உசிலம்பட்டி அருகே ஒரு குக்கிராமம். ஒரு வீட்டிலிருந்த சிறு குழந்தையைச் சுற்றிலும் ஒரே பெண்கள் கூட்டம். ஒரு வயதான மூதாட்டி குழந்தைக்கு கொடுப்பதற்காக எதையோ அரைத்துக் கொண்டிருந்தார். ஒரு புது உயிரின் வரவு குறித்த மகிழ்ச்சி அங்கிருந்தவர்களின் முகத்தில் இல்லை. மாறாக, பெற்ற தாயின் அழுகையும் அவருக்குப் பிற பெண்கள் தேறுதல் சொல்லும் குரலுமே கேட்கின்றன. குழந்தை பிறந்த வீடு சாவு விழுந்த வீடாகத் தோற்றமளிக்கக் காரணம், பிறந்த அந்தக் குழந்தை ஒரு பெண் குழந்தை.
அக்கம் பக்கத்தவர்கள் என அந்தத் தெருவே அவ்வீட்டில் கூடியிருந்தது. அக்கூட்டத்தினுள் இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தான் அச்சிறுவன். புதிதாய் குழந்தை பிறந்திருக்கும் சேதி அறிந்து, அதைக் காண ஆவலுடன் ஓடி வந்தவனுக்கு சுற்றியிருந்தவர்களின் துயரம் தோய்ந்த முகம் வியப்பை ஏற்படுத்தியது. பெரியவர்களின் வருத்தம் சிறுவனின் முகத்திலும் படர்ந்தது. இருந்தபோதும் வருத்தத்திற்கான காரணத்தை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவனுள் மேலோங்கியது.
அந்த ஆர்வத்தோடு அவர்களின் பேச்சை உற்றுக் கவனித்த அச்சிறுவனுக்கு, அச்சின்னஞ்சிறு குழந்தை பிறந்த சில மணித்துளிகளிலேயே கொல்லப்படப் போவதைக் கேட்டதும் உடலெங்கும் நடுங்கியது. இக்கொடுமை, தன் கண் முன் நிகழப் போவதை அவனால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை. ஒரு சிறு குழந்தை கொல்லப்படுவதை காணச் சகியாத மனிதத் தன்மை ஒரு புறம்; அத்தோடு "இப்படி பிறந்த குழந்தையைக் கொல்வது சட்டப்படி குற்றமாச்சே, நம்ம ஆசிரியர் சொல்லியிருக்கிறாரே, இது தெரியாமல் இவர்கள் இப்படி செய்கிறார்களே'' என்ற பதற்றம் மறுபுறம். கூடியிருந்த பெரியவர்களிடம் அழுது கெஞ்சினான்.
சட்டப்படி குற்றம் என தன் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருப்பதைச் சொன்னான்.இருப்பினும் எட்டாவது படிக்கும் ஒரு சிறுவனின் பேச்சு பெரியவர்களிடம் எடுபடவில்லை. தன் முயற்சியில் தளராத அச்சிறுவன், நேரே தன் தாயிடம் ஓடினான். "இன்று ஒரு நாள் மட்டும் அந்த பாப்பாவை நம் வீட்டில் வைத்துக் கொள்ளலாம் அம்மா. திங்கட்கிழமை பள்ளி திறந்தவுடன் ஆசிரியரிடம் சொல்லி அரசாங்கத்திடம் சேர்த்து விடலாம்'' என்று கெஞ்சினான். போராடி தன் தாயை சம்மதிக்க வைத்து, அவர் மூலம் அக்குழந்தையின் உறவினர்களையும் சம்மதிக்க வைத்து, அக்குழந்தையை இரு நாட்கள் தங்கள் பராமரிப்பில் வைத்துப் பின்னர் தன் ஆசிரியரின் உதவியுடன் அரசுத் தொட்டிலில் சேர்த்து, ஒரு பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காத்தான் அச்சிறுவன்!
