பால்பாண்டி - கூந்தங்குளம் பறவைகள் சரணாலயத்தின் மற்றுமொரு பறவை

திருநெல்வேலி மாவட்டத்தின் கூடங்குளம் அணுஉலைத் திட்டம் இந்திய அரசின் கனவுத்திட்டம். அணுஉலைகளின் பயங்கரங்கள் சிலவற்றை அறிந்தும், பலவற்றை அறியாமலும் இத்திட்டம் வெகுவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. சமீபத்திய தகவலின்படி, ரஷ்யாவின் எட்டு அணுஉலைகள் இங்கு நிறுவப்பட உள்ளன. கூடங்குளம் அணுஉலைகளில் ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் அது அந்த ஊரை மட்டும் விட்டு வைக்காது. கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள் முழுவதையும் பாதிக்கும்.

கட்டுரை, சம்பந்தமில்லாத ஊரைப் பற்றி பேசுகிறதே என்று நினைக்க வேண்டாம். கூடங்குளத்திலிருந்து வெறும் 20 கி.மீ. தொலைவி்ல்தான் கூந்தங்குளம் பறவைகள் சரணாலயம் உள்ளது. மனித உயிர்களைப் பற்றியே எந்தக் கரிசனமும் இல்லாத அரசு எந்திரம், பறவைகளைப் பற்றியா கவலைப்படப் போகிறது. கூடங்குளம் அணுஉலையின் 13 ராட்சத மின்கேபிள்கள் கூந்தங்குளம் வழியாக செல்ல உள்ளன. ஏற்கெனவே, கூடங்குளம் அணுஉலை அமைந்துள்ள பகுதியில் சில பறவைகள் இறந்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது.

கூந்தங்குளம் உலகின் முக்கிய பறவை சரணாலயங்களில் ஒன்று. 230க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வந்து கூடு கட்டுவதாக பறவையியல் அறிஞர்கள் கணக்கெடுத்துள்ளனர். நாங்குநேரி அருகிலுள்ள கூந்தங்குளத்தைச் சுற்றிலும் 150க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. கூந்தங்குளம் என்று பெயரளவில் அழைக்கப்பட்டாலும் இப்பறவைகள் சரணாலயம் கன்னியாகுமரியிலிருந்து திருநெல்வேலி வரை விரிந்து பரவியுள்ளது. இரு மாவட்டங்களிலும் இரை தேடுதல், கூடு கட்டுதல், முட்டையிட்டு குஞ்சு பொரித்தல் ஆகிய பறவைகளின் வாழ்க்கைச் செயல்பாடுகள் பல்வேறு ஊர்களில் நடைபெற்று வருகின்றன. நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஊருக்கு பறவைகள் வந்து செல்வதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர். இப்பறவைகளின் வாழ்க்கைக்கு இம்மக்கள் சிறிய தொந்தரவைக்கூட செய்வதில்லை. சூழலியல் கல்வியை அனுபவ அறிவு மூலம் முழுமையாகக் கற்ற மனிதர்கள், இந்த ஊரில் வாழ்கின்றனர் என்றும் இதைக் குறிப்பிடலாம். யாரும் சத்தம் போடக் கூடாது. தீபாவளிப் போன்ற பண்டிகை நாட்களில்கூட இங்கு பட்டாசு வெடிப்பதில்லை. யாரும் வேட்டையாடக் கூடாது. பறவை வேட்டையாடுபவர்கள் யாராவது தென்பட்டால் இந்த ஊர் மக்கள் கடுமையான தண்டனை தருகிறார்கள்.

தமிழகத்திலுள்ள வேறு பறவை சரணாலயங்களில் இல்லாத அதிசயம் என்னவென்றால், வலசை வரும் பறவைகள் இந்த ஊர் மக்களோடு மக்களாக ஒட்டிப் பழகுவதுதான். ஊரின் மையம் போல அமைந்துள்ள 100 ஏக்கர் பரப்புள்ள குளத்தைத் தவிர ஊரில் உள்ள வேப்ப மரம், கருவை மரம், இதர உயர்ந்த மரங்களில் மஞ்சள் மூக்கு நாரைகள் கூடு கட்டியிருப்பது அதிசயம். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரங்களில் கூட்டைப் பார்க்கலாம். மொட்டை மாடியிலிருந்து பார்த்தால் மரங்கள் மேல் பறவைகள் குஞ்சு பொரித்திருப்பதை நன்றாகப் பார்க்க முடியும். 4-5 அடி உயரமுள்ள மஞ்சள் மூக்கு நாரைகள் தெருவில், குட்டைகளில் நடந்து செல்வதையும் காண முடியும். ஆச்சரியமூட்டும் இந்தப் பறவைகளைப் போலவே, மற்ற சரணாலயங்களில் காணமுடியாத மற்றுமொரு அதிசயம்தான் பால்பாண்டி.

