திராவிட அவதூறுகளுக்கு எதிர்வினை – 2

 திராவிடக் கோட்பாட்டு எழுத்தாளர்களின் வாதங்களைச் சந்திப்பதில் ஒரு நடைமுறைச் சிக்கல் உள்ளது. எந்த மூலச் சான்றையும் முன்வைக்காமல் தர்க்கம் புரிவது அவர்களது மரபு. தமிழர் மீதும் தமிழ் மரபுகள் மீதும் போகிறபோக்கில் அவதூறுகளை வீசிவிடுவது அவர்கள் வழக்கம். இராசராசச் சோழன் மீது, திராவிடம் தூற்றி வரும் அவதூறுகளுக்கு ஏதேனும் மூலச் சான்றுகள் உண்டா?

 மூலச் சான்றுகள் என்பவை, கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்ற வரலாற்றின் சமகாலச் சான்றுகள். இவ்விதமான மூலச் சான்றுகள் ஏதுமே இல்லாமல், இராசராசன் குறித்து சிலர் எழுதிய நூல்களையே சான்றாக வைக்கின்றனர். அதிலும் நீலகண்ட சாஸ்திரி போன்ற பிராமணிய ஆய்வாளர்களின் நூல்கள் என்றால் திராவிடர்களுக்கு இனிக்கும். வரலாற்றில் தன் சாதிக்குப் பெரிய இடம் இருந்தது என்ற புனைவை உருவாக்கும் முயற்சியில் நீலகண்ட சாஸ்திரி, சோழர்காலத்தில் பிராமணியம் வளர்ந்தது என்று பொய்யாக எழுதினார். இதே பொய்யை திராவிடம் வளர்த்தெடுத்து வருகிறது. ஆரியம், தமிழரை எதிர்த்துக் கொல்லும், திராவிடம் அணைத்துக் கொல்லும் என்பதற்கான அடையாளங்களில் இதுவும் ஒன்று.

 தமிழிய ஆய்வில் நாம் முன் வைக்கும் சான்றுகள் அனைத்துமே மூலச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை. அந்த வகையில் சில கல்வெட்டுச் சான்றுகளைக் கண்போம்.

 “உடையார் ஸ்ரீ ராஜராஜதேவர் தஞ்சாவூர் எடுப்பித்த திருக்கற்றளி ஸ்ரீ ராஜராஜீச்வரம் உடைய பரமஸ்வாமிக்கு வேண்டும் நிவந்தங்களுக்குத் தேவதானமாகச் சோழமண்டலத்து புறமண்டலங்

களிலும் உடையார் ஸ்ரீ இராஜராஜதேவர்

குடுத்த ஊர்களில், ஊர்நத்தமும் ஸ்ரீ

கோயில்களும் குளங்களும்ஊடறுத்துப்போன வாய்க்கால்களும்

பறைச்சேரியும் கம்மாணசேரியுஞ்

 சுடுகாடும் உள்ளிட்டு

இறைஇலி நிலங்களும்...’

(இராஜராஜேச்சரம்,

முனைவர் குடவாயில்

பாலசுப்ரமணியன் /2010/ பக் 426)

தஞ்சைப்பெருவுடையார்

 கோயில் கல்வெட்டுகளில்

மேற்கண்ட கல்வெட்டும் ஒன்று. இக் கல்வெட்டு கூறும் சேதி, ’இராசராச சோழன் பெருவுடையார் கோயிலுக்கான தேவதான நிலங்களாக்க் கொடுத்த ஊர்களில் பறைச்சேரியும் கம்மாள சேரியும் உண்டு. மேலும் இந்தச் சேரிகளுக்கான நிலங்கள் இறையிலி நிலஙகள் ஆகும். அதாவது, பறைச் சேரி, கம்மாளச் சேரி மக்கள் அனுபவிக்கும் நிலங்களுக்கு அரசின் வரி விதிப்பு இல்லை.

பறையர்களுக்கும் கம்மாளர்களுக்கும் பெருவுடையார் கோயிலுக்காக தேவதான நிலம் அளித்த இராசராச சோழன், பிராமண அடிவருடியாம்!

