பாம்பு என்றால்
பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழைய மொழியைத் தான் கேள்விப் பட்டிருப்போம். ஆனால் "பாம்பு என்றால் என்ன" என்பதை விலாவாரியாக, அறிவியல்பூர்வமாக, தெளிவாக விளக்கி எழுதப்பட்டுள்ள புத்தகம் இது. அதிகப்படியான மூடநம்பிக்கைகளால், பார்க்கும் இடமெல்லாம் அழிக்கப்பட்டு வரும் உயிரினங்கள் பாம்புகள். அறிவியல்பூர்வமான புரிதலின்மையும், சிந்திக்காமல் மூடநம்பிக்கைகளை நம்புவதுமே இதற்கு அடிப்படைக் காரணம். இவற்றை களையும் எண்ணத்துடன் தேவையான முக்கிய தகவல்களை கொண்டு வந்துள்ளது இந்தப் புத்தகம். ஏற்கெனவே, "யானைகள்: அழியும் பேருயிர்", "இயற்கை: செய்திகள், சிந்தனைகள்" போன்ற சிறந்த புத்தகங்களை எழுதிய "காட்டுயிர்" இதழ் ஆசிரியர் ச. முகமது அலி இப்புத்தகத்தை நேர்த்தியாக எழுதியுள்ளார். அதிக படங்களுடன் எளிமையான முறையில் அமைந்துள்ள இதுபோன்ற புத்தகங்கள், மற்ற காட்டுயிர்களைப் பற்றியும் வரவேண்டிய அவசியத்தை இப்புத்தகம் தூண்டுகிறது.
தொடர்புக்கு: ச.முகமது அலி,
இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை,
65, வேளாங்கண்ணி கோவில், காரமடை சாலை,
மேட்டுப்பாளையம்.
விலை ரூ.50
தமிழ்நாட்டின் நீர்நிலைகள்
"நீரின்றி அமையாது உலகு". நீரின்றி நாம் வாழ்வதும் சாத்தியமல்ல. ஒரு காலத்தில் இயற்கை சுழற்சியை கண்காணித்து, ஊர்கள் தோறும் குளம், ஏரி, கம்மாய் என்று நீர் நிலைகளை அமைத்து நீரை சேகரித்து வாழ்ந்த பண்பாடு நம்மிடம் இருந்திருக்கிறது. ஆனால் தொழிற்புரட்சி, வளர்ச்சி வெறி, அறிவியல் நோக்கு இல்லாமை காரணமாக அரசும் தொழில் வளர்ச்சியும் நீர்நிலைகளை கண்மண் தெரியாமல் அழித்து வருகின்றன. தண்ணீர் பற்றாக்குறை, காசு கொடுத்து தண்ணீர் வாங்குவது, வறட்சி என்று இதன் எதிர்விளைவுகளை ஏற்கெனவே நாம் அனுபவிக்க நேர்ந்து விட்ட நிலையிலும், நீர்நிலைகளை காப்பதற்கான முன்முயற்சிகள் நம்மிடையே குறைவாகவே உள்ளன. இந்நிலையில் ஏற்கெனவே "தமிழக நதிகள்" பற்றிய முக்கிய தொகுப்பை வெளியிட்டிருந்த தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழகம், தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் பற்றிய இந்தத் தொகுப்பை உருவாக்கியுள்ளது. அழிவின் தீவிரத்தை அறிய அவசியம் படிக்க வேண்டியது.
தொடர்புக்கு: தமிழ்நாடு சுற்றுச்சூழல் கழகம், 98 ஏ, கூட்டுறவு நகர், (பெஸ்கி கல்லூரி எதிர்ப்புறம்), திண்டுக்கல் - 624 005 நன்கொடை ரூ. 50
Diary on the Nesting Behaviour of Indian Birds
- Chinna Sathan, Bal Pandi
இந்தியப் பறவைகளின் கூடமைக்கும் பழக்கவழக்கங்கள் பற்றி அதிக புத்தகங்கள் இல்லை. இந்நிலையில் கோவையைச் சேர்ந்த சின்ன சாத்தன், கூந்தங்குளம் பறவை பாதுகாவலர் பால் பாண்டி ஆகிய இருவரும் களஅனுபவத்தில் பெற்ற குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். இந்தப் புத்தகத்தில் பல்வேறு வாழிடங்களில் வசிக்கும் 51 பறவைகளின் கூடமைக்கும் நடைமுறைகள் விவரிக்கப்பட்டுள்ளன. முன்னணி காட்டுயிர் ஒளிப்படக் கலைஞர்களிடம் இருந்து பெறப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஒளிப்படங்கள் புத்தகத்தின் மதிப்பை உயர்த்துகின்றன.
தொடர்புக்கு: வி.எஸ். கீதாராணி, சுகீத் பப்ளிஷர், 17, எஸ்.வி.எல் நகர், சூலூர், 641 402 கோவை மாவட்டம். விலை ரூ. 650
இலை இல்லை நாம் இல்லை
உலகெங்கும் தாவரங்கள் தயாரிக்கும் உணவைப் பெற்றே 600 கோடி மனிதர்கள், தாவர உண்ணி விலங்குகள், அவற்றை உண்ணும் ஊனுண்ணிகள், பறவைகள், கடல் வாழ் உயிரினங்கள், புழுப் பூச்சிகள், ஒரு செல் உயிரிகள் வரை வாழ்ந்து வருகின்றன. எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அனைத்தையும் தரும் தாவரங்களையும் மரங்களையும் நாம் எவ்வளவு தூரம் புரிந்து கொண்டிருக்கிறோம்? இந்த விஷயங்கள் அனைத்தையும் கவிதையாக, எளிமையாக, அழகாக உரைக்கிறது இப்புத்தகம். தமிழக பசுமை இயக்கத்தை நிறுவிய மருத்துவர் வெ. ஜீவானந்தம் எழுதியுள்ள இப்புத்தகத்தை, குக்கூ குழந்தைகள் வெளி நேர்த்தியாக வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே, இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் நேர்காணலை "விதையிலிருந்து துளிர்க்கும் மாறுதல்" என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளது.
தொடர்புக்கு: குக்கூ குழந்தைகள் வெளி, 25, ப.உ.ச. நகர், மாந்தோப்பு, போளூர் சாலை, திருவண்ணாமலை-1
மண்ணுக்கு உயிருண்டு
ஈரோட்டில் உள்ள பாட்டாளிகள் படிப்பகத்துடன் இணைந்து குக்கூ குழந்தைகள் வெளி வெளியிட்டுள்ள சூழல் விழிப்புணர்வுக் கையேடு இது. வேளாண்மை, தண்ணீர், மரம், காட்டுயிர்கள், பிளாஸ்டிக் ஒழிப்பு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள், தாவரம் உள்ளிட்ட சூழல் தொடர்பான பல்வேறு அம்சங்கள் பற்றி அடிப்படைத் தகவல்களைத் தருகிறது இந்தச் சிறு புத்தகம். "குக்கூ" சிவராஜ் தொகுத்து வெளியிட்டிருக்கும் இது போன்ற விழிப்புணர்வுக் கையேடுகளின் தேவை மிக அதிகமாகவே இருக்கிறது.
தொடர்புக்கு: பாட்டாளிகள் படிப்பகம், குக்கூ குழந்தைகள் வெளி, காவேரி சாலை, கருங்கல்பாளையம், ஈரோடு. நன்கொடை ரூ. 5