இந்த உலகின் அனைத்து செல்வந்தர்களின் கையில் குவிந்துள்ள மூலதனத்தைக் காட்டிலும், மதிப்புமிகுந்தது ஒரு மனிதனின் வாழ்க்கை - சே குவேரா

திருப்பூர் பூம்புகார் நகரை சேர்ந்தவர் குபேரன் (35), அவரின் மனைவி கலையரசி(30) இருவரும் பனியன் தொழிலாளர்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள். கடந்த ஆறு மாதங்களாக சரியாக வேலை இல்லாததால், சிலரிடம் கடன் வாங்கினர். அதை திருப்பிச் செலுத்த முடியவில்லை. கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. குபேரன் வீட்டுக்கு, சென்னையிலிருந்து வந்த உறவினர்கள் பேசிக் கொண்டிருக்கையிலும் வாய்த்தகராறு ஏற்பட்டது. வீட்டுக்கு எதிரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வேகமாய் சென்ற கலையரசி, சேலையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொள்ள முயற்சிக்கிறார்கள். கலையரசி பற்றிய பதட்டத்துடன் ஓடிவந்த கணவர் குபேரன் ஆம்புலன்சு அருகிலேயே விபத்துக்குள்ளாகினார். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர்...

இந்த சம்பவம் ஒரு உதாரணம்தான், திருப்பூர் மாவட்டத்தில் மாதத்திற்கு சுமார் 52 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர். ஒரு நாளைக்கு ஒன்றுக்கும் அதிகமானோர். புள்ளிவிபரங்களாகப் பார்த்தால் இவை வெறும் எண்ணிக்கைகளாகத் தோன்றும். ஆனால், ஒவ்வொரு எண்ணும், ஒரு குடும்பத்தை நிலைகுலையச் செய்கிறது.

திருப்பூரில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் தற்கொலை அளவு தமிழக சராசரியைக் காட்டிலும் கூடுதலாக இருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் (தமிழ்) மற்றும் பிரண்ட்லைன் இதழ்களில் ஆய்வுக் கட்டுரைகள் வெளியாகின. அப்போது ஒரு ஆண்டுக்கு நடைபெற்றுவந்த தற்கொலைகளின் எண்ணிக்கை 491 ஆக என்சிஆர்பி (தேசிய குற்றப்பதிவு ஆணையம்) பதிவு செய்தது. ஆனால், தற்போதைய பதிவுகளைப் பார்க்கும்போது 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தற்கொலை அளவுகள் திருத்தப்பட்டு 542 என்று பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதாவது 51 தற்கொலைகள் மறைக்கப்பட்டு, பின்னர் சேர்க்கப்பட்டுள்ளன. பின்னர் 2010 ஆம் ஆண்டில் 535 தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக என்சிஆர்பி தெரிவிக்கிறது. 2011 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் வரையில் 350 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. அதாவது மாதம் 44 ஆக இருந்தது 50 ஆக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 72 தற்கொலைகள் அதிகரிப்பது என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாகும். அத்துடன் பெரும்பாலானோர் உள்ளூர்காரர்களாகவும், 40 வயதுக்குக் கீழானவர்களாகவும், ஆண்களாகவும் இருக்கிறார்கள்.

தற்கொலைகள் குறித்த பொதுவான மதிப்பீட்டினை வைத்து திருப்பூரின் நிலைமையை நாம் ஆய்வு செய்திட முடியாது. இந்தியாவின் பிற பகுதிகளைப் போல அல்லாமல் பெண்களைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமாக ஆண்கள் இங்கே தற்கொலை செய்துகொள்கின்றனர். 2011 ஜூன் மாதம் வரையில் சுமார் 180 ஆண்களும், 60 பெண்களும் என்ற அளவிலே தற்கொலைகள் பதிவாகியிருந்தன. இது, மேற்கத்திய நாடுகளில் காணப்படும் விகிதத்தை ஒத்திருக்கிறது.