 ’சோழச் சருப்பேதிமங்கலம் ஆயிரம் பிராமணர்க்கு பங்கெழுதி கூறிட்டுக்கொள்கவென்று திருமுகப் பிரசாதஞ்செய்தருளி சம்கரித்து கூறிட்டமையில்.....இவ்வூர் பங்கெழுதி கரை பறித்து கையோலை வாங்கின...’

(சோழர்கால நிலவுடைமைப் பின்புலத்தில் கோயில் பொருளியல் / முனைவர் மே.து.ராசுகுமார் /2004/ பக் 152, 153)

 மேற்படி கல்வெட்டின் முழுமையான வரிகள் காட்டும் பொருள், பிராமணர்களுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்கள் அவர்களது முழு உரிமைக்கு விடப்படவில்லை. மாறாக, சில ஆண்டுகளுக்கு ஒரு முறை கரையோலை முறையில் இடம் மாற்றி வேறு இடம் தரப்பட்டது.’ இதன் மூலம் பிராமணர்கள் குறிப்பிட்ட நிலத்தின் மீது சொந்தம் கொண்டாடும் முறை தடுக்கப்பட்டது. களப்பிரர், பல்லவர் காலத்தில் சதுர்வேதிமங்கலங்கள் பிராமணர்களுக்கு முற்றும் முழுதான உரிமை உடையனவாக வழங்கப் பட்டன. மேலும் அந்த நிலங்கள் இறையிலி நிலங்கள் ஆகும். அங்கே அரசனின் ஆணை செல்லாது. அந்நிலங்களுக்காக பிராமணர்கள் வரி செலுத்தவும் தேவையில்லை. இந்த நிலையை மாற்றியது சோழர் காலம்.

 அடுத்த சான்றைக் காண்போம்.

“சோழ நாட்டு வளமான விளைநிலங்களின் பெரும்பகுதி, பிராமணர்களுக்குக் கொடையளிக்கப்பட்டிருந்தது என்பது உண்மைக்கு மாறானதாகும். சோழநாட்டுக் கல்வெட்டுகளில் கிடைத்த 1300 ஊர்ப் பெயர்களை வைத்துப் பார்க்கும்போது, 250 ஊர்களே பிராமண ஊர்களாக இருந்திருக்கின்றன. இது 19.25% மட்டுமே. கோயில் மற்றும் பிராமணர் கொடை தொடர்பான பதிவுகளே கல்வெட்டுகளில் பெரிதும் இருக்கின்றன. எனவே, கோயில் கல்வெட்டுகளில் பதியப்படாத வேளாள ஊர்களையும் கணக்கில் கொண்டால், இந்த அளவு இன்னும் குறைவாகவே இருக்கும்” (மேலது நூல் / பக் 214,215)

என்கிறார் மே.து.ரா. கொடை யளிக்கப்பட்ட மொத்த ஊர்கள் 1300ஐயும் கல்வெட்டுச் சாசனப்படி ஆய்ந்த பின்னர் எடுத்துள்ள முடிவு இது.

 பெருவுடையார் கோயில் கல்வெட்டுகளில் மேலும் ஒன்றைக் காண்போம்.

“கேரளாந்தகன் திருவாயில் மெய்காப்பாளர், இராசராசன் திருவாயில் மெய்காப்பாளர், அணுக்கன் திருவாயில் மெய்காப்பாளர்” என்ற கல்வெட்டு வரிகள் உணர்த்தி நிற்கும் சேதி,

 “தஞ்சைப் பெருவுடையார் கோயிலின் சொத்துக்களை 118 ஊர்களில் ஊருக்கு ஒரு மெய்க்காப்பாளர் என்ற முறையில் நிர்வகித்து வந்தனர். இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த ஊர் மக்களுக்கே விடப்பட்டது. இக் கல்வெட்டை ஆய்ந்த முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் பின் வருமாறு வியந்து உரைக்கிறார்;