இது கதையல்ல, உண்மையில் நடந்த நிகழ்வு. அந்த சிறுவனுக்கு இருந்த மனித நேயம் பாராட்டத்தக்கது என்ற போதும், சிறியதொரு கிராமத்தில் எட்டாவது படிக்கும் ஒரு சிறுவனுக்கு, இவ்வாறு பெண் குழந்தையைக் கொல்வது சட்டப்படி தவறு என்பதும், அதற்கு மாற்றாக அரசுத் தொட்டில் திட்டம் இருப்பதும் அதில் குழந்தையை சேர்க்கலாம் என்பது தெரிந்ததும் தான் வியப்பிற்குரியது. அந்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியது, மனித உரிமைக் கல்வி. தமிழகமெங்கும் உள்ள பல அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும், அனைத்து ஆதி திராவிடர் பள்ளிகளிலும் இன்று மனித உரிமைக் கல்வி ஒரு தனிப்பாடமாகவே சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்பது, அதிகம் வெளியே தெரிந்திராத செய்தி.
மனித சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்கு முக்கியக் காரணியாக சொல்லப்படுவது கல்வி. அத்தகைய கல்வியைப் பெற்றுத் தேர்ந்த நாகரிகம் நிறைந்த மனிதர்கள் வாழும் இந்த சமூகத்தில்தான் நாகரிகமற்ற பாகுபாடுகளும் ஏற்றத் தாழ்வுகளும் விரவிக் கிடக்கின்றன. சாதி, பாலியல், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடுகள் மட்டுமின்றி, வெறுப்புணர்வு கொண்ட சமூகமாக இன்றைய நாகரிக சமூகம் இருக்கிறது. கல்வி கற்றுக் கொடுத்ததெல்லாம், இந்தப் பாகுபாடுகளையும் வெறுப்பினையும், மறைமுகமாகவும், தன் மீது குற்றம் சுமத்திவிட முடியாத அளவிற்கு தந்திரமாகவும் வெளிப்படுத்தவும், அதற்கு நியாயங்கள் கற்பிக்கவும் மட்டுமே.
ஒரு மனிதன் தன் குழந்தைப் பருவத்திலிருந்து தன்னைச் சுற்றியிருக்கும் அனைத்திலிருந்தும் பாடங்கள் கற்கிறான். அப்படி அவன் அறிந்து கொண்டவற்றில் நல்லதையும் தீயதையும் பகுத்தாய்வதற்கான அறிவை அளிப்பதாகவே கல்வி இருக்க வேண்டும். ஆனால், இதனை கற்றுக் கொடுக்க வேண்டிய பெரும்பாலான ஆசிரியர்களும், அதற்கான கல்வித்திட்டத்தை அமைக்க வேண்டிய அதிகாரிகளும் இந்த சமூகத்தின் இழிவுகளில் ஊறிப்போனவர்களாகவே இருக்கின்றனர் என்பது மிக வேதனையான ஓர் உண்மை. இவர்களிடமிருந்து அடுத்தடுத்த தலைமுறையினருக்கு, இந்த இழிவுகளை இயல்பான சமூக நடைமுறையாகவே உணர்ந்து ஏற்றுக் கொள்பவர்களாகவே மாணவர்கள் வளர்க்கப்படுகின்றனர். இதற்கான முற்றுப்புள்ளியை எங்கிருந்து தொடங்குவது என்பதே நம்முன் இருக்கும் மிகப் பெரிய கேள்வி.
இன்று மனித உரிமைகள் குறித்துப் பரவலாகப் பேசப்படுகிறது. அனைத்துத் தரப்பினைச் சேர்ந்த மக்களுக்கும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், அய்.நா. அமைப்பின் துணையுடன் ஈடுபட்டு வருகின்றன. இந்த நோக்கத்தை அடிப்படையாக வைத்தே அய்க்கிய நாடுகள் அவை சனவரி 1, 1995 முதல் 2005 வரையிலான 10 ஆண்டுகளை மனித உரிமைக் கல்விக்கான 10 ஆண்டுகள் என அறிவித்தது.
இன்று மனித உரிமை மீறல்களால் உடல், உணர்வு, உளவியல் என அனைத்து வகையிலும் பாதிக்கப்படுவது குழந்தைகளே. பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வும், தங்களைத் தாங்களே காத்துக் கொள்ளும் வழிமுறைகளும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட வேண்டியது மிக அவசியமாகிறது.
