1991 ஆம் ஆண்டு சூலை 12. 

கல்யாண் சிங்கை முதல்வராகக் கொண்டு பாரதிய சனதாக் கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த உத்திரப்பிர தேசத்தில், சீக்கியர்கள் அதிகம் வாழ்ந்து கொண்டிருந்த டெராய் பகுதியிலுள்ள பிலிபித் மாவட்டத்தில், சீக்கியப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றை, காவல்துறையினர் இடைமறித்து நிறுத்தினர்.

இரண்டு மாதக் கருவை சுமந்து கொண்டிருந்த பல்விந்தர்ஜித் கவுர் என்ற பெண்ணின் கணவர் பல்ஜித் சிங், அவரது தம்பி ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட 13 சீக்கிய இளைஞர்கள் கீழே இறக்கி அழைத்துச் செல்லப் பட்டனர். அதில் இரண்டு முதியவர்கள் மட்டும் காவல்துறையினரால் திரும்ப அனுப்பப்பட்டனர்.

பெண்கள் - குழந்தைகள் உள்ளிட்டோர், பிலிபித்தி லுள்ள ஒரு குருத்வாராவிற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். விசாரணைக்குப் பின், தனது கணவர் வந்து விடுவார் என்று பல்விந்தர்ஜித்தும், அவரைப் போலவே கணவரை அனுப்பிவிட்டு காத்திருந்த பிற பெண்களும் குருத்வாராவில் அன்றிரவு தங்க வைக்கப்பட்டனர்.

இதே இரவு, அழைத்துச் செல்லப்பட்ட அந்த 11 சீக்கியர்களையும் 3 குழுக்களாகப் பிரித்து, வெவ்வேறு காவலர்களால் எங்கோ அழைத்துச் செல்லப்பட்டனர்.

மறுநாள், “தனி நாடு கேட்கும் அதி பயங்கர தீவிரவாதிகள் 10 பேர் காவல்துறையினருடன் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்று ஊடகங்களில் செய்தி வந்தது. பல்விந்தர்ஜித்தும் மற்றவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். 10 பேரின் உடல்களையும் புகைப்படம் எடுத்த காவல்துறையினர், அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் தாங்களே தீ வைத்து எரித்தனர். அழைத்துச் செல்லப்பட்ட 11 பேரில், 15 அகவையான தல்வீந்தர் சிங் என்ற சிறுவனை, 25 ஆண்டுகளைக் கடந்தும் இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

பஞ்சாபில் சீக்கியர்களின் “காலிஸ்தான்” தனிநாடு விடுதலை இயக்கம் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த அக்காலகட்டத்தில், இந்த 11 பேர் படுகொலை பெரும் கொந்தளிப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியது. பிலிபித் மாவட்டத்தில் கணிசமான அளவில் சீக்கியர்கள் இருந்தனர். சீக்கியர்களின் விடுதலை உணர்வை நசுக்கி, அச்சத்தை விதைக்க இந்தப் படுகொலையை அரசுப் பயன்படுத்தியது. 

அன்றைக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆர்.டி. திரிபாதி என்பவர், “அரசைப் பாதுகாப்பதற்கும் - சட்டம் ஒழுங்கைக் காப்பதற்கும் பாராட்டத்தக்க நடவடிக்கையைக் காவலர்கள் மேற்கொண்டுள்ளனர்” எனப் பாராட்டி ஊடகங்களில் பேசினார். கல்யாண் சிங் அமைத்த கே.என். சிங் விசாரணை ஆணையமும், இதுபோல் பாராட்டுப் பத்திரம் வாசித்தது.

சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் அப்பாவிகள் என அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர். 1992 மே மாதம், ஆ.எஸ். சோதி என்பவர், இந்நிகழ்வு குறித்து பொது நல வழக்கு ஒன்றை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை நடுவண் புலனாய்வு மன்றம் (சி.பி.ஐ.) சிறப்புக் கவனம் செலுத்தி, அதன் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்க ஆணையிட்டனர்.