வலசை வரும் பறவைகள் அதிகம் கூடும் இடங்களி்ல் கூடுகட்டி குஞ்சு பொரிக்கும்போது, சில நேரம் கூட்டிலிருந்து குஞ்சுகள் தவறி விழுந்துவிட வாய்ப்பு உண்டு. குஞ்சுகள் பறக்கக் கற்காத நிலையில் இருப்பதாலும், உருவில் பெரிதாக இருப்பதாலும் தாய்ப் பறவைகள் மீண்டும் அவற்றை கூட்டுக்கு கொண்டு செல்ல முடிவதில்லை. அவை கைவிடப்பட்டு இறந்துவிடுகின்றன. தனது ஏழெட்டு வயதில் இருந்தே இந்தக் குஞ்சுகளை எடுத்து வளர்ப்பதிலேயே தனது இளமைக் காலம் கழிந்தது, அவற்றுடனே நானும் வளர்ந்தேன் என்று கூறுகிறார் பால்பாண்டி. படித்த பள்ளியில் நிறைய மரங்களை வளர்த்திருக்கிறார். பத்தாம் வகுப்பு வரை படித்த பிறகு, குஜராத்தில் வெல்டர் வேலை கிடைத்து அங்கு சென்றார். தனிமை மிகுந்த நாட்கள் அவரை வாட்டின. தான் வளர்ந்த மஞ்சள் மூக்கு நாரைக் குஞ்சுகளின் நினைவுகளும், கூட்டாக பறவைகள் எழுப்பும் சப்தங்களும் அந்த வேலையை விட்டுவிட்டு, மீண்டும் கூந்தங்குளத்துக்கே அவரை அழைத்து வந்தன.

மீண்டும் ஊருக்கு வந்த பிறகுதான் பால்பாண்டி பறவையோடு பறவையாக மாறத் தொடங்கினார். குஞ்சுகளை வளர்ப்பது, பறவைகளோடு பழகி அவற்றைப் பற்றி அறிவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணிக்கத் தொடங்கினார். நாகர்கோவிலில் உள்ள ஐ.ஆர்.என்.இ. என்ற நிறுவனத்தோடு இணைந்து பறவைகளைப் பற்றி படிக்கத் தொடங்கினார். அவர் மட்டுமில்லாமல், அவருடைய மனைவி வள்ளித்தாய், குழந்தைகள் எல்லோருமே இதற்காக உழைக்கத் தொடங்கினர். வள்ளித்தாய்க்கும் பால்பாண்டிக்கும் இங்கு வரும் பறவைகள் எல்லாமே குழந்தைகள்தான். இதுவரை கூந்தங்குளத்தில் மட்டும் பறவைகள் தங்குவதற்காக 1000 மரங்களை அவர் நட்டுள்ளார். மரங்களுக்குத் தண்ணீர் ஊற்றுவது, கீழே விழுந்த குஞ்சுகளுக்கு மீன்களை உணவாகக் கொடுப்பது இவர்களின் அன்றாட வாழ்க்கையாக மாறிப் போனது.

1981ல் இருந்து வனத்துறையில் சாதாரண பறவை கண்காணிப்பாளராக எட்டு ரூபாய் சம்பளத்துக்கு வேலைக்குச் சேர்ந்த பால்பாண்டி, தற்போது வரை தனது சொந்தப் பணத்திலிருந்தே பறவைக் குஞ்சுகளுக்கு தினசரி மீன் வாங்கி உணவளித்து வருகிறார். இவரது குடும்பத்துக்கு இதுவே மிகப்பெரிய செலவு. பறவைகளின் மேல் உள்ள பாசத்தால் வள்ளித்தாய் தன்னுடைய நகைகளை அடகு வைத்து, மீன்கள் வாங்கி பறவைக் குஞ்சுகளுக்கு உணவிட்டது, கூந்தங்குளம் பறவை சரணாலயத்தின் வரலாற்றில் மிகப் பெரியதொரு நிகழ்வே. சமீபத்தில் வள்ளித்தாய் இறந்து போனார். மீன்கள் சாப்பிட்டு வள்ளித்தாயோடும் பால்பாண்டியோடும் வளர்ந்த பறவைகள் பறந்து சென்று, மீண்டும் அடுத்த ஆண்டு அவரைத் தேடி ஊருக்கு வருவதும், அவரைப் பார்ப்பதும்... சங்க இலக்கியப் படிமங்களின் தொடர்ச்சி.

