுடன் ஆண்கள் பெண் கள் குழந்தைகளென எல்லோரும் கல்லாகிப் போனதுபோல் இருந்தனர். மூவரில் ஒரு வனைக் காணவில்லை மற்றைய இருவரும் பேக்கறிப்பெண்ணிற்கு அருகாமையில் நின்று அவளை எழுப்ப நிர்ப்பந்தித்துக் கொண்டிருந்தனர். அதிகாரி அவர்களுடன் பேசினார். கட்டளை யிடும் தொனியில் அல்ல ஏதோ நண்பருடன் உரையாடுவதுபோல் இருந்தது அவரின் தொனி. பலமுறை உக்கஸ் ஸ்ரலீனா ஸ்ராலின் ஆணை என்ற சொல் அவர் களின் பேச்சில் அடிபட்டது. இந்த ஆணை இப்படியான செயல்கள் நடத்தக்கூடாது என்பதற்காக இயற்றப்பட்டதாம். ஆனாலும் இச்சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன என எனக்கு அதிகாரி விளக்கம் சொன்னார். அவர்களில் ஒருவன் கோபம் கொப்பளிக்க நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? டொச் இராணுவம் எங்கள் பெண்களை என்ன செய்தார்கள்? கோபத்தில் உரத்த குரலில் எனது சகோதரியை அவர்கள் அவன் பேசிய மொழி எனக்கு முழுவதும் புரியாவிடினும் சொன்னதின் சாரம் விளங்கியது.

மீண்டும் அமைதியாக அந்த அதிகாரி சிறிது நேரம் அவனுடன் பேசினார். மெதுவாக அந்தப் பெண்ணைவிட்டு இருவரும் விலகி நிலவறையிலிருந்து வெளியேறினர். பேக்கறிக்காரி என்னிடம் அவர்கள் போய் விட்டார்களா? மெதுவாகக் கேட்டாள்.

தலையசைத்து ஆம் எனப் பதில் சொன் னேன். கவனமாக இருண்ட கொறிடோர் வழி யாக அவர்கள் போய்விட்டார்களா எனப் பார்க்கப் போனேன். இருட்டில் மறைந்திருந்த அவர்கள் என்னைப் பிடித்தார்கள். நான் அலறினேன். அலற அலற என் பின்னே நிலவறைக்கதவு பூட்டிக்கொண்டது.

ஒருவன் என் கையை இறுகப்பற்றியபடி படிக ளில் ஏறினான். மற்றவன் என் தொண் டையைப் பிடித்து அலறுவதைத் தடுத்தான். கழுத்தை நெரித்துவிடுவானோ என்ற பயத் தில் கத்துவதை நிறுத்திக்கொண்டேன். இருவ ரும் வேட்டைநாய்போல் பாய நிலத்தில் விழுந் தேன். ஜக்கற்பையிலிருந்து சத்தத்துடன் கீழே வீழ்ந்தது எனது வீட்டுத்திறப்புக் கோர்வை. நிலவறைப் படிக்கட்டின் கடைசிப் படியில் என் தலை, முதுகில் படிக்கட்டின் குளிர், மேலே கதவிடுக்கிலிருந்து சிறிது வெளிச்சம். ஒருவன் கதவில் காவலுக்கு நிற்க மற்றையவன் என் உள்ளாடைகளைக் கிழித்து ஆவேசமாக நுழைவதற்கு வழி தேடினான்.

இடது கையால் நிலத்தைத் தடவி தேடினேன், தேடித்தேடி இறுதியாக திறப்புக்கோர்வையை கையில் பற்றிக்கொண்டேன். வலக்கையால் என்னைப் பாதுகாக்க எத்தனித்தேன் பல னில்லை. எனது ஸ்ரொக்கின்ஸ் நழுவாமல் போட்டிருந்த பட்டியை அவன் கிழிக்க நான் தட்டுத்தடுமாறி எழும்ப முயன்றேன். இரண்டாமவன் என்மேல் பாய்ந்து தனது கைகளாலும் முழங்கால்களாலும் நிலத்துடன் அழுத்தினான், மற்றயவன் அருகில் நின்று அடங்கியக் குரலில் கெதியாக கெதியாக.

