இந்திய அரசின் கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை எதிர்த்து கடந்த ஆறு மாதங்களாக நடந்து வரும் மக்கள் போராட்டங்களை அடக்குமுறையின் மூலம் ஒடுக்கிவிட சதிச்செயல்களை அரங்கேற்றி வருகிறது இந்திய அரசு.
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப.உதயக்குமார், புஷ்பராயன் உள்ளிட்ட போராட்டக்குழுவினர், நடுவண் நிபுணர் குழுவுடன் நான்காம் கட்டப் பேச்சு நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றிருந்தபோது, ஆரியப் பார்ப்பனிய இந்து மதவெறிக்கும்பலால் தாக்கப்பட்டனர்.
போராட்டக் குழுவினரைச் சேர்ந்த பெண்கள் மீது காவிக்கும்பல் ஏவிய வன்முறையை தொலைக்காட்சியில் பார்த்தபோது, பகுத்தறிவுப் பரப்புரை தழைத்தோங்கிய பெரியாரின் மண்ணிலேயே இவர்கள் இவ்வாறு தாக்குகின்றனர் என்றால், ஆரியப் பார்ப்பனிய மதவெறிப் பரப்புரைகள் இடைவிடாது நிகழும் குசராத் போன்ற பார்ப்பனிய மதவெறி சக்திகளின் பிடியில் உள்ள மாநிலங்களில் சிறுபான்மையின மக்கள் எந்தளவிற்கு மூர்க்கமான வன்முறைக்கு உள்ளாவர் என நினைத்துப் பார்க்க நெஞ்சு நடுங்குகிறது.
அதே நேரத்தில், கூடங்குளத்தில் பெரும் எழுச்சியுடன் நடந்து வரும் மக்கள் போராட்டத்தை வழிநடத்தும் போராட்டக்குழுவினர் மீதான இத்தாக்குதல் நிகழ்வு குறித்து நாம் வியக்கத் தேவையில்லை. இது எதிர்பார்த்த ஒன்றுதான்.
இத்தாக்குதல் இரு செய்திகளை வெளிக்கொணர்ந்துள்ளது. ஒன்று, இந்தியத் தேசிய வெறியர்களும், ஆரியப் பார்ப்பன மதவெறியர்களும் பாசிசத்தை மட்டுமே தங்களது வழிகாட்டும் நெறிமுறையாகக் கொண்டுள்ளனர். இன்னொன்று, தமிழ் இனத்தின் மீது தீராத இனப்பகையும், கொடும் வெறுப்பும் கொண்டுள்ள ஆரிய இனவெறி இந்திய அரசு, கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான தமிழ் மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை நசுக்கவும் இவ்வழிமுறையையே நம்பியிருக்கிறது. அதன் வெளிப்பாடு தான் இத்தாக்குதல்!
'அகிம்சை' நாடென்று வாய்கிழிய முத்திரைக் குத்திக் கொண்டு, இரத்தவெறியுடன் ஓலமிடும் இந்திய வெறியர்களுக்கு என்றைக்குமே வன்முறைதான் வழிமுறையாக இருந்து வருகின்றது என்பது வரலாறு. காசுமீரிலும், நாகாலாந்திலும், மணிப்பூரத்தலும் தனது இராணுவம் மூலம் நிகழ்த்துகின்ற வன்முறைகளை, இந்து முன்னணி – பா.ச.க. – காங்கிரசு கூட்டணிகளின் குண்டர் படை மூலம் தமிழ் மண்ணிலும் செயல்படுத்தத் துடிக்கிறது இந்திய அரசு. அதற்கு ஒருநாளும் நாம் இடம் கொடுக்க மாட்டோம்.
அணுஉலைக்கு எதிராகப் போராடும் தமிழ் மக்கள் மீது வன்முறையை ஏவி ஒடுக்க இந்திய அரசு முயலும் என்பதற்கான அறிகுறிகள் கடந்த ஆண்டின்(2011) இறுதிப் பகுதியிலேயே தெரியத் தொடங்கிவிட்டன. இரசியப் பயணம் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இரசிய உதவியுடன் கூடங்குளத்தில் மேலும் சில அணுஉலைகள் கட்டுவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு போராடும் தமிழ் மக்களை இழிவுபடுத்திய போதும், "கூடங்குளம் அணுமின் நிலையம் இன்னும் சில வாரங்களில் செயல்படத் தொடங்கும்" என்ற திமிருடன் அவர் அறிவிப்பு வெளியிட்டபோதும் இது தெரிந்தது. உண்மையில், தமிழக மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளைத் தொடங்கவிருக்கிறோம் என்பதற்கான அறிவிப்பாகத் தான் அதனை நாம் பார்க்க வேண்டும்.
