9.6.2012 திருநெல்வேலி மாவட்டம் நக்கநேரி கிராமத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்பட்ட கூடங்குளம் அணுஉலை அவசரகால ஒத்திகை நிகழ்வு குறித்த மக்கள் சிவில் உரிமைக்குழுவின் (PUCL) உண்மை அறியும் குழு அறிக்கை

கூடங்குளம் அணு உலை யூனிட் 1, தற்போது அது தன் மின் உற்பத்தியைத் துவங்க ஆயத்தம் ஆகிவரும் நிலையில், அதில் எரிபொருள் நிரப்பும் பணி நடைபெரும் நிலையில், அணு உலையைச் சுற்றி 16 கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்களுக்கு அணு விபத்திலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள அவசியமான அவசரகாலத் தற்காப்பு ஒத்திகைப் பயிற் சியை மாவட்ட நிர்வாகம் கட்டாயம் வழங்கவேண்டிய சட்ட ரீதியான கடமை உள்ளது.

இந்நிலையில் 9-.6.-2012 அன்று கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத் தில் உள்ள நக்கநேரி கிராமத்தில் மாவட்ட நிர்வாகம், அணுசக்தி ஒழுங்காற்றுக் கழகம், இந்திய அணுசக்திக் கட்டுமானக் கழகம் மற்றும் அணுசக்தித் துறை ஆகி யோருடன் இணைந்து இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக வழங்கிவிட்டதாக செய்தி ஊடகங்களுக்குத் திருநெல் வேலி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

கடந்த 2011 மார்ச் 11ஆம் தேதியன்று ஜப்பானில் உள்ள புக்கிஷிமா அணு உலைகளில் விபத்து நடந்த பின்பு உலகளவில் துவங்கப்படவுள்ள முதல் அணு உலைதான் கூடங்குளம் அணு உலை; எனவே மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு குறித்தும், அணு உலை சுற்றியுள்ள பகுதியில் அவசரகால பயிற்சி குறித்தும் கரிசனத்தோடு மக்கள் சிவில் உரிமைக் கழகம் உற்று நோக்குகிறது.

9-.6-.2012ஆம் தேதியன்று நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் பயிற்சி குறித்து மாவட்ட நிர்வாகத்தின் அறிக்கை ஒன்றாகவும், ஊடகங்கள் சிலவற்றில் அது குறித்து வந்த செய்திகள் முரண்பட்டதாகவும் இருந்தது. இடிந்தகரையில் அணு உலைக்கு எதிராகப் போராடி வரும் மக்களின் தலைவரான திரு.சுப.உதயகுமார் பயிற்சி குறித்து வெளியிட்ட அறிக்கையில் இடிந்தகரை போன்ற அணு உலைக்கு வெகுஅருகாமையில் உள்ள பெரிய கிராமங்களை விட்டுவிட்டு நக்கநேரி போன்ற தொலை வில் உள்ள குக்கிராமத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது, உள்நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் பின்னணியில், மக்களுக்கு வழங்க வேண்டிய உயிர்காக்கும் பயிற்சி ஒத்திகை குறித்து நக்கநேரி கிராமத் துக்கு சென்று அதன் உண்மைகளை அறிய மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் குழு 13-.6-.2012 மற்றும் 20.-6.-2012 ஆகிய தேதிகளில் அப்பகுதியில் கள ஆய்வு மற்றும் மக்க ளிடம் நேர்காணல்களை நடத்தியது. மேலும் இதனுடன் தொடர்புடைய அரசு மற்றும் அணு சக்தித் துறை அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு இது குறித்த விசாரணையை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தது.