திடீரென பல இரசியக்குரல்கள், கதவு திறந்தி ருந்ததில் வெளிச்சமாக இருந்தது. வெளியே இருந்து இரண்டு இல்லை மூன்று உருவங் கள் உள்ளே வந்தன. மூன்றாவதாக இராணுவச்சீருடையில் இரசியப்பெண். முன்றுபேருமே சிரிக்க குழப்பத்துடன் என்னைத் தரையுடன் அழுத்திக் கொண்டி ருந்தவன் கைகளை விட்டு எழுந்தான். இருவரும் வந்த முன்றுபேருடன் வெளியே போனார்கள் நான் அப்படியே நிலத்தில் கிடந்தேன்.

படிகளில் தவழ்ந்துபோய் எனது ஆடைகளை இயன்றவரை சரிசெய்து சுவரில் முதுகை தேய்த்துக்கொண்டே நிலவறைக் கதவுவரை வந்து சேர்ந்தேன். நிலவறைக்கதவை யாரோ உள்ளே பூட்டிவிட்டார்கள். கதவைத் திறவுங் கள் யாரும் கூட இல்லை நான் தனியாகத் தான் நிற்கின்றேன் உரத்துக் கத்தினேன்.

சில நிமிடங்கள் சென்றபின் கதவின் இரும்புப் பிடிகள் மெதுவாகச் சுழன்றன. உள்ளே வந்த என்னை நிலவறைக்குடிகள் உற்றுப் பார்த் தார்கள். இப்போதுதான் ஆடைகள் கிழிந்து கலைந்த தோற்றம் எனக்கு நினைவிற்கு வந்தது. எனது ஸ்ரொக்கின்ஸ்கள் சப்பாத்தின் மேல் வழிந்து கிடந்தன, தலை கலைந்து காடாகிக் கிடக்க கையில் கிழிந்த ஸ்ரொக்கின்ஸ் பட்டியை பிடித்தபடி நின்றேன். நீங்கள் எல்லோரும் பன்றிகள் இரண்டு முறை மானப்பங்கப்படுத்தப்பட்டு குப்பை யைப்போல் வெளியே நான் கிடக்க கதவை உள்ளே பூட்டிக்கொண்ட பன்றிகள் அவர் களைப் பார்த்துக் கத்தினேன். கத்திவிட்டு திரும்பிப்போக முயல்கையில் முதலில் அமைதி பின்பு எல்லோரும் ஒருவரை பார்த்து ஒருவர் கதைப்பதும் கத்துவதுமாக வாய்ச் சண்டை, நான் ஆத்திரத்துடன் அங்குமிங்கும் நடப்பதில் சிறிது நேரம் கழிந்தது. இறுதியாக அவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இராணுவத்தலைமை அதிகாரியிடம் இன் றைய இரவிற்கான பாதுகாப்பைக் கேட்போம்.

சிறுகூட்டமாக பெண்களும் இரண்டொரு ஆண்களுமாக மாலை மங்கும் நேரத்தில் காற்றில் வெப்பமும் எரிநெடியும் கலந்து வீச இரணுவத்தலைமை அதிகாரி இருப்பதாக நாங்கள் ஊகித்துக்கொண்ட கட்டிடத்தை நோக்கிப்போனோம். கட்டிடம் வெளியே அமைதியாக இருந்தது, கதவருகில் இரசியர் கள் நின்றனர். எங்கள் குழு கதவை அண் மிக்க ஒருவன் எங்களை நோக்கி வந்தான். இன்னுமொருவன் ஆ டொச்காரர் முணு முணுத்துக்கொண்டு மறுபக்கம் திரும்பிக்கொண்டான். கூட்டமாக நின்ற ஆண்களிடம் படைத்தளபதி இருக்கிறாரா எனக் கேட்டேன். கூட்டத்தில் ஒருவன் அருகே வந்து உங்களுக்கு என்ன வேண்டும். நெடிந்து வளர்ந்த உருவம் உரமான உடலமைப்பு வெள்ளைநிறப்பற்கள் கவுக்காசிய இனத்தவன்.

