பசுமைப் புரட்சியின் கதை

laxman-satghare_380‘உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என்று புறநானூறும், மணிமேகலையும் போற்றுகின்ற உழவர்கள் இந்தியத் திருநாட்டில் ஒவ்வாரு நாளும் வாழமுடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

வரலாற்றுவகையில் பார்த்தோமாயின் உழவர்களின் நிலை உச்சத்தில் இருந்து கீழே இறங்கி வந்துள்ளதைக் காண முடிகிறது.

பழந்தமிழர்கள் இயற்கை வேளாண்மைக்கு ஒரு நீக்க முடியாத பங்காக இருந்ததை மிக நன்றாகவே உணர்ந் திருந்தனர். அவர்களது அறக் கூற்றுகளை வகுக்கும் போது தமிழகத்தின் வேளாண்மை மிக நீண்ட வரலாற்றை கொண்டது என்பதற்கு பல்வேறு அக புறச் சான்றுகள் உள்ளன. பொதுவாக வேளாண்மை என்பது மாந்தர் குலம் நாடோடிகளாக இருந்த நிலையை மாற்றி ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து அமைதியாக வாழ வழிகாட்டியாக இருந்த முதல் மாற்றமாகும். உலக மாந்தர் குல வரலாற்றில் எளிய நிலையில் இருந்து எப்படி வேளாண்மை மெல்ல மெல்ல வளர்ந்து மிக நுட்பமாக செழுமையாகவும் கெழுமையாகவும் (நீஷீனீஜீறீமீஜ்வீtஹ்) மாறியதோ அதேபோல எளிய குறிஞ்சி நில வேளாண்மையும் மிக நுட்பமான மருதநில வேளாண்மையும் தமிழகத்தின் வளர்ந்திருந்தது. மற்ற பிற பண்டை நாகரிகங்களுக்கு இல்லாத சிறப்பாக தமிழர்களின் பண்டைய நாகரிகத்தில் இயற்கை முதன்மை பெற்று விளங்கியது. இயற்கையை ஒட்டியே பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை அமைந்தது என்பதை சங்க இலக்கியங்கள் வழியாக நாம் அறிந்துகொள்ள முடிகிறது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று நிலங்களை இயற்கை முறைப்படியே இலக்கணப் படுத்திக் கொண்டு வாழ்ந்தனர்.

தமிழகத்தின் இனக்குழுத் தலைமை வாழ்க்கை மறைந்து முடிமன்னர்களின் அரசு ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றத் தொடங்கிவிட்டது. வேளாண்மையில் ஏற்பட்ட மிகக்பெரிய மாற்றமே இதற்கு அடிப்படையாக இருந்தது. கரிகால் பெருவளத்தான் காலத்தில் நீர் மேலாண்மை மிகச் சிறப்பான நிலையை எட்டியிருந்தது. கல்லணை போன்ற கட்டுமானங்களை ஏற்படுத்தி ஆற்று நீரை முறையாகக் கையாளத் தொடங்கிவிட்டனர். இதனால் ஏற்பட்ட விளைச்சல் பெருக்கம் நிலையான படை, பல்வேறு வேலைப் பிரிவினை என்று குமுகம் பல நிலைகளை எட்டத் தொடங்கியது. இதன் பின்னணியில் வலுவான அரசுகள் தோன்றின, வணிகம் பெருகியது. விளைவிப்பில் ஈடுபடுபவர்கள் உழவர்கள் என்பதால் அவர்களின் முதன்மையை அனைவரும் உணர்ந்தனர். இலக்கியங்களில் அறநூல்களில் உழவர்கள் முதன்மையான இடத்தைப் பிடித்தனர்.

‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’

‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி’ என்றபடியாக கருத்துக்கள் நிலைபெற்றன. உழவர்கள் மட்டுமே விளைவிப்பில் நேரடியாக ஈடுபடுபவர்களாக இருந்தனர். பிற தொழில்கள் யாவும் வேளாண்மையை நடுவாகக் கொண்டே அமைந்தன. இந்த அடிப்படையிலேயே ஊராட்சிகள் இயங்கின. இதன் அடுத்த நிலையில் வணிகம் வளர்ச்சி பெறத் தொடங்கியது. உழவர்களின் இடத்தை வணிகர்கள் பிடிக்கத் தொடங்கினர். வேளாண்மையில் ஈடுபடும் உழவர்கள் தொடக்க காலத்தில் போர் நடவடிக்கையில் ஈடுபட்டாலும் பின்னர் தனியான படை அமைப்பு உருவான பின்பு அவர்கள் போர்களில் நேரடியாக ஈடுபடவில்லை. போர்க்கலையை அவர்கள் மறந்தே போயினர். போர் வீரர்களைக் வைத்துக் கொண்ட அரசன் அதிகாரம் மிக்கவனாக இருந்தான். வணிகத்தின் வளர்ச்சி பணத்தின் வளர்ச்சியாடு தொடர்பு கொண்டதாயிற்று. பண்டமாற்று என்பது மாறி தங்கத்தையும், காசுகளையும் பரிமாறிக் கொள்ளும் முறை தோன்றியது.

‘பொன்னொடு வந்து கரியடு பெயரும்’ என்ற பட்டினப்பாலை வரிகள் மிளகைப் பெற்றுக் கொள்ள ரோமானியர்கள் தங்கத்தைக் கொடுத்த செய்தியைச் சொல்கிறது. காசின் பங்கு முதன்மைப்பட்டதாலும் உழவர்கள் போர் வலிமை இழந்ததாலும் வேளாண்மை யில் ஈடுபட்டவர்கள் அதிகாரத்தில் முதன்மைப் பங்கைப் பெற முடியாமல் மங்கிப் போயினர். சிற்சில நேரங்களில் சிற்சில அளவில் உழவர்கள் அதிகாரம் பெற்றாலும் தொடர்ந்த நீடித்த அதிகாரத்தைப் கொண்டவர்களாக இருக்க முடியவில்லை. அதே சமயம் வலிமை மிக்க அரசர்கள் உழவர்களை மிக தீர்மானமான முறையில் வேலை வாங்கிக் கொண்டனர். அவர்களிடமிருந்து பல்வேறு பெயர்களில்- வழிகளில் வரிகளைத் தண்டி தமது களஞ்சியங்களில் சேமித்துக் கொண்டனர். அரசர்கள் நாடுகளைப் பிடிக்க படை களைப் பெருக்க உழவர்களை வேண்டிய மட்டும் உறிஞ்சிக் கொண்டனர். விதி விலக்காக ஒரு சில அரசுர்கள் இருந்துள்ளனர். அன்று வீழ்ந்த உழவர்கள் மீண்டு எழவே முடியவில்லை. உழவர்களைப் பிழிந்த அரசர்கள் வேளாணமையைப் பெருக்குவதிலும் அதற்குரிய ஏந்துகளை உருவாக்கிக் கொடுப்பதில் அக்கறை செலுத்தியதை மறுப்பதற்கில்லை. நீர் நிலைகளை மேம்படுத்துதல் காட்டு விலங்குகள் வேளாண்மையை அழிக்காமல் காத்தல் போன்ற நட வடிக்கைகளை அரசர்கள் எடுத்து வந்துள்ளனர். இவ் விதமான பல்வேறு ஏற்ற இறக்கங்களைக் கொண்டி ருந்தபோதும் தமிழகத்தில் வேளாண்மை ஒரு வாழ்க்கை முறையாகவே இருந்து வந்துள்ளது.

ஆங்கியேர்களும் பிற ஐரோப்பியர்களும் இந்தியத் துணைகண்டத்திற்குள் நுழையும்போது பல சிறு சிறு தேசங்களாக நமது நாடு இருந்தது. இன்றைய பெரும் இந்தியப் பரப்பை திரட்டிக் கொடுத்ததில் ஐரோப்பியர் களுக்கு குறிப்பாக ஆங்கிலேயர்களுக்கு பெரும் பங்கு உண்டு. இந்திய அரசியல் விடுதலைக்குப் பின்னர் வல்லபாய் பட்டேல் பேசியும் மிரட்டியும் பல தன் னாட்சிப் பகுதிகளை இந்திய நாட்டுடன் இணைத்தார்.

