சாக்கடைப் பெருச்சாளிகளைப்போல
ஊழல் பெருச்சாளிகள்
பெருத்து விட்டார்கள்.
அரைகுறையாக இல்லாமல்
துறைரீதியாக களமிறங்கி
சுரண்ட சுரண்ட இந்திய மானம்
தேசிய அரங்கில்
குறைந்து கொண்டே போகிறது.

பீத்துணிகளை இழுத்து வரும்
பெருச்சாளிகளாய்
மந்திரிமார்கள் மாறிப்போனதால்
தேசமெங்கும் ஊழலின் நாற்றம்.

இந்திய வரைபடத்தில்
தூரமாயிருந்தாலும்
ஊழல் வரைபடத்தில்
தொட்டு விடும் தூரத்தில்தான் இருக்கிறது
தமிழ்நாடும், திஹாரும்.
அசத்தப்போவது யாரு போல
அடுத்தது யாரு என தில்லியில் கேட்கிறார்கள்.

கார்கில் சவப்பெட்டிகளின் மூலம்
பணப்பெட்டிகளை நிரப்பிய
காவிக்கூட்டம்
ஊழல் ஒழிப்பு என்கிறது.
சாதுக்கள் என்ற பெயரில்
சத்ருக்களைக் களமிறக்கி விடுகிறது.

கதரானாலும், காவியானாலும்
நிறபேதமில்லாமல்
நிரப்புகின்றன கறுப்புப்பணத்தை.
அதற்கெதிரான போராட்டத்தில்
சிவப்புக்கொடிகளே
சினம் கொண்டு எழுகின்றன.
 
பிரிட்டிஷாருக்கு வால் பிடித்தவர்கள்
அமெரிக்காவுக்குத் தோள் கொடுக்கிறார்கள்.
தூக்குக் கயிற்றின் நுனியில்
துப்பாக்கிக் குண்டின் முத்தத்தில்
பெறப்பட்ட சுதந்திரத்தை
கையெழுத்துகளின் மூலம்
காலி செய்யப்பார்க்கிறார்கள்.
ஆட்சியைப் பாதுகாக்க
நினைப்பவர்களிடமிருந்து
நாட்டைப் பாதுகாக்க
மீண்டும் துவங்க வேண்டும்
இன்னுமொரு சுதந்திரப் போர்!

Pin It