அரசு என்ற அமைப்பே மனித உரிமைகளை மிக அதிகமாக மீறுகிறது என்பதாலோ என்னவோ, அய். நா. அவையின் மனித உரிமைக் கல்வி குறித்த வேண்டுகோள், பல அரசுகளின் காதுகளை எட்டவேயில்லை. ஆங்காங்கே ஒரு சில பல்கலைக் கழகங்கள் மட்டும் மனித உரிமைகள் குறித்த பட்டமேற்படிப்பையும், பட்டயப்படிப்பையும் வழங்கின. ஆனால், முறையான கல்வியின் ஒரு பகுதியாக பள்ளிக் கல்வியிலேயே மனித உரிமைக் கல்வியையும் இணைக்க வேண்டும் என்ற அய்.நா.வின் வேண்டுகோள் ஏற்கப்படவில்லை.
இந்தியாவில் 1997 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மனித உரிமைக் கல்வி நிறுவனம், தனது சொந்த முயற்சியில் பள்ளி மாணவர்களுக்கான மனித உரிமைக் கல்வி பாடத்திட்டத்தை வடிவமைத்து, அதனை பல்வேறு மாநிலங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கற்றுக் கொடுத்து வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கென மூன்று கல்வியாண்டுகளுக்கு பாடத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. செயல் முறை பயிற்சிகள், உரையாடல்கள் வடிவில் மாணவர்களை எளிதில் கவரும் விதத்திலும் அவர்களின் மனங்களில் எளிதில் படியும் விதத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.
மனித உரிமைகள் என்றால் என்ன என்பதில் தொடங்கி எவையெல்லாம் மனித உரிமை மீறல்கள் என்பதை எளிமையான கதைகளின் மூலமாகவும், ஊடகங்களில் வெளியான உண்மை நிகழ்வுகள் மூலமாகவும் எடுத்துச் சொல்கின்றனர். இவற்றோடு நில்லாமல் மனித உரிமை மீறல்களிலிருந்து சட்டப்படியான பாதுகாப்பையும் நிவாரணத்தையும் பெறுவதற்கான வழிமுறைகளையும் கூட கற்றுத் தருகின்றனர். இந்தப்பாட முறையின் காரணமாக, நாம் முன்னர் குறிப்பிட்ட அந்த சிறுவனால் ஒரு பெண் குழந்தையின் உயிரைக் காக்க முடிந்தது.
இன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆதிதிராவிடப் பள்ளிகள், பல தனியார்ப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், மறை மாவட்டப் பள்ளிகள், திருமண்டலப் பள்ளிகள் என ஏறத்தாழ 50 பள்ளிகளில் மனித உரிமைக் கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. மேலும், ஒரிசா, மேற்கு வங்கம், குஜராத், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, திரிபுரா, சட்டிஸ்கர், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களிலும் பரவலாக மனித உரிமைக் கல்வி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பொதுவாக மாணவர்களிடையே இந்த பாட வகுப்பிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. "இந்த வகுப்பின் போது ஆசிரியர் அடிக்க மாட்டார்'' என்பது மாணவர்கள் சொல்லும் ஒரு காரணம். "இந்தப் பாடம் எங்களைப் பற்றி இருக்கிறது'' இது மாணவர்களின் ஆர்வத்திற்கு மற்றொரு காரணம். அடுத்தது முக்கியமானது "இந்தப் பாடத்திற்கு தேர்வு இல்லை.''
இன்றைய கல்வி முறையானது, ஒரு மனிதன் பிழைக்க உதவக் கூடியதாக இருக்கிறதே அன்றி வாழ வழி செய்வதாக இருப்பதில்லை. பிழைப்பு என்பது பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதற்கு சமூகத்தைப் பற்றி எந்த அக்கறையும் இல்லை. எந்த ஒரு மனிதனின் திறனும் அவன் பெற்றிருக்கும் புகழ் மற்றும் பொருளாதார வளர்ச்சி இவற்றை வைத்தே மதிப்பிடப்படுகின்றன. ஒருவருக்கு ஏதேனும் தனித்திறன் இருப்பின் உடனடியாக "இத்தனை திறனை வைத்துக் கொண்டு ஏன் சும்மா இருக்கிறாய்? அதை வைத்து தொழில் செய்யலாமே? பொருள் ஈட்டலாமே?'' என்ற கேள்விகள் எழும் அளவிற்கு, "இத்திறனை பிறருக்கு பயன்படுமாறு பயன்படுத்தலாமே'' என்ற வினா எழுவதே இல்லை.