போராடும் மக்களையும் மதிக்காமல், தமிழ் இனத்தை இந்திய அரசுக்கு கூட்டிக் கொடுத்து கங்காணி வேலை பார்க்கும் தமிழக அமைச்சரவையின் தீர்மானத்தையும் மதிக்காமல் மன்மோகன் சிங் வெளியிட்ட அறிவிப்பு, இரசியாவின் அழுத்தத்தால் மட்டும் வெளிப்பட்டதல்ல, இந்திய அரசின் தமிழின எதிர்ப்பு வெறியிலிருந்தும் பிறந்தது தான். தமிழ் இனம் இன்னும் தமக்குக்கீழ் அடிமையாகத் தான் உள்ளது என்பதை மீண்டுமொருமுறை உலகிற்கு அறிவித்திருக்கிறது இந்திய அரசு.
மன்மோகன் சிங்கின் அறிவிப்பைக் கண்டித்து 18.12.2011 அன்று கூடங்குளம் பகுதியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கிளர்ந்தெழுந்து மாபெரும் பேரணியை நடத்தினர். தமிழகக் காவல்துறையின் தடையை மீறி நடந்த இப்பேரணி கூடங்குளத்திலிருந்து ராதாபுரம் வரை 10 கி.மீ., தூரம் வரை நடந்தது அங்கிருந்த மக்களின் கொதிப்புணர்வை உலகிற்கு வெளிக்காட்டியது.
இதனைத் தொடர்ந்து தான், தனது சதிச்செயல்களை அரங்கேற்ற தொடங்யது இந்திய அரசு. வேண்டா வெறுப்பாக நடத்தப்படுகின்ற பேச்சுவார்த்தையை விரும்பாத இந்திய அரசு, அதில் கலந்து கொள்ள வந்த போராட்டக்குழுவினர் மீது தாக்குதல் நடத்தியதும், காங்கிரசு பொறுக்கிகளை வைத்து நெல்லையில் அணுஉலை ஆதரவு மாநாடு நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது.
ஏற்கெனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்துத் தீவிரமாகக் களமாடி வரும் முனைவர் சுப.உதயக்குமார் தலைமையிலான அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை ஒடுக்குவதற்கும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு களமிறங்கியுள்ளது இந்திய அரசு. இதனைத் தொடர்ந்து தான், முனைவர் உதயக்குமார் தலைமையிலான கூடங்குளம் மக்களது போராட்டம் வெளிநாட்டுச் சதியால் தான் நடைபெறுகிறது என்றும், இப்போராட்டத்தை ஊக்குவிக்க ‘அந்நிய சக்திகள்’ நிதியளிக்கின்றன என்றும் இந்திய அரசின் அணுசக்தித் துறையும், காங்கிரசுக் கட்சியினரும் கதைகட்டி குற்றம்சாட்டினர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் இரசியாவின் துணையுடன் செயல்படவிருப்பதால், அதைத் தடுக்க வேண்டுமென அமெரிக்க ஏகாதிபத்தியம் துடிக்கிறதாம். அதனால், அமெரிக்க அரசு உதயக்குமாரை களமிறக்கி அத்திட்டத்தை நிறுத்திவிட நினைக்கிறதாம். இப்படியொரு கதையை அவிழ்த்துவிட்டது, ஆரியப் பார்ப்பனர்களின் ஏடான ‘தினமலர்’.
தினமலரின் சிண்டு முடியும் வேலையைத் தொடர்ந்து, போராடும் மக்களையும், தன்னார்வ அமைப்புகளையும் அச்சுறுத்தும் நோக்கில் இந்திய அரசின் வருமானவரி அதிகாரிகள் கூடங்குளம் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அலுவலகங்களை முற்றுகையிட்டு சோதனைகள் நடத்தினர்.
"எங்கள் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள், இரண்டு வாரத்திற்கு ஒருமுறை, தங்கள் வருவாயில், 10 சதவீதமும், பீடித் தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தில், 10 சதவீதமும் போராட்டத்திற்குத் தருகின்றனர். கூடங்குளம், செட்டிக்குளம் பகுதி மக்களும் நன்கொடை அளிக்கின்றனர். இந்திய அரசு தான், அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளின் அணுசக்தி நிறுவனங்களிடம், தரகுத்தொகை வாங்கிக் கொண்டு, மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல் செயல்படுகிறது” என்று எளிமையாக விடையளித்தார் போராட்டக்குழுத் தலைவர் முனைவர் உதயக்குமார்.
