எவ்வளவோ நான்கு சக்கரங்களுக்குப்
பின்னால் இருந்தது
எங்களுடைய வாகனம்.
‘ஹை. . ஹை. . ஹை’
முன்னால் இல்லாத மாடுகளை
பாவனைச் சாட்டை உயர்த்தி
விரட்டிவந்த பையனிடம் கேட்டோம்
‘விபத்தா?’ என.
தெரியாது என்பதை
உதட்டைப் பிதுக்கி, கை விரித்து
மறுபடி பாவனை சாட்டை உயர்த்தி
‘ஹை. . ஹை. . ஹை’
என்று நகர்ந்தான்.
பிய்த்துப் பிடித்துகொண்டு
ஓடத் துவங்கியிருந்தன
எங்களுக்குப் பின்னால் இருந்த
எல்லா வாகனங்களையும் தாண்டி
அவனுடைய
இல்லாத மாடுகள்.

*

இத்தனை காலமும்.

ஆச்சி இறந்து
அனேக காலம் ஆயிற்று.
அவளுடைய மர அலமாரியில்
வேறெதையோ தேடுகையில்
கிடைத்தது
ஆச்சியின் ஊதா சோப்பு டப்பாவும்
அதற்குள் இருந்த லைபாய் சோப் துண்டும்.
எந்த ஆற்றில் அவள் குளிக்கையில்
தவறி விழுந்ததோ,
எல்லா பக்கத்திலும் முள் முள்ளாக
மணல் ஒட்டியிருந்தது சோப்பில்.
தெரியாமல் போயிற்று
இத்தனை காலமும்
ஓடிக் கொண்டிருந்திருக்கிறது
மர அலமாரிக்குள் ஒரு
மணலுள்ள ஆறு என்று.

- கல்யாண்ஜி

Pin It