இன்றைய சூழலில் உலகமயமாக்கலும், வகுப்புவாதமும் சேர்ந்து உருவாக்கியுள்ள பொதுச் சிந்தனையை சீர்குலைக்க வேண்டுமெனில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை உருவாக்குவதன் மூலமே சாத்தியமாகும். அடிப்படையில் வகுப்புவாதத்திற்கெதிரான கலாச்சாரத்தை ஏற்படுத்துவதாகும்.

வகுப்புவாதம் பெரும்பான்மை, சிறுபான்மையினரால் உருவாக்கப்படுவது மட்டுமல்ல. அது உணர்வு பூர்வமான கருத்துநிலை ஆகும். இந்த கருத்தியலுக்கு வடிவம் கொடுப்பதில் கலாச்சாரத்தின் பங்கு மிக முக்கியமானது. வகுப்புவாதம் தனக்கான புதிய கலாச்சாரத்தை உருவாக்கிட, ஏற்கனவே நீடித்துக் கொண்டிருக்கும் சமூகத்தின் கலாச்சாரத்தில் இருந்து சிலவற்றை உட்கொண்டு வளர்த்துக் கொள்கிறது. இதற்கு ஒத்த நடவடிக்கைகளை மதமும், ஆன்மிகமும் உருவாக்கிக் கொடுக்கிறது.

வகுப்புவாதம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கலை, இலக்கியம், பண்பாடு, கல்வி, கோவில், சமயம் சட்டம் என அனைத்து தளங்களையும் உணர்வு ரீதியாக பயன்படுத்திக் கொள்கிறது. உதாரணமாக கோவில் கட்டுவோம் என்பது கலாச்சாரம் மற்றும் வழிபாடு குறித்து மக்களின் சிந்தனைகளை குறிப்பிட்ட பிரச்சனையில் ஒரு முகப்படுத்துவது அதன் மூலம் தனது வகுப்புவாத நடவடிக்கைகளுக்கான களங்களை விஸ்தரிப்பது என செய்ததை ராமருக்கு கோவில் கட்டும் பிரச்சனையில் பார்க்க முடிந்தது.

அதே போல் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, சேது கால்வாய் திட்டம், பொதுசிவில் சட்டம். காஷ்மீருக்கான 370வது அரசியல் சாசன சிறப்பு பிரிவு போன்றவைகளில் எல்லாம் வகுப்புவாதம் தனது குறுகிய அரசியல் நலனுக்கான நடவடிக்கைகளில் இறங்கியதை பார்க்க முடிந்தது. இதற்கு முன்னர் தேச விடுதலைப் போராட்டத்தில் மத ரீதியாக நாட்டை பிளவு படுத்தியது, அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்கள் பலியாக காரணமாக அமைந்தது. இத்தோடு நூற்றுக்கணக்கான கலவரங்களின் மூலம் தனது வகுப்புவாத நடவடிக்கையை தொடர்ந்து விரிவு படுத்தி வருகிறது.

இந்த முயற்சிகளுக்கு கலாச்சார வடிவங்களும், மக்களின் அன்றாட பழக்கவழக்கங்களும் தூண்டு கோலாக அமையும் வண்ணம் தற்போதைய சூழலில் ஊடகங்களையும், புத்தகங்கள், பத்திரிக்கை வெளியீடுகளையும் பயன்படுத்திக் கொள்கிறது. கோவில்களில் விளக்கு பூஜைகளில் பெண்களை ஈடுபடுத்துவது. பண்டிகை தினங்களை (கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, காளி பூஜை போன்று) பயன்படுத்துவது.

இதில் குறிப்பாக வரலாறு குறித்த பாடநூல்கள், படைப்புகளில் குழந்தைகளுக்காக, மாணவர்களுக்காக வெளியிடப்பட்டுள்ளவற்றில் ஏராளமான தவறான கதைகள், புராணங்கள், படைப்புகளை சொல்லி வருகிறது. இதன் தொடர்ச்சியாக குழந்தைகள், மாணவர்களை குறி வைத்து பல நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதில் இந்தியாவில் 8 சதம் உள்ள பழங்குடியின மக்களில் தங்களது வகுப்புவாத அரசியலை கொண்டு செல்ல ஏகலைவ பள்ளிகளை துவங்கியது.