தொடக்கத்தில், 57 காவலர்கள் மீது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டது. 25 ஆண்டுகள் நெருங்கும் நிலையில், கடந்த ஏப்ரல் 1 அன்று இவ்வழக்கின் தீர்ப்பு, தில்லி நடுவண் புலனாய்வு மன்ற சிறப்பு நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டபோது, குற்றம் சாட்டப்பட்டவர்களில் 10 காவலர்கள் வெவ்வேறு காலகட்டத்தில் இறந்திருந்தனர்.

வழக்கின் தீர்ப்பில், காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட 10 சீக்கியர்களும் அப்பாவிகள் என்றும், பதவி உயர்வுக்காக அவர்களை சுட்டுக் கொன்ற 45 காவல்துறையினருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், இறந்தவர்கள் ஒவ்வொருவர் குடும்பத்திற்கும் 14 இலட்ச ரூபாய் இழப்பீடாக குற்றவாளிகள் தரப்பி லிருந்து வசூலித்துத் தர வேண்டுமெனவும் நீதிபதி லல்லு சிங் உத்தரவிட்டார்.

காவல்துறையின் முதன்மையான அதிகாரிகளுக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய நிகழ்வு நடைபெற்றி ருக்காது என்ற போதிலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கூட, இவ்வழக்கில் விசாரிக்கப் படாதது மிகப்பெரும் வியப்பு என்றது, சி.பி.ஐ.யின் சிறப்பு நீதிமன்றம். அந்தளவிற்கு, காவல்துறையினரின் செல்வாக்கு சி.பி.ஐ.யிலும் இவ்வழக்கில் கோலோச்சியது.

தண்டணை அறிவிக்கப்பட்டுள்ள 47 பேரில், பலர் தற்போது காவல்துறையின் பொறுப்பு மிக்கப் பதவியில் இருப்பவர்கள். அவர்களைக் கைது செய்து சிறையில் அடைப்பதிலும் காவல்துறை தயக்கம் காட்டி வருகிறது. சிலர் மட்டும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இந்த வழக்கைக் கைவிடவில்லையெனில், மேலும் பல சீக்கிய இளைஞர்களை இதே போல் கொன்று விடுவோம் என காவல்துறையினர் மிரட்டியதாகத் தெரிவிக்கிறார், இவ்வழக்கை நடத்தியதில் பெரும்பங்காற்றிய உத்திரப்பிரதேச சீக்கியப் பிரதிநிதி () அமைப்பின் செயலாளர் அர்தீப் சிங் நிமனா.

பிலிபத் படுகொலை மட்டுமின்றி, காசுமீரிகள் -- வடகிழக்கு மாநிலத்தவர்கள் எனப் பலரையும் பதவி உயர்வுக்காக சுட்டுக் கொன்ற வரலாறு இந்திய இராணுவத்தினருக்கு இருக்கிறது. எனினும், இது போன்ற போலி மோதல் கொலைகள் வெறும் பதவி உயர்வுக்காக மட்டும் நடைபெறுவதில்லை.

இவர்களையெல்லாம் சுட்டுக் கொன்றால் யார் நீதி கேட்கப் போகிறார்கள் என்ற அதிகார வர்க்கத்தின் மனநிலையும், சீக்கிய மக்களை தொடர்ந்து கண்காணிப்பின் கீழ் வைத்திருக்கும் இந்திய அரசின் இனப்பாகுபாடும், இம்மக்களிடம் விடுதலை உணர்வு கிஞ்சித்தும் எழுந்துவிடக் கூடாதென்ற எச்சரிக்கை உணர்வும்தான், காவல்துறை அதிகாரிகளுக்கு இவ்வளவு துணிவை வழங்கியிருக்கிறது!

“தீவிரவாதிகள் -- தேசப்பற்று’’ என்று சொல்லி, சிலரை ஆயுதங்களுடன் காட்டினால், அதை உண்மை என நம்பிடும் நடுத்தர வர்க்க உளவியலை ஊக்கு விக்கும் ஊடகங்களுக்கும், இதில் பங்கிருப்பதை நாம் மறுக்கவியலாது.

பிலிபித் படுகொலையில் உயர்மட்ட அதிகாரிகள் பங்கு குறித்தும் சி.பி.ஐ. முறையாக விசாரித்து, அவர்களையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். போலி மோதல் கொலைகளை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்!