உலகமயமாக்கல் கொள்கைகள் கடிவாளமில்லாமல் அமல்படுத்தப்பட்டதன் நேரடி விளைவே இந்த தற்கொலைகள் என்று கூறலாம். 1990-களின் துவக்கத்தில் உலகமயமாக்கலுக்கு பட்டுக் கம்பளம் விரித்ததில் திருப்பூர் லாபமடைந்தது என்றே பலரும் நினைக்கிறார்கள். அது திருப்பூரில் சில முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்க உதவியது உண்மைதான். இருந்தாலும், கட்டுப்படுத்தப்படாத மூலதனம், திருப்பூரின் முக்கிய நதியான நொய்யலை சாயக் கழிவு வடிகாலாய் மாற்றியது. அதேபோல திருப்பூரை நோக்கி ஏராளமான தொழிலாளர்கள் ஈர்க்கப்பட்ட போதும், அவர்கள் போதுமான ஊதியமோ, ஓய்வோ இல்லாத நிலைக்கு ஆளாக்கப்பட்டனர்.

“ஒன்னறை சிப்ட் வேலை இருக்குமா?” என்பதுதான் ஒரு நல்ல கம்பெனி குறித்த அளவுகோல். தினமும் 12 மணி நேரம் வேலை கிடைக்குமா? என்பதே இதன் பொருளாகும். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உழைக்காமல் எந்த ஒரு தொழிலாளியும் தன் தேவைக்கு சம்பளம் பெற முடியாது. அப்படி பெறும் ஊதியத்தைக் கொண்டும் திருப்திகரமான வாழ்க்கையை இவர்கள் வாழமுடிவதில்லை. ஒரு சாமானிய வாழ்க்கைக்கு பதிலாக உலகத் தொழிலாளிவர்க்கம் போராடிப் பெற்ற 8 மணி நேர வேலை உரிமையும் இன்ன பிற பணிப் பாதுகாப்புக்களும் தொழிலாளிகளிடம் இருந்து பிடுங்கப்பட்டுள்ளன. பீஸ்ரேட், விடி நைட் போன்ற சுரண்டல் முறைகளும் இங்கே தாராளமாக அரங்கேறுகின்றனதிருப்பூர் கடந்த 2 ஆண்டுகளில் பல நெருக்கடிகளைத் தாண்டியே வந்திருக்கிறது. குறிப்பாக, “அமெரிக்க டாலர் மதிப்பு வீழ்ச்சி, அமெரிக்க நெருக்கடியின் விளைவாக ஆர்டர் குறைவு, பஞ்சு ஏற்றுமதிக்கு வழங்கப்பட்ட அனுமதி, சாய ஆலைகள் மூடல்” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்த நெருக்கடிகளில் எல்லாம் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் தொழிலாளர்களே என்று சொல்லலாம். ஒரு முதலாளி நட்டமடைந்தால் ஏராளம் தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். ஆனால் வேலை நிரந்தரமற்ற தன்மை பராமரிக்கப்படுவதன் காரணமாக அந்தத் தொழிலாளர்கள் தங்கள் வேலை இழப்பை உணர முடிவதில்லை. வாய்க்கும் கைக்குமாக வாழ்ந்துவரும் அவர்கள் ‘வருமானக் குறைவை’ மட்டுமே உணர்கிறார்கள்.

திருப்பூரில் இன்றைக்கு பல கட்டடங்களில் வாடகைக்கு என்ற அட்டை தொங்குகிறது. பல கம்பெனிகள் இயங்கிய கட்டடங்கள் விற்பனைக்காக கடைத்தெருவுக்கு வந்துள்ளன. ஆனாலும், இந்த நெருக்கடியின் சூடு வேலை நீக்கம் என்ற வடிவில் வெளிப்படவில்லை. ஓரிடத்தில் தொழிலாளிக்கு நிரந்தர வேலை இருந்தால்தானே வேலை நீக்கம் சாத்தியம்?. ஒரு வாகனத்தில் செயல்படும் சாக் அப்சர்வர்களைப் போன்றவைதான் தொழிலாளிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள். அந்த உரிமைகள் இல்லாததால் நேரடியாக நசுக்கப்படுவது தொழிலாளிகளின் வாழ்க்கையாக இருக்கிறது.