மிகச்சிறு வயது முதல் போட்டி மனப்பான்மையோடு வளர்க்கப்படும் மாணவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் அதே மனப்பான்மையோடே வாழ்கின்றனர். "நீ நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற வேண்டும்'' என்று சொல்வது வேறு. நான் எவ்வளவு மதிப்பெண் பெறுகிறேன் என்பதை விட, நான் பிறரை விட எவ்வளவு மதிப்பெண் பெறுகிறேன் என்ற எண்ணமே மேலோங்கும். பொது அறிவுப் பகிர்தல் என்பதே இல்லை. நான் அறிந்ததை பிறருக்கு கற்றுக் கொடுத்தால், அவர்கள் என்னைவிட அதிகம் பெற்று விடுவார்களோ என்ற அச்சம் பிறக்கிறது. இதனால் கலந்து பழகுதல், பகிர்ந்து கற்றல் போன்றவை இன்றி மாணவர்கள் சிறு வயது முதலே தனித்தனித் தீவுகளாக வாழ நிர்பந்திக்கப்படுகின்றனர்.
இயல்பான சூழலில் வளரும் மாணவர்களின் நிலையே இதுவெனில், சமூகப் பாகுபாடுகள் காரணமாக கலந்து பழகும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கும் மாணவர்களின் நிலை இன்னமும் மோசமானது. அதிலும் குறிப்பாக ஆதி திராவிடர் பள்ளிகளில் மாணவர்கள் நடத்தப்படும் நிலை மிக மோசமானது. ஆதி திராவிடர் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் அய்ந்தாவது வகுப்பு வரை கூட பல மாணவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியவில்லை. ஆசிரியர்களின் இந்த பொறுப்பற்றத் தன்மை காரணமாகவே பல மாணவர்கள் அய்ந்தாவதுக்கு மேல் படிப்பைத் தொடர முடிவதில்லை. இச்சூழலில் முதலில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பதே முதன்மையான தேவையாகிறது. இதனை கருத்தில் கொண்டு, ஆசிரியர்களுக்கென சிறப்புப் பயிற்சிகளை மனித உரிமைக் கல்வி நிறுவனம் வடிவமைத்து நடத்துகிறது.
பெண்ணுரிமை தளத்தில் குறிப்பிட்ட அளவு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் இக்கல்வித் திட்டம், சாதி - தீண்டாமை தளங்களில் போதுமான அளவு மாற்றத்திற்கு வழி வகுக்கவில்லை என்பது வேதனையானது. அதற்கு முக்கியக் காரணம், ஆசிரியர்கள் பிற தளங்களில் காட்டும் ஆர்வத்தையும் நேர்மையையும் இதில் காட்டுவதில்லை என்பதே. சாதிய சமூகத்தின் அங்கமாக இருக்கும் ஆசிரியர்கள், சாதியின் கொடுமையைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.
பெண் கல்வி, பெண் சிசுக்கொலை, ஏன் அரச பயங்கரவாதம் குறித்து கூட பேசலாம். ஆனால் சாதியைப் பற்றி மட்டும் பேசவே இயலாது என்ற நிலையே நீடிக்கிறது. அப்படி ஒன்று இல்லாததைப் போன்ற போலி அனுமானத்துடன் அல்லது அப்படி ஒன்று இருப்பது மிக இயல்பானது என்ற முடிவுடன் மக்கள் தங்கள் வாழ்வை நடத்தப் பழகிக் கொண்டுள்ளனர். இயல்பிலேயே மனித நேயம் மிக்கவர்களான குழந்தைகளை அவர்கள் போக்கில் வளர்த்தாலே, அவர்கள் மனித மாண்புகளை மதிக்கத் தெரிந்தவர்களாக வளர்ந்து வருவர். அதனோடு கூட அடிப்படையான விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்தும் போது, மாணவர்கள் தங்கள் மீது இந்த சமூகம் வைக்கும் நம்பிக்கையை காக்கும் தகுதி பெற்றவர்களாக வளர்ந்து நிற்பார்கள்.
