தமிழீழத் தமிழர்களை பயங்கரவாதிகளைப் போல் சித்தரித்து, அவர்களை “சிறப்பு முகாம்” என்ற பெயரில், சிறை வைத்துள்ள தமிழக அரசு, அம்முகாமிலுள்ள தமிழீழ அகதிகளை திறந்தவெளி முகாம்களுக்கு மாற்ற வேண்டும் என நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.

உண்ணாப் போராட்டம், ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டம் என தொடர்ந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும், மனித உரிமை ஆர்வலர்களும் நடத்தி வந்த பல போராட்டங்களின் வழியாக மக்களிடத்தில் கொண்டு செல்லப்பட்ட ஞாயமான இக்கோரிக்கை ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை அளித்தது.

மேலும், தோழர் செந்தூரன் தொடங்கி பல தமிழீழ அகதிகள் சாகும் வரையிலான உண்ணாப்போராட்டத்தை சிறப்பு முகாமிற்குள்ளேயே நடத்தி அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர். இத்தொடர் போராட்டங்களின் விளைவாக, கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 18 சிறப்பு முகாம் வாசிகள் திறந்தவெளி முகாமிற்கு மாற்றப்பட்டுள்ளனர்.

உறுதியுடன் உண்ணாப்போராட்டம் நடத்திய, தோழர் செந்தூரன் அவர்கள் மீது மட்டும், தற்கொலை முயற்சி வழக்குப் போட்டு சென்னை புழல் சிறையில் இருமுறை அடைத்தது காவல்துறை. இருப்பினும், அவரது உறுதிமிக்க நெஞ்சம் கோரிக்கையைக் கைவிடுவதாக இல்லை.

தொடர் போராட்டங்களுக்குப் பிறகு தற்போது தோழர் செந்தூரன் அவர்களை சிறப்பு முகாமிலிருந்து விடுதலை செய்து, சிவங்கையிலுள்ள திறந்தவெளி முகாமிற்கு மாற்றி உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இது வரவேற்கத்தக்கதே!

இதைப் போலவே, மேலும் அங்கு எஞ்சியுள்ள 34 தமிழீழ அகதிகளையும் திறந்த வெளி முகாம்களுக்கு அனுப்பிவிட்டு, “சிறப்பு முகாம்” என்ற பெயரில் நடத்தப்படும் இச்சிறைச்சாலை இழுத்து மூடப்பட வேண்டும் என்பதே நமது கோரிக்கை.

இந்நிலையில் சென்னை நகருக்கு அருகிலுள்ள செங்கல்பட்டு – பூந்தமல்லி சிறப்பு முகாம்களை மூடிவிட்டு, அங்குள்ள தமிழீழ அகதிகளை நவம்பர் 20ஆம் நாளுக்குள் திருச்சி நடுவண் சிறையில் அடைப்பது என தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

வழக்குகளிலிருந்து விடுதலையாகியும், வழக்கே இல்லாமலுமுள்ள தமிழீழ அகதிகளை, சிறப்பு முகாமில் சிறைவைப்பதே தவறு எனில், அவர்களை சிறைச்சாலைகளில் அடைப்பது மிகக் கொடுந்தவறாகும்.

தமிழக அரசு இம் முடிவுனைக் கைவிட்டு சிறப்பு முகாம்களில் உள்ள அனைவரையும் திறந்தவெளி முகாம்களுக்கு மாற்ற வேண்டும்.

Pin It