 “தஞ்சைப் பெருங்கோயிலின் சொத்துகள் எவற்றையும் மன்னனது படையினரோ அல்லது அலுவலரோ பாதுகாக்கவில்லை. நூற்றுப் பதினெட்டுக்கும் மேற்பட்ட சோழ மண்டல ஊர்மக்களே பாதுகாத்தனர் என்பது குறிப்பிடத் தக்க செய்தியாகும். மக்களாட்சி நெறிக்கு இதனினும் சிறந்த சான்றொன்று இருக்க முடியாது’ (இராஜ ராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/பக் 432)

 இராசராசச் சோழர் குறித்த முக்கியமான வெளிநாட்டவர் ஆய்வுகளை மேற்கோள் காட்டும் ஆய்வாளர் பாமயன், “களப்பிரர், பல்லவர் காலத்தில் வளர்க்கப்பட்ட பிராமண ஆதிக்கப் பிரமதேய முறையை மாற்றி அமைத்துத் தமிழ்க் குலத்தவருக்கு நிலங்கள் வழங்கவே, கோயில்களைப் பொருளியல் மையங்களாக மாற்றினார் இராசராசன்” என்கிறார். ஜப்பானியத் தமிழ் அறிஞர் நொபுரு கராசிமா, சோழர் காலத்தில் பிராமணர்களின் தனியார் நிலங்களும் பிரமதேயங்களும் கோயில்களுக்கு மாற்றப்பட்டன என்று கூறியுள்ளதைப் பாமயன் தன் ஆய்வில் குறிப்பிட்டுள்ளார். (வேளாண்மையை விரித்த வேந்தன் / பாமயன் / தமிழினி, 2010 அக்டோபர்)

 இது மிக முக்கியமான பார்வை ஆகும். தனியார் சொத்துகள் வரம்பு மீறும்போதும் ஊழல் மிகும்போதும் அச்சொத்துகளை அரசுடைமை ஆக்கும் வழக்கம் இன்று உள்ளது. இதே போல் பிராமணரின் தனியார் சொத்துகளையும் பிரமதேய சொத்து களையும் கோயிலுக்கு மாற்றி விடுவதும் அரசுடைமையின் அக்கால வடிவம்தான்.

 “கோயில் சொத்துகள் பிராமணர் உடைமையாகின’ - என்ற பெரியார் தி.கவின் கண்டுபிடிப்புக்கும் மேற்கண்ட கல்வெட்டுக்கும்தான் எவ்வளவு தொலைவு! இந்த நெடுந்தொலை வில்தான் திராவிடம் பொய் வேடமிட்டுப் பதுங்கிக் கிடக்கிறது.

 அடுத்து, பெரியார் தி.கவுக்குக் உவப்பான ஒரு கல்வெட்டைக் காண்போம். இதுவும் அதே தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் உள்ள கல்வெட்டுதான். ஆனால், திராவிட இனத்தவரான விஜயநகர அரசர் காலக் கல்வெட்டு.

 இக்கல்வெட்டு, மகா மண்டலேசுவரன் திருமலை ராயனுடையது.’தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த பிரமதேய கிராமங்கள் சிலவற்றை வரி இல்லாத நிலங்களாக மாற்றி ஆணை பிறப்பித்ததை இக்கல்வெட்டு தெரிவிக்கிறது’ ((இராஜ ராஜேச்சரம், முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் /2010/பக் 432)

 இதன் பொருள் என்ன? விஜயநகர திராவிட அரசர்கள் தஞ்சையை ஆளும் வரை, பிராமதேய கிராமங்கள் வரி செலுத்த வேண்டிய வையாகவே இருந்தன என்பதுதானே! விஜய நகர திராவிடர்கள், பிராமண அடிவருடிகள் என்பதை எழுதாத வரலாற்றாசிரியர்களே இல்லை. ஆனால், திராவிடக் கோட்பாட்டா ளர்களோ, தமிழர்களுக்கு அறிவு இல்லை, தமிழர்கள் மானம் கெட்டவர்கள் என்று தூற்றுவதில் சுகம் காண்பவர்கள். அதனால், விஜயநகர திராவிடர் குறித்து அவர்கள் எப்போதும் எழுது வதில்லை. ஆனால், கல் வெட்டுச் சான்றுகளை நாம் முன் வைக்கிறோம். இதற்கு அவர்கள் மறுமொழி என்ன?

