இளமதி பதில்கள்

எஸ்.அழகப்பன், தேவக்கோட்டை.

உலகக் கோப்பை கால்பந்தாட்டங்களைப் பார்த்து ரசித்தீர்களா?

நம்ம நாட்டு நேரப்படி நடுராத்திரியில் ஆடினால் எங்கே பார்ப்பது? மறுநாள்தான் பார்த்தேன், முதல் மூன்று இடங்களும் ஐரோப்பிய தேசங்களுக்கே போனதில் வருத்தம். இந்த உருகுவேகாரர்கள் வருவார்கள் என்று பார்த்தால் நடக்கவில்லை. இதுலே ஆக்டோபஸ் ஆருடம் என்று வேறு தொலைக் காட்சிக்காரர்கள் எரிச்சலைக் கிளப்பினார்கள். இரண்டு பெட்டிகளில் உணவு வைத்தால் அதில் ஒன்றில் தானே அது எடுக்கும். ஸ்பெயின்-நெதர்லாந்து என்று அந்தப் பெட்டிகளில் எழுதாமல் இந்தியா -பாகிஸ்தான் என்று எழுதியிருந்தாலும் கூட இரண்டில் ஒன்று ஜெயிக்கும் என்றுதான் அது சொல்லியிருக்கும். இந்த எளிய உண்மையையும் மறைத்து இந்த நவீன ஊடகங்கள் மூடநம்பிக்கையை வளர்க்கின்றன.

கே.குமரகுரு, சென்னை.

‘தமிங்கிலம்’ எனும் திமிங்கிலம் தமிழை விழுங்கி வருவதாக “தினமணி” யில் (8-7-10) எழுதியிருப்பதைப் பார்த்தீர்களா?

அது உண்மைதானே? ஆங்கிலச் சொற்கள் கலக்காமல் எங்கே நம்மால் பேச முடிகிறது? அப்படி பேச வேண்டும் என்கிற உணர்வை நமக்கு நாமே வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. அதனால் தான் ‘பழகுதமிழ் இயக்கம்’ என்பதைத் துவக்கியிருக்கிறது  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம். இயன்றவரை ஆங்கிலக் கலப்பற்ற பழகு தமிழில் நாம் நமக்குள்ளும், நம் கூட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் த.மு.எ.க.ச. வினரின் குடும்பங்களுக்குள்ளும், குழந்தைகளிடத்திலும் பேசுவது, பிறரையும் பேசப் பழக்குவது. நாம் கூறுவது வறட்டுத்தனமான தனித்தமிழ் அல்ல. ஒவ்வொரு சொல்லுக்கும் தூய இலக்கண சுத்தமான பழந்தமிழ்ச் சொல்லைத் தேடிக் கொண்டிருப்பதல்ல. நாட்டுப்புற வட்டார வழக்குச் சொற்களை மதிக்கிற ஓர் இயல்பான பழகுதமிழ்தான் நாம் வற்புறுத்துவது” என்று தனது இயக்கத்தை அருமையாக அது விளக்கியிருக்கிறது. இந்த இயக்கம் வீறுகொண்டால் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் ஒரு முக்கிய பங்களிப்பாக இருக்கும்.

என்.கே.கணேசன், விழுப்புரம்

“ராமன்தான் இந்தியப் பண்பாட்டின் முகவரி” என்று பழ.கருப்பையா பேசியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ராமன்தான் முகவரி என்கிறார். வால்மீகி ராமாயணத்திலோ அவன் சூத்திரன் சம்புகனை-தவம் செய்தான் என்பதற்காக-வதம் செய்தது பிரமாதமாகச் சொல்லப்பட்டுள்ளது. இதுவும் இந்தியப் பண்பாடு என்கிறாரா? இந்தியா என்றால் ராமன் மட்டுமல்ல அக்பர், கபீர், குருநானக் போன்ற மேதைகளும் ஞானிகளும் உள்ளடங்கியது. அவர்களை எல்லாம் சொல்லாமல் ராமனை மட்டும் சொல்வது, இந்துத்துவா முகவரிக்கு வழிகாட்டுவதாகப் போய்விடும்.

எஸ்.ஜி.வடிவேலு, ராமனாதபுரம்

இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்கிறார்கள், அடித்துக் கொல்கிறார்கள். இந்திய அரசு எதும் செய்வதாகத் தெரியவில்லையே..?

தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பகுதிக்குள் போவதால் தான் பிரச்சனை வருகிறது என்கிறார்கள் நமது கடலோரப் பகுதி கண்காணிப்புப் படையினர். அதில் உண்மை இருக்கலாம். அதற்காக அவர்களைக் கொல்ல வேண்டுமா? கைது செய்து இந்திய படையினரிடம் ஒப்படைக்கலாமே. ஏனிந்த கொடூரச் செயல்? ஓர் அமெரிக்கனை வெளிநாட்டார் சுட்டுக் கொன்றால் அந்த அரசு பொங்கி எழுந்து விடும். இங்கோ எத்தனை இந்தியர்களை இலங்கைப் படையினர் கொன்றாலும் கண்டு கொள்வதில்லை இந்திய அரசு. இதிலே வெட்கக் கேடு ப.சிதம்பரம் எனும் தமிழர்தான் உள்துறை அமைச்சர்!

ஒய்.மோகன்ராம், திருச்சி

சமீபத்தில் தாங்கள் ரசித்துப் படித்த புத்தகம் எது?