திருப்பூரில் நடைபெறும் தற்கொலைகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவை வருமானத்திற்கும் செலவிற்கும் ஏற்படும் இடைவெளியின் காரணமாக ஏற்பட்ட குடும்ப நெருக்கடிகளின் விளைவுகள். குறிப்பிட்ட 20 ஆண்டுகளில் நுகர்வுக் கலாச்சாரமும் கோலோச்சியுள்ளதால் மக்களின் தேவைகள் அதிகரித்துள்ளன, இந்த நிலையில் வருமானம் குறைவது மன அழுத்தத்தை அதிகரிக்கிறது. அடுத்தபடியாக மருத்துவச் செலவுகள் காரணமாக அமைந்துள்ளன. தற்கொலைக்கான வழிமுறைகளில் விஷம் உட்கொள்வதே பிரதானமாக இருப்பது, தற்கொலையைத் தேடுபவர்கள் உணர்ச்சிவயப்பட்டு மரணிப்பதில்லை, சூழலின் நெருக்கடி தாளாமலே இந்த முடிவை தேடுகிறார்கள் என்ற உளவியலை தெளிவாகக் காட்டுகிறது.

ஆனால், அரசு கொடுக்கும் விபரங்களைப் பார்த்தால் எல்லாக் காரணங்களைக் காட்டிலும் வயிற்றுவலியே பிரதானக் காரணமாக இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து நம்மால் தற்கொலைகள் குறித்த எந்த முடிவிற்கும் வரமுடியாது.

அதிகரிக்கும் தற்கொலைகள் குறித்த தொழிலாளிவர்க்க, இடதுசாரிப் பார்வை மக்களிடையே எடுத்துச் செல்லப்படவில்லை என்பது வருந்தத்தக்கதாகும். இதனால் மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கண் துடைப்பு நடவடிக்கைகளே இதுவரையில் குறிப்பிடத்தக்க தற்கொலைத் தடுப்பு நடவடிக்கைளாக அமைந்துள்ளன. இப்போது மாதம் 50 என்ற அளவிலே தற்கொலைகள் அதிகரித்துள்ள நிலையில் இதுகுறித்து வருத்தப்படும் நிலை கடந்துவிட்டது. அதுவும் 3 வருடங்களாக இப்பிரச்னை குறித்து செய்திகள் ஏராளம் வெளியாகிவிட்டன. இப்பிரச்னைக்கு தீர்வு என்ன?, சாவுகளின் எண்ணிக்கையை குறைப்பது எப்படி என்பதே நம் முன் எழும் கேள்வி. தற்கொலைகளுக்கு எதிராகப் போராடுவது சாத்தியமற்றது. ஆனால், தற்கொலைக்கு காரணமான சூழ்நிலைகளை மாற்ற போராட வேண்டும். இதற்கு தேவையான நடவடிக்கைகளை நாம் கீழ்கண்டவாறு வகைப்படுத்தலாம். அபாயம் குறித்த விழிப்புணர்வு, நேரடி தலையீடு, சூழலுக்கு எதிரான தலையீடு, உளவியல் ஆய்வு விழிப்புணர்வு பிரச்சாரம், தற்கொலைக்கு எதிரான, திருப்பூரில் நிலவும் வேலைச் சூழலுக்கு எதிரான உணர்வு கொண்டவர்களை ஒரே தளத்தில் இணைத்திட இந்த நடவடிக்கைகள் உதவும். இதன் அடிப்படையிலான நேரடி தலையீடு தற்கொலைகளை குறைக்கலாம். உதாரணமாக 108 ஆம்புலன்சுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் வருடத்திற்கு சுமார் 74 தற்கொலை முயற்சி செய்தவர்களும், விஷம் உட்கொண்டவர்கள் 822 பேரும், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் 746 பேரும் தொடர்புகொண்டுள்ளனர். இதுபோல, தற்கொலை எண்ணம் ஏற்படும்போதே, அதனை தடுப்பதற்கான வாய்ப்புகள், ஆலோசனை பெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதே நேரத்தில், வேலைச் சூழலுக்கு எதிரான நேரடி இயக்கங்களும், உளவியல் குறித்த ஆய்வும் நிரந்தரத் தீர்விற்கு வழிகோலும்.