நான் தட்டுத்தடுமாறி இரசியமொழியில் பேசி யது அவனுக்குச் சிரிப்பாக இருந்தது. குற்றம் சாட்ட வந்த சிறுகும்பலை பரிகாசமாகப் பார்த் தான். எங்கள் ஆண்கள் எல்லோருமே ஆரோக்கியமானவர்கள் எனவே எந்த தீங்கும் உங்களுக்கு நேரிடாது சொல்லிக்கொண்டே அவன் மற்றையவர்கள் பக்கம்போக அங்கிருந்து பெரிதாக சிரிப்பும் தொடர்ந்து கேட்டது. நான் எனது கூட்டத்தைப்பார்த்து இங்கு எதுவும் நடக்கப்போவதில்லை.

மீண்டும் கூட்டம் நிலவறைக்குத்திரும்பியது. நிலவறைக்காரர்களின் முகங்களைப் பார்க்கப்பிடிக்காதலால் முதல்மாடிக்குப் போனேன் விதவையும் என் கூடவே வந்தாள். நோய்வாய்பட்டவளை பராமரிப்பதுபோல் என்னைச் சுற்றிச் சுற்றி வருவதும் பரிவுடன் என்னைத் தடவுவதும் மெதுவான குரலில் பேசுவதும் கவனமாக எனது செயலைக் கவனிப்பதுமான அவளது நடவடிக்கை எனக்கு எரிச்சலூட்டியது. நான் நடந்ததை மறக்க நினைக்கிறேன் விதவை அதை நினைவூட்டிக்கொண்டே இருக்கின்றாள்.

குளியலறைக்குப்போய் இருக்கும் சிறிதளவு தண்ணீரில் என்னை முடிந்தமட்டும் கழுவிக் கொள்ளவேண்டும் என்ற ஆவல் பலநாட்க ளுக்குப் பிறகு வர, குளியலறையில் நுழைந்து பல்லை விளக்கிக்கொண்டே கண்ணாடியில் பார்த்தேன். திடிரென ஓர் இரசியன் கதவடியில் நின்று எங்கே கதவு? அதுவும் டொச்சில். வீட்டிற்குள் வந்தவனுக்கு வெளியே போக வழி தெரியவில்லை போலும். இரவு உடையில் இருந்த நான் திடுக்கிட்டு அவனைப் பார்த்து சைகையால் வெளியே போவதற்குரிய கதவைக் காட்டினேன். அவன் மரியாதையாக நன்றி சொல்லிவிட்டுப் படிகளில் இறங்கிப்போனான்.

அவசரமாக சமையலறைக்குப்போனேன், பின்கதவின் வழியாகத்தான் அவன் உள்ளே நுழைந்திருக்கவேண்டும். பின்படிக்கட்டுக்குப் போகும் வழியை ஓர் அலமாரியால் மறைத்து வைத்திருந்தோம். அலமாரியை அவன் நகர்த்தி அப்படியே விட்டிருந்தான். விதவையும் நானும் அலமாரியை மீண்டும் நகர்த்தி வழியை அடைத்து கதிரைகளை முட்டுக் கொடுத்து திருப்திபடாது பாரமான சமையலறை மேசையையும் அணை கொடுத்து இம்முறை பலமான பாதுகாப்பைச் செய்து கொண்டோம். இரண்டு நாக்குகள் பூட்டு முன் கதவில் இருப்பதால் ஓரளவு பாதுகாப்பாக இருக்கின்றோம் என்று எங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டோம்.

