அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா இந்தியாவுக்கு வந்துபோன பரபரப்பான சூழ்நிலையில், வெள்ளை மாளிகையில் என்ற இந்நூல், அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் இன்றைய சூழ்நிலையை படம்பிடித்து காட்டும் என்ற எண்ணத்தோடு படித்தால் அமெரிக்க நாட்டின் இன்னொரு கோர முகமான நிறவெறியை நிர்வாணமாக தோலுரித்து காட்டும் அருமையானதொரு படைப்பு.

அமெரிக்க குடியரசான 200 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில் ஒபாமா என்ற கருப்பினத்துக்காரர் இப்போதுதான் அங்கு குடியரசு தலைவராகிறார். அங்கு வாழும் நீக்ரோ மக்களுக்கு தங்கள் இனத்தை சேர்ந்தவர் குடியரசு தலைவராவது என்பது கானல் நீராக, கைக்கு எட்டாத கனியாக இருந்தது. அதேசமயம், அடங்காத வேட்கையாகவும் இருந்தது. இந்த எண்ண ஓட்டத்தை கணக்கில் கொண்டு இர்விங் பாலஸ் என்ற ஆங்கில எழுத்தாளர் மனிதன் என்ற தலைப்பில் இந்த நூலை எழுதியுள்ளார்.

வித்தியாசமான கற்பனை எனினும், அவசியமானது. இந்நூலை, வெள்ளை மாளிகையில் என்ற தலைப்பில் அண்ணா ஏறத்தாழ 55 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மொழி பெயர்த்துள்ளார். உலக நடப்புகள், நாட்டு நடப்புகள், அன்றாட அரசியல் பிரச்சனைகள் அனைத்தையும் தம் தம்பிமார்களுக்கு கடிதம் வாயிலாக அன்றாடம் தெரிவிக்கும் ஒரு வித்தியாசமான பாணியை அண்ணா தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தார். இதன் மூலம் தான் படித்ததை முழுவதும் தமிழக அரசியலோடு இணைத்து கட்சிக்காரர்களுக்கு தெரிவிக்கும் ஒரு வழிமுறையே இது.

அமெரிக்க நீக்ரோக்களின் விடுதலைக்காக போராடிய மார்டின் லூதர் கிங் ஒரு முறை அன்றைய குடியரசுத் தலைவர் கென்னடியுடன் பேசும்போது, நிற பேதம் ஒழிக்கப்பட வேண்டுமென்று சொல்கின்ற கென்னடி அவர்களே, நீங்கள் குடியிருக்கும் மாளிகையின் பெயரே வெள்ளை மாளிகை என்றிருக்கிறதே இது பொருத்தமான பெயராக இல்லையே என்றாராம். கென்னடியோ, அது வெகுநாட்களாக இருக்கும் பெயர். எனவே மாற்ற முடியாது என்று வழிந்தாராம். நிறவெறியின் கொடுமைக்கு இந்த மாளிகையின் பெயரும் தப்பவில்லை.

அமெரிக்காவில் ஒரு நீக்ரோ குடியரசு தலைவராக முடியாத சூழ்பிலையில், ஒரு நீக்ரோ குடியரசு தலைவராகிறார். எப்படி தெரியுமா? குடியரசு தலைவர் இறந்து விட்டால் துணைத்தலைவர்தான் குடியரசு தலைவராக முடியும். அந்த நேரத்தில், குடியரசு தலைவரும் இறந்துவிட்டால் பாராளுமன்ற தலைவர்தான் குடியரசு தலைவராவார். அந்த நேரம் பார்த்து துணைத்தலைவரும் இறந்துவிட்டால் பாராளுமன்ற மேலவை தலைவர்தான் குடியரசு தலைவராக முடியும். இதன்படி, வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்ற குடியரசு தலைவர் அங்கேயே இறந்துபோக, அவரோடு சென்ற துணைத்தலைவரும் இறந்துபோக, இங்கிருந்த பாராளுமன்ற தலைவரும் இறந்துபோக, மேலவை தலைவராக உள்ள நீக்ரோ குடியரசு தலைவராகிறார்.

ஒரு நீக்ரோவை குடியரசு தலைவராக்கி பார்க்க எப்படியெல்லாம் விபரீதமாக கற்பனை செய்து பார்க்க வேண்டியிருக்கிறது என்பதை படிக்கிற பொழுது இயலாமையின் எல்லை புரிகிறது. இந்த விபரீதத்தின்படி மேலவை தலைவரான டக்ளஸ் டில்மன் என்ற நீக்ரோ குடியரசு தலைவராகிறார். ஆனாலும், இதை வெள¢ளை நிறத்தார் எப்படி ஏற்பார்கள்? ஆகாதவள் மருகளானாலும் கை பட்டாலும் குற்றம், கால் பட்டாலும் குற்றம் என்பது போல அவரை வெறுப்புடன் பார்க்கிறார்கள். அவதூறுகளை அள்ளித் தெளித்து விரட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டேயிருக்கிறார்கள்.

இதை எடுத்துக்காட்டுவதுதான் இந்த நூலினுடைய சிறப்பம்சம். அத்தோடு, அமெரிக்காவின் செல்வ செழிப்பும் இன்றைக்கு அது பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பது போல் இந்நூல் எழுதப்பட்ட 1929ம் ஆண்டுவாக்கில் அமெரிக்கா பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்ததும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்தோடு, அந்நாட்டில் நிறவெறியை எதிர்த்து போராடிய பல்வேறு இயக்கங்களை பற்றிய விபரத்தையும் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.

