மூலம்: ஜான் கீட்ஸ்
தமிழில்: கலாமணியன்

விஷமருந்தியது போல இதயம் வலிக்கிறது
புலன்கள் மங்கலாக-
போதையில் உணர்வுகள் வழிந்தோட
வெறுமையான இதயத்தோடு
மூழ்கிக் கொண்டிருக்கிறேன்.
லித் நதி அளிக்கும்
மறதி நீரைத் தேடிப்
போகிறேன்

ஒளிச்சிறகோடு நீ!
வன தேவதைகளோடு
இனிமையான கவிதைகளைக்
கூவிக்கொண்டு
பசுமையின்
கணக்கற்ற பிம்பங்களோடு
வசந்தத்தின் கவிதைகளைக்
கூவிக்கொண்டு

பொறாமையால் அல்ல
உன்னோடு உன் மகிழ்ச்சியைப்
பகிர்ந்து கொள்ள வேண்டி

நிலம் அளித்த திராட்சை ரசம்
மலர் அளித்த மதுவுடன்
நடனம், வசந்தத்தின் பாடல்
இதமான சூரியன், உடன்
இளம்தென்றல்
ஆஹா! முழுவதும் உண்மையாக

இதழின் விளிம்பில்
விழி மூடித் திறக்கும் குமிழ்கள்
உலகின் கண்களில் படாமல்
அதை நானும் குடிக்கலாம்
உன்னோடு
வனத்தில் கரைந்து போகலாம்

மறைந்து போ! கரைந்து போ!
மறந்து போ!
சோர்வு, காய்ச்சல், வசவுகள், புலம்பல்கள்
முனகல்களைக் கேட்டுக் கொண்டு
வலிப்பு சிலரை உலுக்கிக் கொண்டு
துயரமான இறுதியில்
தலையில் சில கறுப்பு மயிர்கள்
எலும்பாக மெலிந்து
வெளுத்துப் போன இளமை,
மேலும் செத்துப் போய் உயிரோடு

மொத்தமும் துயரம் தான்
விரக்தியால் கனத்துத் தொங்கும் இமைகள்
அழகின் கண்கள் எங்கே?
நாளைக்கும் அப்பால்
ஒரு புதிய காதல்

போ! போ! பறந்து வருகிறேன் உன்னிடம்
மது அரசனின் தேர்களிலேறி அல்ல
இலக்கற்ற கவிதையின்
சிறகிலேறி வருகிறேன்.

மந்தமான மூளை திகைக்கிறது.
தயக்கமாக
நான் ஏற்கெனவே உன்னுடன்
நிலவரசி தன் அரியணையில்
நட்சத்திரத் தோழிகளுடன்
தேவதைகள் சூழ!
ஆனால், இங்கே அங்கே
ஒளியேயில்லை
கரடு முரடான இருளில்
சுழன்று குழப்பும் பாதையில்
சொர்க்கத்தின் தென்றல்
எங்கே செல்லும்
 
ஆனால், சூழ்ந்த இருளுக்குள்
காலடியில் என்னென்ன பூக்கள்
பார்க்க முடியவில்லை
மலர்க்கொடியின் வாசனை என்ன
உணர முடியவில்லை
இனிமைகளை நினைக்க முடிகிறது
புற்கள், புதர்கள், பழமேந்திய மரங்கள்
வெண்மையான அல்லி
இனிமையான மது,
பசுமையான வெளி
வசந்தத்தின் முதல் மகள் ரோஜா
ஈக்களின் இரைச்சல்
இன்னும் எத்தனையோ

இருளே! கவனித்துக் கொண்டிருக்கிறேன்
எத்தனையோ முறை மரணத்தை
அரைகுறையாக விரும்பியுமிருக்கிறேன்
அருமையான செல்லப்பெயர்களால்
அழைத்துமிருக்கிறேன்
-எதுகைமோனையோடு

என் மூச்சை எடுத்துக் கொள்
சாவதற்கான என் தகுதி
முன்னை விட அதிகமாக
ஓ! இன்னும் பாடிக் கொண்டா இருக்கிறாய்
என் காதுகள் வீணாக உள்ளது.

நீ இறப்பதற்காகப் பிறக்கவில்லை
சாகாவரம் பெற்ற பறவையே
உன்னைத் தரையிலே வீழ்த்த
பசித்த தலைமுறைகளில்லை

கடந்து செல்லும் இரவின் குரல்
என் காதுகளில்-ஒரு வேளை
அந்தப்பாடல் தன்
பாதையைக் கண்டடைந்திருக்கும்

அன்னிய நிலத்தில்
விழிநீர் வழிந்தோட
இரக்கத்தின் சோகமான
இதயத்தின் வழியாக
இல்லம் தேடி நிற்கிறது
புறக்கணிக்கப்பட்ட வெளியில்
இரக்கம்

காலத்திற்குரிமையான
மந்திரப் பெட்டிகளிலிருந்து
துன்பக்கடல் நுரைத்துப்
பொங்கும்

மணியோசை போல ஒலிக்கும்
‘புறக்கணிக்கப்பட்ட’
என்ற வார்த்தை
உன்னிடமிருந்து என்னைப்
புறக்கணிக்கும்
போய் வா!
விரும்பினாலும்
கற்பனைகளாலும் ஏமாற்ற முடியாது
போய் வா! போய் வா!
அந்தப் புல்வெளியில்,
மலை உச்சியில்,
சலசலக்கும் நீரோடைகளின் மேலே
தேய்ந்து மறைகிறது கீதம்
கற்பனையா? பகல் கனவா?
நான் விழித்திருக்கிறேனா? இல்லையா?

Pin It