Pallikaranai_380தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் மிக அதிகமாக செய்திகளில் அடிபட்ட பெயர் பள்ளிக்கரணை. அதற்கு முக்கிய காரணம் ஒரு காலத்தில் மாநிலத்தின் மிகப்பெரிய சதுப்பு நிலங்களில் ஒன்றாகத் திகழ்ந்த பள்ளிக்கரணை, காலப்போக்கில் மக்களின் பேராசை யால் கொஞ்சம் கொஞ்சமாக ரியல் எஸ்டேட்டாக மாறி வீடுகளாகவும், பெருநிறுவனங்களின் கட்டடங் களாலும் அழிந்து சுருங்கியதே.

1965இல் 5,500 ஹெக்டேர் (14,000 ஏக்கர்) பரப்புக்கு பரந்து விரிந்திருந்த இந்த சதுப்புநிலம், இன்றைக்கு வெறும் 600 ஹெக்டேர் (1,500 ஏக்கர்) ஆகச் சுருங்கி விட்டது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள், இன்றைய மத்திய கைலாஷ் பகுதி வரை பள்ளிக்கரணை சதுப்புநிலம் பரந்து விரிந்து இருந்திருக்கிறது. அதே பகுதியின் மீதுதான் இன்றைக்கு தகவல்தொழில்நுட்ப நெடுஞ்சாலை அமைந்திருக்கிறது. நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம் என்பதற்கான தெளிவான எடுத்துக்காட்டு இது. இன்றைக்கு பள்ளிக்கரணை சதுப்புநிலத்தின் மீதுதான் வேளச்சேரி பறக்கும் ரயில் நிலையமும், ரயில் பாதையும் மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலைப் பற்றி ஆராய்ச்சி செய்யக்கூடிய தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், காற்றாலை தொழில் நுட்ப மையம் போன்ற மத்திய அரசு நிறுவனங்களும் அமைந்துள்ளன.

சதுப்பு நிலங்கள் கழுவேலி அல்லது கழிவேலி என்றும் காலங்காலமாக அழைக்கப்பட்டு வருகின்றன. இந்த சதுப்புநிலங்கள் வெள்ளநீர் வடிகாலாகவும் பயன்பட்டு வந்திருக்கின்றன. பெருமழை காலங்களில் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தில் தேங்கும் தண்ணீர், ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் கோவளம் கழிவு ஆகிய இடங்களில் வடிகிறது.அது மட்டுமில்லாமல் பள்ளிக்கரணை இயற்கையான மழை நீர் சேகரிப்புப் பகுதியாகவும் செயல்பட்டு வருகின்றது.

பள்ளிக்கரணையும் மாசுபாடும்

என்றைக்கு சென்னை மாநகராட்சி இந்த சதுப்பு நிலத்தில் குப்பையைக் கொட்ட ஆரம்பித்ததோ,அன்றைக்கே சதுப்புநிலத்தை பெருமளவில் மாசுபடுத்துதலும் தொடங்கியது. இந்த சதுப்பு நிலத்தில் 30ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சி கழிவு மேலாண்மை திட்டம் (என்ன மேலாண்மை? எல்லாம் குப்பை கொட்டும் திட்டம்தான்) மற்றும் ஆலந்தூர் நகராட்சியின் பெரிய கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம் போன்றவை ஆக்கிரமித்துள்ளன. 3.2 கோடி லிட்டர் சுத்திகரிக்கப் படாத கழிவுநீரை துரைப்பாகத்தில் சென்னை மெட்ரோவாட்டர் வெளியேற்றுகிறது.அத்துடன்சென்னைநகரத்தில்,குறிப்பாகதென்சென்னையில் சேகரிக்கப்படும் குப்பை முழுவதும் இங்கேதான் கொட்டப்படுகின்றது. இந்த கழிவுநீரும், குப்பையும் சதுப்புநிலத்தில் உள்ள நன்னீரை மாசுபடுத்துவதால், சதுப்பு நிலத்தில் வாழும் உயிரினங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