அதில் தேசபற்று என்பதை அடிப்படையாக கொண்டு பாடத்திட்டங்கள் உருவாக்குகிறோம் என மத அடிப்படைவாத கருத்துகளை திணிக்கும் ஏற்பாடே நடைபெற்றது. இவர்கள் 2013ஆம் ஆண்டுக்குள் “பழங்குடியின சமூகத்திற்கான நண்பர்கள்” என்ற பெயரில் 1 லட்சம் ஏகலைவா பள்ளிகளை துவக்க திட்டமிட்டு தற்போது வரை 28000 பள்ளிகளை துவங்கியுள்ளனர். தமிழகத்திலும் பல மாவட்டங்களில் பழங்குடியின மக்கள் மத்தியில் இந்த பள்ளிகளை துவங்கி வருகின்றனர். இன்னும் 62000 பள்ளிகளை அடுத்த ஐந்தாண்டுக்குள் நாடு முழுவதும் துவங்குவது என்ற தங்களது திட்டத்தை துவங்கியுள்ளனர். இவை அனைத்தும் எப்படி உலகமயம் ஒவ்வொரு தனி நபரையும் குறிவைத்து செயல்படுகிறதோ அதைப் போல வகுப்புவாதமும் ஒவ்வொரு தனிநபரையும் குறிவைத்து செயல்படுகிறது.

குடிமக்கள் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு தனிநபரையும் வகுப்புவாத நடிவடிக்கைக்கு இரையாகாமல் பாதுகாக்க வேண்டுமெனில் அவர்களை மதச்சார்பின்மையின் பக்கம் திசை திருப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது. இதற்கு உள்ளூர் சமூகங்களை வலுவாக பயன்படுத்த வேண்டியது அவசியம். மதச்சார்பற்ற இயக்கங்களுக்கும், அனைவருக்குமான சமத்துவமான சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற பண்பாட்டை கொண்ட இயக்கங்களும் தங்களது தளத்தை விஸ்தரிக்க வேணடியுள்ளது.

இந்தியாவில் வகுப்புவாதத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள், நடவடிக்கைகளை இடதுசாரி கட்சிகள், அதனோடு சார்ந்த வெகுஜன மற்றும் ஜனநாயக அமைப்புகள் செயல்படுத்தி வருகின்றன. வகுப்புவாத கருத்து நிலைக்கு எதிராக குறிப்பிட்ட அளவிலேயே தனது கருத்தாக்கத்தை வெளிப்படுத்துகிறது. இன்னும் தனிநபரை சென்றடைய வேண்டுமெனில் தனி நபரின் அன்றாட வாழ்க்கையின் அம்சமாக நமது பண்பாட்டு நடவடிக்கைகள் மாற வேண்டும்.

அதற்கு டிஒய்எப்ஐ பண்பாட்டு கழகம் மூலம் தமிழகத்தில் நடத்தப்பட்டு வரும் டிஒய்எப்ஐ இரவு பாடசாலைகள் கடந்த 30 ஆண்டுகளாக பரவலாக வகுப்புவாத நடவடிக்கைக்கு எதிராக மதச்சார்பற்ற பண்பாட்டை மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தக் கூடிய மையமாக செயல்பட்டு வருகிறது. விஞ்ஞான ரீதியாக கல்வியை கற்றுக் கொடுக்கும் மையமாக விளங்குகிறது.

உலகமயமாக்கல் பின்னணியில் அனைத்தும் மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது. ஆனால் சாதியும், மதமும் மட்டும் தங்களது அடையாளங்களை உடைக்காமல் பாதுகாத்து வருகின்றன. இதில் உடைப்பை ஏற்படுத்தும் முதல் அடியாக டிஒய்எப்ஐ பாடசாலைகளை பயன்படுத்த முடியும்.

சுனாமியின் போது தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு நூற்றுக்கணக்கான மையங்களில் இரவு பாடசாலைகள் நடத்தப்பட்டது. அந்த மக்களை மனோ ரீதியாக திடப்படுத்தவும், இயற்கையோடு போராடி நம்பிக்கையோடு வாழவும் கற்றுக் கொடுத்தது என்றால் மிகையாகாது. தற்போதும் பல மாவட்டங்களில் இன்றும் பல ஆயிரக்கணக்கான ஏழை, எளிய சாமான்யப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு எழுத்தறிவிக்கும் பணியை “தேடு கல்வி இல்லா ஊரை தீயினுக்கிரையாக்குவோம்” என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப செயல்பட்டு வருகிறது. இதனை தமிழகத்தின் அனைத்து மாவட்டம், வட்டம், ஒன்றியம், நகரங்களுக்கு விரிவு படுத்துவோம். மதச்சார்பற்ற மக்களின் பண்பாட்டை வளர்தெடுப்போம். மக்களுக்கான மாற்று கலாச்சாரத்தை உருவாக்கிடுவோம்.

Pin It