ஆங்கிலய அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் வேளாண்மையில் இன்றியமையாத பல மாற்றங்கள் ஏற்பட்டன. புதிய அணைகள் கட்டுவது, வேளாண் ஆராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபடுவது போன்ற மாற்றங்கள் நிகழ்ந்தன. பரந்துபட்ட இந்தியத் துணைக்கண்ட வளங்களை இங்கிலாந்து தேசத்திற்குக் கொண்டு செல்வதற்கு அவர்கள் பல முன்னற்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களது நாட்டின் தொழில்முனைவுகளுக்கு மூலப்பொருட்களை உருவாக்கித் தர இந்நாட்டு உழவர்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். உணவுப் பயிர் சாகுபடிக்கு வரிகளைச் சுமத்தி வணிகப் பயிர் சாகுபடிக்கு ஊக்கம் கொடுத்தனர். (இக்காலகட்டத்திற்குப் பின்னர் தமிழக வேளாண்மை இந்திய வேளாண்மை என்ற பொருளில் பார்க்கப்பட வேண்டியதாயிற்று) இதனால் இந்தியா முழுவதும் பஞ்சங்கள் உருவாயின. அப்படிப்பட்ட பஞ்ச காலத்திலும் வெளிநாடுகளுக்கு உணவுப்பொருட்களே ஏற்றுமதியாகி இருக்கின்றன. இந்த செயற்கையான பஞ்சம் ஆங்கிலேயர் இந்தியாவைவிட்டு வெளியேறிய 1950களில் மிக அதிகமானது. இதற்கிடையில் அரசியல் விடுதலை பெற்ற இந்தியா பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. வேளாண்மையைக் காப்பதற்கான திட்டங் களை ஐந்தாண்டுத் திட்டங்களில் சேர்த்தனர். நிலச் சீர்திருத்தம், நில உச்சவரம்பு போன்ற சட்டங்கள் மாற்றங்களுக்கு வழிகோலின.

குமரப்பாவின் சீர்திருத்தம்:

kumarappa_450இந்திய வேளாண்மையிலும் தொழில்துறையிலும் மிகச் செம்மையான பங்களிப்பைச் செலுத்தியவர் ஜே.சி.குமரப்பா. தஞ்சையில் பிறந்து மேல்நாடு களில் படித்து காந்தியடிகளாரின் அணுக்கத் தொண்டராக பணி யாற்றியவர். இன்றை உலகம் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு தனது தொலைநோக்குடன் கூடிய தீர்வுகளை முன்வைத்து செய்தும் காட்டினார். நிலச் சீர்திருத்தம், உணவுக்கான வேளாண்மை, வரைமுறையில்லாமல் இயற்கையைச் சுரண்டக் கூடாது போன்ற நுட்பமான நெறிமுறைகளை வகுத்துக் கொடுத்தார். அவர் மிகத் தீவிரவான முறை யில் இயற்கைவழி வேளாண்மையை வலியுறுத்தினார். வேதி உப்புகள் மண்ணில் செய்யும் தீங்குகளை விளக் கினார். இந்திய நாட்டின் முதல் தலைமை அமைச்சராக அமர்ந்த சவகர்லால் நேரு பெரும் விளைவிப்பு முறையை வலியுறுத்தனார். அவருக்கு சோவியத் நாட் டின் மீது மிகுந்த ஈர்ப்பு இருந்தது. இதற்கு மாற்றாக குமரப்பா இந்தியா என்பது மக்கள் தொகை மிக்க நாடு எனவே பெருமளவு விளைவிப்பிற்கு மாற்றாக (mass production) பெருமளவு மக்கள் விளைவிக்கும் முறை (production by mass) வேண்டும் என்றார். ஆனால் கும ரப்பாவின் கருத்துகள் எடுபடவில்லை. தனது இறுதிக் காலம்வரை இதற்காக விடாது போராடி மறைந்தார். இன்று கியுபா இதை மெய்ப்பித்துள்ளது. வேளாண்மைக்கு ஆதர வானதாகப் பாராட்டப்படும் முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்களில் கூட வேளாண்மைக்கான ஒதுக்கீடு 15% தாண்டவில்லை என்பது உண்மை. அதாவது அன்றைய சூழலில் 80% விழுக்காடு மக்கள் வேளாண்மையை நம்பி இருந்தபோது அவர்களுக்கான ஒதுக்கீடு 15 விழுக்காட்டிற்கும் குறைவு!

