ஷாஜகானின் பாடல் வரிகளை காட்சிப்படுத்தியது போல கதை துவங்குகிறது. புதுமை காண நான்கு கால்கள் மரபு நதிகள் மீறும்! மீறும் கால்கள் சேறும் சகதியுமான மழை நீரில் களிநடனம் புரிகின்றன. இருட்டிய சென்னை நகரத்து வீதிகளில் ஆரம்பிக்கும் கதை, வெளிச்சம் நிரம்பிய பகல் பொழுதில் முடிகிறது. இதற்கிடையில் வலி நிறைந்த வாழ்க்கை படிமங்கள் ஏதுமற்று காட்சிப்படுத்தப்படுகிறது.

கற்பனை உலகமாக சிருஷ்டிக்கப்பட்ட சினிமாவை மட்டுமே பார்த்து வந்த நமக்கு பயமுறுத்தும் நிஜம் திகைப்பூட்டுகிறது. சென்னைக்கு போய் பணக்காரனாகி நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் வசதியான வீட்டுப் பெண்ணை காதலித்து ஊர் சுற்றி வந்திருந்தால் ஏற்கனவே பார்த்த சினிமாவின் தொடர்ச்சியாக இந்த சினிமாவும் இருந்திருக்கும். தமிழ்ச் சினிமாவின் ஒரே மாதிரியான கதையாக்க நூலை அவ்வப்போது அறுத்தெறியும் சினிமாவில் ஒன்றாக அங்காடித் தெரு அமைந்ததில் வசந்தபாலனுக்கு முதல் பாராட்டை பதிவு செய்யலாம்.

மனதை அறுக்கும் எல்லா நிஜத்தையும் சினிமாவாக்கிட முடியுமா என்ற கேள்வி எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. நிஜத்தை மட்டுமே காட்சித் தொகுப்பாக்கி அழகான சினிமாவாக்க சாத்தியம் என்பதை உரக்கச் சொல்லியிருப்பது முன்மாதிரியான ஒன்று தான்.

கதையின் போக்கில் திருப்பத்தை ஏற்படுத்தும் இரண்டு காட்சிகளிலும் லாரி தான் முக்கிய கதாபாத்திரமாகிறது. லாரி என்பது படிமமாக பயன்படுத்தப்பட்ட ஒன்றாக மாறுகிறது. கைகளையும், கால்களையும் ஆதாரமாகக் கொண்ட இளம் காதலர்கள் தொழில் நிறுவனத்தின் ஒடுக்குதலை சகிக்க முடியாத கட்டத்தில் துணிவோடு எதிர்க்கத் தயாராகின்றனர்.

கொஞ்ச நாளைக்கு அப்படி இருக்கும் போகப் போக எல்லாம் சரியாயிரும் என்ற கருத்துருவாக்கத்தை அங்காடித் தெரு முதல் நாள் கடைக்கு செல்கிற போதே கிள்ளி எறிகிறது. ஒரு நிமிஷம் ஒன்னுக்கு போயிட்டு லேட்டா வந்தாலும் சம்பளத்துல ஒரு ரூபாய் பிடிச்சுக்குவோம் என்கிற சூபர்வைசரின் வார்த்தைகள் கம்யூனிஸ்ட் அறிக்கையில் சொல்லப்பட்ட வரிகளின் மறுவடிவம் தான்.

சென்னைக்கு தெற்கே இருக்கிற பல ஊர்களுக்கும் சென்னை எப்போதும் கற்பனை நகரமாகத்தான் மனதில் குடியேறி இருக்கிறது. என்ன தான் குடிசையும், கூவமும் காட்டப்பட்டாலும் இரவு நேர விளக்கொளியில் முதலாளித்துவம் மிளிரத்தான் செய்கிறது. விட்டில் பூச்சிகளாய் கருதும் இளம் தொழிலாளர்கள் ஆயிரம் கனவுகளோடு, கண்ணீர் மல்க ஆத்தாளுக்கும், குட்டி தங்கச்சிக்கும் விடை கொடுத்து ரயில் ஏறுகிறார்கள். அவர்களின் பார்வையில் முதன் முதலாக வந்த விசாலமான ஒரு சினிமாவை தமிழ்ச் சமூகம் தன் கண்களையே நம்ப மறுத்து பார்க்கிறது.

