எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற, தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிற, இறந்த பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்ட, பொதுவாக காமராஜர் என்றழைக்கப்படும் குமாரசாமி காமராஜ் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மட்டுமல்ல கல்விக்கண் திறந்த தலைவர் என்றும் அழைக்கப்படுபவர்.

1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகி 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ராஜாஜி கொண்டு வந்திருந்த ‘குலக்கல்வித் திட்டத்’தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் காட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராஜரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது.

இவர் பிறந்த மாவட்டம் விருதுநகர். தென்மேற்கில் திருநெல்வேலி மாவட்டமும், மேற்கில் கேரள மாநிலமும் வடமேற்கில் தேனி மாவட்டமும் இம்மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,51,301 மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். இதில் 44.39% நகர் புற மக்கள் தொகையாகும். அருப்புக்கோட்டை, காரியாபட்டி, இராஜபாளையம், சாத்தூர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், திருச்சுழி, விருதுநகர் ஆகிய வட்டங்களைக் கொண்ட இங்கு தீப்பெட்டி தொழிற்சாலைகள் சிவகாசி, சாத்தூர், விருதுநகர் பகுதிகளிலும், வெடிபொருட்கள், ஆப்செட் பிரஸ் சிவகாசி பகுதிகளிலும், நிப் தொழிற்சாலை சாத்தூர் பகுதியிலும், கைத்தறி விசைத்தறி தொழில்கள் ராஜபாளையயம் பகுதியிலும், சென்னை சிமெண்ட் துலுக்கப்பட்டியிலும், தமிழ்நாடு சிமெண்ட், தமிழ்நாடு ஆஸ்பெட்டாஸ் கம்பெனிகள் ஆலங்குளம்பகுதியிலும், டிவிஎஸ் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனி ஆவியூர் பகுதியிலும் அமைந்துள்ளது. நிறைய தொழிற்சாலைகளும் தொழிலாளர்களும் நிறைந்துள்ள

இம்மாவட்டத்தில் தற்போது 1426 துவக்கப்பள்ளிகளும், 171 நடுநிலைப்பள்ளிகளும், 76 உயர்நிலைப்பள்ளிகளும், 107 மேல்நிலைப்பள்ளிகளும், 12 அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகளும், 4 ஆசிரியர் பயிற்சிபள்ளிகளும், 4 பொறியியல் கல்லூரிகளும், 8 பாலிடெக்னிக்குகளும், 15 ஐடிஐகளும் உள்ளன. ஆனால் இந்த மாவட்டத்தில் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ, மருத்துவக் கல்லூரியோ கிடையாது. தற்போது இரண்டு அமைச்சர்கள் அந்த மாவட்டத்தில் உள்ளதுதான் கூடுதல் சிறப்பு. ஒருவர் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் இவர் மொத்தம் ஏழு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார், அடுத்தவர் தங்கம் தென்னரசு இவர் பள்ளி கல்வித்துறை மந்திரி. ஆனாலும் இவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் 20 ஆண்டுகளுக்கு மேலாக மாணவர், இளைஞர் அமைப்புகள் போராட்டங்களை நடத்திவருகின்றனர். அந்த மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மேல்படிப்புக்கு வெளி மாவட்டங்களையே நம்பி உள்ளனர். இதில் கொடுமை என்னவென்றல் கடந்த கால் நூற்றாண்டுகளாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள் இம்மாவட்டத்தை சார்ந்தவர்களே!

சமீபத்தில் விருதுநகரில் வி.வி.எஸ் எண்ணெய் கம்பெனியின் சார்பில் நடத்தப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான வி.வி.ராமசாமி அவர்களின் நூற்றாண்டு விழாவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், முதல்வரின் மகள் கனிமொழி ஆகியோர் கலந்துகொண்டனர். அந்த மேடையில் விருதுநகர் வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.வி.எஸ். யோகன் அந்த மாவட்டத்திற்கு அரசு உயர்கல்வி கழகங்கள் வேண்டும் என்ற கோரிக்கை வைத்த போது மூவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால் அதுகுறித்த எந்த முயற்சியும் துவக்கப்பட்டவில்லை. தற்போது அம்மாவட்டத்தில் அரசின் சார்பில் மருத்துவ மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை துவக்க வேண்டுமென தீவிரமானப் போராட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு துவங்கி 20 ஆம் தேதி காலை 10 மணிவரை 48 மணி நேர உண்ணா விரதத்தை நடத்தினர். அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் போராட்டம் நடந்தது. போராட்டத்தை வாழ்த்திப்பேசிய விருதுநகர் வியாபாரிகள் சங்கத் தலைவர் வி.வி.எஸ். யோகன் “அரசு கல்லூரி துவங்கினால் 100 ஏக்கர் நிலத்தை கொடுக்க இங்குள்ள மக்கள் தயார்’’ என்றார். பிரச்சனை நிலமோ, பணமோ அல்ல அரசுக்கு செய்ய வேண்டும் என்ற மனம்தான் தேவை. இலவச தொலைக்காட்சி பெட்டிக்கு 2000 கோடியை ஒதுக்கமுடியும் அரசாங்கத்தால் விருதுநகர் மாவட்டக் கல்வி வளர்ச்சிக்கு சில கோடிகளை வழங்க முடியாதா? தமிழக அரசு நடத்தும் சாராயக்கடைகளில் கடந்த ஆண்டு கிடைத்த விற்பனை வரி வருவாய் மட்டும் 14 ஆயிரம் கோடி. ஆக பணம் பிரச்சனை அல்ல. திட்டமிட்டே ஒரு மாவட்டத்தை ஒதுக்கும் ஏற்பாடு இது. கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த மண்ணிற்கு இந்த அவலம்.

 இந்த உண்ணாவிரதம் கல்விக் கோரிக்கையோடு மட்டும் நடக்கவில்லை, இத்துடன் அம்மாவட்ட இளைஞர்களின் கோரிக்கைக்காக தொடர்ந்து போராடிவரும் அமைப்பு என்ற அடிப்படையில் விருதுநகரில் தொழில்நுட்ப பூங்கா, இராஜபாளையத்தில் ஜவுளி பூங்கா, அமைத்திடவும். பட்டாசு தொழிலாளர்களுக்கு பாதுகாப்புடன் கூடிய தொழிற்பயிற்சி மையம் அமைத்திடவும், திருச்சுழி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருவில்லிபுத்தூர், சாத்தூர் பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அமைத்திடவும், சென்னை முதல் கன்னியாகுமரி வரை இருவழி இரயில்வே பாதை அமைத்திடவும், மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலா தலங்களையும், வருசநாட்டு பாதையையும் அமைத்திடு என்ற கோரிக்கையையும் சேர்த்தே நடந்தது.

ஆனால் இந்த அவலத்தை காங்கிரஸ் கட்சியினர் பொறுத்துக்கொண்டாலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்காது என்ற அடிப்படையிலும், விருதுநகர் மாவட்டத்தில் அரசு கல்லூரிகளை துவக்கவும் தொடர்ந்து போராடும் என முடிவு செய்துள்ளது. இனியும் தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது.

Pin It