கறுப்புப் பணக்காரர்கள், கள்ளச்சந்தைப் பேர்வழிகள், கையூட்டு அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் ஆகியோரின் கூட்டணியான ஒட்டுண்ணி முதலாளியமே இன்று இந்தியாவிலும், உலக நாடுகள் பலவற்றிலும் கோலோச்சுகிறது என்பதற்கு மேலும் ஒரு ஆவண ஆதாரம் அண்மையில் வெளியாகி இருக்கிறது. “பனாமா கசிவு” ((Panama Papers Leak) என்ற பெயரில் கடந்த 2016 ஏப்ரல் 4 அன்று வெளியான அதிர்ச்சி தரும் தகவல் தொகுப்பே அது.

கணக்கில் காட்டாமலும், வரி கட்டாமலும் சேர்க்கும் கறுப்புப் பணத்தை சேமித்து வைக்கும் இடமாக சுவிட்சர்லாந்து வங்கி இருப்பதைப் பலரும் அறிவார்கள். கள்ளப் பணத்தைப் பதுக்கி வைப்பதற்கு சுவிஸ் வங்கி மட்டுமின்றி பிரித்தானிய வெர்ஜின் தீவு, பகாமா, செசல்ஸ், புளோரிடா உள்ளிட்ட பல இடங்களில் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் உலகறிய இயங்கி வருகின்றன. அவற்றுள் ஒன்று தான் பனாமா நாட்டில் இயங்கிவரும் மொசாக் பொன்சேகா ((MOSSAC FONSECA)) என்ற சட்ட நிறுவனம் ஆகும்.

உலகம் முழுவதும் இருந்து பல்வேறு முதலாளிகள், அரசியல் தலைவர்கள், உயர்நிலை அதிகாரிகள், திரைத் துறையினர், விளையாட்டு வீரர்கள் என பல தரப்பினரும் இந்த மொசாக் பொன்சேகா நிறுவனத் தின் மூலம் பல இலட்சம் கோடி டாலர் கறுப்புப் பணப் புழக்கத்தில் ஈடுபட்டு வருவது மேற்சொன்ன பனாமா கசிவு மூலம் தெரியவந்தது.

உலகில் இதற்குமுன் நடந்த கறுப்புப் பண விவகாரங்கள், வல்லரசுகளின் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகள், குற்றமயமான அரசியல் செயல்பாடுகள் போன்றவை விக்கி லீக்ஸ், ஜெனிவா லீக்ஸ் போன்ற பல வகைகளில் வெளிப்பட்டுள்ளன. ஆயினும் அவை எல்லாவற்றையும் விட மிக அதிகமான கமுக்க ஆவணங்கள் இந்த பனாமா கசிவு மூலம் வெளி வந்துள்ளன. ஏறத்தாழ 2.6 டெரா பைட்ஸ் அளவுக்கு (1 கோடியே 15 இலட்சம்) ஆவணங்கள் இவ்வாறு வெளியாகின.

இந்தியாவின் முதன்மை ஏடுகளில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேடு உள்ளிட்டு உலகெங்கிலும் உள்ள ஏறத்தாழ 100 ஊடகத்தினர் இணைந்து ஏற்படுத் திய “பன்னாட்டுப் புலனாய்வு ஊட கத்தினர் ஒன்றியம்’’ ((International Consortium of  Investigative  Journalists) என்ற அமைப்பு கடந்த ஓராண்டு கடும் முயற்சியின் பயனாக இச்செய்திகளை வெளிக் கொணர்ந்து உள்ளது.

மொசாக் பொன்சேகா என்ற இந்த சட்ட நிறுவனமே உலகின் பல நாடுகளில் தடுக்கப்பட்ட சட்டத் திற்கு புறம்பான பண பரிமாற்றத் திற்கு என்றே 1999-இல் பனாமா நாட்டில்உருவாக்கப்பட்ட  நிறுவனம் ஆகும். சுவிஸ் வங்கிக்கும், இந்த மொசக் பொன்சேகாவிற்கும் நோக்கம் ஒன்றுதான் என்றாலும் செயல்முறை வெவ் வேறானதாகும்.

