இஎம்எஸ் அவர்களது 4 குழந்தைகளில் இரண்டாவது குழந்தை - இ. எம். ஸ்ரீதரன், தம்பி என்ற பொருளுடைய ‘அனியன்’ அன்றே அவர் அழைக்கப் பட்டார். சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் பட்டம் பெற்ற பின், கட்சியின் முழுநேர ஊழியராக இருந்து பல பொறுப்பு களை ஏற்றுக் கொண்டவர். தேசாபிமானி பத்திரிகை யின் பல்வேறு நிர்வாகப் பணிகள், பொறுப்பாசிரியர் என பத்திரிகைத் துறையில் பணியாற்றினார்.

இ. கே. நாயனார் அமைச்சரவையின்போது, திட்டக்குழு உறுப்பினராக இருந்து மக்கள் திட்டப்பணிகளுக்கு பொறுப்பு வகித்தார். நல்ல எழுத்தாளராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் இருந்தார். ‘மார்க்சிஸ்ட் சம்வாதம்’ எனும் காலாண்டிதழிலும் பணியாற்றினார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தவர், நோய்வாய்ப்பட்டு, அகால மரணமடைந்தார்.

இஎம்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி “மார்க்சிஸ்ட் சம்வாதம்”, வெளியிட்ட சிறப்பிதழில் இஎம்எஸ் குறித்து இ. எம். ஸ்ரீதரன் எழுதிய கட்டுரை:

 

இஎம்எஸ் நம்பூதிரிபாட்டை, எனது தந்தையை, நான் முதலில் சந்தித்தது 1952ல்தான். அப்போது எனக்கு ஐந்து வயது. அவருக்கு 43 வயது.

அன்றைய சூழலின் தனித்தன்மை அது. அதிகாரிகளால் வேட்டையாடப்பட்டு வந்த பொது ஊழியர்கள் - மாவோவின் வார்த்தைகளில் கூறினால் - தண்ணீரில் மீன்களைப் போல் மக் களிடையே பணியாற்றினார்கள். அவர்கள் தலை மறைவாக இருந்ததாக அதிகாரிகள் கருதினார்கள். ஆனால், அவர்கள் மக்களிடையே இயங்கினார்கள். அவ்வாறு மக்களிடையே இயங்குகிறபோது பல நேரங்களிலும் குடும்பத்தினரை மறக்க வேண் டியதாயிற்று. தந்தை, தாய், மனைவி, குழந்தை களிலிருந்தெல்லாம் தூரமாய் - வெகுதூரமாய்!

எங்களது குடும்பமும் இந்த பொதுத் தன்மைக்கு மாறானதாக இருக்கவில்லை. நான் பிறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக அப்பா கைது செய்யப்பட்டார் 1947 ஜனவரி 2 அன்று. அதன்பிறகு அவர் வெளியே வந்தது சுதந்திரத் தினத்தன்றுதான். ஆனால், அன்று கிடைத்த சுதந்திரம் உண்மையான சுதந்திரம் அல்ல என்றும், வெள்ளை துரைமார்களுக்குப் பதிலாக கறுப்பு துரைகளின் கையில் அதிகாரம் போய்ச் சேர்ந்துள்ளது என்றும் மதிப்பீடு செய்த கட்சி, புதிய ஆளும் வர்க்கங்களுக்கு எதிராக, ஆயுதப் போராட்டம் உட்பட, கிடைத்ததையெல்லாம் பயன்படுத்திப் போராட முடிவு செய்தது. சுதந்திரப் போராட்டத்திற்கு தலைமையேற்ற கட்சி, சுதந்திரத் திற்குப் பிறகும் தடை செய்யப்பட்டது. அப்போது, மக்கள் தலைவர்களை மீண்டும் ஒருமுறை மக்கள் தங்கள் இறக்கைகளுக்குள் பாதுகாத்தனர்.