மெலிதான மெழுகுவர்த்தி வெளிச்சம் எங்கள் உருவங்களை சீலிங்கில் பெரிய நிழல் களாகக்காட்டின. விதவை தனது மடக்குக் கட்டிலை வரவேற்பறையில் எனக்காகப் போட்டிருந்தாள். இவ்வளவு காலமாக சன்னல்களை வெளிச்சம் வெளியே தெரி யாதவாறு இருட்டடிப்புச் செய்தோம். இன்று பிளாஸ்ரிக் சுருட்டுத்திரைகளால் மறைக்க வில்லை. எதற்காக மறைக்கவேண்டும். இன்று வெள்ளி. இந்த இரவில் விமானத் தாக்குதல் நடக்காது நாங்கள் தான் இப்போது இரசியர்களாகிவிட்டோமே. விதவை என் கட்டில் விளிம்பில் உட்கார்ந்திருந்தாள். தனது காலணிகளைக் கழற்றிக்கொண்டே பின் கதவை பலப்படுத்தியது ஆறுதலாக இருக்கின்றதெனச் சொன்னாள்.

பின்கதவை யாரோ திறக்க முயலும் சத்தம். உடைந்த கதவுக்கு முட்டுக்கொடுத்த கதிரை கள் சிதறி விழும் சத்தம். சமையல்- சாப்பாட்டுப்பாத்திரங்கள் எல்லாம் தரையில் விழும் சத்தம் அத்துடன் முரட்டு ஆண்குரல். நாங்கள் ஒருவரை ஒருவர் செய்வதறியாது வெறித்துப் பார்த்தோம். சமையலறை வெளிச்சம் வரவேற்பறையிலிருந்து பார்க்கத் தெரிந்தது. கொறிடோரில் நடந்துவரும் காலடிச்சத்தம். யாரோ எங்கள் அறைக் கதவைத் தள்ளினான்.

ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு இரசிய இராணுவத்தினர். எல்லோரும் முழு ஆயுத பாணியாய், இடுப்புக்களில் தானியங்கித்துப் பாக்கிகள். வந்தவர்கள் எங்கள் இருவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஒருவன் கவன மாக அலமாரியின் இழுப்பறைகளைத் திறந்து தேடிபார்த்துவிட்டு திரும்பவும் மூடி னான். எங்களிடம் எந்தக்கதையும் இல்லை, ஏதோ சொல்லிக்கொண்டே பக்கத்து அறைக்குப்போனான். முன்பு அந்த அறை யில் வாடகைக்கு இருந்தவன் தேசியப் படைக்கு அழைக்கப்பட்டதால் போய்விட்டான். மற்றைய மூவரும் எங்களைச்சுற்றி நின்ற னர். தங்களுக்குள் முணுமுணுப்பதும் கண்களால் என்னை அளப்பதுமாக நின்ற னர். விதவை கழற்றிய காலணியை மீண்டும் அணிந்துகொண்டாள். பின்புற வழியாகப் போய் மற்றைய வீடுகளில் யாராவது உதவிக்குக் கிடைப்பார்களா எனப்பார்க்கப் போவதாகச் சொன்னாள். அவள் வெளியே போக யாரும் தடுக்கவில்லை.

நான் என்ன செய்வது? எனது ரோஸ்நிற இரவு உடையில் கட்டிலில் இருப்பதும் என்னைச் சுற்றி அன்னிய ஆண்கள் மூவர் நிற்பதும் விநோதமாக எனக்குத் தெரிந்தது. இப்படியே இருப்பதில் நிலைமை மாறப்போவ தில்லை ஏதாவது பேசவேண்டும் ஏதாவது செய்ய வேண்டும் அப்போதுதான் இந்த விநோதமான இறுக்கநிலை உடையும். இரசிய மொழியில் உங்களுக்கு என்ன வேண்டும். அதைக்கேட்டதுமே மூவரின் கவனமும் என்மேல் குவிந்தது. முகத்தில் குழப்பம். உடனே கேள்விகள் தொடங்கின எப்படி இந்த மொழி உனக்குத்தெரியும்.

