‘கல்வி சாதாரண மனிதனை சென்றடைய ஒரே ஒரு வழிதான் உள்ளது... சாதாரண கல்வி என்பதே அது! - தந்தை பெரியார்.

இத்தனை வருடங்கள் கழித்து இப்போதுதான் நாம் குழந்தைகளுக்கு கல்விபெறும் உரிமையை சட்டமாக்கி இருக்கிறோம். சட்டம் வந்துவிட்டது... ஆனால் 10 குழந்தைகளில் நான்கு குழந்தை நம் நாட்டில் குழந்தை தொழிலாளி! மூன்று குழந்தைகளில் இரண்டுதான் பள்ளிக்குப் போகும் குழந்தை. ஆரம்ப பாடசாலைக்கு போகும் 100 குழந்தைகளில் கல்லூரிவரைப் செல்வது ஆறுபேர் மட்டும்தான். நிலமை இப்படி இருக்க ஒரு மாநிலத்தில் மூன்று நான்கு கல்விமுறை இருக்கலாகாது என்று தமிழக மாணவர்கள் அனைவரும் ஒரே கல்விமுறைக்கு கீழே கொண்டுவர பல ஆண்டுகள் போராடி சமச்சீர் கல்வியை பெயரளவிற்காவது அரசை அறிவிக்க நாம் நிர்ப்பந்தித்திருக்கிறோம். ஆனால் இதற்கே கல்வியின் தரம் கெடும்.. தமிழக கல்வி மேலும் பின்னடைவு அடையும் என்று பிரச்சாரம் தொடங்கிவிட்டது.

மெட்ரிக், ஸ்டேட் போர்டு, ஆங்கிலோ இந்தியன் என அல்லாமல் அனைத்தும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை எனும் ஓர் அமைப்பு சார்ந்து செயல்படும் என்பதோடு, தரமான அதே சமயம் குரல்வலையை நெருக்காத நேசக்கல்வியை, தோழமையாக அன்றி சுமையாக ஆகிவிடாத பாட முறையை முன்வைப்பது இப்போது அரசின் உடனடி கடமை ஆகும். அதற்கு கல்வியாளர்களும் தமிழக அறிவு ஜீவிகளும் ஒத்துழைத்து, நாம் போராடி வாங்கிய சமச்சீர்கல்வி, சீர்கேட்டுக்கல்வியாகி விடாமல் சீரான கல்வியாகிட நம் பங்கை செலுத்திட வேண்டும்.

 

Pin It