சுவிஸ் வங்கிகளில் கோடிக்கணக்கான கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் கருங்காலிகளின் பட்டியலை தனது கைகளில் வைத்திருந்தும் கூட, அதை இன்று வரை வெளியிடமாட்டோம் என அடம்பிடித்து வரும் மக்கள் விரோத காங்கிரசு அரசுக்கு, கூடங்குளம் மக்கள் தமது சொந்த உழைப்பின் மூலம் நடத்தி வரும் போராட்டத்திற்கு ‘நிதி எங்கிருந்து வருகிறது’ என்று கேள்விக் கேட்பதற்கு எவ்விதத் தகுதியும் இல்லை.
அந்நிய மண்ணில் நடந்த பேரம் ஒன்றைக் காரணம் காட்டி, தனியார் கைபேசி நிறுவனமான வோடோபோன் நிறுவனம் தான் அரசுக்குக் கட்ட வேண்டிய வரித் தொகையான 11,000 கோடி ரூபாயை கட்டத் தேவையில்லை என அண்மையில் உத்தரவிட்டது இந்திய உச்சநீதிமன்றம். இத்தீர்ப்பால் இந்தியாவில் முதலீடு செய்ய வரும் அந்நிய பன்னாட்டு நிறுவனங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளன என்றும், இது இந்திய நீதித்துறைக்கு கிடைத்த வெற்றி என்றும் வானுயரப் புகழ்ந்தார் வோடாபோன் நிறுவனத்துக்காக வாதாடிய காங்கிரஸ் கட்சியின் பேச்சாளர் அபிஷேக் சிங்வி.
மக்களின் மேம்பாட்டுப் பணிகளுக்குச் செலவிட வேண்டிய பெருந்தொகையான நிதியை சட்டப்பூர்வமாக ஒரு தனியார் நிறுவனத்திற்கு திருப்பிவிட்டதை 'மகிழ்ச்சி மகிழ்ச்சி' எனக் கொண்டாடி மகிழும் காங்கிரஸ் கட்சிக்கு, கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு செலவாகும் நிதி குறித்துப் பேச என்ன தகுதி இருக்கிறது?
உண்மையில், அமெரிக்க அரசு இத்திட்டத்தை நிறுத்த வேண்டுமென நினைத்தால் அமெரிக்காவின் இந்தியத் தலைமை ஏஜென்ட்டான பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரே ஒரு தொலைபேசி அழைப்பு விடுத்தால் போதும். கடலில் குதிக்கவும் அவர் தயாராக இருக்கிறார். அவர் மட்டுமா? காங்கிரசு - பா.ச.க. உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிக் கட்சித் தலைவர்களும், அவருடன் அமெரிக்க அடிமையாக வரிசையில் பின்நிற்பார்கள்.
இவர்களையெல்லாம் விட்டுவிட்டு, மக்கள் போராட்டங்களைக் கொண்டு திட்டங்களை நிறுத்துவதற்கு, அமெரிக்கா ஒன்றும் சதிகளை யாருக்கும் தெரியாமல் அரங்கேற்றும் நாடல்ல. பகிரங்கமாக பயங்கரவாத்த்தை கட்டவிழ்த்துவிடும் ஏகாதிபத்தியத் தலைமையகம் அமெரிக்கா. அரம்பத்தனத்தையே தனது வழிமுறையாகக் கொண்டு செயல்படும், உலகின் மிகமோசமான பயங்கரவாத நாடும் அது தான்.
அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினருக்கு எதிரான கலவரத்தைத் தூண்டி விடுவதற்கான அனைத்து காரியங்களையும் செய்து வரும் இந்திய அரசு, மறுபுறத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு எதிராகவும், அணுஉலைக்கு ஆதரவாகவும் ஊடகவியல் போரைத் தொடக்கி வைத்திருக்கிறது. இது, போராட்டக்குழுவினர் மீது இந்திய அரசால் கடும் ஒடுக்குமுறைகள் நடத்தப்படும்போது, பெரும்பான்மை மக்களை தனது பக்கத்தில் வைத்துக் கொள்வதற்கான இந்திய அரசின் சதிச்செயலே ஆகும்.
அணுமின் நிலையங்களால் எவ்வித ஆபத்துகளும் இல்லையெனவும், கல்பாக்கம் அணுமின் நிலையம் அமைந்துள்ள பகுதி மீனவர்களும் மக்களும் நலமாகவே இருக்கின்றனர் என்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் கூறுகிறது, இந்திய அரசின் அணுமின் சக்தி கழகம்.
