கவிதை என்பது மனமொழியின் சீரான அணிவகுப்பு. மனதை வசீகரமான விதத்தில் வியாபித்து ஆக்கிரமிக்கிற-வசியப்படுத்துகிற - இனிய உணர்வு.

கவிஞனின் குணாம்சம், தத்துவச்சாய்மானம், இலக்கியப்புரிதல் எல்லாம் சேர்ந்து தான் கவிதைகளை நிர்ணயிக்கும்.

மனதைக் குடைகிற - தனி மனித மனதின் மர்மச் சலனங்கள் கண்டு வியக்கிறவனிடமிருந்து மனஉலக இருள் ஒளி வெளிக் குணமிக்க கவிதைகளே வெளிப்படும்.

சமுதாயத்தைக் குடைகிற-சமுதாயப் பொது வெளியின் நிகழ்வுக் காரணங்கள் பற்றி யோசிக்கிறவனிடமிருந்து சமூக வெளிக்கவிதைகளே வெளிப்படும். இத்துடன் அரசியல் சாய்மானமுள்ளவனாகவும் இருந்து விட்டால், சமகால அரசியல் நிகழ்வுகளே கவிதைகளாக வெளிப்படும்.

அப்படிப்பட்டவைதான் ப.கவிதாகுமாரின் 'தலைப்பை இன்னும் யோசிக்கவில்லை' என்ற அவரது ஐந்தாவது தொகுப்பிலுள்ள அனைத்துக் கவிதைகளும்.

அரசியல் பேசினால் கவிதையின் அழகியல் காணாமற்போய்டிவிடும் என்கிற கோட்பாட்டுக் குழப்பம் இவருக்கு இல்லை. அரசியல் பேசுவதற்கான மொழிக் குரலாகவே இந்தக் கவிதைகள்.

'இது தான் தமிழ்நாடு' என்ற முதற்பக்கமே தன்னுடைய சமூகக் கோபத்தை பிரகடனப்படுத்துகிறது.

"மரணம் போல மாறிவிட்டது/ மின்சாரம்/ எப்போது வருமென்று தெரியவில்லை"

"சூரியன் ஆட்சியில்/ மெழுகுவர்த்திகளின்/ அணி வகுப்பு"

இருட்டைவிரட்ட/ சிக்கி முக்கி கல்லெடுத்து/ நெருப்பை பற்றவை/ அதை/ நெருங்கி வரும்/ தேர்தலின் போது/ நெஞ்சில் தைத்து வை,

காங்கிரஸ் ஆட்சியின் அமெரிக்க அடிமை மோகத்தை செவிட்டில் அறைவதுபோல சொல்கிற துணிச்சலான கவிதை" பராக், பராக், சொல்லப் பாதந் தாங்கிகள் அல்ல".

விநாயகர் சதுர்த்தி விழாவின் கொண்டாட்ட சித்தரிப்பில் ஒரு சேர இந்துத்துவா விமர்சனமும், சமூக அவலமும் அம்பலமாகிறது.

'அடையாளம்' வித்தியாசமான தனித்துவமான கவிதை. தூங்காநகரமும் சிறப்பான கவிதை.

இதுபோன்ற தெறிப்பான கவிதைகள் நிறைய இருக்கின்றன.

உள்ளடக்க அரசியல், வெளிப்பாட்டுத் துணிச்சல், வார்த்தைத் தெறிப்பின் மனக்கோபம் எல்லாம் நன்றாக இருக்கின்றன.

அவசரகதியில் வடிவமைத்து வெளிப்பட்டிருக்கிற கவிதைகள், இன்னும் சற்று நிதானப்பட்டு, மொழியை இன்னும் சற்று வசக்கி, தன் ஆளுமைக்குட்படுத்தி... செறிவும் கச்சிதமுமாக வெளிப்படுத்தியிருந்தால். . இன்னும் சற்று கூடுதலான கவித்துவமும், வசீகரமும் கிடைத்திருக்கும். ஆயினும், மன உளைச்சல்களையும், மனஇருள் உலக நிகழ்வுகளையும் கவிதைகளின் பாடு பொருளாக்கிக் கொண்டிருக்கிற காலச்சூழலில், அரசியல் சமூக முரண்களை பாடு பொருளாக்கியிருக்கும் இக்கவிதை நூலை நிச்சயமாக தமிழுலகம் வரவேற்கும்.

-

கயல் வெளியீட்டகம்

டி-1, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக்குடியிருப்பு

சொக்கிகுளம், மதுரை-2

விலை: ரூ. 50. 00

Pin It