ஸ்டேன்லி வொல்பெர்ட் எழுதிய “பாகிஸ்தானின் ஜின்னா”. உங்களுக்குத் தெரியுமா? முதலில் காங்கிரசில்தான் இருந்தார் ஜின்னா. பிரபலமான வக்கீல். திலகருக்காகக் கூட ஒரு வழக்கை வாதாடி ஜெயித்துத் தந்திருக்கிறார். 1930 களில்தான் அவர் காங்கிரஸ் மீதான நம்பிக்கையை முழுசாக இழந்தார். அதிலும் 1937- 39 காலத்தில் வடமாகாணங்களில் இருந்த காங்கிரஸ் அரசுகள் முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்பட்டதைக் கண்டுதான் “பாகிஸ்தான்” கோரிக்கையை எழுப்ப ஆரம்பித்தார். இந்தக்காலத்தில் தான் இந்துத்துவாவாதிகள் தீவிரமாகப் புறப்பட்டார்கள். அவர்களுக்கான பதிலடி போல இவரின் செயல் பாடுகளும் அமைந்துபோயின. ஜின்னாவின் காதல் வாழ்வு பற்றியும் இந்த நூலில் சில சுவாரசியமான தகவல்கள் உண்டு.

வி.கே. அஜ்மல்கான். வேலூர்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் பற்றி  ‘பொய் சொல்லக் கூடாது” என்று கே.எம்.விஜயன் எழுதி யிருப்பதைப் பார்த்தீர்களா?

“விஜயனும் பொய் சொல்லக்கூடாது” என்று இதற்குச் சரியான பதிலடி தந்திருக்கிறாரே சிகரம் ச.செந்தில்நாதன். இந்த விஜயன் எப்போதுமே சமூகநீதிக்கு எதிராகச் செயல்படுகிறவர். தமிழகத்தின்

69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து வழக்குப் போட்டவர். நல்லவேளையாக அந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு சாதகமான தீர்ப்பைத் தந்திருக்கிறது. மேலும் ஒராண்டுக்கு அந்த இடஒதுக்கீடு தொடரப் போகிறது.“தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் என்ற விவரத்தை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஆதாரத்துடன் தமிழக அரசு வழங்க வேண்டும்” என்றும் அந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளார்கள். சாதிவாரியான கணக்கெடுப்பின் தேவையை இது மேலும் உணர்த்தி நிற்கிறது.

வி.எஸ். ஆதப்பன். ஸ்ரீரங்கம்

ஆ.இரா.வேங்கடாசலபதி பதிப்பித்துள்ள வ.உ.சி. எழுதிய “திலக மகரிஷி” வாழ்க்கை வரலாற்று நூலைப் படித்தீர்களா?

விஸ்வநாத் பிரசாத் வர்மா என்பவர் “லோகமான்ய திலகரின் வாழ்வும் தத்துவமும்” என்று 1970-களில் அவரின் வாழ்வை விரிவாக எழுதியிருக்கிறார்.

பக்தி பூர்வமாக எழுதப்பட்ட அந்த நூலும் 1930 களில் வ.உ.சி எழுதிய இந்த நூலும் பெரிதும் பொருந்தி வருவது கண்டு ஆச்சரியப் பட்டேன். எந்த அளவுக்கு நூல் நாயகரின் நோக்கிலிருந்து அவரது வாழ்வைச் சொல்லியிருக்கிறார் வஉ.சி. இதன் காரணமாக திலகரின் வருணாசிரம ஆதரவுச் சிந்தனைகள் மற்றும் செயல்பாடுகளையும் நியாயம் போல விவரித்துச் செல்கிறார். 1920 களிலேயே பெரியாரோடு சேர்ந்து வகுப்புவாரி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர். 1930 களிலும் சுயமரியாதை இயக்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர் வ.உ.சி. அப்படிப்பட்டவர் இன்னொருவரின் வாழ்வை எழுதும்போது அன்னாரின் சகல செயல்பாடுகளையும் பிரமாதப்படுத்தியே விவரித்திருக்கிறார். இந்த நூலை மட்டும் படிக்கிற எவரும் வ.உ.சி. யைத் தவறாகப் புரிந்து கொள்கிற ஆபத்து உள்ளது. ஏனிப்படி எழுதினார்? பதிப்பாசிரியர் கூறுவது போல ‘தம் (அரசியல் ) குருநாதருக்குச் செய்யும் ஒரு அஞ்சலியாகவே ‘இப்படி எழுதி விட்டாரோ?

எம்.குணசீலி, தஞ்சாவூர்

சில குண்டுவெடிப்புச் செயல்களில் ஆர்.எஸ். எஸ். காரர்களின் தொடர்பு உறுதியாகி வருகிறதாமே?

தங்களது அலுவலகத்திற்குத் தாங்களே குண்டு வைத்துவிட்டு முஸ்லிம்கள் மீது பழிபோடக் கூடிய சதிகாரர்கள் அவர்கள். முஸ்லிம்கள் கூடும் இடத்தில் அவர்கள் குண்டு வைத்தால் அதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆர்.எஸ்.எஸ் சின் மத்திய செயற்குழு உறுப்பினரான இந்திரேஷ் குமார் என்பவர் இப்போது பிடிபட்டிருக்கிறார். ‘ஹெட்லைன்ஸ் டுடே’ எனும் தொலைக்காட்சியில் இது பற்றிய ரகசிய பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள். உண்மை தெரிந்து போனதே என ஆத்திரமடைந்த ஆர்.எஸ்.எஸ் காரர்கள் அந்த அலுவலகத்தைத் தாக்கினார்கள்.அதையும் அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. எதையும் செய்வார்கள் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என்பதே வரலாற்று உண்மை; வாழ்க்கை நடப்பு.

Pin It