1970களில் பெருங்குடியில் உள்ள சேவரம் கிராமத்தில் 19 ஏக்கர் (7.7 ஹெக்டர்) நிலத்தில் குப்பை சேகரிப்பு மையம் முதலில் உருவாக்கப்பட்டது. 1980களில் பள்ளிக்கரணையின் 56 ஹெக்டேர் (140 ஏக்கர்) சதுப்பு நிலத்தை குப்பை சேகரிப்பு மையமாக சென்னை மாநகராட்சி பயன்படுத்தி வந்தது. இது காலபோக்கில் 136 ஹெக்டேராக (340 ஏக்கர்) விரிவடைந்தது. அத்துடன் கொட்டப்படும் குப்பையின் அளவும் நாளுக்குநாள் மலை போல் அதிகரித்தது. நாளன்றுக்கு 5,000 டன்னுக்கும் (டன் = ஆயிரம் கிலோ) அதிகமான குப்பை இங்கே கொட்டப்படுகின்றது.குப்பையை எரிப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தாலும்,குப்பையை எரிப்பது மட்டும் குறையவில்லை.இதற்கு சம்பந்தமேயில்லாத குப்பை பொறுக்குவோர் (குப்பையில் இருந்து உலோக உதிரி களை சேகரிப்பதற்காக அவர்கள் எரிப்பதாக கூறப்படு கிறது) மீது குற்றஞ்சாட்டும் மாநகராட்சி, ரகசியமாக குப்பையை எரிக்கும் வேலையைச் செய்து வருகிறது என்ற தகவலை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உறுதிப்படுத்து கிறார்கள். இதற்குக் காரணம், குப்பையை எரிக்கா விட்டால், மேலும்மேலும் ஒரே இடத்தில் குப்பையை கொட்ட முடியாது என்பதுதான். ஜூன் மாதத் தொடக்கத்தில் இங்கு மிகப் பெரிய அளவில் தீ பரவிய தால், கிட்டத்தட்ட 15 ஏக்கர் பரப்பு நாசமடைந்தது. மேலும் கணக்கற்ற பறவைகளும், விலங்குகளும் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

வளமான ஒரு நீர்நிலையில் ஒரு பக்கம் ரியல் எஸ்டேட், கட்டடங்கள் கட்டுவது, மறுபக்கம் மாநக அடிப்படைக் காரணம் என்னவென்றால், தமிழக சட்டப்படி நீர் நிலைகள் எல்லாம் எதற்கும் பயனற்றவை என்று வரையறுக்கப்பட்டுள்ளதுதான். இயற்கை, சுற்றுச்சூழல் பற்றி நமது சட்டம், அரசு, அதிகாரிகளின் புரிதல் இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது.

மக்களுக்குப் பாதிப்பு

பள்ளிக்கரணையில் குப்பை கொட்டுவதாலும், எரிப்பதாலும் இந்தப் பகுதியில் வாழும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆய்வுகளும் அதையே உறுதிப் படுத்துகின்றன. இந்த ஆய்வுகளில் மிக முக்கியமானதாகக் கருதபடுவது அண்ணாமலை சுப்பிரமணியன் மற்றும் சிலர் பள்ளிக்கரணை அருகில் உள்ள துரைப்பாகம் பகுதியில் உள்ள இளம் தாய்மார்களின் தாய்ப்பாலில் எச்.சி.எச். மற்றும் டி.டி.டி நச்சுகளின் அளவுகளைக் கண்டறிந்ததுதான். தெற்கு ஆசிய நாடுகளில் இது போன்ற குப்பை கொட்டும் இடங்களுக்கு அருகில் வாழ்பவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தாய்ப் பாலின் மாதிரிகளில் உள்ள அளவுகளைவிட, பள்ளிக் கரணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் தாய்மார் களிடம் இந்த வேதிப்பொருள்களின் அளவு அதிகம் இருப்பதாக அந்த ஆய்வு கூறியது. மிக அதிக அளவில் குப்பையை சதுப்புநிலத்தில் கொட்டும்போது, அவை அழுகி நிலத்தடி நீரில் கலப்பதாலும், அந்த நீர்நிலையில் வாழும் மீன்கள் போன்ற உயிரினங்கள் அழுகும் குப்பையை உண்பதாலும் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி யில் வாழ்பவர்களுக்கு பல வகை சுவாசக் கோளாறுகள் தாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

 குப்பை கொட்டுவதற்கு வேறு இடம் கிடைக்காத தும், தற்போது சேகரிக்கப்படும் குப்பையின் அளவை பெருங்குடி மறுசுழற்சி ஆலையில் கையாள போதிய திறன் இல்லாததுமே தற்போதைய பிரச்சினைகளுக்குக் காரணம் என்று சென்னை மாநகராட்சி கூறுகிறது. பள்ளிக்கரணை பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் சென்னை மாநகராட்சியை கண்டிக்கும் போதெல்லாம், ஏதாவது சாக்குபோக்கு சொல்லிவிட்டு, தொடர்ந்து டன் டன்னாக குப்பை கொட்டுவதை மாநகராட்சி வழக்கமாகக் கொண்டுள்ளது. இது எந்த விதமான மாற்று நடவடிக்கையையும் எடுக்க மாநக ராட்சி தயாராக இல்லாததையும், கையாலாகத்தனத்தை யுமே காட்டுகிறது.