பசுமைப் புரட்சி:

இரண்டாம் உலகப்போரில் ஈடுபட்டதால் இங்கி லாந்து பிரான்சு போன்ற நாடுகள் தங்களது உலகத் தலைமைப் பாத்திரத்தை இழந்துவிட நேரிட்டது. (இப்போது தொடர்ந்து போரில் கவனம் செலுத்தியதால் நிலைகுலைந்த அமெரிக்காவைப்போல) அந்தக் கால கட்டத்தில் பெரிதும் போரில் நுழையாத அமெரிக்கா தனது இருப்பை நிலைநிறுத்தத் தொடங்கியது. இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு உணவுப் பொருட் களை நன்கொடையாகக் கொடுத்தது. கூடவே தனது கனவுத் திட்டமான பசுமைப் புரட்சித் திட்டத்தையும் கொடுத்தது. இந்தியாவில் பசுமைப் புரட்சி அறிமுகமான காலத்தில் அமெரிக்காவில் ரெய்ச்சல் கார்சன் போன்றவர்கள் பசுமைப் புரட்சியின் கொடுமைகளை விளக்கி இருந்தனர். அங்கு தோல்வியைப் பெற்ற அந்தத் திட்டம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் வெடி மருந்துத் தொழிற்சாலைகளை வேதி உரங்களுக்கு மாற்றி அதைச் சந்தைப்படுத்தும் முகமாக பசுமைப் புரட்சியைக் கொண்டு வந்ததும் அதனால் விதை, உரம், பூச்சிக்கொல்லி என்று வேளாண்மை என்பது ஒரு நச்சு வளையத்திற்குள் சிக்கியது. அத்துடன் தற்சார்பு மற்றும் சொந்தத் தேவைகளுக்கான சாகுபடி முறை என்பது சந்தையை நோக்கிய சாகுபடியாக மாறியது. இதனால் சந்தைச் சூதாட்டத்தில் உழவர்கள் சிக்கிக் கொண்டனர். எனவே இடுபொருள், சந்தை என்ற இரண்டையும் உழவர்கள் இழந்துவிட்டனர். தாராளமயத்திற்குப் பின்னர் மேலும் உழவர்களின் நிலை சிக்கலாகிவிட்டது. சந்தை திறந்துவிடப்பட்டதால் வேளாண் விளைபொருட் கள் இறக்குமதி அதிகமாகிவிட்டது. இங்கு விளையும் பொருட்களுக்கான விலை மேலும் குறைந்துவிட்டது. விதைகளில் தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்கள் பல மாற்றங்களைச் செய்து காப்புரிமை பெற்றுக் கொண்டு மலட்டு விதைகளை சந்தைப்படுத்தத் தொடங்கிவிட்டன. இதுவரை அரசின் கட்டுப்பாட்டில் ஓரளவு இருந்த விதை வாய்ப்பும் வணிக நிறுவனங்களின் கைகளுக்குள் சென்றுவிட்டது.

