இன்றைய தமிழ்த் திரை உலகம் உலகமய அரங்கில் வேற்று நாகரிகம் தாளம் போட ஆடுகிறது. பாதையே தெரியாமல் திண்டாடுகிற போது இருட்டுக்குள் மின்னுகிற மின்மினிபூச்சிகளின் வெளிச்சம் ஈகவாவது ஒரு திரைப்படம் திகழ வேண்டும். அவ்வாறு பயனுற்றால் அது இச்சமூகத்தை ஈர்க்கும். மக்களின் உள் உணர்வினை செல்லுலாய்டு பிம்பங்களில் பதிவு செய்து இச்சமூகத்தின் மீது ஒளிப்பாய்ச்சுகிற கருவியாக அது மிளிர வேண்டும். தற்போது வெளிவந்து ஓடிக் கொண்டிருக்கிற மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் ஒரு பண்பாட்டு ஆவணம். வாழ்க்கையை மட்டுமே சொல்லுகிற இது போன்ற படங்களை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

படத்தில், மணிவண்ணனும், ஜி.எம்.குமாரும் அண்ணன் தம்பிகள் இரண்டு குடும்பத்திற்கும் நாலு மகன்கள். மணிவண்ணன் குடும்பத்திலே எல்லோரும் நல்லவர்கள், குமார் குடும்பத்தில் அத்தனை பேரும் கெட்டவர்கள். எதிர் எதிர் குடும்ப முகாம்களும் மோதுகிற போது காட்சிகள் சூடு பிடிக்கின்றன. மணிவண்ணனின் இளைய மகனான பரமுவுக்கும்(தருண் கோபி) பக்கத்து ஊரு பூங்கொடிக்கும் காதல்் ஒரு கட்டத்தில் மணிவண்ணன், வயல்காட்டில் மின்சாரம் தாக்கி இறந்து போகிறார். பரமுவின் காதலி படிப்பிற்கு வெளியூர் சென்று விடுகிறார்.

தனிமரமாக நிற்கிறார் தருண்கோபி அதுவரைக்கும் கூட்டுக் குடும்பமாக இருந்தவர்கள் தனித்தனியாக பிரிய பரமுவுக்கு சாப்பாட்டுக்கே பிரச்சினை, இவரின் நடிப்பு சோகத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்கிறது. முட்டி மோதியே உறுமுகிற குடும்பம் படத்தின் முடிவில் ஒன்று சேர்கிற போது அந்த செம்மண் புழுதி கைதட்டி ஓசை எழுப்புகிறது.

அண்ணி, அக்கா, என இயக்குநர் தேர்ந்தெடுத்த முகங்களின் வழியே அழகான எதார்த்தம், சில காட்சிகளில் நடிப்பென்றே தெரியாமல் இயல்பாயிருக்கிறது. பூங்கொடியை இழந்து தவிக்கிற காட்சிகளிலும் அக்கா வீட்டு விசேடத்துக்குப் போய் அவமானப்பட்டு திரும்பி வரும் போதும் கண்கலங்க வைக்கிறார் தருண்கோபி. சீமான், ஜெகத் நாத்தும் "கள்ளக் காதலையே நாலு பேருக்கு தெரிஞ்சு பண்ணிடுறாங்க. பொறந்த பொறப்புகளுக்கு உதவுறத மட்டும் மறைச்சு தான் செய்ய வேண்டியிருக்கு" என்கிற போது வார்த்தைகள் நெருப்பாய் சுடுகிறது.

படத்தின் தொடக்கத்தில் இயக்குநர் சீமானே எழுதி பாடிய தத்துவப்பாடல், அடுத்த தத்துவப்பாடல் முளைக்கிற வரைக்கும் அது தான் மைல்கல். பின்னணி இசையிலும், பாடல்களிலும் கிராமத்தின் இராகசோகத்தை காற்றில் பரவ விட்டிருக்கிறார் சபேஷ்முரளி. நகைச்சுவையில் இதுவரை செய்திடாத புதிய உத்தியை கையாண்டிருக்கிறார் இயக்குநர். அதை அசலாக செய்து முடித்திருக்கிறார் இயக்குநர் நடிகர் சிங்கம்புலி. மேட்டூர் கிராமத்தின் அழகியலையும் இம்மண்ணின் அழுக்குபடிந்த சாயத்தையும் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலபரணி.

எதார்த்த கிராம வாழ்வியலையும், உணர்வுப் பூர்வமான மனித வாழ்க்கையையும் பண்பாட்டையும், வருகின்ற தலைமுறைக்கு மட்டுமின்றி இந்த மண்ணின் மக்களுக்கே மீண்டும் நினைவூட்டியதற்கு இயக்குநர் இராசு மதுரவனுக்கு பாராட்டுகள். காட்சிகளின் ஊடே திரையுலகின் சாயலே இல்லாமல் செய்த போது திரைக்கதைத் தொகுப்பில் மட்டும்  தொய்வு ஏற்பட்ட விதம், கொஞ்சம் சலிப்பூட்டினாலும், வாழ்க்கையை செதுக்கித் தந்து, தமிழ்ப் பண்பாட்டிற்குப் புதுக்குருதி பாய்ச்சி கிராம வாழ்வியலை அடையாளம் செய்ததற்காக மனம் உகந்து பாராட்டலாம்.

Pin It