Neerootru_380தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு கடலோரக் கிராமமே மணப்பாடு. பிரசித்தி பெற்ற யாகப்பர் தேவாலயமும், புனித சவேரியார் தியானம் செய்த கடற்குகையும் இங்குதான் உள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை (3.6.2012) அதிகாலை இங்கு நடந்த இயற்கை நிகழ்வு பல நிலவியலாளர்களைக் கவலைகொள்ள வைத்துள்ளது. இந்த இயற்கை நிகழ்வினால் கூடங்குளம் அணுஉலைக்கு ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டா என்ற கேள்வி அவர்கள் மனதில் எழுந்துள்ளது.

கருமணி ஆற்றின் கழிமுகத்திற்கு சிறிதுதூரத்துற்கு முன்பாக 3.6.2012 அதிகாலை மிகப் பெரிய வெடிப்பு ஓசை ஒன்று கேட்டிருக்கிறது. இந்த ஓசையைக் கேட்ட மக்கள் தங்கள் வீட்டிற்கு வெளியில் ஓடிவந்திருக்கிறார்கள். ஆற்றின் நடுவே அவர்கள் கண்ட நிகழ்வு அவர்கள் அனைவரையும் ஆச்சர்யத்திற்குள்ளாக்கியது. அந்த அரிய காட்சியைக் கண்ட திருமதி ஃப்ளோன்கோம்ஸ் அவர்களை சந்தித்தோம். இரண்டு நாட்களுக்குப் பிறகும் ஆச்சர்யத்திலிருந்து அவர் விடுபடவில்லை.தான் கண்ட நிகழ்ச்சியைப் படபடவென்று விவரித்தார்:

“காலை 6.10 இருக்கும். ஞாயிற்றுக்கிழமை. திடீ ரென்று பயங்கரமான வெடிப்பு சப்தம் கேட்டது. ஒன் றும் புரியவில்லை. எல்லோரும் வெளியே ஓடிவந்தோம். ஆற்றிற்கு நடுவில் நாங்கள் பார்த்ததை எங்களாலேயே நம்ப முடியவில்லை.”

“ஆற்றின் நடுவே வட்டவடிவத்தில் தண்ணீர் மேலே எழும்பியிருந்தது. கிட்டத்தட்ட 10 அடிவட்டத்தில் பூப்போல மேலே எழும்பி ஆற்றின் தண்ணீரானது நீர்வீழ்ச்சி போல விழுந்துகொண்டிருந்தது. தெருவில் உள்ள மின்விளக்குக் கம்பத்தின் உயரத்திற்கு அதுமேலே எழும்பியிருந்தது. சுமார் ஒன்றரை நிமிடத்திலிருந்து இரண்டு நிமிடம்வரை அது இருந்தது.அதற்குப் பிறகு பழைய நிலை திரும்பியது. ஆனால் இப்போது அந்த வட்டத்திற்குள் இருந்த தண்ணீர் அடுப்பில் வைக்கும் சோறு பொங்குவதுபோல தளதளவென்று கொதிக்கத் தொடங்கியிருந்தது. தண்ணீரில் இருந்து குமிழ்குமிழாக காற்று வெளியேறிக்கொண்டிருந்தது. சுமார் இரண்டு நிமிட கழித்து தண்ணீர் கீழே அமிழ்ந்தது. பிறகு இந்த வட்டத்திற்குள் இருந்து மண்ணோ அல்லது கல்லோ ஏதோ ஒன்று. ஒரு மிகப்பெரிய தோசைபோல- தண்ணீரில் இருந்து சுமார் இரண்டு அடி உயரத்திற்கு மேலே எழும்பியது. ஒரு நிமிடத்தில் அது மீண்டும் தண்ணீருக்குள் விழுந்து மறைந்துபோனது.அதற்குப் பிறகு ஒன்றும் நடக்கவில்லை. அது நடந்த இடத்தில் இப்போதும் வட்டவடிவமாக மண் படிந்துள்ளது” என்றார். இந்த ஆற்றில் 30 வருடமாக நண்டுபிடித்து வரும் மீனவரான திரு ரேனால்டை சந்தித்தோம்.அவரும் மிகுந்த ஆச்சர்யத்தில் பேசத் தொடங்கினார். “என்னால் நம்ப முடியவில்லை. 10-12 அடிநீளத்தில் வட்டவடிவத்தில் 4 அடி ஆழத்தில் ஒரு குழி இருந்தது. ஆனால் அதனை சுற்றியிருக்கும் தரையின் ஆழம் 2 அடிதான். பள்ளத்திற்குள் இருக்கும் மண் கரகரவென்று சரளைபோல இருந்தது. ஆற்றின் மற்ற பகுதியில் இருக்கும் தரையில் களிமண்தான் இருக்கிறது. இப்போதும்கூட அந்த வட்டவடிவமான குழி ஆற்றின் நடுவில் இருக்கிறது” என்றார்.

இதுகுறித்து மூத்த நிலவியல் நிபுணரும், இந்தப் பகுதியில் பல்வேறு நிலவியல் ஆய்வுகளையும் மேற்கொண்ட பேராசிரியர் ஞா. விக்டர் ராஜமாணிக்கம் அவர்களைக் கேட்டோம்.

“கருமணி ஆறு அச்சன் கோவில் நிலப்பிளவில் ஓடும் ஒரு ஆறாகும். இந்த ஆற்றில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. நிகழ்வைப் பார்த்த மக்கள் சொல்வதை வைத்துப் பார்க்கும்போது இதனை வெப்பநீரூற்று என்றே கருத வேண்டியுள்ளது. அச்சன் கோவில் நிலப் பிளவானது இன்று பதற்றம் கூடிய நிலப்பிளவாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதற்கானதடயங்கள் 1998 ஆம் ஆண்டிலிருந்தே கிடைத்து வருகின்றன. 1998, 1999 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் இந்த நிலப்பிளவில் இருந்த பாறைகள் திருநெல்வேலி அபிஷேகப்பட்டி, திருப்பணிக்கரிசல்குளம், பரப்பாடி-ஆனிக்குளம் மற்றும் சுரண்டை ஆகிய பகுதிகளில் உருகின. இதனால்அருகில் இருந்த மின்கோபுரங்கள் நிலத்திற்குள் அமிழ்ந்துபோயின. இந்த நிகழ்வுகளின் நீட்டிப்பாகவே மணப்பாட்டில் நடந்துள்ள வெப்ப நீரூற்றைக் கருதவேண்டியுள்ளது. மணப்பாட்டில் இருந்து கூடங்குளம் அணுமின் நிலையமானது சுமார் 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எனவே கூடங் குளத்தில் அணுஉலையைக் கட்டிவரும் அணுஉலை நிர்வாகம் இந்த நிகழ்வுகளை நிலவியல், நிலவேதியியல் மற்றும் நிலபௌதீகவியல் அடிப்படையில் ஆய்வுசெய்து அதற்கேற்ப உலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

“மணப்பாட்டில் வெப்ப நீரூற்று உருவாகியுள்ளது. இதனால் கூடங்குளம் அணுஉலைக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவேதான் அணுஉலையை இயக்குவதற்காக அவசரகோலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நிறுத்திவிட்டு, இந்தப் பகுதியில் நிகழ்ந்துவரும் நிலவியல் நிகழ்வுகளைத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கான ஆய்வுகளை அணுஉலை நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்” என்றார் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் நிபுணர் குழுவைச் சேர்ந்த டாக்டர். ரா. ரமேஷ்.

Pin It