சுவிஸ் வங்கியில் கறுப்புப் பணத்தை வெளியில் காட்டாத கணக்கில் இருப்பு வைக்க முடியும். ஆனால் மொசாக் பொன்சேகாவில் பணத்தை வைக்கமுடியாது.  ஆனால் போலியான நிறுவனங்களையே ஏற்படுத்தி விடலாம். இந்த போலி நிறுவனங்களின் வழியாக எவ்வளவு இலட்சம் கோடி டாலர் பெறுமதி யான வணிகத்தையும் நடத்திக் கொள்ளலாம். இந்த போலி நிறுவனங்களின் பெயரால் சுவிஸ் வங்கி போல வெவ்வேறு நாடுகளில் உள்ள நிதி நிறுவனங்களில் கறுப்புப் பணத்தை சேமித்துக் கொள்ளலாம்.

மொசாக் பொன்சேகாவால் உருவாக்கப்பட்ட போலி நிறுவனங் களின் பெயரால் இந்தியாவிற் குள்ளும், வேறு பல நாடுகளுக் குள்ளும் பங்குச்சந்தையில் பல்லா யிரக்கணக்கான டாலரை பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். அதில் கிடைக்கும் இலாபத்தை கணக்கில் காட்டாமல் எந்த நாட்டிலும் மறுமுதலீடு செய்து கொள்ளலாம்.

இந்தியாவின் பங்குச்சந்தை ஒழுங்காற்று நிறுவன மான செபி-யில் (SEBI) பதிவு பெறாமலேயே அயல் நாட்டு நேரடி முதலீடு என்ற பெயரால் யார் வேண்டு மானாலும் தங்கள் பெயரை குறிப்பிடாமலேயே தொழில் நடத்தி வருவாய் ஈட்டலாம். எதுவும் கணக்கில் வராது, எதற்கும் வரி கட்ட வேண்டிய தில்லை.

இவ்வாறு சட்டத்திற்குப் புறம்பாக மொசாக் பொன்சேகா மூலம் போலி நிறுவனங்களை ஏற்படுத்தி கோடி கோடியாக வருவாய் ஈட்டியவர்கள் பட்டியலில் பத்ம பூசன் விருது பெற்ற தொழிலதிபர் குஷால் பால்சிங், கௌதம் அதானியின் அண்ணன் வினோத் அதானி, இந்தியா புல்ஸ் என்ற மாபெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் சமீர் கேலாட், டி.எல்.எப். மனை மற்றும் கட்டுமான நிறுவனத்தின் முதலாளி கே.பி சிங், இந்தி நடிகர் அமிதாப்பச்சன், உலக அழகி பட்டம் பெற்ற ஐஸ்வர்யாராய் உள்ளிட்ட பலரும் உள்ளனர்.

சீனப் பொதுவுடைமைக் கட்சி யின் தலைவர் ஜி ஜிங் பிங்-இன் மைத்துனர் டெங் ஜியா குய் மற்றும் அக்கட்சியின் தலைமைக் குழு உறுப்பினர்கள் 7 பேர், இரசியத் தலைவர் புட்டின், இங்கிலாந்து பிரதமர் கேமரூன், சௌதி அரேபிய மன்னர் குடும்பத்தினர் என பல நாட்டுத் தலைவர்களும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.

வரி விதிப்பு அதிகமாக இருப்பத னால் தான் வரி ஏய்ப்பும் அதிகமாக இருக்கிறது என வாதிடும் பொரு ளியல் அறிஞர்கள் இருக்கிறார்கள். அவர்களின் வழி காட்டுதலில் இந்தியா உள்ளிட்டு பல்வேறு நாடு களிலும் வரி விதிப்புகள் பெருமள வில் குறைக்கப்பட்டுள்ளன. இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டு வரவு- செலவு அறிக்கையின் போதும் பெரும் முதலாளிகளுக்கு விதிக்கப் படும் நேரடி வரி விதிப்பை குறைத் துக் கொண்டே வருகிறது.

இது போதாது என்று 1991-க்குப் பிறகு அடுத்தடுத்து வந்த அரசுகள் தாராளமய முதலாளியத்துக்கு ஆதரவாக பல்வேறு சட்டத் திருத் தங்களையும், புதிய சட்டங்களையும் பிறப்பித்தன. அவற்றுள் ஒன்று தான் “பங்கேற்புப் பத்திரம்” (Participatory Notes) என்ற வழிமுறையாகும். இந்தியாவில் செயல்படும் நேரடி அயல் முதலீட்டில் 48 விழுக்காடு பங்கேற்புப் பத்திர வழியிலேயே நடைபெறுகிறது.

