விரிந்து பரந்த கடலை விலைபேச முடியுமா? கால காலமாக வாழ்க்கை, கடல்தான் உயிர் என்று வாழும் மீனவர்களுக்கு கடல் சொந்தமில்லை என்று சொல்ல முடியுமா? முடியும் என்கிறது கடல் மீன்பிடிதொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மை சட்டம் (2008_09). பாரம்பரியத் தொழில்களைப் புதைப்பதும், பன்னாட்டு கம்பெனிகளுக்கு கம்பளம் விரிப்பதும் இந்தியத் தலைமைக்கு புதிதல்ல. இப்போது இந்த மக்கள் விரோத தலைமையின் பார்வை மீனவர்கள் மீது நிலைகொண்டுள்ளது. மீன்பிடி தொழிலில் பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மண்ணைப்போடும் மசோதாவை ஏகாதிபத்திய ஏஜெண்டாக செயல்படும் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு கொண்டு வந்துள்ளது.

அதில் 1. மீனவர்கள் அவர்களின் படகுகள் மீன்பிடிக்கும் உரிமம்கோரி விண்ணப்பிக்க வேண்டும். 2. 12கடல் மைல் (நாட்டிக்கல் மைல்) தூரத்தைத் தாண்டி மீன்பிடித்தால் 9 லட்சம் ரூபாய் அபராதம் மூன்று மாதம் சிறைதண்டனை என்ற ஷரத்துக்கள் உள்ளன. இது தவிர, எந்த அளவு மீன் பிடிக்க வேண்டும். என்ன வகையான மீன்களைப் பிடிக்க வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகளால் மீனவர்களை முற்றிலுமாக கடற்கரையை விட்டு அப்புறப்படுத்தும் துரோகத்தை ஐரோப்பிய நாடுகளின் துணையோடு செய்ய மன்மோகன்சிங் அரசு மல்லுகட்டிக் கொண்டு நிற்கிறது.

12 கடல் மைல் தூரம்தான் மீன்பிடிக்கச் செல்ல வேண்டும் என்ற நிபந்தனை மிகவும் கொடுமையானது. ஏனென்றால் இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து கடல் மைல் பரப்பிலேயே மீன் கிடைத்திருக்கிறது. இப்போது தொழிற்சாலைக் கழிவுகள், இறால் பண்¬ணைக் கழிவுகள், விசைப்படகுகளின் இரைச்சல்களாலும் மீன்கள் ஆழ்கடலுக்குச் சென்றுவிட்டன. 12 கடல் மைல் தூரத்திற்கு அப்பால் சென்றால்தான் மீன் கிடைக்கும் என்ற எதார்த்த நிலை உள்ளது. 12 கடல் மைல் தொலைவிற்கு மேல் செல்லக்கூடாது என்ற சட்டம் அமலானால் அது மீனவர்களை உள்நாட்டு அகதிகளாக மாற்றும் என்பது தின்னமான உண்மை.

அதே நேரத்தில், வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் இந்துமகா சமுத்திரத்தின் எல்லையற்ற விரிந்து கடற்பரப்பில் மீன் குஞ்சிலிருந்து அதன் முட்டைவரை அள்ளி குவித்து அனுபவிக்க இந்த மசோதா அனுமதித்துவிட்டு, பாரம்பரிய மீனவனின் வாழ்க்கையை சூறையாடுகிறது. பன்னாட்டு மீன் தேவைக்காக ஏகாதிபத்திய நாடுகளின் கட்டளைக்குப் பணிந்து இந்தச்சட்டம் கொண்டு வரப்படுகிறது.

மீனவர்கள் சட்டத்தை மீறினால் மீனவர்களின் படகுகளையும், வலைகளையும் கடலோரக்காவல் படை பறிமுதல் செய்யலாம். ஆறு முதல் ஒன்பது லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். ஒரு விசைப்படகின் மதிப்பு 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய்தான். அந்தப் படகையும் பிடுங்கிவிட்டு லட்சக்கணக்கில் அபராதமும் விதித்தால் அந்த வழக்கிலிருந்து மீனவனால் தன் வாழ்நாள் முழுவதும் மீள முடியாது.