பள்ளிக்கரணையும் பல்லுயிரியமும்

பல வகைப்பட்ட வாழிடங்களை உள்ளடக்கியதாக பள்ளிக்கரணை இருப்பதால், மொத்தம் 355 வகை தாவரங்களும் உயிரினங்களும் இங்கே வாழ்ந்து வருகின்றன. 125 வகைப் பறவைகள், 10 வகைப் பாலூட்டிகள், 21 வகை ஊர்வன, 9 வகை நீர்நில வாழ்விகள், 49 வகை மீன் இனங்கள், 9 வகை மெல்லுடலிகள், 5 வகை ஓட்டு உயிரினங்கள், 7 வகை வண்ணத்துப்பூச்சிகள் என மொத்தம் 235 உயிரினங்களும் 120 தாவர வகைகளும் இந்த சதுப்பு நிலத்தில் வாழ்கின்றன. தாவரங்களில் உள்ள புல்லினங் கள் மட்டுமே 29.

குளிர் காலத்தில் வலசை வரும் பறவைகளையும் உள்நாட்டு வலசைப் பறவைகளையும் பள்ளிக்கரணையில் பெருமளவு பார்க்கலாம். பறவை இனங்களில் முக்கிய மாக வலசை வரும் உள்ளான்களில் ஆற்று உள்ளான் (Marsh Sandpiper), பச்சைக் காலி (Green Sandpiper), பொறி உள்ளான் (Wood Sandpiper), உள்ளான் (Common Sand piper) பவளக் காலி (Common Redshank) போன்றவையும், நீலத் தாழைக் கோழி

(Purple Moorhen), தாழைக் கோழி (Common Moorhen), நாமக் கோழி (Common Coot), நீலவால் இலைக் கோழி (Pheasant-tailed Jacana) போன் றவை இங்கேயே இனப்பெருக்கம் செய்து வாழ்ந்து வருகின்றன. அழிந்து வரும் பறவை இனமான கூழைக் கடா (Grey Pelican) இங்கே இருக்கிறது. நன்னீர் மீன்களை மட்டுமே உண்டு வாழும் விரால் அடிப்பானும் (Osprey) இங்கே காணப்படுகின்றது. இந்தப் பறவைகளுக்கு முக்கிய உணவாகும் சிப்பி, சேற்று நண்டு, மடவை போன்ற நீர் வாழ் உயிரினங்களும் பள்ளிக்கரணையில் பெருமளவு உண்டு என்பதே இதற்குக் காரணம்.

2002ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் இந்த சதுப்புநிலப் பகுதியையும் அதன் வாழிடத் தரத்தையும் கண்டுபிடிக்க ஓர் ஆராய்ச்சியை மேற்கொண்டது. அதன்படி இச்சதுப்பு நிலத்தில் வாழும் பல்லுயிர்களின் வகைகள் கண்டறியப்பட்டன. 2003ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் இச்சதுப்பு நிலப்பகுதியில் 548 ஹெக்டேர் (1,350 ஏக்கர்) பரப்பளவை பாதுகாக்கப்பட்ட இடமாக மாற்றப் பரிந்துரைத்தார். அரசு சார்பில் இப்படி பல்வேறு பரிந்துரைகளும் சட்டங்களும் கொண்டு வரப்பட்டாலும் கூட பள்ளிக்கரணையின் பாதுகாப்பில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

முதல் முயற்சியாக, தமிழ்நாடு அரசு 317 ஹெக்டேர் (780 ஏக்கர்) சதுப்புநிலத்தை காப்புக் காடாக அறி வித்தது (உயிரினங்களும், தாவரங்களும் செழித்திருக்கும் எந்தப் பகுதியும் காடுதான்). 2011இல் மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த 421 ஏக்கர் (170 ஹெக்டேர்) நிலப்பகுதியை தன் வசம் ஒப்படைக்குமாறு தமிழக அரசு வனத்துறை கோரிக்கை விடுத்தது. தற்போது 317 ஹெக்டேர் பகுதி வனத் துறை வசம் இருக்கிறது. இந்தப் பகுதியில் மட்டும்தான் துஷ்பிரயோக நடவடிக்கைகள் பெருமளவு குறைந்துள்ளன. அரசாங்கம் ஏற்கனவே ரூ.15.75 கோடி செலவில் ஒரு மறுசீரமைப்பு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அத்துடன் பள்ளிக்கரணை பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பை உருவாக்குவதற்கும் அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

இப்படி தட்டுத் தடுமாறி அரசு பல சட்டதிட்டங் களைக் கொண்டு வந்தாலும், பாதுகாக்கப்பட்ட குப்பைகள் கொட்டப்படுவதும் எரிக்கப்படுவதும் நீதி மன்ற எச்சரிக்கைகளை மீறி தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றது என்பது கவலை தரக்கூடிய உண்மை. அடுத்த வலசை காலத்துக்கு பறவைகள் வந்தால், பள்ளிக்கரணை அவற்றுக்குப் புகலிடமாக இருக்குமா, பள்ளிக்கரணையை சுற்றி வாழும் மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியுமா என்பதும் எப்போதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றது.

(கட்டுரை ஆசிரியர் பள்ளிக்கரணையின் வளத்தையும் வீழ்ச்சியையும் தொடர்ச்சியாக ஆராய்ச்சி செய்து வருபவர்)

Pin It