"மாற்றுலகைக் கட்டமைக்க வீரிய விதைகள் தேவை''
மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் தலைவர் கல்வியாளர் முனைவர் வசந்தி தேவி அவர்களிடம் மனித உரிமைக் கல்வி நிறுவனத்தின் பணிகள் குறித்து கேட்டபோது பின்வருமாறு கூறினார்:
"1997ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மனித உரிமைக் கல்வி நிறுவனம், அய்.நா.வின் மனித உரிமை பத்தாண்டுகள் திட்டத்தின்படி மனித உரிமைக் கல்வியைப் பரப்புவதையே தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘மக்கள் கண்காணிப்பக'த்துடன் இணைந்து, தமிழகத்தில் ஏறத்தாழ 500 பள்ளிகளிலும் இந்தியா முழுவதும் 10 மாநிலங்களில் உள்ள பல பள்ளிகளிலும் மனித உரிமைக் கல்வியை கொண்டு சென்றுள்ளோம். முதலில் தமிழ் நாட்டு மாணவர்களுக்கென தமிழில் உருவாக்கப்பட்ட பாட நூல்கள், இன்று மலையாளம், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, இந்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இந்தியாவெங்கிலும் பல மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. போஜ்புரி போன்ற பழங்குடியினர் மொழிகளிலும் மொழிபெயர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
உசிலம்பட்டி அருகே கொல்லப்பட இருந்த ஒரு பெண் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனைப் போன்று, பல மாநிலங்களிலும் பல இடங்களிலும் மனித உரிமைக் கல்வி பரவலாக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், சமூக மாற்றத்திற்கு தூண்டுகோலாகவும் இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தில் மிக இயல்பான ஒரு நிகழ்வான குழந்தைத் திருமண முறை, பல இடங்களில் அக்குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. தன் சகோதரிகளுக்கு கல்வி அளிக்க தங்கள் பெற்றோர்களை வலியுறுத்தும் மாணவர்கள் இருக்கின்றனர்.
மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட அந்தப் பாட நூல்கள், வீட்டில் உள்ளோராலும். ஊரில் உள்ளோராலும் படிக்கப்படுகிறது. இதனால் மாணவர்களை மட்டுமின்றி, மேலும் பலரும் விழிப்புணர்வு அடைய உதவுகிறது. எங்களது சொந்த செலவில் பாட நூல்களை அச்சிட்டு, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த முயல்கிறோம். நாங்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அரசிடமிருந்து அனுமதி மட்டுமே.
ஒரு சில மாநில அரசுகள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பை அளிக்கின்றன. தமிழகத்தில் கூட ஆதிதிராவிடர் நலத்துறை, தங்கள் துறையின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளிலும் இதனை நடத்திக் கொள்ள அனுமதியளித்தது. சிவகங்கை, ஈரோடு, திண்டுக்கல் மாவட்டங்களில் அனைத்துப் பள்ளிகளிலும் நடத்துகிறோம். ஆனால் ஒரு சில மாநிலங்களில் இதனை ஓர் அச்சத்துடன் பார்க்கின்றனர். எங்கள் பாட நூல்களைப் பார்த்தவுடன் இதையெல்லாம் சொல்லிக் கொடுத்தால், மாணவர்கள் நக்சலைட்டுகளாக ஆகிவிடுவார்கள் என்கிறார்கள்.
குஜராத்திலும் நாங்கள் நடத்துகிறோம். ஆனால் அங்கு மனித உரிமைக் கல்வி என்ற பெயரில் நடத்த அனுமதி கிடைக்காது என்பதால் நன்னடத்தைக் கல்வி, குடிமையியல் கல்வி என்ற பெயரில் கொண்டு சென்றுள்ளோம். மத்திய அரசின் சிறப்புக் கூறு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் ஒரு பங்கை எங்களுக்கு ஒதுக்கினால், அதன் மூலம் மேலும் பல கிராமங்களை சென்றடைய முடியும். ஆனால் அதற்கு அனுமதி கிடைக்கவில்லை.