இதர பல புரட்சியாளர்களின் குடும்பங்களைப் போன்றே எங்கள் குடும்பமும், குடும்பத் தலைவரி டமிருந்து அகன்றது. தோழர்களாகவும் இருந்த உறவினர்களின் பாதுகாப்பில் நாங்கள் இருந்தோம்.

இந்தக் கட்டம் முடிவடைவது 1952ல்தான். 1951ல் கட்சியின் கொள்கைகளில் மாற்றம், முதலாவது பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது ஆகியவற்றின் பின்னணியில், கட்சியின் மீதான தடைகள் அகற்றப்பட்டன. மக்கள் தலைவர்கள் மீண்டும் பகிரங்கமாகச் செயல்படத் துவங்கினர். இந்த சூழலில்தான் ஒரு தேர்தல் பொதுக்கூட்டத் தில் நான் முதன் முதலாக அப்பாவைக் கண்டேன். அவரை முதன் முதலாக கண்டதே ஒரு தலைவர் என்ற முறையில்தான்! மேலும் சில மாதங்களுக்குப் பிறகு அப்பாவை, அப்பாவாக நான் சந்திக்க முடிந்தது. அதுவும் நாங்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது.

அதன்பிறகு 46 வருடங்களில் 20 வருட காலம்தான் எனக்கு அவருடன் வாழ வாய்ப்பு கிட்டியது. நான் உயர்கல்வி பயிலத் துவங்கிய பின் நான்கு, ஐந்து ஆண்டுகள் மட்டுமே நாங்கள் ஒன்றாக இருந்தோம். இருப்பினும் வேறு எந்தத் தந்தையும் - மகனும் போல, எங்களிடையே ஓர் மானசீகமான நெருக்கம் இருந்து வந்தது. ஆகவே, அவரைப்பற்றி, சுதந்திரமான சில மதிப்பீடுகளைச் செய்ய இயலும் என நான் கருதுகிறேன்.

இஎம்எஸ்-ஐ நான் இரு வகையாகக் கண் டுள்ளேன். ஒன்று, எங்கள் குடும்பத் தலைவராக. இரண்டு, அரசியல் தலைவராக. அவ்வாறு இரு தன்மைகள் இருந்தாலும், அத்தன்மைகளை இணைக்கும் அம்சமாக விளங்கியது அவர் கடைப் பிடித்து வந்த முரண்பாட்டியல் அணுகுமுறை.

இந்த விஷயத்தை அவரது இரு சுயசரிதை களிலும் அவர் சிறப்பாக விளக்கியுள்ளார். தனது தாயாருடனும், மனைவியுடனுமான உறவுகளை விளக்கும்போது, சொந்த வாழ்க்கையிலும் எவ் வாறு இயக்க இயலைக் கடைப்பிடித்தார் என்பதை அவர் அவரை அறியாமலேயே வெளிப்படுத்து கிறார். முதன் முறையாக சிறை வாழ்க்கைக்குப் பிறகு, தாயாரைச் சந்தித்தது பற்றி குறிப்பிடும் இடத்தில் இது தெளிவாகத் தெரிகிறது. அவர் எழுதியதைப் பாருங்கள் :

“பிரிவைப் போன்றே திடீரென ஏற்பட்டது தான் 1933ல் ஏற்பட்ட சந்திப்பும். வீட்டுக்கு வந்து சேரும் வரையிலும், நான் விடுதலை செய்யப்பட்ட செய்தி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. தாயாரும் நானும் மட்டுமே இருந்த சில நிமிடங்கள் உணர்ச்சி பொங்கிய நிமிடங்களாக இருந்தன. என்னைப் பொறுத்த மட்டிலும் மிகுந்த சோதனைக் காலம். உணர்ச்சிகளையெல்லாம் உள்ளே ஒதுக்கிக் கொண்டு, இரு சொட்டு கண்ணீர் வெளிப்பட அவர் கேட்டார். ‘இன்னமும் என்னை விட்டு விட்டுப் போய் விடுவாயா?’