இதே அணுமின் சக்தி கழகம் தான் அண்மையில் அதிகாரப்பூர்வமாகவே, கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியர்கள் 3 பேர் உட்பட 9 பேர் மரணத்திற்கு அணுக்கதிர் வீச்சுதான் என்ற உண்மையை ஒப்புக் கொண்டது என்ற தகவலை மும்பையிலிருந்து வெளிவரும் தி டெய்லி நியூஸ் அனலிசிஸ் என்ற நாளிதழ் 14.01.2012 அன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. (காண்க: http://www.dnaindia.com/mumbai/report_dna-investigations-deaths-confirm-cancer-risk-near-n-reactors_1637359)
கடந்த 2010ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு முதலில் பதிலளிக்க மறுத்து, தற்போது மிகவும் காலதாமதமாக அளித்துள்ள பதிலில் இதை இந்திய அணுசக்தித் துறை இதனை ஒப்புக் கொண்டதாகவும் அந்நாளிதழ் தெரிவித்துள்ளது.
1995லிருந்து 2011வரையிலான காலங்களில் இவர்கள் இறந்து போனதாகவும், இவர்கள் இறப்பதற்கு மைஎலோமா மற்றும் எலும்புப் புற்றுநோய்(myeloma and bone cancer) ஆகியவையே காரணம் என்றும் இந்திய அணுசக்தித் துறை தெரிவித்துள்ளது. மேலும், இக்காலப்பகுதியில் மட்டும் அணுமின் நிலையத்தில் பணிபுரியும் ஊழியர்களின் குடும்பத்தினர் 11 பேர் உள்ளிட்ட 14 பேர் இந்நோய்களின் தாக்கத்தில் இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது.
இது குறித்து மேலும் ஆராய்வதற்காக மருத்துவர் மஞ்சுளா டாடா என்பவர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது இந்திய அணுசக்தித் துறை. இக்குழுவினர், கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பகுதிகளில் ஆய்வு செய்து புற்றுநோய் தாக்கம் ஏற்பட, சாதாரணப் பகுதிகளை விட 8 மடங்கு அதிக ஆபாயங்கள் இருப்பதைக் கண்டறிந்தது. இக்குழுவின் அறிக்கை பொதுமக்களின் பார்வைக்கு வெளியிடப்படவே இல்லை.
தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கும் போது, இந்திய அணுசக்தித் துறை, கடந்த 1999ஆம் ஆண்டிலிருந்து 2009 ஆண்டிற்குள் மட்டும் 244 ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருக்கு பல்வேறு வகை புற்றுநோய்கள் இருப்பதும் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. 2000லிருந்து 2010வரையிலான காலப்பகுதியில் 19 பேர் தைராய்டு புற்றுநோயில் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்பாக்கம் அணுமின் நிலையமே இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதை விட மிகப்பெரிதான கூடங்குளம் அணுஉலை செயல்படத் தொடங்கினால் இதைப் போல பன்மடங்கு பாதிப்புகளை தமிழ்நாட்டு மக்கள் சந்திப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
ஆனால், இவ்வ்ளவு உண்மைகளையும் எளிதாக மறைத்து விட்டு கோடிகளைக் கொட்டி தொலைக்காட்சிகளில் விளம்பரங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றி வருகிறது இந்திய அரசு. இது தமிழின விரோதம் மட்டுமல்ல மனித குலவிரோத நடவடிக்கையும் ஆகும்.
இவை ஒருபுறமிருக்க, கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த நிலநடுக்கத்தையடுத்து விபத்தில் சிக்கிய, புகுஷிமா அணுஉலையினுள் உள்ள கதிர்வீச்சு தன்மை கொண்ட எரிபொருளை தற்போது வெளியே எடுப்பதற்கு, 40 ஆண்டுகளும் சற்றொப்ப ரூ. 78,400 கோடியும் தேவைப்படும் என அறிவித்திருக்கிறது, ஜப்பான் நாடு.
அணுஉலையிலிருந்து வெளியே எடுக்கப்படும் கதிர்வீச்சு தன்மை கொண்ட எரிபொருளை சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்து இல்லாமல் எப்படி அப்புறப்படுத்துவது என்பதற்கான வழிமுறைகளை இனிமேல்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்கிறது அந்நாடு. புகுஷிமா அணுஉலையின் நிலைமையை கண்காணிப்பதற்காக ஜப்பான் அரசு நியமித்துள்ள அமைச்சர் கோஷி ஹோசனோ இத்தகவலை வெளியிட்டார்.