மனித உரிமைக் கல்வியின் அவசியம் ஆசிரியர்களுக்குப் புரிவதில்லை. பெரும்பாலானவர்கள் இதை கூடுதல் சுமையாகவும், தேவையற்றதாகவும் கருதுகின்றனர். எதிர்மறை சிந்தனைகளைக் கடக்கக் கூடியதாகவும் நினைக்கின்றனர். அவர்களின் கருத்தை மாற்றி அவர்களுக்குப் புரிய வைத்து, மனித உரிமைக் கல்வியின் தேவையை உணர வைத்து அனுப்புவதே மிகப் பெரும் சவாலாக இருக்கிறது. அடுத்த தலைமுறையினராவது இந்த இழிவிலிருந்து மீண்டு எழுந்து நிற்க வேண்டும் என்பதே
எங்கள் நோக்கம். ஒரு சிலராவது இந்த சிந்தனையுடன் வெளியேறி, சமூக அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். அந்த நம்பிக்கையுடன்தான் நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம்.
மனித சமுதாயத்தில் தான் எத்தனை பாகுபாடுகள்? உயர்ந்தோர் - தாழ்ந்தோர், செழித்தோர் - வறியோர், ஆண் - பெண், உயர்த்திக் கொண்ட சாதியினர் - தாழ்த்தப்பட்டோர், மதப்பெரும்பான்மையினர் - சிறுபான்மையினர் இப்படி ஏற்றத் தாழ்வுகள் எத்தனையோ! இவற்றிற்கு அடிப்படைக் காரணம் அதிகார - ஆதிக்க வேட்கை வெறி. ஒரு பிரிவினரைத் தாழ்ந்தோரென்று பாகுபடுத்துவதன் மூலம் அவர்களை அடிமைப்படுத்துவதும், ஆட்கொள்வதும் நடைபெறுகிறது; நியாயப்படுத்தப்படுகிறது. மதம், பண்பாடு, இனம், பழக்க வழக்கங்கள் என்று புனிதத்துவம் ஊட்டப்பெற்ற பல அமைப்புகளின் மூலம் பாகுபாடுகள் வளர்ந்து நிலைத்துள்ளன. மனித உழைப்பைச் சுரண்டிய கொள்ளையில் உருவான சாம்ராஜ்யங்களுக்கும், நாகரிகங்களுக்கும் பாகுபாடுகள் ஆதாரமாக இருந்திருக்கின்றன.
பாகுபாடுகள் இயற்கையின் வார்ப்புகள், இறைவனின் கட்டளைகள், அவற்றை மறுப்பதும், எதிர்ப்பதும் தெய்வக் குற்றம், தேசத் துரோகம் என்ற மாயைகள் திட்டமிட்டு வளர்க்கப்பட்டுள்ளன. இன்று ஜனநாயகமும், தேசிய சர்வதேச சாசனங்களும் பாகுபாடுகளை மறுக்க உலகத்திற்கு வழி வகுத்துள்ளன. ஆனால், சட்டங்களும் சாசனங்களும் ஏட்டளவில்தான் உள்ளன. எதார்த்த உலகமோ பெரும் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த, அவை பல புது வடிவங்கள் எடுத்து வளர்ந்து வரும் உலகமாக இருக்கிறது. பெண்ணடிமையும் சாதியமும் காலம் காலமான நமது கேவலங்கள்தாம். ஆனால், இன்றைய உலகமயமாகும் சூழலில் புதிய மறுப்புகளும் இல்லாமைகளும் ஏற்றத் தாழ்வுகளும் விளிம்பு நிலைகளும் உருவாகின்றன.
இதற்கு மாறான வேறோர் உலகத்தை எப்படி உருவாக்குவது? பாகுபாடற்ற சமத்துவமும் சமாதானமும் மனித நேயமும் மனித மாண்பும் சிறந்த உலகை எப்படிக் கட்டுவது? இன்றைய அறிவியல் தொழில் நுட்பத்தின் எல்லையில்லா வளர்ச்சியை, அனைத்து மனிதர்களும் சமமாகப் பகிர்ந்து அனுபவிக்கும் ஆற்றலுலகைப் படைப்பது எவ்வாறு? ஒரே வழி மாற்று உலகத்திற்கான வீரிய விதைகளை குழந்தைகளின், இளைஞர்களின் உள்ளத்தில் விதைப்பதுதான். மனித உரிமைக் கல்வி அதைத்தான் செய்ய முயல்கிறது. இன்றைய உலகின் பாகுபாடுகளை வீழ்த்திய புதிய தலைமுறை உருவாக்கும் கல்வி இது.''