நக்கநேரிகிராமம்:

நக்கநேரி கிராமம் சுமார் 150 வீடுகளைக் கொண்டது; அவற்றில் பெரும்பாலானவை ஓட்டு வீடுகளே. அங் குள்ள மக்கள் பெரும்பாலும் ஆதிதிராவிடர் சாதியைச் சேர்ந்தவர்கள்; இவர்கள் விவசாயக் கூலி வேலை, காற்றாலை, கட்டுமானப் பணிகள், மீன் தொடர்பான தொழில்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளவர்கள். மேலும் தமிழகம், மற்றும் இலங்கையின் தேயிலைத் தோட்டங் களில் பணிபுரிந்து மீள் குடியேறியவர்களாகவும் உள் ளார்கள். கிராமம் ராதாபுரத்திற்கும், அஞ்சு கிராமத்திற் கும் இடையிலும், கூடங்குளத்திற்கும் வடக்கன் குளத்திற் கும் இடையிலும் உள்ள இரண்டு சாலைகளின் சந்திப் பில் அமைந்துள்ளது. சாலையின் கிழக்குப் புறத்தில் புள்ளமங்கலம் கிராமமும், மேற்குப் புறத்தில் நக்கநேரியும் அமைந்துள்ளன.இந்த கிராமம் தனக்கர் குளம் பஞ்சாயத்துக்குக் கீழ் வரும் கிராமமாகும்.இந்தக் கிராமத்தைச் சுற்றி அதிக அளவில் காற்றாலைகள் உள்ளன.230 கிலோவாட் துணை மின் நிலையமும், சுஸ்லான் நிறுவனத்தைச் சார்ந்த 715 மெகாவாட் திறனுள்ள காற்றாலைகளும் இங்கு உள்ளன.

களஆய்வு

உண்மை அறியும் குழு 13.-6.-2012 அன்று காலை நக்கநேரி சென்றது. நக்கநேரி சாலை சந்திப்பில் உள்ள பேருந்து நிழற்குடை, ஆட்டோ ஸ்டேண்ட், தேனீர்க் கடைகள், வீடுகள் ஆகியவற்றில் இருந்த மக்களிடம் தன் விசாரணையைத் தொடங்கியது. அந்த கிராமத்தில் அன்றைய தேதியில் மரணம் ஒன்று நடந்துவிட்டிருந்த படியால் எவரும் பணிக்கு சென்றிருக்கவில்லை.

உண்மை அறியும் குழு உறுப்பினர்கள்:

வழக்குரைஞர் ச.பாலமுருகன், மாநிலச் செயலர், பியுசிஎல்

ஜார்ஜ் வில்லியம்ஸ், துணைத் தலைவர், குமரி மாவட்டம்

பொன் சந்திரன், தலைவர், கோவை மாவட்டம்,

பேராசிரியர் பாத்திமா பாபு, உறுப்பினர், தூத்துக்குடி மாவட்டம்

சந்திரசேகர், பொருளாளர், கோவை மாவட்டம்

மருத்துவர் ரா.  ரமேஷ், உறுப்பினர், கோவை மாவட்டம்,

தனலட்சுமி, உறுப்பினர், கோவை மாவட்டம்

ஃபெலிக்ஸ், உறுப்பினர், குமரி மாவட்டம்

எனவே, பகல்வேளையில் சாதாரணமாக வெறிச்சோடிக் கிடக்கும் அந்த ஊரில் பலரைச் சந்திக்க வாய்ப்பு கிட்டியது. அவர்களிடம் கண்ட நேர்காணல்களை குழு வீடியோவில் பதிவு செய்து கொண்டது. அன்று மாலை பயிற்சி குறித்து ஏற்கனவே மாற்றுக் கருத்தைத் தெரிவித் திருந்த அணுசக்தி எதிர்ப்புத் தலைவரான சுப.உதயகுமாரை இடிந்தகரை கிராமத்தில் சந்தித்தது. மேலும், பயிற்சியை முன் நின்று நடத்திய அணு சக்தித் துறை அதிகாரிகளான கூடங்குளம் அணு மின் நிலையத் தலைவர் சுந்தர், மென்நீர் அணு உலைகளின் தலைவரான காசிநாத் பாலாஜி ஆகியோரைத் தொடர்பு கொண்டது. திரு.சுந்தர் அணு சக்தித் துறையின் இந்தப் பயிற்சிக்கு அறிவியல் பூர்வமான ஆலோசனை மட்டும் வழங்கியதாகவும், உண்மையில் அதனை மாவட்ட நிர்வாகம்தான் நடத்தியதாகவும், மேலும் தங்கள் துறையினைச் சேர்ந்த சில அதிகாரிகள் பயிற்சியில் பங்கெடுத்ததாகவும், தான் தனிப்பட்ட முறையில் அதில் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறினார். எனவே உண்மை அறியும் குழுவின் கேள்விகளுக்கு மாவட்ட ஆட்சியரே பதில் சொல்ல வேண்டும் என்று கூறிவிட்டார். மற்ற அதிகாரியான காசிநாத் பாலாஜி பேச மறுத்துவிட்டார். மேலும் வருவாய்த்துறை அதிகாரியான சேரன்மாதேவி சப் கலெக்டர் ரோகிணி ராமதாஸ், மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே இதுகுறித்து பத்திரிக்கைகளுக்கு அளித்த செய்திக் குறிப்பில் விளக்கம் அளித்துவிட்டபடியால், தன்னால் எதுவும் பேச இயலாது என்று கூறிவிட்டார்.ராதாபுரம் தாசில்தாரும் இது குறித்து பேச மறுத்து விட்டார். மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொள்ள முயற்சித்த போது, அவரை உண்மை அறியும் குழு சந்திக்க முடியாது என்றும், வேறொரு நாளில் இந்தக் குழுவே அவரை நேரடியாக வந்து அவரைச் சந்திப்ப தற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியரின் பொது உதவியாளர் கூறிவிட்டார்.

அதன் பின்பு, 20.-6.-2012 அன்று மீண்டும் இக்குழு நக்கநேரி கிராமத்திற்குச் சென்று பல்வேறு தரப்பட்ட சமூக, பொருளாதார நிலையைச் சேர்ந்த மக்களை சந்தித்தது. அவர்களிடம் பயிற்சி குறித்த எழுத்துப் பூர்வ மான வாக்குமூலங்களையும் பெற்றது. இதில், தனக்கர் குளம் பஞ்சாயத்துத் தலைவர் திருமதி.விஜயலட்சுமி, நக்கநேரி கிராம உறுப்பினர் திருமதி.இசக்கியம்மாள், வள்ளியூர் யூனியன் கவுன்சில் உறுப்பினர் திரு.சுயம்பு லிங்கத்துரை ஆகியோரும் அடக்கம்.

இவர்கள் அனைவரும் 9.-6.-2012ஆம் தேதியன்று மாவட்ட நிர்வாகம் நக்கநேரி கிராம மக்களுக்கு எவ்வித அணு விபத்து அவசரகால ஒத்திகைப் பயிற்சியும் வழங்கவில்லை என்றும், அதுகுறித்து மக்களான தங்களுக்கு அதிகாரிகள் எவ்விதத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்றும் வாக்குமூலம் அளித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் பத்திரிகையில் கூறியிருந்த மூன்றுகட்ட ஒத்திகைகளான 1) அணு விபத்து நடந்து விட்டது என்பதை அறிவித்தல், 2) மக்களை வீட்டுக்குள் இருக்க வலியுறுத்துதல், மற்றும் அவர்களை அயோடின் மாத்திரைகளை உட்கொள்ள வலியுறுத்துதல் 3) மக்களையும், கால்நடைகளையும் அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தல் போன்ற ஒத்திகைகளை நடத்தவில்லை என்றும் கூறினர்.