ஒரு லாரி ரோட்டோரத்தில் படுத்திருக்கும் ஏழை மக்கள் மீது ஏறிச் செல்கிறது. இன்னொரு லாரி கட்டுமானத் தொழிலாளிகளோடு ஆளில்லாத ரயில்வே கிராசில் அடிபட்டு நொறுங்குகிறது. இரண்டும் விபத்தாக மறுநாள் பத்திரிகையில் சின்னதாக எழுதப்படும். ஆனால், லாரியின் சக்கரங்களில் வழிந்து ஒழுகும் ரத்தத்தின் வழியே ஆற்றாமையால் துடிக்கும் மனிதர்களை இதயத்தோடு பார்க்கும் சினிமாவாக அங்காடித் தெரு இன்னமும் கண்ணில் நிற்கிறது.

சரக்குகளோடு சந்தையை நோக்கி விரைந்து செல்லும் லாரி லாபத்தை நோக்கி விரையும் வேளையில் மனிதர்களானாலும் மாடுகளானாலும் எல்லாம் வெறும் சக்கைதான் அதற்கு.

துயரம் நிறைந்த வாழ்க்கையை சக மனிதர்களின் ஆறுதலோடு தான் கடந்து செல்ல முடிகிறது என்பதை அங்காடித் தெருவின் பல காட்சிகளில் காணமுடிகிறது. கூடி வாழ்வதற்கான இலக்கணங்களை கொண்டது மனித சமூகம். ஜட்டி, பனியன் விற்கும் முதியவர் (ஏதுமற்ற மனிதர்களுக்கு அவர் வாழத்தூண்டும் வழிகாட்டியாக இருக்கிறார் எனும் சித்தரிப்பு மகத்தானது) உடலை விற்கும் பெண்ணை இணையாக ஏற்கும் மனிதர், தீட்டுப்பட்ட பொம்பள கோயிலுக்குள்ள வரலாமா, ஆத்தாளும் பொம்பள தான எனும் பெரிய மனுஷி என விளிம்பு நிலை மனிதர்களின் எல்லையற்ற அன்பு படம் முழுதும் பரவிக் கிடக்கிறது.

பெண் தொழிலாளி இரண்டு முறைகளில் ஒடுக்கப்படுகிறார் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் சினிமாவும் இதுதான். படத்தில் சொல்லப்பட வேண்டிய கதாபாத்திரங்கள் நிறையவே நிறைவாக இருக்கின்றன. சூபர்வைசருக்கு தெரிந்தால் வேலை போகுமே என்ற பயத்தில் காதலை மறைக்கும் இளைஞன். அதனால் மனமுடைந்து அவமானப்பட்டு வாழ்வின் பிடிமானத்திலிருந்து இற்று விழும் இளம்நங்கை, இந்த பாதிப்பால் மனப்பிறழ்வோடு சென்னை வீதியில் அலையும் இளைஞன் என காதலை நொறுக்கும் வாழ்க்கை சக்கரம் அனைத்தையும் முறித்தபடி நகர்கிறது.

கட்டைக் கறுப்பனின் காதலும், சிரிப்பும், மழையோடு அழுகையும் என முதல் முதலாக பலரும் நடித்த படமாம் என்பதை எப்படி என யோசிக்க வைக்கும் விதமாக இருக்கிறது. கதைக்குத்தான் எவ்வளவு சக்தி இருக்கிறது.

படத்தின் வலிமைக்கு காட்சித்தொகுப்பு முக்கிய காரணமாகிறது. இயல்பான கதை நகர்வும் நடிப்பும் மெருகேற்றுகிறது சகலத்தையும்.

தன்னம்பிக்கை, சுயமுன்னேற்றம், சொந்தக் காலில் நிற்பது என்றெல்லாம் அறிவுறுத்தும் மகான்கள் இந்த சினிமாவை பார்க்க வேண்டும் பறக்கத் துடிக்கும் பறவைகளின் சிறகுகளை, மிளிரும் நகரங்களில் ஆழமாக வேருன்றி நிற்கும் சமூக அமைப்பு தான் முறிக்கிறது என்பதை வசந்தபாலன் வெயிலின் உக்கிரம் குறையாமல் பதிவு செய்திருக்கிறார். இது மக்கள் சினிமாவின் முகவரி.

Pin It