  திராவிடக் களப்பிரர்கள்தான் பிராமணர்களுக்கு வழங்கப்பட்ட பிராமதேய முறையை ஒழித்தார்கள் என்ற பெரியார் முழக்கத்தின் கருத்தை மறுக்க (அக்டோபர் 2010) நாம் ஒரு கல்வெட்டுச் சான்றை முன்வைப்போம்.

 இது, எப்போதோ நடந்ததாக, யாரோ கூறியதாக, வேறு ஒரு காலத்தில் எழுதப்பட்ட செப்புப் பட்டயம் அல்ல. களப்பிரர் காலத்திலேயே வெட்டப்பட்ட கல்வெட்டு. பூலாங்குறிச்சி கல்வெட்டு என்று அதற்குப் பெயர். அக்கல்வெட்டுகளின் சிலவரிகளைக் காணலாம்;

.....(ழவரும்) ரு...ங் கூடலூரு நாட்டுப் பிரமதாயஞ் சிற்றையூருப் பிரம்ம தாயக்கி

....(ழமை)யும் (மீயா)ட்சியுங் கொண்டாளும் மவூருப் கடைய வயலென்னும்

....புலத்தவன் விற்றுக் கொடுத்த புன்செ நிலனு

....துப் பிரமதாயத்துப் பிரமதாயக் கிழவரா(ன)

....வரு குடிகளையும்...டையாரும் பிரம்மதாய முடையாருந் நாடு காப்பாரும் புறங்காப்

-இக்கல்வெட்டுகள் வெள்ளேற்றான் மங்கலம், சிற்றையூர் ஆகிய பிரமதேய கிராமங்களைப் பற்றிக் குறிப்பிடு கின்றன. இந்த பிரமதேய நிலங்களைப் பெற்றுக் கொண்ட பிராமணர்களைப் பூலாங்குறிச்சிக் கல்வெட்டுகள்,’பிரமதேய கிழார்கள்’ என்கின்றன.

(முன்தோன்றி மூத்தகுடி / குணா /2007/ பக் 62,66, 67)

 களப்பிரர் காலம்தான் பிராமதேய நிலங்களை எல்லாம் ஒழித்துக் கட்டிய காலமாயிற்றே, அக் காலத்தில் எப்படி பிரமதேய நிலங்கள் வந்தன என்று பெரியார் முழக்கம் விடை கூறட்டும்!

தேவரடியாரும் தேவதாசிகளும்!

தேவரடியார், தேவதாசி என்ற சொற்களுக்கு இடையே, தமிழர் - திராவிடர் என்ற இரு இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவ ரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவ தாசிகள் என்போர், திராவிடரின் பொது மகளிர்.

இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.

 ’தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17)

 தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர் குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.

 சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.

 சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழ சூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழ தேவி, வானவன்மாதேவி - ஆகிய பெயர்கள் சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட் டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியா தையுடன் நடத்தப் பட்டவர்கள் தேவரடியார்கள்.

 தேவதாசிகள் என்பவர்களோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப் பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை ஆரிய மொழி வழிப்பட்ட திராவிடருடைய இழிந்த பண் பாட்டின் அடையாளங்கள். (பாரதிதாசன் என்ற பெயரைப் புரட்சிக் கவிஞர் தமது இளமைக் காலத்தில் - அன்று நிலவிய ஆரிய மொழி வழக்கை ஒட்டி வைத்துக் கொண்டார்.) அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.

இக்கல்வெட்டு கர்நாடகத்தில் எழுதப்பட்ட அதே 12 ஆம் நூற் றாண்டில், தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரி யாதையுடன் அழைக்கப்பட்டனர்.

 குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்த தைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.

