Koodankulam-11_38016 ஜூன், 2012, சென்னை – கதிரியக்க பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தரமற்ற அணுஉலை அழுத்தக் கலனை (Reactor Pressure Vessel - RPV) ஏற்றுக்கொண்டிருப்பதன் மூலம் கூடங்குளம் அணுஉலை தொடர்பான இந்திய – ரஷ்ய ஒப்பந்தத்தை இந்திய அணுசக்திக் கழகமும் (NPCIL) அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியமும் (AERB) மீறியிருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் (PMANE) நிபுணர் குழு, சமீபத்தில் தனக்குக் கிடைத்த இரண்டு ஆவணங்களின் அடிப்படையில் தெரிவித்திருக்கிறது.

அணுஉலையின் மையப்பகுதியைச் சுற்றியுள்ள அணுஉலை அழுத்தக் கலனை எந்தவிதமான பற்ற வைப்புகளும் (WELDING) இல்லாமல் ஒப்பந்ததாரர் தர வேண்டும் என்று வரையறுக்கப்பட்டிருந்தது. அணு உலை அழுத்தக் கலன் என்பது 19 மீட்டர் உயரம், 4.5 மீட்டர் அகலத்துடன் 200 மி.மீ. இரும்பில் உருவாக்கப்பட்ட உருளை வடிவ கட்டமைப்பு. இதுவே கதிரியக்கப் பாதுகாப்புக்கு முக்கியமானது. ஏனென்றால், இதில்தான் அணுஉலையின் மையப்பகுதி (எரிபொருள் கூடுமிடம்) மற்றும் குளிர்விப்பு அமைப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன.

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் நிபுணர் குழுவுக்குக் கிடைத்துள்ள இரண்டு ஆவணங் களில் ஒன்று என்.பி.சி.ஐ.எல். விஞ்ஞானிகள் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தையும், மற்றொன்று ஏ.இ.ஆர்.பி. ஆவணம் 2008ஆம் ஆண்டையும் சேர்ந்தவை. அவற்றில் குறிப்பிட்டுள்ளபடி, அணுஉலை அழுத்தக் கலன் எந்தவிதமான பற்றவைப்புகளும் இல்லாமல் அணுஉலையின் மையப்பகுதியைச் சுற்றி கட்டப்படப் போவதாக வரையறுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஏ.இ.ஆர்.பி. ஆவணப்படி, மையப்பகுதியைச் சுற்றியுள்ள இந்தக் கலனில் தற்போது இரண்டு பற்றவைப்புகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

PMANE_380“பற்றவைப்புகள் என்பவை மிகவும் பலவீனமானவை. நியூட்ரான் வெடிப்பின்போது அவை எளிதில் உடைந்துவிடக் கூடும், இதன் காரணமாக அணுஉலை அழுத்தக் கலனும் உடைந்துவிடும். அப்படி நிகழ்ந்தால், நம் கண் முன்னாலேயே சர்வதேச அளவில் மிகப் பெரிய கதிரியக்கப் பேரழிவு ஒன்று நடக்க வாய்ப் பிருக்கிறது” என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. பற்றவைப்புகளால் ஏற்படக்கூடிய பாதுகாப்பு கவலைகள் குறித்து ஏ.இ.ஆர்.பி. ஆவணம் ஒரே ஒரு வரியை மட்டுமே கூறுகிறது. “இந்த பற்றவைப்புகளின் மீது நியூட்ரான் ஏற்படுத்தக் கூடிய தாக்கம் தொடர்பாக மதிப்பிடப் பட்டது, அது ஏற்றுக்கொள்ளத் தக்க வகையில் இருந்தது,” என்று குறிப்பிட்டுள்ளது.

 “அந்த வகையில் என்ன பரிசோதனைகள் நடத்தப் பட்டன, அவற்றில் தெரிய வந்த முடிவு என்ன என்பதை அறிந்துகொள்வதற்கான உரிமை நமக்கு உள்ளது. இது தொடர்பாக இந்திய மக்களுக்கும், இந்த மண்டலத்தில் உள்ள மற்ற நாடுகளுக்கும் விரிவான விளக்கத்தை அளிக்க ஏ.இ.ஆர்.பி. கடமைப்பட்டுள்ளது” என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது. “அணுஉலை அழுத்தக் கலனில் பற்றவைப்புகள் இருக்கக் கூடாது என்ற கட்டாய விதிமுறை இருந்தும், ஏன் பற்றவைப்புகள் கொண்ட அணுஉலை அழுத்தக் கலனை ஏ.இ.ஆர்.பி. ஏற்றுக் கொண்டது?” என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

கூடங்குளம் அணுஉலை பற்றிய பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கையை வெளியிட வேண்டும் என்ற மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ஏற்பதற்கு என்.பி.சி.ஐ.எல் சமீபத்தில் மறுத்திருந்தது. அந்தப் பின்னணியில் இந்த புதிய தகவல் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.அந்த அறிக்கை வெளியிடப்பட்டால், இதுபோன்ற தரமற்ற கட்டமைப்பின் காரணமாக, மக்கள் இன்னும் எப்படிப்பட்ட அதிகப்படியான ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது பற்றி கூடுதலாகத் தெரிய வரும்.