எனது சாதாரண மொழிநடையில் இரசியா வின் ஓர் எல்லையிலிருந்து மறு எல்லை வரை பிரயாணம் செய்ததைச் சொல்லி என் பிரயாணத்தின்போது புகைப்படங்கள் எடுத்த தையும் கோட்டு ஓவியங்கள் வரைந்ததையும் சொன்னேன். மூன்று இரசியர்களும் கதிரை யில் காலை நீட்டி உட்கார்ந்துகொண்டு ஆயு தங்களை பக்கத்தில் வைத்துவிட்டு கேள்வி பதில் என எங்கள் உரையாடல் இருந்தது. உதவிக்குப் போன விதவை ஆட்களுடன் வருகிறாளா என அடிக்கடி காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டேன். யார் வரும் சத்தமும் என் காதுகளை எட்டவில்லை. இதற் கிடையில் பக்கத்து அறைக்குப்போன இராணுவத்தான் உள்ளே வந்து மூன்று பேரில் ஒருவனைக் கூட்டிக்கொண்டு சமைய லறைக்குப் போனான். அங்கே அவர்கள் சமையல் பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது. மற்றைய இருவரும் தங்களுக் குள்ளே ஏதோ கதைத்துக்கொண்டார்கள். ஒரு முடிவை எட்டியிருக்க வேண்டும் எங்கே வைத்துக்கொள்வோம் என ஒருவன் மற்றையவனைக் கேட்டான்.

விதவை இன்னும் வந்தபாடில்லை. நான் அவர்களிருவரிடமும் எதையாவது பேசலாம் என முயன்றபோது அவர்கள் என்னுடன் உரையாடலைத் தொடராது கோணல் பார்வையுடன் என்னை நெருங்கினார்கள். பத்திரிகையில் நான் வாசித்தவை நினைவுக்கு வந்தது பத்து, இருபது தடவைகளெல்லாம் நடந்ததாக எழுதியிருந்தார்கள். என் உடம்பு காய்ச்சல் கண்டதுபோல் சுட்டது. முகம் சூட்டில் எரிந்தது.

சமையலறையில் இருந்த இருவரும் இங்கி ருந்தவர்களைக் கூப்பிட இவர்களும் போனார்கள். மெதுவாக கட்டிலை விட்டு இறங்கி சமையலறையில் என்ன நடக்கி றதென காதைத் தீட்டிக்கொண்டு கேட்டேன், அங்கே அவர்கள் குடித்துக் கொண்டிருந்தார் கள்போலும். இருட்டான கொறிடோரிற்கு வெறுங்காலுடன் சத்தம் எழுப்பாது நடந்து போய் எனது கோட்டை எடுத்து இரவு உடை யின்மீது போட்டுக்கொண்டு மெதுவாக முன் கதவைத் திறந்தேன், விதவை கதவைத் திறந்தே விட்டிருந்தாள். இருட்டான படிக் கட்டுக்களை கூர்ந்து பார்த்தபோது எந்த வொரு சத்தமோ விளக்கின் சிறிய வெளிச்சத் தையோ காணவில்லை. எங்கேபோய் தொலைந்தாள் இந்த விதவை? நான் படி யில் காலை வைக்க என் பின்னால் எந்த சத்தமும் எழுப்பாது பின்தொடர்ந்த நான்கு பேரில் ஒருவன் பின்பக்கமாக வந்து என்னைப்பிடித்தான்.பலசாலியான பெரிய உருவம், மதுவின்நெடி, எனது இதயம் தாறுமாறாக அடித்தது. இரகசியக்குரலில் அவனிடம் கெஞ்சினேன் எல்லோரும் வேண்டாம் ஒரு ஆள் மாத்திரம், நீ மாத்திரம் மற்றவர்களை தயவுசெய்து போகச்சொல். அவனும் குசுகுசுகுரலில் அப்படியே செய்வ தாகச் சொல்லிக்கொண்டு துணிமூட்டையைப் போல் என்னை இரு கைகளாலும் தூக்கிக் கொண்டு கொறிடோரினூடு நடந்தான். அந்த நான்குபேரில் இவன் யாரென்றோ பார் வைக்கு எப்படி இருப்பானென்றோ தெரியாது. முன்பு குடியிருந்தவனின் அறையினுள் கட்டிலில் என்னைக் கிடத்தினான். அந்த அறையின் சன்னல்களெல்லாம் உடைந்து கண்ணாடிகளும் இல்லை வெளிச்சமும் இல்லை ஒரே இருள். அங்கிருந்தபடியே கரடுமுரடான இரண்டு வசனங்களை சமையலறையைப் பார்த்து கத்தியபின் கதவைப்பூட்டிவிட்டு என்பக்கத்தில் வந்து படுத்துக்கொண்டான். குளிரில் நடுங்கிய படியே பக்கத்து அறையிலுள்ள கட்டிலிற்கு என்னைப் போகவிடும்படி கெஞ்சினேன். விதவை திரும்பி வந்தாலும் என்ற எண்ணத் தில் அங்கு போவதை அவன் விரும்ப வில்லை. அரைமணிநேரம் கழிந்து மற்றை யவர்கள் வெளியே போனார்கள். அதுவரை எல்லாம் அமைதியாகவே இருந்தது.