 ’தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்துகொண்டு குடும் பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன’ என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334)

 சோழர்காலத்தை இழிவு செய்து எழுதுவதற்கு, முனைவர் கே.கே.பிள்ளையின் மேற்கண்ட நூலை மேற்கோள் காட்டும் திராவிட ‘ஆய்வாளர்கள்’, தேவரடியார் குறித்து இந்நூலில் உள்ள உயர்ந்த கருத்துகளை மட்டும் படிக்க வில்லையோ! இப்பார்வைக் குறைபாடு தமிழர்களை இழிவு செய்ய வேண்டும் என்ற நோக்கோடு, பக்கங்களைப் புரட்டுவதன் விளைவாக இருக்கலாம்!

 இவற்றைவிடக் கொடுமை யானது, பொட்டுக் கட்டும் முறையையும் தேவரடியார் முறையையும் ஒன்று என பெரியார் முழக்கம் எழுதியதாகும். தோழர் பாமரனும் இக் கருத்தை வழிமொழிந்துள்ளார்.

 எந்த அடிப்படையில் இவ்வா றெல்லாம் எழுதுகிறார்கள்?

பொட்டுக் கட்டுதல் என்பது, ஒரு சிறுமியின் கழுத்தில் பொட்டுக் கட்டி அவரைக் கோயிலுக்கு என நேர்ந்து விட்டு விடுவது ஆகும். இது, நேரடியாக ஒரு சிறுமியைப் பாலியல் உறவுக்காக விடும் கொடூர முறை ஆகும். இதற்கும் தேவரடியாருக்கும் என்ன உறவு? மனச்சான்றைக் கழற்றி வைத்துவிட்டு எழுதினால் மட்டுமே இவ்வாறெல்லாம் எழுத முடியும்.

 ’கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்டத்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்ததைக் குறிக்கிறது’(கர். கல். VAK 105)

(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19)

தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபசாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக் கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.

 பெரியார் முழக்கம், தோழர் பாமரன் ஆகியோர், ’சோழர் கால தேவரடியார் முறை விபசார முறைதான்’ என்பதை நிறுவ வேண்டும். பொட்டுக் கட்டும் பழக்கமும் தேவரடியார் முறையும் ஒன்று என்ற அவர்களது ‘கண்டுபிடிப்பை’ எந்த ஆய்வாளர் ஏற்றுக் கொள்கிறார் என்பதை அறிவிக்கட்டும்.

 தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளி யிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005)

  கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.

 தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்; ’கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவர டியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப் படுகிறார்.....

 இவர்கள் நாட்டியக் காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்’ (மேலது நூல் /பக் 22) அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியார் தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர். தமிழ்ப் பெண்களுக்குக் கற்பில்லை, கற்பு தேவை இல்லை என குஷ்பூ கூறியபோது, அவரது கருத்தை ஆதரித்துப் பரப்புரை செய்தது பெரியார் தி.க. கண்ணகி சிலை அகற்றப்பட்டபோது, பிராமண ஜெயலலிதாவின் பக்கம் சேர்ந்துகொண்டு கண்ணகியைப் பற்றி அவதூறுகள் பரப்பியது பெரியார் தி.க. இப்போது தேவரடியார் எல்லோரையும் விபசாரிகள் என்கிறது.

 இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 - 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.
 
 மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது? இராச ராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்தது என்பதை அல்லவா! திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப் பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?

 ’சோழர் காலத்தில் குலத்துக்கொரு கல்விதான் இருந்தது. அப்புறம் எங்கு போகும் எல்லோருக்கும் கல்வி?’ - இது தோழர் பாமரனின் கேள்வி.

அவரிடம் நாம் கேட்கிறோம்.

 ’சோழர் காலத்தில் சாதி அடிப்படையில் கல்வி மறுக்கப்பட்டது என்பதற்கான சான்று என்ன? இதற்கு அவர் விடை தர வேண்டும். பெருவுடையார் கோயிலைக் கட்டிய பொறியாளர்கள், சிற்பிகள், அணைக் கட்டுகள், நீர்த் தேக்கங்கள் கட்டிய வல்லுனர்கள், கணித அறிவியலின் உச்சமாக 25 இலட்சத்தில் ஒரு பங்கைக் கூட அளந்து காட்டிய கணித நிபுணர்கள், இசை, நடனக் கலைஞர்கள்