“அடிப்படையில் மாட்டேன் என்று நான் சொல்ல இயலாது. எனது பாதை புரட்சிகர இயக்கப்பாதை, இதுவரை நடைபெற்றது போல் மீண்டும் நடக்க வாய்ப்புண்டு. ஆனால், அந்த நேரத்தில் எனது தனித்த உணர்வுகள் மேலிட்டு வந்தன. நான் உறுதியளித்தேன் - அம்மா உயிருடன் இருக்கும்வரை நான் சென்றுவிடமாட்டேன்”. *

தாயாரின் மரணம் பற்றிக் குறிப்பிடும் பகுதியிலும், இந்த முரண்பாட்டியல் அணுகுமுறை தொடர்வதைக் காணலாம். அவர் எழுதுகிறார்: “தாயாரின் மறைவு என்னைக் கடுமையாக பாதித் தது. ‘இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளக் கூடாது’ என உறவினர்களின் தடையும் வந்த பிறகு சாதாரணமாக எந்த ஒரு மகனுக்கும் ஏற்படுகிற உணர்வுகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என யூகிக்க முடியுமே. இறுதிச்சடங்குகளில் நான் கலந்து கொண்டால், அதைப் புறக்கணிக்கப் போவதாக, குடும்பத் தலைவரான பெரிய அண்ணன் மிரட்டினார். நான் கவலைப்பட வில்லை. கடைசி நாட்களில் முடிந்த அளவுக்கு தாயாருக்கு உதவி செய்ய வாய்ப்பு கிடைத்த நிலையில் இறுதிச்சடங்கு பற்றி குழப்பம் உருவாவதை விரும்பவில்லை. அவர் உயிருட னிருந்த போது அன்பு பொழிவதும் உதவிகள் செய்வதும்தான், கொள்ளி வைப்பதைவிட முக்கிய மானது என கருதினேன்”. *

தாயார் பற்றி மட்டுமல்ல; மனைவி குறித் தும் இதுவே அவரது அணுகுமுறையாக இருந்தது. அவர் எழுதுகிறார் :

“அறுபது வயதான தாயாருக்குப் பதிலாக பதினாறு வயதுடைய, என்னைவிட 14 வயது இளையவரான ஒரு பெண் எனது வாழ்க்கையில் நுழைந்தார். அவர்களில் (யாருடைய வருத்தம்) தாயாருடையதா? மனைவியுடையதா? - கடுமை யான வருத்தம் என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை”. *

பதில் இல்லை என அவர் எழுதியிருந்தாலும் மனைவியின் விஷயத்தில் தான் கூடுதலான வருத்த மடைந்ததாகத் தனியாக பேசுகையில் அவர் கூறியுள்ளார். உண்மையில் சற்றுக் கூடுதலான குற்ற உணர்வு அதில் உள்ளடங்கியிருந்தது. அதற்கான காரணமும் இருந்தது. செய்யாத குற்றத்துக்கு அவர் (மனைவி) தண்டிக்கப்படுகிறார் என்ற உணர்வு இஎம்எஸ்-க்கு எப்போதும் இருந்தது. அவர் தனது வாழ்க்கைத் துணையாக வந்த பிறகு முப்ப தாண்டுகள் பட்ட மனவேதனைகள் குறித்து இஎம்எஸ் எழுதியிருக்கிறார். அந்தக் காலத்தின் எந்த புரட்சியாளனுடைய வாழ்க்கை அனுபவங் களிலிருந்தும் மாறுபட்டதாக அந்த அனுபவங்கள் இல்லை. அதேநேரத்தில், ஒரு வேற்றுமை இருக்க வும் செய்தது.

