பட்டினப் பிரவேசம் என்ற பெயரில் சைவ மடாதிபதிகளை பல்லக்கில் வைத்து தூக்கும் மனித உரிமைக்கு எதிரான செயல் குறித்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளராக இருந்த குத்தூசி குருசாமி பேசி, அந்தப் பேச்சுக்காக மூன்று வாரம் சிறைத் தண்டனைப் பெற்ற வரலாற்றை இளைஞர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். 1960 ஜூலை 25இல் தஞ்சை மாவட்டம் திருவையாறு என்ற ஊரில் குத்தூசி குருசாமி இவ்வாறு பேசினார்.

“மனிதன் மனிதனைச் சுமப்பது அநீதி. மோட்டார் வாகனம் வந்திருக்கின்ற இந்த நாளில் வாகனத்தையும், 'சாமியையும்' ஒரு லாரியில் வைத்து ஓட்டிச் செல்லலாம், பக்தர்களுக்குச் சுண்டைக்காய் அளவாவது புத்தியிருந்தால். பாட்டாளித் தோழர்கள், அர்ச்சகரையும் வாகனத்தையும் என்றாவது ஒரு நாள் காவிரியாற்றுப் பாலத்தின் மேலே போகும்போது, தோள்பட்டை வலி பொறுக்கவில்லையே என்று காரணம் காட்டி, தவறுதலாக நடந்ததுபோல், காவிரியாற்றுக்குள் போட்டாலொழிய இதற்கொரு முடிவு காண முடியாது.”

இந்தப் பேச்சுக்கும் நாகப்பட்டினத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் இந்தி ஆசிரியர்களை கல்லால் அடிக்கச் சொன்னார் என்று ஒரு பேச்சுக்கும் அன்றைய காங்கிரஸ் ஆட்சி இ.பி.கோ. 117, 295, 323, 304, 326 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்தது. வழக்கு முறையே திருவாரூர், திருவையாறு நீதிமன்றங்களில் நடந்தது. திருவாரூருக்கும் திருவையாறுக்குமாக அலைந்து கொண்டிருந்தார் குத்தூசி குருசாமி. 1960 நவம்பர் 7ஆம் நாள் திருவாரூர் நீதிமன்றத்தில், மூன்று வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அப்போது ‘பன்னீர்செல்வம் அல்லது இலட்சியவாதி’ என்ற நாடகத்தை சிறையிலேயே எழுதி முடித்தார் குத்தூசி குருசாமி.

(ஆதாரம் : குருவிக்கரம்பை வேலு எழுதிய குத்தூசி குருசாமி வரலாறு)

Pin It