உலகவங்கி மற்றும் உலக வணிக நிறுவனம் போன்றவற்றின் கட்டுப்பாடுகளுக்கு ஆட்பட்டு அரசு தரும் மானியங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன. ஆனால் மேலை நாடுகள் தங்கள் நாட்டின் வேளாண்மையையும், உழவர்களையும் காப்ப தற்கு ஏராளமான மானியங்களை வழங்கிவருகின்றன. அரசின் நிதி ஒதுக்கீடுகள் வேளாண்மைத் துறைக்கு படிப்படியாகக் குறைக்கப்பட்டது, தொழில்துறைக்கு மிக அதிகமான சலுகைகள் கொடுக்கப்பட்டன. உழவர் களுக்கு கொடுத்த கடன்கள் கூட உரிய முறையில் உரிய நேரத்தில் கொடுக்கப்படவில்லை. தொழில் துறையினர் கடன் பெற்று அதைத் திரும்பக்கட்டாமல் இருந்தால் அரசு கடுமையாக நடந்து கொள்வதில்லை. ஆனால் உழவர்களின் வீடு வாசல் என்று எல்லாமும் சப்தி என்ற பெயரில் பிடுங்கப்பட்டன. கந்து வட்டிக்காரர்களிடம் உழவர்கள் தஞ்சம் புகுந்தனர். விளைவு உழவர்கள் பெருமளவில் வேளாண்மையைவிட்டு வெளியேறுகின்றனர், அல்லது தற்கொலை செய்து கொள்கின்றனர். இப்படி தற்கொலை செய்து கொண்ட வர்களின் எண்ணிக்கை இந்தியா முழுவதும் 2 லட்சத் திற்கு மேல் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உழவர்களின் சிக்கல்கள்:

உழவர்கள் பெரும்பாலும் ஒருங்கிணைக்கப்படாத பிரிவினராக உள்ளனர். சங்கமாக இயக்கமாக இணை யாமல் துண்டு துண்டாகப் பிரிந்து கிடக்கின்றனர். இதனால் அரசின் கவனம் உழவர் பக்கம் திரும்புவதே இல்லை. 70களில் ஏற்பட்ட உழவர் எழுச்சி மிகச் சிறப்பாக இருந்தாலும் தொடர்ந்து வெற்றிகரமான இலக்கை எட்ட முடியவில்லை. இப்போது உழவர்கள் போராடவும் மனத்துணிவின்றி உள்ளனர். வெளியில் வந்து போராடவும் சிறை செல்லவும் வசதி உழவர்களுக்கு இல்லை. அவ்வாறு வெளியேறும்போது மிகபெரிய அளவில் பொருளியல் நெருக்கடிக்கு ஆளாகி நேரிடுகிறது. இதனால் போர்க் குணத்தை உழவர்கள் முற்றிலும் இழந்து காணப்படுகின்றனர். வேளாண்மை இடுபொருட்களின் செலவோ ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகிக் கொண்டே வருகிறது. 1970களில் இருந்த இடுபொருட்களின் விலை 2008இல் 6 முதல் 8 மடங்கு அதிகமாகியுள்ளது. பசுமைப் புரட்சியின் வருகைக்குப் பின்னர் வேளாண்மை வீரியவிதை, உரம், பூச்சிக்கொல்லி என்று முற்றிலும் வெளியிடு பொருள்களை அடிப்படை யாகக் கொண்டதாக மாறிவிட்டது. எனவே உழவர் களின் வருமானத்தில் பெரும்பங்கு வெளியேறிவிடுகிறது. அத்துடன் விளைபொருள்களின் விலையோ வெளிச் சந்தையில் உயர்வதே இல்லை. பல நேரங்களில் முன்னர் இருந்ததைவிட குறைவான விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

இந்திய அரசியல் கட்சிகள் வேளாண் பொருட்களின் விலையை உயர்த்தவிடாமல் பார்த்துக் கொள்கின்றன. சிமிண்ட் விலையேற்றத்தையோ, பிற கும்பணிப் பொருட்கள் எவ்வித நியாயமும் இல்லா மல் உயர்த்தப்படும்போது அமைதியாக இருக்கும் இந்தக் கட்சிகள் கத்தரிக்காய் ஒரு ரூபாய் ஏறிவிட்டாலே கூச்சல்போட்டு இறக்கிவிடுகின்றன. உலக வணிக நிறுவனத்துடன் கைகோர்த்த பின்னர் இறக்குமதி என்ற பெயரில் நமது நாட்டிற்குள் வந்து குவியும் வேளாண் விளைபொருள்களால் முற்றிலும் உழவர்கள் தங்கள் பொருள்களை விற்க முடியாமல் திணறுகின்றனர். எப்போதாவது புயல், போராட்டம் என்று வந்தால் மட்டுமே வேளாண் பொருட்களின் விலை ஏறும். மற்றொரு சிக்கல் சந்தையை நோக்கி சாகுபடி செய்வது. அதிக விளைச்சல் பெற்றால் அதிக லாபம் சந்தையில் கிடைக்கும் என்று நம்பி உழவர்கள் அதிக இடுபொருள் செலவு செய்து விளைகிக்கின்றனர். ஆனால் விளைச்சல் அதிகமாகும்போதெல்லாம் விலை விழுந்துவிடும். அதிக விலை கிடைக்கும் காலத்தின் விளைச்சல் இருக்காது. இந்த எதிர்விகிதப் பொருத்தத்தை உணராத உழவர்கள் தொடர்ந்து சந்தைச் சூதாட்டத்தில் சிக்கிச் சிதைகின்றனர்.