அப்பாவின் குழந்தைப் பருவ காலத்தைப் போன்றே அம்மாவும் ‘கடவுள்கள் மற்றும் பேய்களின்’ உலகில் தான் இருந்தார். திருமணத் திற்கு முன் வீட்டிற்கு வெளியே செல்வது மிகவும் அபூர்வமாக இருந்த அவரைப் பொறுத்த மட்டிலும் உலகம், பிறந்த வீட்டுப் பகுதியான குடமாளூரில் துவங்கி, ஒன்றரை மைல் தூரத் திலிருந்த குமரநல்லூர் கோவிலில் முடிவடைந்தது. ஏதேனும் விசேஷத்தை ஒட்டி வருகின்ற விருந் தாளிகள் சொல்கிற விருப்பு-வெறுப்பு கலந்த வார்த்தைகள் மூலமாக மட்டுமே அவர் உலகை அறிந்தார். அப்படிப்பட்ட ஓர் பதினான்கு வயதுப் பெண், நிரந்தரமாக வேட்டையாடப்படுகின்ற ஒருவரது மனைவியாகி, தொடர்ச்சியாக முப்ப தாண்டுகளாக கனவுகளிலும் காண முடியாத அனுபவங்களைக் கொண்டார். அது எனது தாயாரை மனதளவில் தளரச் செய்தது என்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. அதன் பேரால் சண்டை யிடவோ, வேறு பலரைப் போல் பிரிந்து விடவோ இல்லை. அனைத்தையும் முரண்பாட்டியல் பார்வையுடனே அணுகினார் என்பதைத்தான் நான் அவரது வாழ்க்கையில் கண்ட பிரதான அம்சம்.

அந்த அணுகுமுறை, குழந்தைகளான எங்க ளிடமும் இருந்ததைப் பார்த்துள்ளேன். எனது தங்கை ராதா, குறிப்பு ஒன்றில் கூறியதைப் போல், அவர் ஒரு சாதாரணமான தந்தையாக இருக்க வில்லை. மற்றவர்களின் அப்பாக்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர்தான் அவர் என்ற உணர்வு எங்களது குழந்தைப்பருவ காலம் முதற்கொண்டே இருந்தது. அதனாலேயே, குழந்தைகளுக்கும் அப்பாவுக்குமிடையே பெரிய இடைவெளி யொன்று இருந்து வந்தது. இதர குடும்பங்களி லெல்லாம் இருந்த குழந்தைகளை கட்டி அணைத்து மகிழ்ச்சி கொள்ளும் அனுபவம் எங்களது குடும்பத்தில் இருந்ததில்லை. கட்டிப்புரண்டு, தந்தையின் உடல் மீது ஏறி மிதித்து விளையாடும் குழந்தைகள் பற்றி கவிஞர் ஒருவர் எழுதியது போன்ற காட்சியை எனது தாயாரும் கண்ட தில்லை. அவர் அதையெல்லாம் எதிர்பார்க்க வுமில்லை.

கடைசி நாட்களில் அவர் ஓர் நூலில் குறிப் பிட்டுள்ளதைப் போல், குழந்தைகளான எங்களது கல்வி குறித்தெல்லாம் அவர் கவனிக்க முடிய வில்லை. மாலதி(அக்கா)யைப் பொறுத்தமட்டி லும் குடும்ப நண்பர்கள்தான் அதையெல்லாம் கவனித்தனர். எனது விஷயத்தில், 1960களின் மத்தியில், உயர்கல்விக்காக திருச்சூருக்கு வந்ததி லிருந்து, ஒப்பீட்டளவில் சுதந்திரமாகவே இருந் தேன். ‘கேரளம் - மலையாளிகளின் தாய்நாடு’ என்ற அவரது நூலை வெளியிட்ட கரண்ட் புத்தக நிலைய உரிமையாளர் தாமஸ் வழங்கிய ராயல்டி தொகை யிலிருந்து எனது செலவுகள் ஈடுகட்டப்பட்டன. சில புத்தகங்களை மொழி பெயர்க்கச் செய்து, சிறிய வருமானத்தை ஈட்டச் செய்ய தாமஸ் என்னை வலியுறுத்திய போதிலும், பக்குவம் இன்மை யாலும், அப்பாவின் பொருளாதாரநிலை குறித்து போதுமான அறிவு இல்லாமையினாலுமாக இருக்கலாம், நான் அதில் கவனம் செலுத்த வில்லை. அப்பாவுக்கு செய்த மிகப்பெரிய அநீதி யாக பிற்காலங்களில் இதை நான் உணர்ந்தேன்.

