சுமார் 80க்கும் மேற்பட்ட நூற்றான, வரலாறு நூல்களை எழுதியுள்ள ஆதனூர் சோழன் Mr.மனிதன் என்ற தலைப்பில் மனித குல வரலாற்றை நூலாக கொண்டு வந்துள்ளார்.

"ஆதி மனிதர்கள் முதல் நவீன உலகின் முன்னேற்றம் வரை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அறிந்து கொள்ளும் வகையில் உலக வரலாற்றை எளிமையாக தொகுக்கும் முயற்சி" என அவர் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கேற்ப ஐந்து பாகங்களாக பிரித்து ஆதி மனிதன் முதல் 2004 ல் நிகழ்ந்த சுனாமி வரை நிகழ்வுகள் தொகுத்து தந்துள்ளார் - கற்காலம் முதல் கணினி யுகம் வரை ஏற்பட்டுள்ள மாற்றங்களை பதிவு செய்துள்ளார்.

கற்கால மனிதன் உலகம் முழுவதும் எப்படி பரவினான் பல்வேறு நதிக்கரையில் ஏற்பட்ட நாகரிகங்கள், அங்கு உருவான சாம்ராஜ்யங்கள், மன்னர்கள், அவர்கள் மத்தியில் நடைபெற்ற போர்கள் பற்றிய விபரங்கள் உள்ளன.

எகிப்திய பேரரசு, சுமேரிய நாகரிகம், கிரேக்க தத்துவம் சிந்துசமவெளி நாகரிகம் சீன பேரரசு, சீன்த்தத்துவம், அரேபியர்கள் இஸ்லாமின் தோற்றம், கிறிஸ்துவம் தோற்றம் என பல்வேறு நாகரிகங்கள், தத்துவங்கள், மதங்கள் தோன்றிய விபரங்களை சுருக்கமாக வரலாற்றுப் போக்கில் பதவு செய்துள்ளார்.

ஐரோப்பிய தொழில் வளர்ச்சி, அதன் காரணமாக கடல்வழிப் போக்குவரத்து துவங்கி அமெரிக்கா உள்ளிட்ட புதிய நாடுகளும், கண்டங்களும் கண்டுபிடிக்கப் பட்டதையும் விவரித்துள்ளார். அமெரிக்க சுதந்திர போர், பிரஞ்சு புரட்சி தொடர்ந்து முதலாளித்துவம் வளர்ந்து இரண்டு உலக யுத்தங்கள் நடைபெற்றதையும், ரஷ்யப்புரட்சி, சீனப்புரட்சி, கியூப புரட்சி உள்ளிட்ட விபரங்கள் உள்ளன.

உலக வரலாற்றின் அனைத்து அம்சங்களையும் ஒரு பரந்த பார்வையை பதிவு செய்துள்ளார். பொறுத்தமான நிறைய படங்கள் இணைக்கப்பட்டுள்ளது நூலில் சிறப்பு - படிப்போர்க்கு நிறைய செய்திகள் கிடைக்கிறது.

ஆனால் இந்நூல் பள்ளிகளில் உள்ள பாடப்புத்தகம் போல் எழுதப்பட்டுள்ளது. மனிதன் தோன்றிய பரிணாம வளர்ச்சி. அதில் உழைப்பின் பாத்திரம் என்று துவங்காமல் நேரடியாக குரங்கு மனிதர்களிடமிருந்து துவங்குகிறது. டார்வின் பெயர் கூட பதிவு செய்யப்படவில்லை.

மேலும் வரலாற்று நிகழ்வுகள் நிறைய தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால் வரலாற்றுப் பொருள் மு... வாத கண்ணோட்டத்தில் இந்த வளர்ச்சிகள் பார்க்கப்படவில்லை பதிவு செய்யப்படவில்லை. நிகழ்வுகளின் தொகுப்பாக நூல் மாறிவிட்டது. அடுத்த பதிப்பில் இதை ஆதனூர் சோழன் நிறைவு செய்வார் என எதிர்பார்க்கலாம்.

-

வெளியீடு:

நக்கீரன்

105, ஜானிஜான்கான் சாலை

இராயப் பேட்டை

சென்னை - 600014

பக்கங்கள் 384

விலை ரூ. 200.

Pin It