உண்மையில், அன்று காலை சுமார் 9 மணியளவில் காவல்துறையினர் நக்கநேரி சாலை சந்திப்பில் கூடிய தாகவும், வாகன சோதனையில் ஈடுபட்டதாகவும், எதற்காக அவர்கள் வந்துள்ளார்கள் என்று கேட்ட மக்களிடம் பதில் எதையும் கூறாமல் மதியம் சுமார் 12&-1 மணியளவில் கிளம்பிப் போய்விட்டதாகவும் கூறினர். மறுநாள் காலையில் பத்திரிகை செய்திகளைப் பார்த்த பொழுது நக்கநேரியில் முந்தைய நாள் அதி காரிகள் அணுவிபத்துத் தற்காப்புப் பயிற்சி அளித்ததாக எழுதப்பட்டிருந்ததைக் கண்டதாகக் கூறினார்கள். இதுகுறித்த உண்மை விபரம் அறிவதற்காக மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கத் திருநெல்வேலியில் உள்ள அவரது கேம்ப் அலுவலகத்திற்கு அன்று மாலை உண்மை அறியும் குழு பயணமானது. ஆனால் அவர் குழுவினை சந்திக்க மறுத்துவிட்டார். அவர் சார்பில் பேசிய உதவி கலெக்டர் திருமதி ரோகிணி ராமதாஸ் ஏற்கனவே மாவட்ட ஆட்சியரால் வெளியிடப்பட்ட அறிக்கைதான் இறுதி அறிக்கை என்றும் அது தவிர பேசுவதற்கு ஒன்றுமில்லை என்றும் கூறிவிட்டார். எனவே, மாவட்ட ஆட்சியரின் 9-.6-.2012 செய்திக் குறிப்பையே அரசின் நிலைப்பாடாக எடுத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு உண்மை அறியும் குழு தள்ளப்பட்டது.

காற்றின்தன்மை

9-.6-.2012 அன்று நக்கநேரி கிராமத்தை அவசரகாலப் பயிற்சிக்குத் தேர்வு செய்ததற்கான காரணமாக அதன் திசை அணு உலையில் இருந்து நக்கநேரி நோக்கி அதா வது தென்கிழக்கில் இருந்து வடமேற்கு நோக்கி வீசிய தாக அரசின் பத்திரிகை செய்தி கூறியது. உண்மையில் தென்மேற்குப் பருவக் காற்று வீசும் காலமான இன்றைய காலகட்டத்தில் இந்தக் காற்று தென்கிழக்கில் இருந்து வடமேற்கு நோக்கி வீச வாய்ப்பில்லை என் பதை உண்மை அறியும் குழு அறிந்திருந்தது. அப்பகுதி யில் உள்ள காற்றாலை தொடர்பான ஆய்வு மையங் களில் தனிப்பட்ட ரீதியில் விசாரித்தபோது, 9-6-2012 அன்று காலையில் காற்றானது அணு உலையில் இருந்து நக்கநேரியை நோக்கி வீசவில்லை என்றும், அது வடகிழக்கு - தென்மேற்கு திசையில் இருந்ததாகவும், அதாவது அணு உலையில் இருந்து 8 கிலோமீட்டர் அப்பால் உள்ள அணு உலை ஊழியர்கள் வசிக்கும் அணு விஜய் நகரை நோக்கி வீசியதாகவும் தெரிய வந்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், அணு விபத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற கூடங்குளம் அணு உலைத் தலைவரின் தலைமையில் மாவட்ட ஆட்சியரை உள்ளடக்கிய உயர்மட்டக் குழுவானது தனது கட்டுப்பாட்டு அறையை இங்குதான் கொண்டி ருந்தது என்பதுதான்!

உண்மை அறியும் குழுவின் முடிவுகள்

1. 9-.6.-2012 அன்று நக்கநேரி கிராமத்தில் அணு உலை விபத்து தொடர்பான அவசர கால பயிற்சியை மாவட்ட நிர்வாகம், அணுசக்தி வல்லுனர்களோடு சேர்ந்து நடத்தியது என்பது அப்பட்டமான பொய்யாகும். அதுபோன்ற எந்தவொரு ஒத்திகையும் அந்த கிராமத்தில் நடத்தப்படவில்லை.

