பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இந்தக் கூட்டம் ஓர் ஆண்டு விழாவுக்காக கூட்டப்பட்டதாகும் அதுவும் வள்ளுவர் படிப்பக ஆண்டுவிழா. இதற்கு அழைக்கப்பட்டு இருப்பதினால் வள்ளுவரைப்பற்றி ஏதோ சில வார்த்தைகள் பேச விரும்புகிறேன். பிறகு பொதுவிஷயங்கள் பற்றிய பேசுகின்றேன்.

நண்பர் வீரமணி அவர்கள் சொன்னதுபோல, முதலாவதாக நாம் சிந்திக்கவேண்டிய விஷயம் உலகத்திலேயே நாம் மட்டும்தான் காட்டுமிராண்டிகளாக இருந்து வருகின்றோம். இந்த நாட்டில் குடிபுகுந்த பார்ப்பான் எப்படியோ மக்களை மடையர்களாகவும், காட்டு மிராண்டிகளாகவும் ஆக்கிவிட்டார்கள். இவைகளை ஒழித்து மக்கள் சமுதாயத்தை விழிப்புறச் செய்ய நாட்டில் எவருமே தோன்றவில்லை. தோன்றியவர்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டு இருக்கின்றனர்.

முன்காலத்தில் நமது அரசர்கள் எனப்படும் இரண்யன், சூரபத்மன், இராவணன் முதலானவர்கள் முயற்சி செய்து இருக்கின்றனர். இவர்கள் எல்லாம் தந்திரமாகவே ஒழிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இப்படி பார்ப்பனர்களின் வண்டவாளங்களையும், பித்தலாட்டங்களையும் கண்டித்து மக்களுக்கு அறிவுக்கண் திறக்கும்படி பாடுபட்டவர்களில் இரண்டு பேர்களை நாம் தெளிவாக உணர வாய்ப்பு உள்ளது.

2500 ஆண்டுகளுக்கு முன்பு புத்தர் என்பவர் தோன்றி, பார்ப்பான் கற்பித்த கடவுள் மோட்சம், நரகம் முதலிய பித்தலாட்டங்களை எல்லாம் கண்டித்து மக்களுக்கு பகுத்தறிவு உணர்ச்சி உண்டாக்கப் பாடுபட்டார். இப்படிப் பாடுபட்ட அவரும், அவரது மார்க்கமும் பார்ப்பனர்களால் தந்திரமாக ஒழிக்கப்பட்டுவிட்டது.

அடுத்து வள்ளுவர் தோன்றினார். அறிவு சம்பந்தமான கருத்துகளை எல்லாம் குறளாகப் பாடினார். இவரது குறளும் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாமல் குப்பையில் தள்ளப்பட்டுக் கிடக்கும் வண்ணம் செய்துவிட்டார்கள். இந்த நாட்டில் இராமாயணத்திற்கும், கதைக்கும் இருக்கின்ற பெருமை இப்படிப்பட்ட அறிவு சம்பந்தமான குறளுக்கு நாட்டில் மதிப்பு இல்லை. இந்த புராணக் கதைகளை மக்கள் தெரிந்து இருக்கும் அளவு குறளை தெரிந்து இருக்கமாட்டார்கள்.

இவர்களுக்குப் பிறகு எவருமே தோன்றவே இல்லை; தோன்றிய ஆழ்வார்கள், நாயன்மார்கள், அவதாரப் புருஷர்கள் என்பவர்கள் எல்லாம் நம்மை என்றென்றைக்கும் மடையர்களாகவும், பார்ப்பானுடைய கடவுளுக்கு அடிமையாகவும் ஆக்கவே பாடுபட்டார்கள். அதன் காரணமாகவே, பார்ப்பானால் ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று சுத்த அடிமுட்டாள்கள், காலிகள் எல்லாம் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அடுத்து, ஏதோ சித்தர்கள் என்று பல பேர்கள் இருந்து இருக்கின்றார்கள். இவர்களும் சந்திலே பொந்திலே இருந்து கொண்டு ஏதோ இரண்டொரு வார்த்தைகள் கூறி இருப்பார்கள். மற்றபடி எவனும் வெளிவந்து எவனும் பாடுபட முன்வரவே இல்லை. நாங்கள்தான் பாடுபடுகின்றோம்.

மற்றபடி எந்த அரசியல் கட்சிக்காரர்களும் இதில் ஈடுபடமாட்டார்கள். எங்களைவிட படித்தவர்கள், புலவர்கள் மேதாவிகள் ஆக இருக்கலாம். இவர்கள் எல்லாம் வயிற்றுப் பிழைப்புக்குப் படித்தவர்கள் ஆவார்கள். அரசியல் கட்சிக்காரர்கள் சொன்னால் ஓட்டுக் கிடைக்காதே என்று கூறமாட்டார்கள்.