பங்கேற்புப் பத்திரத்தின் மூலம் முதலீடு செய்ப வர்கள் தங்கள் பெயரையோ, தங்கள் நிறுவனத்தின் பெயரையோ, தங்கள் உண்மையான முகவரியையோ வெளியிட வேண்டிய சட்டக் கட்டாயம் இல்லை. பங்குச் சந்தை ஒழுங்காற்று நிறுவனமான செபி அது குறித்து கேள்வி கேட்கவும் முடியாது. இதனால் கறுப்புப் பணக்காரர்கள் மொசாக் பொன்சேகா வழியாக உருவாக்கப்பட்ட போலி நிறுவனத்தின் பெயரில் பங்கேற்புப் பத்திரங்களை வெளியிடுவார்கள்.

இந்த வழிமுறையில் அயல் முதலீடு என்ற முறையில் பங்குச் சந்தையில் எந்த கட்டுப்பாடுமின்றி இந்த கறுப்புப் பணம் உலா வரும். இந்த பணத்தைக் கொண்டு இவர்கள் செய்யும் முதலீடு சட்டப் பூர்வமானதாக மாறுகிறது. இந்த வழியில் கறுப்புப் பணம் வெள்ளையாகிறது.

இதில் கிடைக்கும் வருமானத்தை மீண்டும் பழைய வழியிலேயே எந்த வரியிலும் சிக்காமல் மீண்டும் மீண்டும் முதலீடாக மாற்றிக் கொள்ளலாம். அந்த பணத்தைக் கொண்டு எவ்வளவு சொத்துகளையும் வாங்கி குவிக்கலாம்.

இவ்வாறு மறு முதலீடு செய்து கொள்வதற்கு ஏற்றாற் போல் அயல் செலாவணி ஒழுங்காற்றுச் சட்டங்களும் மாற்றி அமைக்கப்பட்டன. 2003-ஆம் ஆண்டுக்கு முன்பாக இங்கு செய்யப்படும் முதலீட்டில் கிடைக்கும் இலாபத்தை சேம வங்கியின் (ரிசர்வ் வங்கி) இசைவு இல்லாமல் வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்ல முடியாது.

தாராளமயம் நிலைப்பெற்றப் பிறகு 2004-இல் அயல் செலாவணி ஒழுங்காற்றுச் சட்டம் கைவிடப்பட்டது. அதற்கு பதிலாக அயல் செலாவணி மேலாண்மைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்குத் துணையாக “தாராளமாக வெளிநாட்டுக்கு பணம் எடுத்துச் செல்லும் திட்டம்’’ அறிவிக்கப்பட்டது. இதன்படி அன்று 2004-இல் 25,000 டாலர் வரையிலும் இலாபத் தொகையை வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லலாம். இது கடந்த 10 ஆண்டுகளில் மேலும் தளர்த்தப்பட்டு இன்று ஆண்டுக்கு 2.5 இலட்சம் டாலர் அதாவது 1 கோடியே 67 இலட்சம் ரூபாய் வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்லலாம் என்று ஆக்கப்பட்டுள்ளது. இது போதாது என்று அயல்நாடு வாழ் இந்தியர்களுக்கு (ழிஸிமி) சிறப்புச் சலுகைகள் என்ற பெயரால் மேலும் பல தளர்வுகள் செய்யப்பட்டன.

இவ்வாறு சட்டங்களை வளைப்பதற்கும், திருத்து வதற்கும், தளர்த்துவதற்கும் முன்வந்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் கையூட் டாகக் கை மாறியது. கட்சிகளும் கம்பெனிகளும் இவ்வாறு இரண்டறக் கலந்தன. தேர்தல் அரசியலில் பிரிக்க முடியாத கூறாக இந்த பணப் புழக்கம் மாறியது. கட்சித் தலைவர்கள் கம்பெனி முதலாளிகளாகவும், கம்பெனி முதலாளிகள் கட்சித் தலைவர்களாகவும் மாறிமாறி வளர்ந்தார்கள். கம்பெனிகளில் வாரிசுரிமை இருப்பது போல் கட்சிகளிலும் வாரிசுத் தலைவர்கள் உருவானார்கள்.