தானியங்கித்துப்பாக்கி கட்டில் கம்பத்தில் கொழுவி இருந்தது, தொப்பியை தோள் பட்டையில் செருகியிருந்தான், தோல் வெய்யி லில் சிவந்திருந்தது. பெற்கா அவன் பெயர், சைபீரியன், மொட்டையாக வெட்டப்பட்ட செம் பட்டை முடி, நெற்றிக்குமேலே முக்கோண மாக சிறிய மயிர்கள், பெரிய உருவமும் அகன்ற மார்பும், பெரிய கைகள், வெண்மை யான பற்கள். களைப்பும் மனதளவில் உடைந்தும் எங்கே என்ன செய்து கொண்டி ருக்கிறேன் என்றே தெரியவில்லை. பெற்கா தனது பெரிய இராணுவ பூட்சையும் கழற்றி விட்டு அறையினுள் அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்தான். எனக்குத் தலை சுற்றியது. என்பலம் எல்லாம் வடிந்துபோய் என் ஒரு பகுதி மட்டும், இராணுவ சவர்க்கார நெடியுடன் அவனது பலம் பொருந்திய உடலை எதிர்க்க வலுவின்றி நான், அமைதி, இருள், நித்திரை. அதிகாலை நான்கிற்கு சேவலின் கூவல். இவனின் பிடியிலிருந்து விடுபட்டுவிடலாம் என்ற ஆறுதல். அரைத்தூக்கத்தில் பெற்கா வின் உடலின்கீழ் சிக்கிக்கொண்ட என்கையை இழுத்து எடுத்தேன். அவன் தன் வெள்ளைப் பற்களைக்காட்டிச் சிரித்தான். அவசர அவசர மாக எழும்பிய அவன் தனக்கு இப்போது காவல்பணி இருப்பதாகவும் கட்டாயம் ஏழு மணிக்குத் திரும்பி வருவேனென்றும் சொல் லிவிட்டு விடை பெறுவதற்கு என் விரல்களை பலமாக அழுத்திவிட்டுப்போனான்.

நான் கட்டிலைவிட்டு எழும்பாது கால்மணி நேரம் தூங்குவதும் விழிப்பதுமாக புரண்டு கொண்டு கிடந்தேன். திடீரென அலாரம் அடிக்க கையுறையினுள் ஒளித்து வைத்தி ருந்த கடிகாரத்தை எடுத்து சத்தத்தை நிறுத்தி னேன் ( இந்தக்கடிகாரம் விதவைக்குச் சொந்த மானது ஆயினும் எனக்கும் சொந்தமென்பது போல்தான் நான் அதைக் கவனமாகப் பாவிப் பேன்). கவனமாக பார்வைக்குத் தெரியாது இழுப்பறையின் பின்பகுதியில் ஒளித்து வைப் போம். இவான்களிடம் அதனைப் பறி கொடுக் காமல் இருக்க. யாரும் வரமாட்டார்கள் என உறுதியான பின்புதான் அதனை எடுத்துப் பார்ப்போம்.