தோழர்களே! நான் முன்பு குறிப்பிட்டதுபோல புத்தரும், வள்ளுவரும்தான் இப்படி பார்ப்பனர்களை எதிர்த்து அறிவுப் பிரச்சாரம் செய்து இருக்கின்றனர்.

பவுத்தர்கள் எல்லாம் புத்தரையும் புத்த மார்க்கத்தையும், தெய்வத்தன்மை பொருந்தியவர், அவர் கோட்பாடுகள் எல்லாம் முடிந்த முடிவானது என்று எண்ணுவதோடு, மூடத்தனமான சடங்குகளை எல்லாம் அறியாமையின் காரணமாக கையாண்டு வருகின்றனர்.

நான் புத்தனையோ, வள்ளுவனையோ, முகமது நபியையோ மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர்கள் என்பதை ஒத்துக்கொள்ளுவதில்லை. இவர்கள் மனிதத்தன்மைக்கு மேம்பட்டவர்கள் என்றால், அவர்கள் அதிசயமானவர்கள் என்று கருதி மரியாதை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை. மனிதன் என்று கருதினால்தான் அவர்களுக்கு மதிப்பு உண்டு.

எவன் ஒருவன் அறிவை சுதந்தரமாக விட்டு எந்தக் காரியத்தையும் சிந்திக்கின்றானோ, அவன் எல்லாம் புத்தன் அவன் எல்லாம் வள்ளுவன் இராமசாமி இப்படி ஆகலாம், புத்தன் என்றாலேயே புத்தி உடையவன், புத்தியைக் கொண்டு எதையும் ஆராய்பவன் என்பதன் பொருள்.

இந்தக் கருத்தை ஈரோட்டில் நடைபெற்ற புத்த மாநாட்டில் எடுத்துச் சொன்னேன். உலக புத்த சங்கத் தலைவரான திரு. மல்லல சேகராவும் இதனை ஒத்துக் கொண்டார். நேற்று கோலார் புத்த சங்க ஆண்டு விழாவிலும் கூறினேன். அவர்களும் ஒத்துக்கொண்டார்கள்.

புத்தர் வள்ளுவர் இவர்கள் கருத்துகளே முடிந்த முடிவு. இவைகள் எந்த காலத்துக்கும் பொருந்தும் என்று கூறமுடியாது. புத்தர், வள்ளுவர் ஆகியவர்கள் வாழ்ந்த காலம் அன்றைய மக்கள் நிலை முதலியவைகளையும் எண்ணிப் பார்க்கவேண்டும். புத்தர் 2500 ஆண்டுக்கு முன்னும், வள்ளுவர் 2000 ஆண்டுக்கு முன்னும் வாழ்ந்தவர்கள். அன்றையதினம் இருந்த கேடுகளுக்குப் பரிகாரமாகவும், அன்றைய அனுபவத்தை ஒட்டியும் எடுத்துச்சொல்லி இருக்கின்றார்கள். அன்றைய ஆசிரியர்களின் வைதீக மார்க்கத்தைக் கண்டித்து உள்ளார்கள். இன்றைய நிலையிலும் ஆரியர் ஆதிக்கம் இருக்கின்றது. இந்தக் கருத்துகளை நாம் பாராட்ட வேண்டியதுதான்.

சிக்கி - முக்கிக்கல் காலத்து மனிதனுக்கு இன்றைய மின்சார விளக்கைப்பற்றி தெரிந்து இருக்கமுடியுமா? மனிதன் பழைய சங்கதி என்றாலே ஜாக்கிரதையாக சிந்திக்கவேண்டும். அப்படியே ஏற்றுக்கொள்ளுவது ஒருவகைப் பார்ப்பனியம்தான். மூடநம்பிக்கையானது தான் எதையும் யார் சொன்னதாக இருந்தபோதிலும், எந்த காலத்தில் கூறப்பட்டு இருந்தபோதிலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், உன் அறிவு கொண்டு சிந்திக்கவேண்டும். இப்படித்தான் புத்தரும், வள்ளுவருமே கூறியும் உள்ளார்கள்.

இராமாயணமும், பாரதமும் கி.மு.200, 300 இல் எழுந்திருக்க வேண்டும். இராமாயணம் முந்தியது, பாரதம் பிந்தியதாகும். இப்படி 2000 ஆண்டுக்கு முன் மக்கள் அறிவு என்ன இருந்து இருக்க முடியும்? சிக்கிமுக்கிக்கல் காலத்தவர்கள் ஆயிற்றே, அந்தக் காலத்து மனிதன் மூளையில் எழுந்த கருத்து இன்றைக்கு எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும்? இவைகள் எப்படி பின்பற்றத்தகுந்ததாக இருக்க முடியும்? இவைகள் இருக்கத் தகுந்தது, போற்றத் தகுந்தது என்று எவனாவது சொல்லுவானேயானால் இதில் கண்ட போற்றத்தகுந்த கொள்கைப்படி நடக்கத் தயாராக இருக்கின்றானா? பாரதத்தில் ஒருவன்கூட அவன் அப்பனுக்குப் பிறக்கவில்லை. இப்படி இருக்க எவனாவது ஒத்துக்கொள்ளுவானா? பாரதத்தில் திரவுபதிக்கு 5 புருஷன். இன்றைக்கு அது இருக்கவேண்டும்.