கடந்த 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் அதிக அளவில் தற்கொலைகள் நடப்பதாக செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டதில், அதிக அளவிலான தற்கொலைகளில் பெண்களே ஈடுபடுவதாகவும். தமிழகத்தில் 1 லட்சத்திற்கு 148 என்ற அளவில் பெண்களும், ஒரு லட்சத்திற்கு 58 என்ற அளவிலே ஆண்களும் தற்கொலை செய்துகொள்வதாகக் கூறினர். இந்தத் தற்கொலைகள், சொந்த பிரச்னைகளாலும், தேர்வுத் தோல்விகளாலும், காதல் தோல்விகளாலும் ஏற்படுவதாக காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது திருப்பூரில் நடக்கும் தற்கொலைகள் இந்த வகையிலானவை அல்ல. குறிப்பாக ஆண்கள் அதிக அளவில் தற்கொலை செய்வது என்பது பொருளாதார ரீதியாகவும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயமாகும். சொந்த பிரச்சனைகள் அல்லது ஒழுக்கமற்றவர்கள் என இவர்களை சிலர் பழித்துக் கூறுவது மிகவும் மேலோட்டமானது மட்டுமல்ல இழிவான கருத்தும் ஆகும். சமூக கருத்து நோக்கில் தற்கொலைப் பிரச்னையை அணுகி அரசியல் ரீதியாக கோரிக்கை வைக்க வேண்டும்.

பிரச்னையை வெளிக்கொணர உதவியாய் இருப்பவையே புள்ளிவிபரங்கள் தான் ஆனால், ஏற்கனவே சொன்னபடி 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற தற்கொலைகளில் 51 கூடுதலாக்கப்பட்டுள்ளன. பிற காரணங்களைக் காட்டிலும் வயிற்று வலியே பல மரணங்களுக்கு காரணமாக பதியப்பட்டுள்ளன. என்பது உண்மையை யாரும் கண்டுவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் செய்யப்படும் கையாடல்களாகவே படுகின்றன.

திருப்பூரில் 8 மணி நேர வேலை, ஞாயிறு விடுமுறை ஆகிய கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கங்கள் குரல் கொடுத்துவந்தாலும், பெரும்பாலான தொழிலாளர்களுக்கு இக்கோரிக்கைகளின் அவசியமே உணர்த்தப்படவில்லை. அத்துடன், நியாயமான கூலியின் அவசியம் அறிந்திடாத அவர்கள், சமூகப் பாதுகாப்பற்ற, அதிக நேரச் சுரண்டலை தானே தேடும் நிலையும் இருக்கிறது. ஒரே கம்பெனியில் நிரந்தரமாக வேலை செய்திட அனுமதிக்கப்படுவதில்லை. தொழிலாளர்கள் மட்டுமல்லாது சிறு உற்பத்தியாளர்களும், பொதுப் போக்குவரத்து உடைமையாளர்கள் உள்ளிட்ட உப தொழில்களும் இந்த நிரந்தரமற்ற தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளன. இவையே, தொழில் நெருக்கடி நேரடியாக எளிய மக்களைத் தாக்கும் நிலை ஏற்பட்டதற்கான காரணம் ஆகும்.

Pin It