இந்த கறுப்புப் பண புழக்கத்தில் வாக்காளர்களுக் கும் கையூட்டாக கொஞ்சம் சிந்துகிறது. மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பொதுத்தேர்தல் நடக்கும் மாநிலங்களில் மட்டுமே திடீரென்று கடந்த ஒரு மாத காலத்தில் 60 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் பணப் புழக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய சேம வங்கியின் ஆளுநர் இரகுராம் ராஜன் அறிவிக்கிறார்.

இந்த கறுப்புப்பண சுழற்சியில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, பெரிய கட்சி, சிறிய கட்சி என்ற எந்த வேறுபாடும் இல்லை. அவரவர் ஆற்றலுக்கேற்ப பங்கு கிடைக்கிறது. அதனால் தான் பனாமா கசிவில் இடம் பெற்றுள்ள கறுப்புப் பணக்காரர்கள் மீது பாரதிய சனதா கட்சியின் நடவடிக்கை என்ன என கூக்குரல் இடும் காங்கிரசு கட்சியினருக்குப் பதிலடியாக நிதியமைச்சர் அருண் ஜெட்லி “நாங்கள் உண்மையை வெளியிட்டால் காங்கிரசு தலைவர்களுக்கு அது உவப்பானதாக இருக்காது’’ என்று மிரட்டுகிறார். ஏனென்றால் எல்லோரும் திருடர்களே!

பனாமா நாட்டில் மொசாக் பொன்சேகா வழியாக நடப்பதைவிட மொரிசியஸ் நாட்டின் மூலம் நடக்கும் தில்லுமுல்லுகளே அதிகம். அந்த நாட்டிலும் போலி நிறுவனங்களைப் பதிவு செய்து அவற்றின் வழியாக இந்தியாவில் முதலீடு செய்து கொள்வது மிக எளிது. இதற்கு ஏற்றாற் போல் இந்தியாவிற்கும் மொரிசிய சுக்கும் இடையே இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் செயலில் உள்ளது. அதனால் தான் இந்தியாவில் செய்யப்படும் அயல்நாட்டு முதலீடுகளில் அதிக முதலீடுகள் மொரிசியஸ் முகவரியில் இருந்தே நடைபெறுகின்றது.

உண்மையில் மொரிசியஸ் நாடு பெரிய மக்கள் தொகை கொண்ட நாடோ, பெரும் எண்ணிக்கையில் பணக்காரர்கள் வசிக்கும் நாடோ இல்லை. ஆயினும் இந்தியாவிற்கு வரும் அயல் நாட்டு முதலீட்டில் அதிகம் வருவது மொரிசியஸ் முகவரியில் இருந்து தான். இதிலிருந்தே இந்தியாவில் நடக்கும் அயல் முதலீடு களில் பெரும்பான்மையானவை போலி நிறுவனங் களின் வழியாக நடைபெறுபவை என்பது தெளிவாகும்.

இந்த ஒட்டுமொத்த கறுப்புப் பணக்காரர்கள், கள்ளச்சந்தைப் பேர்வழிகள், தேர்தல் கட்சிகள் வலைப்பின்னலை அறுத்தெறியாமல் ஊழல் ஒழிப்பு முழக்கமிடுவது ஏமாற்று அரசியலே ஆகும்.

பெரும் நிறுவனங்களின் தாராளமய சந்தை வேட்டை, கட்சிகளும் கம்பெனிகளும் இணைந்து விட்ட ஒட்டுண்ணி அரசியல் ஆகியவற்றை எதிர்க் காமல் ஊழலை ஒழிக்க முடியாது என்பது மட்டுமின்றி மக்களின் வாழ்க்கையையோ, இயற்கை வளத்தையோ பாதுகாக்க முடியாது என்பது திண்ணம்.

மண்ணையும், மனிதர்களையும் காப்பாற்றும் மாற்றுப் பொருளியல், மாற்றுப் பண்பியல் ஆகியவற்றை முன்வைக்கும் அறம் சார்ந்த மாற்று அரசியலே இந்த நச்சுச் சூழலிருந்து நாட்டைக் காக்கும்.

“பனாமா கசிவு” மேலும் ஒரு பரபரப்புப் பேச்சாக மட்டும் மாறி விடாமல், அறம் சார்ந்த அரசியலுக்கு வழி திறக்கும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தட்டும்.

Pin It