இந்தியாவின் வடதெற்கில் உள்ள திரிபுரா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாயா காதுன் என்ற முஸ்லிம் பெண்மணி அந்தப் பகுதியின் ஆண்கள் எல்லாம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு சென்றிருந்த போது தனது வீட்டிலேயே எல்லை பாதுகாப்பு படையினரால் அவர்களின் கற்பழிப்புக்கு ஒத்துழைக்காததால் நான்கு முறை கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டார். - The Hindu.

இந்தியாவின் தலைநகரம் டெல்லியில் இதே போல் ஒரு சம்பவம். ஒரு பார்ப்பனப் பெண் நடு இரவு வெளியே சுற்றும் போது சமூக விரோதி ஒருவனால் கற்பழிக்கப்படும் போது ஒத்துழைக்க மறுத்ததால் கொன்றான் என்ற செய்தி. அதற்காக நமது இந்திய ஊடகங்களும் அதிகாரிகளும் பெரும் போரையே நடத்தினார்கள். உடனடி தண்டனை பெற்றுத் தந்தார்கள்.

அடுத்து ஜிசா, தலித் பெண் கேரளாவில் சில சமூக அக்கறை கொண்டவர்கள் எதிர்த்தார்கள். பிரச்சனை பரவலாக்கப்பட்டது பயன் இல்லை. பெரிதாகவுமில்லை. நியாயமும் கிடைக்கவில்லை.

மேலே உள்ள இரண்டையும் செய்தவர்கள் மீது சமூக துரோகிகள், மிருகங்கள், காட்டு மிராண்டிகள் என்ற முத்திரை. ஆனால் காஷ்மீரிலும் இன்று திரிபுராவிலும் ஏற்படுகின்ற பாதிப்பு இந்திய மத்திய காவற்படையினரால். அதனால் இவர்களுக்கு கொடுக்கும் பெயர் தேசத்தின் பாதுகாவலர்கள்.

இக்கொடூர சம்பவம் வெள்ளிக்கிழமை அன்று ஆண்கள் எல்லாம் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு சென்றதும் அப்பெண்ணின் வீட்டிலிருந்து ஏழு மீட்டர் தூரத்திலேயே இந்த அயோக்கியர்களால்(இதை விட நாகரிகமான வார்த்தை எழுத முடியவில்லை) நடத்தப்பட்டிருக்கிறது. நாட்டை பாதுகாக்க சொன்னால் எந்த வீட்டில் யார் எப்போது வெளியே போவார்கள் என்று உளவு( இந்த வேலைக்கு இதை விட சரியான வார்த்தை ஒன்று தமிழில் கூறுவார்கள்) பார்க்கும் வேலையைத் தான் இந்திய ராணுவமும் மத்திய காவற்படையும் செய்கிறது போலும்.

இதற்கெல்லாம் மிகக் கொடூரமான சட்டம் கொண்டு வந்து சரியான நியாயம் கிடைக்க செய்ய வேண்டும் என்ற ஆசை தான் நம் எல்லோர்க்கும். ஆனால் இச்செயலை செய்தவர்கள் இன்னும் சில வருடங்களுக்கு பின்னால் பதக்கம் கொடுத்து இந்திய அரசால் கவுரவிக்கப்படுவார்கள். ஏனென்றால் அவர்கள் ஒரு முஸ்லிம் பெண்ணின் மானத்தையும் உயிரையும் அல்லவா சூறையாடியுள்ளார்கள். இதற்கான சன்மானத்தை இந்திய அரசு கொடுக்க வேண்டுமல்லவா!! இதற்காகத் தானே முஸ்லிம்கள் தங்களது சொத்துகளையும், கல்வியையும், உயிரையும் கொடுத்து இத்தேசத்திற்கு சுதந்திரம் பெற்றுத் தந்தார்கள்.

இச்சம்பவத்தை போல் இதுவரை மத்திய காவற்படைகளால் ஆயிரம் முறைகளுக்கும் மேல் நடந்துள்ளது. ஆனால் நம்மால் செய்ய முடிந்தது. இதே போல் ஒரு கண்டண குரல் அல்லது ஒரு கண்டன கட்டுரை அல்லது ஒரு கண்டன ஆர்ப்பாட்டம். இந்த ஆர்பாட்டம் முடிந்ததும் வீட்டில் பிரியாணி டி.வி பேட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்தது என்ற கோஷம்.

இதனால் என்ன செய்ய முடியும்? அடுத்த பெண்ணின் மானத்தை காப்பாற்றிட முடியுமா? ஏதேனும் செய்ய முடிந்திருந்தால் இந்த எண்ணிக்கை ஒன்றோடு முடிந்திருக்குமே ஏன் பல ஆயிரத்தை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது. இதனையும் செய்யாமல் நமக்கென்னவென்று கடந்து செல்பவர்கள் வேறு ரகம்.

பாதுகாப்பு படை வீரர்களுக்கு முதலில் பாதுகாப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிய வேண்டும். அதனை பயிற்றுவிக்க வேண்டும். இந்திய அரசால் அதனை செய்ய முடியாது. அவர்கள் செய்யும் கொடூரங்களுக்கு வேண்டுமானால் வருடம் வருடம் பட்ஜெட்டை உயர்த்தி பாதுகாப்பு கொடுக்கும். இதனை கற்றுத் தர வேண்டியது இந்திய மக்களால் மட்டுமே முடிந்த ஒன்று.

இடஒதுக்கீடுகளுக்காக பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்டு தீர்வு காணப்படுகிறது. ஆனால் நாட்டின் கண்ணியத்தை கெடுக்கும் சில விஷம சக்திகளுக்கு எதிராக எவ்வித சீரிய போராட்டங்களும் நடைபெறுவதில்லை. இன்றைய போராட்டங்கள் சடங்காக மாற்றப்பட்டு சிரித்த முகத்தோடு வந்து சிரித்த முகத்தோடு செல்கிறோம். இதனால் எவ்வித பயனுமில்லை.

மாற்றம் ஏற்பட வேண்டுமென்றால் அது இனி இந்த அரசால் ஏற்படப்போவதில்லை. அரசாங்கத்தை மாற்றுவதனால் வேண்டுமானால் நடக்கலாம். இந்த மாற்றத்தை நிகழ்த்த முடிந்தவர்கள் மக்கள். ஆனால் இதற்கு தேவை மக்களிடமும் ஓர் மனமாற்றம்.

வாழ்க்கை ஒருமுறை தான் அதை மரியாதையுடனும், மானமுடனும் வாழ வேண்டும். நம் சகோதரிகளின் கற்பும் உயிரும் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேலையில் எதிர்த்து குரல் கொடுக்காமல் ஒதுங்கினால் மானமும் இல்லை. மரியாதையும் இல்லை. எங்கும் இந்தக் குரல் ஒலிக்கப்பட்டால் ஓர் நாள் விடியும்..

- அபூ சித்திக்

Pin It