ஏற்கனவே கச்சத்தீவு, மாலத்தீவு, மன்னார் வளைகுடா என மீன்கள் அதிகமுள்ள பகுதிகளுக்குச் செல்லும் மீனவர்கள் பிணமாகத் திரும்பும் நிலையும், இலங்கைக் கடற்படையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள், உடைமைகள் சூறையாடப்படுவது, வலைகளை அறுப்பதுஎனதுயரப்பட்டியல் நீள்கிறது. மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க இதுவரை இலங்கை அரசுடன் எந்த உறுதியான உடன்பாட்டையும் மத்திய அரசு செய்யவில்லை. இந்த நிலையில் மீனவர்களை கடல் தொழிலை விட்டு வெளியேற்றும் மத்திய அரசின் நடவடிக்கையை மாநில அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. பாரம்பரிய உரிமைகளைப் பறித்து பெரிய கப்பல் முதலாளிகளுக்குக் கொடுக்கும் முயற்சி மட்டுமல்ல இது. கடற்கரையில் வாழும் மீனவர்களை 1 கி.மீ தொலைவிற்கு அப்புறப்படுத்திவிட்டு, நவீனப்படுத்துகிறோம் என்ற பெயரால் பன்னாட்டு நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள், தனியார் கம்பெனிகள் என கட்டப்போகிறார்கள். ஏதும் அறியாத பாமர மீனவர்களின் குடிசைகளில் தீக்குச்சி கிழிக்கிறது இந்தச்சட்டம்.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களைக் காப்பதற்கும், அரசை வழிநடத்துவதற்கும்தான் சட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால் சொந்த நாட்டு மக்களின் நலன்களை அந்நிய சக்திகளுக்கு அடமானம் வைத்து தன்மானத்தை இழக்கும் தகுதியற்ற அரசாக இந்திய அரசு மாறிவிட்டது. அனைத்துக் கட்சிகளும் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்த பிறகுதான் கடல் மீன்பிடி தொழில் ஒழுங்காற்றல் மற்றும் மேலாண்மைச் சட்டம் 2008_09 மசோதாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.

மன்மோகன்சிங் அரசு நாட்டை அடகு வைப்பதில் மரண விளிம்புவரை முயற்சி செய்யும் என்பதை அணுசக்தி ஒப்பந்தத்தில் நிரூபித்து ஏகாதிபத்திய விசுவாசத்தை நிலைநாட்டியதை நாம் பார்த்தோம். அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்த கட்சிகளும் கூட தேர்தல் பதவி என்றதும் வாயடைத்துப்போனதையும் இந்திய நாட்டினுடைய துரோக வரலாறுகளாக பதிந்துள்ளது.

இப்போது மீனவர்களையும், நாட்டு நலனையும் பாதிக்கும் இந்த சட்டத்தை எதிர்க்கும் கட்சிகள் கடைசிவரை தங்கள் நிலைபாட்டை காத்து நிற்குமா என்பது கேள்விக்குறிதான். ஆனால் மீனவர்கள் தங்களுக்கு வந்துள்ள பேராபத்தை உணர ஆரம்பித்துள்ளனர். இடதுசாரி இயக்கங்கள், மார்ச்சிஸ்ட் கட்சி, மீனவர் அமைப்புகள் தங்களின் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து போராடி வருகின்றன. இந்த கொடூரமான கருப்புச் சட்டம் முறியடிக்கப்பட வேண்டும். ஒரு கிரவுண்ட் அரைக் கிரவுண்ட் என்று நிலத்தில் வேலி போடுவதுபோல கடலையும், கடல் வளத்தையும் சூறையாட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

- எஸ்.கவிவர்மன்