மாலதி டாக்டராகவும், நான் சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் ஆகவும், மற்ற இருவரும் பட்டப் படிப்பு முடித்தும் கல்வியைப் பூர்த்தி செய்த போதிலும், இதில் அப்பாவின் வழிகாட்டுதல்கள் எதுவும் இருந்ததில்லை. கல்வியில் மட்டுமல்ல, இதர விஷயங்களிலும்தான். இது ஏன் என பல நேரங்களில் நான் நினைத்துப் பார்த்ததுண்டு. ஆலோசனைகள் அபூர்வமாகவே மற்றவர் களுக்காக பயன்படுத்தப்பட வேண்டுமென்று கவிதை வரிகளில் கூறப்பட்டது போன்ற காரணங் களாக இருக்குமோ? அப்படிப்பட்ட காரணம் இல்லாமலிருக்கலாம். நேரமின்மையும், அருகா மையில் இல்லை என்பதாகவும் இருக்கலாம்.

பிறிதொரு காலத்தில், மார்க்ஸ் - ஏங்கல்ஸ் தொகுப்புகள் ஆங்கிலத்தில் வெளிவந்து, அதில் மார்க்சின் முதல் கட்டுரையாக, ‘ஒரு வேலையைத் தேர்வு செய்வது சம்பந்தமான ஒரு இளைஞனின் கருத்துக்கள்’ வெளிவந்ததை படித்தபோது அவர் கூறினார் : ‘ஒரு வேலையைத் தேர்வு செய்வது சம்பந்தமான குழப்பம், எல்லா இளைஞர்களுக்கும் இருக்குமென்பதை அந்தக் கட்டுரை படித்தபோது தான் நான் புரிந்துகொண்டேன்’.

இதன்பொருள் நாங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் அவர் முற்றிலும் கவலையற்ற வராக இருந்தார் என்பதல்ல. கற்பது எதுவாக இருந்தாலும் அது நல்ல முறையில் நடைபெற வேண்டும் என அவர் விரும்பினார். அதில் சற்றுக் கவனம் இல்லாமல் இருந்தவர்கள் ராதாவும், சசியும்(தம்பி)தான். இருப்பினும் அவர்களைக் கண்டிப்பதற்குப் பதிலாக, சிறு அளவிலேனும் ஆலோசனைகள் வழங்க அவர் நேரத்தை ஒதுக் கினார்.

எப்படியானாலும் எங்களுக்கொரு நிம்மதி யுண்டு. உலகப் புகழ்பெற்ற அப்பாவின் பிள்ளை களான நாங்கள் யாருமே அவருக்குக் கெட்ட பெயரை உருவாக்கவில்லை. அரசியல் அவதூறு பிரச்சாரத்தின் பகுதியாக ஊடகங்களில் ஏதேனும் வெளிவந்தாலும், அதில் உண்மை எதுவும் இல்லை என்பது வெளிப்பட்டது.

குடும்பத்தலைவரான இஎம்எஸ்-ன் தன்மை கள் குறித்தே இதுவரையிலும் குறிப்பிட்டேன். அரசியல் தலைவரான இஎம்எஸ்-ன் தன்மைகள் பற்றி பலரும் கூறியுள்ளனர். அவற்றில் சரியானவை யும் உண்டு. தவறானவையும் உண்டு. நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. அரசியல் தனிமனித உறவுகளிலும், இயக்க இயல் அணுகு முறையை உறுதியாக பற்றி நின்றார் என்பதை தனது வாழ்க்கை மூலம் வெளிப்படுத்தினார் என்பதுதான் நான் பார்க்கும் சிறப்பு அம்சம்.