உலையிலிருந்து, எரிகலத்தின் அடிப்புறத்துக்குச் சென்றுவிட்ட எரிபொருளை வெளியே கொண்டு வருவதற்கான முன் ஏற்பாடுகளைச் செய்யவே 10 ஆண்டுகள் பிடிக்குமாம். அதைச் செய்வதற்கும் ரோபோட்டுகள் எனப்படும் இயந்திர மனிதர்களை இனிமேல்தான் தயாரிக்க வேண்டுமாம்.
அணுஉலை மின்சாரம் மிகவும் மலிவானது என்று கூறும் இந்திய அரசு மற்றும் அதன் ஆதரவாளர்களின் முகத்தில் அறைந்தாற்போல் வெளியாகியிருக்கிறது இச்செய்தி!எனினும், தமது ஊடக அதிகார பலத்தால் மக்களிடையே தொடர்ந்து பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றது இந்திய அரசு.
மேலும், தமிழ்நாட்டின் மின்சாரத் தேவைக்காக தான் அணுஉலைகள் என்றும், ஒரு மோசடி பரப்புரையைக் கட்டவிழ்த்திருக்கிறது இந்திய அரசு.
தமிழ்நாட்டின் நெய்வேலியில் உற்பத்தி செய்யப்பட்டு, நமது நியாயமான உரிமைகளை இன்றைக்கும் மறுத்து வருகிற கேரள, கர்நாடக, ஆந்திர மாநிலங்களுக்கு இந்திய அரசால் பகிர்ந்தளிக்கப்படுகிற மின்சாரத்தை தடுத்து நிறுத்துவதாலும், பன்னாட்டு மற்றும் வடநாட்டு பெருமுதலாளிய நிறுவனங்களுக்கும், அவர்தம் கேளிக்கை விடுதிகளுக்கும் வழங்கப்பட்டு வரும் தங்குதடையற்ற மின்சாரத்தை நிபந்தனையின்றி இரத்து செய்வதாலும் நிறைய மின்சாரத்தை தமிழகத்தால் சேமிக்க முடியும்.
மேலும், மின்சாரத்தை கடத்தும்போது ஏற்படும் இழப்புகளை சரிசெய்யும் விதமாக பெரும் தொழிற்சாலைகளில் மொத்தமாக உற்பத்தி செய்யும் முறைகளைக் கைவிட்டு விட்டு, தேவைக்கேற்ப ஆங்காங்கு இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத மாற்று எரிபொருட்களைக் கொண்டு சிறுசிறு மின் உற்பத்தித் திட்டங்களை செயல்படுத்தி மின்உற்பத்தியில் தற்சார்புடன் விளங்கும் கிராமங்களையும், நகரங்களையும் உருவாக்க முடியும்.
இவற்றைச் செய்தால், நமது மின் பற்றாக்குறைகள் நீங்குவதுடன், மின் உற்பத்தியில் நாம் உபரி ஈட்டும் மாநிலமாகவும் திகழ முடியும்.
ஆனால், ஆரிய இனவெறியோடு பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்களால் ஆளப்படுகின்ற இந்திய அரசு இவற்றை செய்ய ஒருநாளும் ஒத்துக் கொள்ளாது. ஆக, இந்திய அரசை உடைத்தெறிவதன் மூலமே இவற்றை நாம் சாதிக்க முடியும் என்ற தெளிவு பிறக்க வேண்டும்.
கூடங்குளம் அணுஉலை வராமல் தடுக்கும் பணி, இன்றைய தமிழகத்திற்கு மட்டுமல்ல, இனி வரப்போகும் அடுத்த தலைமுறைத் தமிழினத்தையும் சேர்த்து பாதுகாக்கும் பணியாகும். எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தை இழுத்து மூடும் வரை நம் போராட்டம் ஓயக்கூடாது. அப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போராளிகளைப் பாதுகாப்பதும், போராட்டத்தை ஒடுக்க முற்படும் இந்தியத் தேசிய வெறியர்களுக்கு எதிராகவும், ஆரிய பார்ப்பனிய மதவெறிக் கும்பலுக்கு எதிராகவும் தமிழ்த் தேச மக்களை ஒன்று திரட்டிப் போராட வேண்டியதும் காலம் நமக்கு இட்டிருக்கும் பணி! அதை காலம் தாழ்த்தாது முடிப்போம்!
- க.அருணபாரதி (
(கட்டுரையாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர்)