2.திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் இது போன்ற ஒரு பயிற்சியை மக்களுக்கு வழங்க அக்கறையற்று இருப்பதையும், அதற்காகத் தன்னை அறிவியல் பூர்வமாகத் தயார்படுத்திக் கொள்ளத் தாயாராயில்லை என்பதையே இந்த நிகழ்வு உணர்த்து கிறது. சர்வதேச அணு சக்திக் கழகம், மற்றும் இந்திய அணுசக்தி ஒழுங்காற்று முகமை ஆகிய நிரறுவனங்களின் செயல்திட்டங்களின் அடிப்படையில் பயிற்சிகளை அளிக்க மாவட்ட நிர்வாகவமும், அணுசக்தி நிர்வாகமும் தயாராயில்லை என்பதையும் நக்கநேரி நிகழ்வு சுட்டிக் காட்டுகிறது.

3. அணு உலையைச் சுற்றி உள்ள 16 கிலோமீட்டர் பகுதி என்ற அவசர காலப் பாதுகாப்புப் பகுதியில் வாழும் சுமார் 2 லட்சம் மக்களுக்கு அணு விபத்து நடக்கும் காலத்தில் உரிய சிகிச்சைகள் வழங்குவதற்குத் தரத்தையும், தகுதியையும் கொண்ட மருத்துவமனைகளும், முறையான மருத்துவக் கட்டமைப்புகளும் இல்லை.

4. இந்த 2 லட்சம் மக்களுக்கு விபத்துக் காலத்தின் போது கதிரியக்கத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அவசியமாகும் தங்குமிடங்களும் இன்றுவரையும் முன்மொழியப்படவில்லை.

5. மேலும், சில கிராமங்களில் விபத்தின்போது வெளி யேற மிக அவசியமாக இருக்கும் சாலைக் கட்டமைப்பு கள் இல்லை. குறிப்பாக, அணு உலையில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிவசுப்பிர மணியபுரத்தில் இருந்து அனுமன்நதியைக் கடந்துசெல்ல அவசியமாகும் பாலம் இல்லாமல் உள்ளது.

6.கூடங்குளம் அணு உலையின் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் நக்கநேரியை அவசரகாலப் பயிற்சிக்குத் தேர்வு செய்தது அறிவியல் செயல்பாட்டுக்கு எதிரான தாக உள்ளது. எனவே, கூடங்குளம் அணு உலையில் நடக்கும் விபத்துகளின்போது பாதுகாப்பு தொடர்பாக முக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடவேண்டிய இந்த ஆய்வு மையத்தின் நம்பகத் தன்மை இன்று கேள்விக் குள்ளாகியுள்ளது.

7. அணு உலையைச் சுற்றி அமைந்துள்ள ஆயிரக் கணக்கான காற்றாலைகள் அவசரகாலத்தின்போது அணு உலையில் இருந்து வெளியேறும் கதிரியக்க மாசினை தரையை நோக்கித் தள்ளிவிடும் தன்மையைக் கொண்டுள்ளன. இதன்காரணம் இந்த காலகட்டத்தில் மக்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாக வேண் டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அணுசக்தித் துறையோ, அணுசக்தி ஒழுங்காற்று மையமோ கணக்கில் எடுத்துகொள்ளவில்லை.

8. மாவட்ட நிர்வாகமும், அணுசக்தி நிர்வாகவமும், அணுசக்தி ஒழுங்காற்று மையமும் கூட்டாகச் சேர்ந்து கொண்டு நடக்காத ஓர் அவசரகாலப் பயிற்சியினை நடந்ததாகவும், அது சர்வதேசத் தரம் வாய்ந்ததாகவும், சட்ட ரீதியில் அமைந்ததாகவும் கூறிவருவதென்பது அப்பட்டமான பொய்யை மக்கள் முன்பரப்பும் செய லாகவே கருத வேண்டியுள்ளது. இது சட்டவிரோத மானது. மேலும் நம் நாட்டின் அரசியல் சட்ட விதிகளையும், அதன் மதிப்பீடுகளையும் இழிவுபடுத்தும் செயலாகவும் உள்ளது.

