2010 நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஏழை எளிய மசோதா மேலும் கேள்விக்குள்ளாக்கும் விதத்தில் பெரும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் ஆதரவாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ள மத்திய அரசு உயர் கல்வியில் அந்நிய மூலதனத்தை திறந்துவிடும் சட்ட முன்வடிவு அணுசக்தி பொறுப்பு சட்ட முன்வடிவு, உணவு பாதுகாப்பு என்ற பெயரிலான முன்வடிவு போன்ற நாசகரமான மக்கள் விரோத மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்ற துடித்துக் கொண்டுள்ளது.

மார்ச் 15 அந்நிய பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அனுமதிக்கும் சட்ட மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் நாடாளுமன்ற மக்களவையில் இம்மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு கபில்சிபில் இச்சட்டம் நிறைவேற இருப்பதால் மிகப்பெரும் வரலாற்று சாதனை நிகழப்போவதாகவும் இந்திய உயர்கல்வியில் புரட்சி ஏற்படப் போவதாகவும் புலம்பியுள்ளார்.

இந்திய உயர்கல்வித்துறையை முற்றிலும் வணிக மயமாக்கும் நடவடிக்கையை நிறைவேற்றத் துடிக்கும் இம்மசோதாவை கடந்த 5 ஆண்டுகால ஆட்சியில் நிறைவேற்றிட தொடர்ந்து முயற்சித்தது ஐக்கிய முற்போக்கு கூட்டணி. அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவளித்த இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பினால் இந்த மசோதாவும் பல்வோறு நாசகர திட்ட மசோதாக்களும் தடுத்து நிறுத்தப்பட்டன. தற்போது இடதுசாரிகளின் தயவில்லாமல் இருக்கும். மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி இம்மசோதாவை அமல்படுத்த முடிவெடுத்து துடித்துக் கொண்டுள்ளது.

இந்திய அரசு கடைபிடித்து வருகிற தவறான பொருளாதாரக் கொள்கையினால் கல்வித்துறை கடும் வியாபாரமாக்கப்பட்டு வருகிறது. நாட்டின் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள் தனியார் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்கள் புற்றீசல்கள் போல் நாடெங்கும் பெருக்கெடுத்துள்ளன. மேலும் கட்டுக்கடங்காத கல்விக் கட்டணங்கள் குளறுபடியாகியிருக்கும் மாணவர் சேர்க்கையும் பறிக்கப்பட்டுள்ள மாணவர்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்படும் இடஒதுக்கீடு என்று தனியார் கல்வி நிறுவனங்களின் அராஐக நடவடிக்கைகளிலும் இந்தியாவின் ஏழை எளிய மாணவர்களின் கல்வி பெறும் உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை மிக வேகமாக உயர்ந்துவருகிறது. 2001ல் 42.6% இருந்த தனியார் கல்வி நிறுவனங்கள் 2006 ஆம் ஆண்டு 63.21% ஆகவும் 2009ஆம் ஆண்டு 68% ஆகவும் பெருகி வந்துள்ளது.

கல்வியில் தனியார் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் சட்ட அமைப்பை அதற்கேற்றார் போல் மாற்றி கொடுத்து வருகிற அரசுகள் கல்வி கட்டணம் மாணவர் சேர்க்கை பாடத்திட்டம் ஆகியவற்றில் எத்தகைய முடிவு எடுக்கவும் அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளது அரசின் அதிகப்படியான ஊக்குவிப்பினை சுயநிதி கல்லூரிகளும் தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங்களும் குறுகிய காலத்தில் அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்துள்ளன. ஒரு சில மாநிலங்கள் தனியார் பல்கலைக் கழகங்களை உருவாக்க தனி சட்டமே உருவாக்கியுள்ளது. மேலும் வேலைவாய்ப்புக்கு ஏதுவான அனைத்து பாடத்திட்டங்களும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே என்று ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு கல்வி நிறுவனங்களுக்கு மிகவும் பழமையான பாடத்திட்டங்களே இன்றளவும் நடைமுறையில் உள்ளது அப்படியே சில நல்ல பழமையான பாடத்திட்டங்களே இன்றளவும் நடைமுறையில் உள்ளது. அப்படியே சில நல்ல பாடத்திட்டங்கள் அரசு கல்லூரியில் கொண்டுவரப்பட்டாலும் அதுகட்டணம் செலுத்தி படிக்கும் (ஷிமீறீயீ திவீஸீணீநீவீஸீரீ) பாடமாக்கப்பட்டு அது சாதாரண மாணவர்களுக்கு எட்டாக் கனியாகவேதான் இருக்கிறது. தரமானக் கல்வி என்பது காசிருப்பவர்களுக்கும் தரமற்ற கல்வி சாதாரண ஏழை மக்களுக்கும் என்ற நிலை நடைமுறையில் உள்ளது.

தனியார் கல்வி நிறுவனங்கள் சமூகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட வேண்டும். மாணவர் சேர்க்கை அவை வசூலிக்கும் கட்டணங்கள், பாடத்திட்டம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், கல்வித்தரம், தேர்வுகள் உள்பட பல்வேறு அம்சங்களில் தனியார் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டுமென இந்திய மாணவர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது.

உயர்கல்வி தனியார்மயமாக்குவது மற்றும் வணிகமயமாக்குவது என்ற தனது கொள்கையின் காரணமாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தனியார் கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்திடவும் கட்டுப்படுத்தவும் முடியாமல் தோல்வியடைந்து விட்டது. அந்நிறுவனங்கள் அளிக்கும் கல்வியின் தரத்தையும் உறுதிப்படுத்தத் தவறிவிட்டது. தற்போது நமது மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில்சிபில் இந்திய இளைஞர்கள் திறமைசாலிகள் இல்லை அதனால் தான் அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்று பன்னாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் சொன்னதாக புலம்பியுள்ளார். இப்படிப்பட்ட நிலைமையை எதிர்கொள்வதற்கு அவர் புதிய வழியை கண்டுபிடித்துள்ளார்.