‘சுயசரிதை’யில் ‘கிருஷ்ணபிள்ளை, சுந்த ரய்யா, காட்டே’ - எனும் அத்தியாயத்தைப் பாருங் கள். . . தன்னைக் கம்யூனிஸ்ட்டாக மாற்றுவதில் மிகவும் பிரதானமான பங்காற்றிய மூன்று நபர்கள் பற்றிய விவரங்கள் கொண்டது அந்தப்பகுதி. 1964இல் கட்சி பிளவுபட்ட போது, காட்டே, சிபிஐயில்தான் இருந்தார். இருபிரிவுகளும் உயர் தலைவர்களுக்கு எதிராக கூறாத விஷயங்கள் இல்லை. ஆனால் இஎம்எஸ், காட்டே குறித்து கூறுவதைப் பாருங்கள்: “1936 ஜனவரியில் எனது வீட்டிற்கு வருகை தந்த பின்னர், 28 ஆண்டுகள் - அதாவது கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபடும் வரை - அவருடன் பழகுவதற்கு எனக்கு வாய்ப்பு கிட்டியது. மங்கலாபுரத்திலுள்ள அவரது இல்லத்தில், ஒன்றிரண்டு நாட்கள் வரை நானும் கோழிக் கோட்டில் பலமுறை எங்கள் அலுவலகத்திலும், வீட்டிலுமாக அவரும் தங்கியிருந்ததுண்டு.

“பிறகு பம்பாயிலும், தில்லியிலுமுள்ள கட்சி மத்தியக் கமிட்டி அலுவலகத்தில் நாங்கள் இருவரும் இணைந்து செயல்படவும் செய்துள் ளோம். . . கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்ட போது அறுந்துவிட்ட தனிநபர் உறவுகளில் இதயவலி ஏற்படுத்திய உறவுகளில் ஒன்று, காட்டேயுடனான உறவு”.

அரசியல் ஊழியர்களைப் பொறுத்த மட்டி லும், நினைத்துப் பார்க்க முடியாத ஓர் அறிக்கை இது. மேற்குறிப்பிட்டவை எழுதப் பட்டது, 1968ல் என்பதும், கேரள அரசாங்கத்தில் இரு கட்சிகளும் கூட்டாளிகளாக இருந்த போதிலும், எதிர்ப்புநிலை வலுவாக இருந்த காலம் என்பதும், கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும் அவர் ஏற்கெனவே குறிப்பிட்டவாறு பதிவு செய்தார். எப்படிப்பட்ட அரசியல் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தனிநபர் உறவுகளில் அதன் நிழல் படலாகாது எனும் முரண்பாட்டியல் அணுகு முறைதான் இது என நான் கருதுகிறேன்.

இதுதான் சுந்தரய்யாவுடனான அவரது அணுகுமுறையும், 1970ம் ஆண்டுகளில் கருத்து மோதல்களில், தனது நிலைபாட்டை, மத்தியக் குழு நிராகரித்த பின்னணியில், சுந்தரய்யா, பொதுச் செயலாளர் பொறுப்பை ராஜினாமா செய்த போது, இஎம்எஸ் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார். சாதாரணமாகப் பார்த்தால், இது தனிநபர் விரோதங்களுக்கு இட்டுச் சென்றிருக்கும்.

ஆனால், அரை நூற்றாண்டுக்காலம் நீடித்த, அவர்களது சகோதர உறவுகளில் இந்த நிகழ்வு ஒரு கீறலைக் கூட உருவாக்கவில்லை.

அரசியல் கருத்து வேறுபாடுகள், தனிநபர் உறவுகளைக் குழப்பிவிடக் கூடாது என்று முரண் பாட்டியல் ரீதியான அணுகு முறையை இருவரும் உறுதியாகப் பற்றி நின்றார்கள். நன்மதிப்புகள் மட்டுமல்லாது, வேற்றுமைகளுக்கு இடையே ஒற்றுமை எனும் இயக்கஇயல் அணுகுமுறையை யும் வேகமாக இழந்து வரும் இன்றைய நிலையில், இதுபோன்ற வரலாற்றுப் படிப்பினைகளுக்கு வழக்கமானதை விட முக்கியத்துவம் இருப்பதாக நான் கருதுகிறேன்.

- இ. எம். ஸ்ரீதரன்

தமிழில் : ஏ. கே. பத்மநாபன்

Pin It