டர்னரைட் என்றொரு இயக்கம். இது கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப்பட்டது. நீக்ரோக்களுக்கு விடுதலை என்ற பெயரில் அமெரிக்காவை ஒழிக்க திட்டமிடுகிறார்கள் என்று அவர்கள் மீது குற்றம்சாட்டப்படுகிறது. பிரெஞ்சு புரட்சியின் தாக்கத்தால் கேப்ரியல் என்பவரால் ஒரு நீக்ரோக்கள் இயக்கம் துவக்கப்படுகிறது. இதை அன்னிய சக்திகளின் தூண்டுதல்கள் என்று ஏகாதிபத்தியவாதிகள் முத்திரை குத்துகிறார்கள். இந்த இயக்கத்தை தடை செய்ய வெள¢ளையர்கள் வற்புறுத்த, தடை செய்யக்கூடாதென்று கருப்பர்கள் வற்புறுத்த, வன்முறை இயக்கமாக மாறியதால் தடை செய்வதாக டக்ளஸ் டிக்மன் அறிவிக்க - இரு தரப்பாரிடமும் அவர் எதிர்ப்பை சம்பாதிப்பதும் குறிப்பிடத்தக்கது. நடுநிலை என்பது எங்குமில்லை என்பதற்கு இதுவொரு எடுத்துக்காட்டு.

முடிவாக, டக்ளஸ் டிக்மனுடைய மகன் ஒரு கம்யூனிஸ்ட் என்றும், இவர் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தாரென்றும் அவதூறு செய்யப்பட்டு மன உளைச்சலுககு ஆளாகி பின்னர் வழக்கறிஞரின் வாத திறமையால் விடுதலையாகிறார் என்பதோடு முடிவடைகிறது. 116 பக்கங்களில் அமெரிக்காவைப் பற்றிய ஏராளமான சம்பவங்களை இணைத்து அடிமைகளாக கொண்டுவரப்பட்ட நீக்ரோக்கள் படும் துன்ப துயரங்களை படிப்போர் கண் கலங்க எடுத்துச்சொல்கிறார் அண்ணா.

அத்தோடு விட்டாரில்லை. இது எழுதிய காலம் தமிழகத்தில் மொழி போராட்டம் நடந்த காலமாக இருக்கிறது. எனவே, அன்றைய முதல்வர் பக்தவசலம் மாணவர்களின் மொழி போராட்டத்திற்கு திமுகதான் காரணம் என்று குற்றம்சாட்டுவதை இதோடு இணைத்து எடுத்துச்சொல்லி அதை மறுக்கிறார். எளிமையாக வாழ்கிறேன். பந்தபாசத்தை துறந்து நிற்கிறேன் என்று சொல்கிறவர்கள் ஒரு நாளைக்கு 3 வேளை குளித்து, 3 வேளை புதுத்துனி மாட்டுவதை எடுத்துக்காட்டுவது நம் மனக்கண் முன் பெருந்தலைவர் காமராஜரை கொண்டு வந்து நிறுத்துகிறது.

இடையிடையே, அவர் காட்டுகின்ற உதாரணங்கள் நச்சென்று இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்றிரண்டு. “பகைவவனிடம் பஞ்சாங்கம் பார்ப்பது போல, அவள் தலையிலே பூச்சூட மாட்டாள் என்று சொல்கிறாள். அது தியாகமல்ல. ஏனென்றால் அவள் தலையே மொட்டை. இன்னொருவர் பசும்பாலே குடிக்கமாட்டேன் என்கிறார். ஏனென்றால் அவர் ஊரில் இருப்பதெல்லாம் எருமை மாடுகள். காதுக்குள் வண்டு குடைந்து கொண்டிருப்பவன் வாள்போரில் வெற்றி பெற்றதுபோல, பூங்கொடியாளிடம் பேழை நிறைய வைரக் கற்கள்; ஆனால், அவள் வசிப்பதோ கள்வர்களின் குகையில். படுத்து தூங்க அருமையான பஞ்சு மெத்தை. ஆனால், பக்கத்திலோ பாம்பு புற்று. மலடி வயிற்றிலே மகன், புதையல் எடுத்த தனம்.” இப்படி ஏராளமான உவமானங்களை கூறுகிறார்.

எப்படியோ, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிறவெறியை தோலுரித்துக் காட்டும் ஒரு அருமையான நூல். தாமதமாக கிடைத்தாலும் தரமான நூல். அனைவரும் படிக்க வேண்டியது அவசியம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கட்டப் பஞ்சாயத்து தானே தெரியும் நமக்கு? அது என்ன ‘கப்’ பஞ்சாயத்து? இங்கல்ல, ஹரியானா, பஞ்சாப், உ.பி. போன்ற வட மாநிலங்களில் கி.பி. 6 ம் நூற்றாண்டிலிருந்து இயங்கிவரும் ‘கப்’ பஞ்சாயத்துகள் சாதியத்தின் துருப்பிடித்த ஆயுதமேந்தி நிகழ்த்துகின்ற கோரச் செயல்களையும், காதல் திருமணம் செய்து கொள்ளவோ, திருமணத்தின் மூலமாக சாதியை மறுக்கவோ, தலித்தாகப் பிறந்திருப்பின் உயர்சாதிப் பெண்ணை மணந்து கொள்ளவோ முடியாத ஒரு இருட்டு உலகத்தை இந்நூல் உணர்வுப்பூர்வமான மொழி நடையில் விவரிக்கிறது.

வெள்ளை மாளிகையில், பக்கம் 116, ரூ50, வெளியீடு: தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை - 98

Pin It