, வேளாண் தொழில் நுட்ப வல்லுனர்கள், போரியல் நிபுணர்கள், கப்பல் கட்டிய பொறியாளர்கள், ஏற்றுமதி, இறக்குமதி செய்த பொருளியல் மேதைகள், உலகத் தரத்திற்கான ஆடைகளை வடி வமைத்த கலைஞர்கள், வங்கிகளை நிர்வகித்த பண்டாரங்கள், உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், கல் வெட்டுகளைப் பொறித்த ஆவணப் பதிவாளர்கள், மாட மாளி கைகளைக் கட்டிய பொறியாளர்கள், ஆயுதங்கள் செய்த தொழில் வல்லுனர்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான தொழில் பிரிவினர் அனைவரும் கல்வி மறுக்கப் பட்டவர்களா தோழர் பாமரன்? இல்லை,படிக்காமலேயே இவ்வளவு தொழில் நுட்பங்களையும் கற்றுக் கொண்ட ஞானக் குழந்தை களா இவர்கள்? அல்லது இவர்கள் அனைவருமே பிராமணர்களா? ஒரு வேளை, இந்தக் கல்விகள் அனைத்துமே சமக்கிருதத்தில் இருந்திருக்குமோ!

 மேற்கண்ட தொழிற் பிரிவுகள் அனைத்தும் சமூகத்தின் பல்வேறு குலத்தவரால் மேற் கொள்ளப்பட்டவை. பிராமணர்கள் வேதம் மட்டுமே அறிந்தவர்கள். அவர்களது எல்லை சில கோயில்களுக்குள்ளேயே முடக்கப்பட்டது. அரிதாக சில பிராமணர்கள் மட்டுமே பிற துறைகளில் ஈடுபட்டனர். அவ்வாறு ஈடுபடுவதற்கும் அவர்கள் தமிழ் கற்க வேண்டி இருந்தது. ஏனெனில், மேற்கண்ட துறைகளுக்கான அறிவும் கல்வியும் தமிழில்தான் இருந்தன. சமக்கிருதத்தில் இல்லை.

 பறையர், என்போர் தமிழரின் அறிவு மரபினர். பள்ளர் என்போர், தமிழரின் வேளாண் மரபினர். பறையர், பள்ளர் ஆகியோருக்கு அவர்களது சாதி காரணமாக, சோழர் காலத்தில் கல்வி மறுக்கப்பட்டது என நிறுவும் சான்றுகளை முன்வைப்பாரா தோழர் பாமரன்? ஆனால், பள்ளரும் பறையரும் தமிழர் ஆட்சிக் காலத்தில் ஓங்கி வாழ்ந்த வரலாற்றையும், திராவிடர் காலத்தில் வீழ்த்தப் பட்ட வரலாற்றையும் நாங்கள் முன் வைக்கிறோம். தர்க்கத்துக்குத் தயாராகுங்கள்!

 இந்துத்துவவாதிகள் தமிழர் மரபின் பெருமைகளைத் தமது பெருமைகளாகக் கூறியே, தமிழரை ஒடுக்குகின்றனர்; திராவிடக் கோட்பாட்டினர் தமிழர் மரபின் மீது அவதூறு பூசியே தமிழரை இழிவு செய்கின்றனர். இருவரின் செயல்திட்டங்களும் வேறு வேறு; நோக்கம் ஒன்று! இந்தச் செயல்திட்டத்தில் தோழர் பாமரன் இருப்பதாக நான் நினைக்கவில்லை! அவர் தமது பார்வையை மீளாய்வு செய்ய வேண்டும். அவரது எழுத்துக்கள், தமிழ்ச் சமூகத்தின் தரத்தை உயர்த்தவும் பயன்பட்டிருகின்றன என்பதை உணர்ந்தவன் நான்!

 அதேவேளை, கோட்பாட்டு முரண் என்றளவில், தோழர் பாமரன் தமது ஆய்வுகளை முன் வைக்கட்டும், பெ.தி.கவும் முன் வைக்கட்டும், தமிழிய ஆய்வுக் களம் இந்தச் சவால்களைச் சந்தித்துத் தமிழர் மரபைப் பாதுக்காக்கக் காத்திருக்கிறது!

Pin It