ஐந்துமணிக்குமேல் என்னால் தூங்க முடிய வில்லை. எழும்பிக் கட்டிலை ஒழுங்கு செய்த பின்னர் பூட்டு உடைந்துபோன பின்கதவை அலமாரியை வைத்து மூடி கதிரைகளை அடுக்கி பலப்படுத்திவிட்டு அவர்கள் குடித்து விட்டுப் போட்ட வெறும் போத்தல்களை எடுத்து ஒழுங்குபடுத்தினேன். சமையலறை அலமாரியினுள் ஒளித்துவைத்த பெகுண்டர் வையின் போத்தல்கள் பத்திரமாக இருக்கின் றனவா எனப்பார்த்தேன். கடவுளுக்கு நன்றி வையின் போத்தல்களை அவர்கள் கண்டுபிடிக்கவில்லை.

போரின் சத்தம், குண்டுகள் வெடிமுழக்கம் சன்னல்களூடாகக் கேட்டது. போரின் முன்ன ரங்கு நகரத்தின் மையத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. முடிந்தளவு என் உடலைக் கழுவிக்கொண்டு காலைப்பொழுதின் அமைதி யில் மூழ்கியிருந்த படிக்கட்டிற்கு வந்தேன். விதவை எங்கே ஒளிந்துகொண்டாள்? யார் கதவையும் தட்டி அவர்களைத் திடுக்கிட வைக்க விரும்பாததால் அவளைத் தேடவில்லை.

திரும்பவும் படிக்கட்டுக்களை உன்னிப்பாக கவனித்ததில் குரல்கள் கேட்டன. நானும் படிக்கட்டுக்களில் நடந்து கூட்டமாய் வந்த பெண்களைச் சந்தித்தேன். கூட்டத்தில் முதலா வதாக விம்மலும் பொருமலுமாக விதவை. என்னை அணைத்துக்கொண்டே அவள் என்னைக் கோவிக்காதே! ( நேற்றிலிருந்து தான் இருவரும் ஒருவரை ஒருவர் ஒருமை யில் அழைக்க ஆரம்பித்தோம்). அவளைச் சுற்றி மற்றையப் பெண்களும் கண்ணீரும் கம்பலையுமாக. இப்போது என்ன நடந்து விட்டது நான் இன்னும் உயிருடந்தான் இருக்கின்றேன் எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு! பரிகாசமாகச் சொன்னேன்.

***

அனோனிமா

ராணுவம் என்றால் அது ராணுவம்தான். அதற்கு தனித்த முகமோ தனித்த மனமோ ஒருபோதும் இருப்பதில்லை. ஆகவே இதில் நல்ல ராணுவம் கெட்ட ராணுவம் என்ற குழந்தைத்தனமான புரிதல்களுக்கு இடமில்லை. உலகெங்கும் அது எளிய மக்களை மனித மாண்புகளுக்குப் பொருந்தி வராத கீழ்மையான முறைமைகளில் அணுகுகிறது. எல்லாப் போர்களும் அதன் வெற்றிகளும் பெண்களின் உடல் மீதே நடத்தப்படுகின்றன என்பதையே அனோனிமா தன் மெல்லிய குரலில் பேசிப் போகிறாள்- முகம் மறைத்து.

அவளது துயர வாழ்வை முழுமையாக ஒரு சேர வாசிக்கவேண்டும் என்ற பலரின் தவிப்பை உணர்ந்து பூபாளம் புத்தகப்பண்ணை வெளியீடாக அனோனிமா நூல் வடிவில் வரவிருக்கிறது விரைவில்.

Pin It