கல்வியின் தரத்தையும் திறமைசாலிகளையும் உருவாக்குவது என்ற பெயரில் நமது நாட்டு மக்களை கொள்ளை அடிக்க அந்நிய கல்வி நிறுவனங்களை இங்கே கடை விரிக்க அனுமதிப்பதே இப்பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று கூறியிருக்கிறார்.

இந்திய நாட்டில் அந்நிய மூலதனம் அனுமதிக்கப்பட்டால் அந்நியப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்டதால் கல்விக்கான மூலதனத்தை நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைக்கும் நிலையில் அந்நிய நாட்டு பல்கலைக் கழகங்கள் உருவானால் புதிய பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை உயரும். சர்வதேச தரம் வாய்ந்த கல்வி கிடைக்கும். வெளிநாடுகளை நோக்கி இந்திய மாணவர்கள் செல்ல வேண்டியதில்லை. இங்கேயே தரமான கல்வி பயிலமுடியும். இதனால் அந்நிய செலாவணி பாதுகாக்கப்படும் சர்வதேச அளவில் இந்திய உயர்கல்வியின் தரம் உயரும் என்றும் ஒரு தரப்பினர் வாதிடுகின்றனர்.

அந்நிய நேரடி முதலீடு என்பது முழுக்க முழுக்க லாபத்தை இலக்காகக் கொண்டு இயக்கப்படுகின்ற ஒன்று இந்த இலக்குகள் நிறைவேறவில்லையென்றால் முதலீட்டாளர்கள் தங்கள் இலாபத்தை அதிகரிப்பதையே இலக்காகக் கொண்டிருப்பார்கள் இந்த இலக்கு கல்வி வியாபாரத்திற்குத்தான் வழிவகுக்கும் சிறிதும் கூட சமூக நோக்கம் என்பது இருப்பதற்கு வாய்ப்பில்லை.

அந்நியக் கல்வி நிறுவனங்கள் தங்களது சொந்த லாபத்தை பற்றி மட்டுமே கவலைப்படுமேயன்றி நமது கலாச்சாரத்தைப் பற்றியும் சமூகத்தைப் பற்றியும் கவலைப்படாது. எனவே, இத்தகைய கல்வி நிறுவனங்களால் நமது நாட்டில் பண்பாட்டை, கலாச்சாரத்தை பாதுகாக்கிற விதத்திலான நமது வரலாற்றைப்பற்றி ஆய்வு செய்கிற விதத்திலான பாடப்பிரிவுகளை துவக்காது. இத்தகையப் படிப்புகள் போட்டியின் காரணமாக அரசால் உதவிபெறும் நிறுவனங்களிலும் கூட ஓரம் கட்டக்கூடிய நிலை ஏற்படும். அந்நியக் கல்வி நிறுவனங்கள் வருகையால் நாட்டில் உள்ள அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் அவர்களோடு போட்டியை சமாளிக்க முடியாமல் மேலும் மக்களால் புறக்கணிக்கப்படும் சூழலும் உருவாகிவிடும் என்கிற அச்சமும் உள்ளது.

அந்நிய கல்வி நிறுவனங்கள் எவ்வளவு அதிகமான கொள்ளை லாபம் அடிக்கமுடியுமோ அவ்வளவு கொள்ளை அடிக்கும் இதன் விளைவாக நமது நாட்டின் அந்நியச் செலாவணி வெகுவாக வெளியேறாது என்று கூறுபவர்களின் வாதத்தில் எந்த அர்த்தமும் இல்லை.

நமது கலாச்சாரம் இப்படிப்பட்ட கல்வி முறையால் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். கல்விமுறை, நமது கலாச்சார மாண்புகள், சுயசார்பு சிந்தனைகள், மொழி, கல்வியின் கோட்பாடுகள் அனைத்தையும் தகர்க்கும்.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை மட்டுமே இந்த கல்வி நிறுவனங்கள் பாதுகாக்கும் பிரதிபலிக்கும். இந்திய நாட்டின் இறையாண்மையை சுயாதிபத்தியத்தை கேள்விக்குள்ளாக்கும் இந்த சட்ட மசோதாவை எதிர்த்துப் போராட வேண்டியது தேச பற்றுக் கொண்ட ஒவ்வொருவரின் கடமை. மக்களவையில் இம்மசோதா தாக்கல் செய்யும் போது இடதுசாரிகளோடு இணைந்து, மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவிப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

 இந்த சட்ட மசோதாவில் சமூக நீதியான இடஒதுக்கீடு பின்பற்றப்படாது என்ற ஷரத்து தற்போது இணைக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் பங்கேற்றுள்ள திராவிட முன்னேற்ற கழகத்தின் அமைச்சர்களும் இச்சட்டத்திற்கு இசைவு தெரிவித்துவிட்டு வந்துள்ளனர். சமூக நீதிக்கு எதிராக நிற்பது ஏன்? தமிழக மக்கள் மாணவர்கள் சந்தர்ப்பவாத அரசியல் வாதிகளை அடையாளம் காண்பார்கள். அந்நிய நாட்டின் பல்கலைக் கழகங்களை இந்திய நாட்டில் அனுமதிப்பதை எதிர்த்த போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களையும் அணிதிரட்டுவோம்.

Pin It