போற்றவேண்டியது என்பவன் எவனாவது தங்கள் மனைவி மகளை 5 பேரைக் கட்டிக் கொள்ள சம்மதிப்பவன்? இதனை ஒத்துகொள்ள-மாட்டான். ஆனால், அந்த கதையை மட்டும் கொண்டாடுகின்றானே என்ன நியாயம்?

தோழர்களே! இராமாயணத்தில் தசரதன் தன் தங்கையையே கட்டிக் கொண்டு இருக்கின்றான். வால்மீகி மாற்றிவிட்டான். ஆனால், புத்த இராமாயணம், சமண இராமாயணம் முதலியவைகளைப் பார்த்தால் தெரியும். தசரதனும், கோசலநாட்டு அரசன். கவுசலையும் கோசலநாட்டு அரசன் மகள். அதன் காரணமாகவே கவுசலை அல்லது கோசலை என்று அழைக்கப்பட்டாள். சுமார் 70 வருஷம் முன்வரையில் சயாமில் இந்தமுறை அரச குடும்பத்தில் இருந்து வந்து இருக்கின்றது. நமது கடவுள்கள் என்பவைகளும்கூட தங்கச்சியையும், மகளையும் கட்டிக்கொண்டதாக புராணங்களில் காண்கின்றோம்.

இராமன், அவன் அப்பன் தசரதனுக்குப் பிறந்தவன் அல்ல; யாகப் புரோகிதனுக்குப் பிறந்தவன். அந்த காலங்களில் அது குற்றமாகக் கருதப்படவில்லை. புத்திரகா மேஷ்டி யாகம் என்றால், யாகப் புரோகிதனுடன் பிள்ளை இல்லாவிட்டால் கலவி செய்து குழந்தை பெற்றுக் கொள்ளுவது என்பது தான் பொருள்.

ஏன் இதனை எடுத்துச் சொல்லுகின்றேன் என்றால், அன்றை மக்கள் அறிவு நடப்பு இவ்வளவுதான். அது இன்றைக்கும் எப்படிப் பொருந்தும்? என்பதை எடுத்துக்காட்டவேயாகும். நம் கதைகளிலும், புராணங்களிலும் ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தார் என்று ஆரம்பிக்கும். இன்று அரசன், இந்த நாட்டில் எங்கே இருக்கிறான்? உலகத்தில் பெரும்பாகங்களில் இராஜாக்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டுவிடவில்லையா? எனவே, எதையும் முன்னோர் சொன்னது, செய்தது, பழையவழக்கம் என்பதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், அறிவுகொண்டு ஜாக்கிரதையாக சிந்திக்க-வேண்டும். இராமாயணத்தில் கூறுகின்றான். எவன் ஒருவன் கடவுள், மதம் முதலியவைகளையும், முன்னோர்கள் நடப்புகளையும் அறிவு கொண்டு சிந்திக்கின்றானோ அவன் எல்லாம் நாத்திகன் என்று கூறப்பட்டு உள்ளது. இன்னொரு இடத்தில் எவன் ஒருவன் அறிவு கொண்டு நீதி பேசுகின்றானோ அவன் நாத்திகன் என்று கூறியுள்ளது. இப்படியாக அறிவை உபயோகப்படுத்தியவர்கள் எல்லாம் நாத்திகர்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டு விட்டார்கள். அறிவு கொண்டு சிந்திக்காத காரணத்தினாலேயே, நாம் இந்த 20ஆம் நூற்றாண்டிலும் இழிமக்களாகவும், காட்டுமிராண்டி மக்களாகவும் இருக்கின்றோம் விஞ்ஞான அறிவு பெற்ற மேல்நாட்டுக்காரன் எவனாவது நம்மை மனிதன் என்று ஏற்றுக்கொள்ளுவானா? என்று குறிப்பிட்டார்கள்.

மேலும் பேசுகையில் கடவுள், மதம், ஜாதி, சாஸ்திரங்கள் ஒழிக்க வேண்டிய அவசியம் பற்றியும், அரசியல் பித்தலாட்டக்காரர்களின் தன்மைகள் பற்றியும் தெளிவுபடுத்தி அறிவுரையாற்றினார்கள்.

-------------------

தந்தை பெரியார் - “விடுதலை”, 25-5-1961
Pin It