பறிபோகும் விதை உரிமை:

உலகிலுள்ள பெரும் விதைச் சந்தைகளில் ஒன்று இந்திய விதைச் சந்தை. 2000-ம் ஆண்டில் நம் நாட்டின் விதைச் சந்தை மதிப்பு ரூபாய் 2000 கோடிகளாகும். கி.பி. 2008ல் அது மூன்று மடங்காக மாறி 6000கோடி ரூபாய்களாகும் என்கின்றது மான்சாண்டோ நிறுவனம். பொதுவாக இந்திய வேளாண்மையில் விதையின் பங்கு மிக இன்றியமையாதது. மரபு வழியாக விதையை அடிப்படையாகக் கொண்ட பல பழமொழிகள் நம் நாட்டில் புழங்கி வருகின்றன. பண்டை நாளில் இருந்தே விதையின் பரிமாற்றம் பண்ட மாற்றாகவே இருந்து வந்தது. பசுமைப் புரட்சிக்குப் பின்பே விதைப் பொருளியல் பண மதிப்பைப் பெற்று வணிகத் துறையில் குறிப்பான இடத்தைப் பிடிக்கத் தொடங்கியது.இன்றோ நாளையோ பாயப்போகும் விதைச் சட்டம் உழவர்கள் விதைகளை தமக்கென வைத்துக்கொள்ள முடியாதவாறும்,அரசுகளே தமது கட்டுப்பாட்டில் விதை இருப்பைக் கொண்டுவர இயலாதவாறும் உருவாக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் நகர்மயமாதலில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறி வருகிறது. தமிழகத்திற்குள் வந்து குவியும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மிக அதிகமாக உள்ளன. இந்த முதலீடுகள் வேளாண்மைக்கான நல்ல நிலங்களைக் கையப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.

உலக வணிக நிறுவனம் அதன் துணையான வணிகம் சார் நுண்மதிச் சொத்து ரிமை ஒப்பந்தம் ஆகியவை இப்படிப்பட்ட நெருக்கடியை உருவாக்கியுள்ளன. பன்னாட்டுக் கும்பணிகள் மரபீனி மாற்றத் செய்யப்பட்ட மலட்டு விதைகளை சந்தையில் இறக்கி இந்திய விதை வளத்தை முற்றிலும் அழித்துவிட முனைந்துள்ளன. இதற்கு அரசுசார் பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் துணைபோகின்றன. இதற்கான காரணம் தாராளமயத்திற்குப் பின்னர் பல்கலைக் கழகங்களுக்கும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் அரசு நிதி ஒதுக்கீடு குறைந்துபோனது. அதசமயம் பல ஆராய்ச்சித் திட்டங்களுக்கு பன்னாட்டு கும்பணிகள் நிதி தருகின்றன. இதனால் ஆராய்ச்சிகள் யாவும் கும்பணிக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வேளாண்மைக் பல்கலைக்கழகம் மரபீனி மாற்ற விதை ஆராய்சியிலும் பரப்பிவதிலும் முதன்மையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேளாண் நிலங்கள் பிடுங்கப்பட்டு வேறு துறைக்கு மாற்றப்படுகின்றன:

தமிழகம் நகர்மயமாதலில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக மாறி வருகிறது. தமிழகத்திற்குள் வந்து குவியும் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மிக அதிகமாக உள்ளன. இந்த முதலீடுகள் வேளாண்மைக்கான நல்ல நிலங்களைக் கையப்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது. சிறப்புப் பொருளியல் மண்டலம் என்ற பெயரில் நுழைந்துள்ள இந்தப் போக்கு சாகுபடி நிலங்களை தங்களது வணிக முயற்சிகளுக்கு பயன்படுத்த உள்ளன. சென்னை, மதுரை, தூத்துக்குடி மற்றும் பல பகுதிகளில் இதற்கான முயற்சிகள் நடந்தேறி வருகின்றன.

காடுகள் அழிந்துவருகின்றன:

வேளாண்மைக்கு ஆதாரமான நீர் வளமானது காடு களை நம்பியே உள்ளது. தமிழகத்தின் முதன்மையான ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து வருவதால் அந்தக் காடுகள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியவை. ஆனால் இன்று மிக மோசமாக காடழிப்பு நடைபெறுகிறது.இதைத் தடுக்காவிட்டால் தமிழகத்தின் நீர் வளம் முற்றிலும் அழிந்துவிடும்.

நீர் வணிகமாகி வருகிறது:

தமிழகத்தில் தண்ணீர் வணிகம் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.கோக் பெப்சி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது நீர் அடைக்கும் தொழிற்சாலைகளை வளமான ஆற்றுப்படுகைகளிலும், நிலத்தடி நீர் வளப் பகுதிகளிலும் அமைக்கின்றனர். இதற்கு அரசும் ஒத்து ழைப்புக் கொடுக்கின்றது. இதைத் தடுத்தாக வேண்டும்.

தமிழகத்தின் நீர் வளம் மாசுபடுத்தப்படுகிறது. வரை முறையற்று சூழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் வேளாண்மையை அழிப்பதோடு குடிநீர் ஆதாரங்களை யும் அழித்துவிடுகிறது. திருப்பூர், கரூர்,திண்டுக்கல், வாணியம்பாடி, கடலூர் என்று பல பகுதிகள் இன்று மாசுபட்டு மீளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. வெளிநாடுகளில் இருந்து வேண்டாம் என்று விரட்டப்பட்ட தொழிற்சாலைகள் இங்கு சிவப்புக் கம்பள வரவேற்புடன் நுழைகின்றன.

இந்திய வரலாற்றில் என்றுமே இல்லாத அளவிற்கு கடந்த 10ஆண்டுகளில் மட்டும் இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட உழவர்கள் தற்கொலை செய்துள்ளனர். அனைத்து மக்களும் உயிர்வாழ உணவைக் கொடுக்கும் உழவன் தான் வாழ வழியில்லாது தற்கொலை செய்து கொள்கிறான். உண்டி கொடுத்தவர்கள் இன்று தங்கள் உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இதுதான் இந்தியாவின் உலகமய வளர்ச்சி. உலகப் பணக்காரர்களில் பலர் இந்தியராக உள்ள அதே நேரத்தில் நாள் தோறும் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருகின்றனர். உலக வணிக நிறுவனத்துடன் கைகோர்த்துக் கொண்டு இன்னும் மீதமுள்ள கொஞ்ச நஞ்ச உழவர்களையும் அப்புறப்படுத்துவதில் நமது கொள்கை வகுப்பாளர்கள் மிக வேகமாக ஈடுபடட்டும். நமது நிலமும், நீரும் காடுகளும், மழைகளும் அயல்சாட்டுக் கும்பணிகளுக்கும் உள்நாட்டு பெருவணிகர்களுக்கும் விலையாகட்டும். உழவர்களும் சிறுதொழிலை நம்பி இருப்பவர்களும் தற்கொலை செய்துகொண்டு தப்பிக்கொள்ளட்டும். வாழ்க ஏற்றுமதி! வளர்க அயல்நாட்டுச் செலாவணி!!

National Crime Records Bureau, Register General of India

Pin It