பரிந்துரைகள்:

1. 9.-6-.2012 அன்று நக்கநேரி கிராமத்தில் நடை பெற்றதாகச் சொல்லப்படும் அணுவிபத்து அவசரகாலப் பயிற்சி செல்லத்தக்கதல்ல என்று அணுசக்தி ஒழுங் காற்று மையம் அறிவிக்க வேண்டும்.

2. இந்த நிகழ்வுக்குக் காரணமான மாவட்ட நிர்வாக அதிகாரிகள், அணுசக்தித் துறை அதிகாரிகள் ஆகி யோரின் இந்தச் செயலானது பொய்யுரைத்தல் என்ற நிலையையும் தாண்டி அனைத்து மக்களின் உயிரோடு விளையாடும் செயலாக இருப்பதாகவே இந்தக் குழு கருதுகிறது.இந்த நிகழ்வினை மேற்பார்வை செய்ய வந்திருந்த அணுசக்தி ஒழுங்காற்று மையத்தின் அதிகாரிகள் பொய்யுரைள்ள அதிகாரிகளை இன்று வரை கண்டிக்கவில்லை. எனவே இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்.

3. இந்த நிகழ்வு குறித்து உயர்மட்ட நீதி விசாரணை ஒன்றுக்கு அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும்.

4. அணு உலையைச் சுற்றியுள்ள 16 கிலோமீட்டர் அவசரகால அபாயப் பகுதியில் தரமான, தகுதிவாய்ந்த அனைத்து வசதியையும் கொண்ட மருத்துவமனைகள் உருவாக்கப்பட வேண்டும்.

5. அணு உலையைச் சுற்றியுள்ள 30 மற்றும் 80 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளும் விபத்தின் போது கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என் பதை சர்வதேச ஆய்வுகள் உணர்த்துகின்றன. அமெ ரிக்காவில் இந்தப் பகுதிகளிலும் பிரத்யேக கவனம் செலுத்தப்படவேண்டும் என்பது சட்ட ரீதியான ஒன்றாக உள்ளது. எனவே, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் முழுமையாகவும், தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பகுதியும், கேரள மாநிலத்தின் தென்பகுதியும் பாதிக்கப்படும் என்பதால் இந்தப் பகுதி களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாக வேண்டும்.

6. விபத்து காலத்தின்போது மக்களைக் காப்பாற்று வதற்காக அதிகாரிகள் தயாரித்துள்ள “அவசரகாலத் திட்டமிடல் கையேட்டினை” மக்கள் முன் வெளிப்படை யாக முன் வைத்திடல் வேண்டும்.

7. அணு உலையைச் சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான காற்றாலைகள் அணுவிபத்தின்போது வெளியாகும் கதிரியக்கத் துகள்களை மக்களின் மீது சுழற்றிவிடும் கருவி களாக இருக்கும். எனவே, விபத்தின்போது காற்றாலை களின் இயக்கம் முழுமையாக நிறுத்தப்படல் அவசியம் என்பதை இந்தக் குழு அரசிடம் முன்வைக்கிறது.

8. விபத்தின்போது நடக்கும் அனைத்து தற்காப்பு நடவடிக்கைகளும் அதிகாரிகளை மையப்படுத்தியதாகவே உள்ளது. ஆனால் அது மக்கள், அவர்தம் பிரதிநிதிகள், உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பிற மக்கள் ஊழியர்கள் ஆகியோரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளையே பல்வேறு நாடுகளின் அரசுகள் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளன.

9. தற்காப்பு நடவடிக்கைகளும், பயிற்சிகளும் 16 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து கிராமங் களிலும் அணு உலை இயங்குவதற்கு முன்பாக நடத்தப்படல் வேண்டும்.

10. மேற்கூறிய அனைத்துப் பரிந்துரைகளும் முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்பே கூடங்குளம் முதலாம் அணு உலைக்கான எரிபொருள் நிரப்புவதற் கான அனுமதியை அணுசக்தி ஒழுங்காற்று மையம் வழங்க வேண்டும்.

தொடர்புக்கு: ச.பாலமுருகன், 9443213501 -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்., ரா.  ரமேஷ், 9487678720 - இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

Pin It