ஏனென்றால், அணுஉலை அழுத்தக் கலனில்தான் அனைத்து கதிரியக்க பாகங்களும் அமைய இருக்கின்றன. அணுஉலை செயல்படும் காலம் முழுவதும் அதன் உறுதித்தன்மை மிகுந்த முக்கியத்துவம் கொண்டது. “நியூட்ரான் வெடிப்பு நிகழ்ந்தவுடன் அணுஉலை அழுத்தக் கலனின் இரும்பு உறை எளிதில் உடையாத வகையில் இருக்கிறதா என்பதை உச்சபட்ச கவனத்துடன் உறுதிப்படுத்த வேண்டும்” என்கிறார் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் நிபுணர் குழு உறுப்பினர் வி.டி. பத்மநாபன்.

அணுஉலையின் மையப்பகுதிக்கு மேலாக அணு உலை அழுத்தக் கலன் அமைந்துள்ள பகுதியில்தான் எரிபொருள் கூடுமிடம் அமையப் போகிறது. அதுதான் நியூட்ரான் வெடிப்பில் அதிக தாக்கத்தை சந்திக்கக் கூடிய பகுதி. உலையின் மையப் பகுதியின் மேல் அமைந்துள்ள அணுஉலை அழுத்தக் கலனைச் சுற்றி யுள்ள இரும்பு உறைப் பகுதி பற்றவைப்புகள் இல்லாமல் இருப்பதே பாதுகாப்பை உறுதி செய்யக்கூடியது” என்றும் அவர் கூறினார். பற்றவைப்புகள் என்பவை பலவீனமானவை, இந்த பற்றவைப்புகளில் நிக்கல் போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பது, நியூட்ரான் வெடிப்பின்போது பாதிப்பை ஏற்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.

சர்வதேச அணுசக்தி முகமையும், ஐரோப்பிய யூனியனும் உலையின் மையப் பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பற்றவைப்புகள் இருந்தால், அழுத்தத்தின் அடிப்படையிலும் அதிவேக வெப்பநிலை மாறுபாட்டின் அடிப்படையிலும் அதன் உறுதித்தன்மையை பரிசோதித்து மதிப்பிட வேண்டும் என்று கூறியுள்ளன. ஆனால் இதுபோன்ற பரிசோதனைகளை, அணுஉலை யில் எரிபொருள் கோல்களை பொருத்திய பிறகு செய்ய முடியாது.

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகள் மக்களிடம் பகிர்ந்து கொள்ளப்படாமல் இருப்பதால், மேற்கண்ட பரிசோதனைகள் செய்யப்பட்ட னவா என்பது தெரியவில்லை. அணுஉலையில் எரிபொருள் கோல்களை வைப்பதற்கு அரசு காட்டும் அவசரம் என்பது, இந்த பற்றவைப்புகளின் உறுதி தொடர்பாக மக்கள் தணிக்கை செய்வதற்கான வாய்ப்பைத் தடுக்கும் நோக்கம் கொண்டது என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும், கூடங்குளம் போராட்டத்துக்கான சென்னை ஆதரவுக் குழுவும், பி.எம்.ஏ.என்.இ. நிபுணர் குழுவும் குற்றஞ்சாட்டியுள்ளன.

கூடங்குளம் அணுஉலை வகையைச் சேர்ந்த வி.வி.இ.ஆர். 1000 அணுஉலை அழுத்தக் கலனின் உறுதித்தன்மை தொடர்பாக ஆஸ்திரியா, செகஸ்லோவாகியா நாடுகளிடையே சர்வதேச அளவில் மிகப் பெரிய பிரச்சினை எழுந்துள்ளது. செக் குடியரசின் டெமெலின் நகரில் கட்டப்பட்டு வரும் அணுஉலையில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதாக, அதன் அண்டை நாடான ஆஸ்திரியா புகார் கூறியுள்ளதை கவனிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பாதுகாப்பு மதிப்பீட்டின் ஒரு பகுதியாக அந்த அணுஉலை அழுத்தக் கலனின் உறுதித்தன்மை, பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக ஆஸ்திரிய நாடாளுமன்றத்துக்கு ரஷ்யா தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது.

 ஆனால், இந்திய – ரஷ்ய உறவுகள் பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி, இந்திய – ரஷ்ய இழப்பீட்டு ஒப்பந்தத்தை வெளியிட வேண்டும் என்ற அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இந்தப் பின்னணியில் பார்க் கும்போது, அணுஉலை அழுத்தக் கலனை விநியோகம் செய்துள்ள ஒப்பந்ததாரர் தரக்குறைவான கலனை கூடங்குளத்துக்கு விற்றிருப்பதன் மூலம், ஒப்பந்தத்தை மீறியிருக்கிறார் என்பதற்கான அப்பட்டமான ஆதாரம் இது.

 இருந்தபோதும், கூடங்குளம் அணுஉலையில் எந்த பேரழிவு ஏற்பட்டாலும் ரஷ்ய ஒப்பந்ததாரரை பாதுகாக்கும் வகையிலேயே இழப்பீட்டு ஒப்பந்தம் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். “தரமற்ற தொழில்நுட்பம், சிக்கன நடவடிக்கை, பாதுகாப்பு பற்றிய அக்கறையின்மை காரணமாகவே போபால் பேரழிவு நடந்தது. இப்போது மத்திய அரசும், மாநில அரசும் போபால் பேரழிவை கூடங்குளத்தில் மறுபடியும் நிகழ்த்திக் காட்ட முயற்சிக்கின்றன” என்று அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கமும், கூடங்குளம் போராட்டத்துக்கான சென்னை ஆதரவுக் குழுவும் தெரிவித்தன.

Pin It