பறவை காப்பாளராக இருந்து கொண்டே பறவைகளின் வாழ்க்கை பற்றி பால்பாண்டி படிக்கத் தொடங்கினார். புதிய பறவைகளின் வருகை காலத்தை அறிவது, அவை கூடு கட்டும் முறைகளைத் தெரிந்து கொள்வது, குஞ்சு பொரித்து வாழும் வாழ்வையும் தெரிந்து கொள்ள முயற்சித்தார். அப்பகுதியில் ஜூலை 2008ல் 4223 கூடுகள் இருப்பதாகக் கூறினார். குறிப்பிட்ட பருவத்தில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான பறவைகள் கூந்தங்குளத்துக்கு வருவதாகக் குறிப்பிடுகிறார். தை அமாவாசையில் வந்து கூடு கட்ட ஆரம்பித்து, ஆடி அமாவாசையில் வலசை போகும் எல்லா பறவைகளைப் பற்றியும் விரல் நுனியில் விவரங்களை வைத்திருக்கும் பால்பாண்டி, நீர்ப்பறவைகளின் கூடுகள், நிலம்-மரத்தில் கட்டப்படும் கூடுகளைப் பற்றி விரிவான ஆய்வுகளைச் செய்துள்ளார். வானம்பாடிப் பறவைகளின் மூன்று வகை, புள்ளிமூக்கு வாத்து, பூநாரைகள் உள்ளிட்ட பறவைகளோடு 69 வகை பறவைகளின் கூடுகளை இவர் கண்டறிந்துள்ளார். குறிப்பாக உலக அளவில் இதுவரை யாரும் கண்டுபிடிக்காத, அடையாளப்படுத்தாத பறவைகளின் கூடுகளை தமிழகத்தின் தென்பகுதியில் அலைந்து திரிந்து இவர் கண்டுபிடித்திருப்பது, ஒரு பறவையியல் அறிஞரி்ன் பணிக்கு ஒப்பானது. இதில் குறிப்பிடத்தக்கது செண்டு வாத்தின் (காம்ப் டக்) கூட்டை இவர் கண்டுபிடித்ததுதான்.

உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்து வரும் பறவையியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் இந்தப் பகுதி பறவைகளைப் பற்றி கற்றுக்கொள்ள படிப்பறிவில்லாத பால்பாண்டியையே நாடுகின்றனர். வெளிநாடுகளிலிருந்து வரும் மாணவர்கள், இவருடன் மாதக் கணக்கில் தங்கி ஆய்வு மேற்கொள்கின்றனர். பறவை காப்பாளர் என்ற நிலையில் இருந்து இன்று பறவையியல் ஆசிரியராக பால்பாண்டி மாறிவிட்டார். இவரை பல நிறுவனங்கள் பாராட்டிவிட்டன, அண்டை மாநிலமான கேரளம் உட்பட பல விருதுகள் இவரைத் தேடி வந்துள்ளன. ஆனால் அவரது வாழ்நிலை ஆரம்ப காலத்திலிருந்து மாறவில்லை. கூந்தங்குளம் விவசாயப் பண்ணையார்கள் நிறைந்த ஊர். அந்த ஊரில் இருக்கும் ஒரே குடிசைவீடு பால்பாண்டியுடையதுதான்.

சென்னைக்கு அருகே இருக்கும், அளவிலும் பறவை வகைகளிலும் சிறியதான வேடந்தாங்கலுக்கு கொடுக்கப்பட்ட அளவுக்கு கூந்தங்குளம் மீது அரசு கவனம் செலுத்தவில்லை. 1994ல் பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்ட கூந்தங்குளம் இன்றும் முழுமையான சரணாலயமாக வளராத நிலையிலேயே இருக்கிறது. ஆனால் இது வெறும் பறவைகள் சரணாலயமல்ல, இயற்கை சுழற்சி சிறப்பாக செயல்படுவதற்கான அற்புதமான அடையாளம். குளங்களில் நிரம்பியிருக்கும் பறவைகளின் எச்சம், விவசாயத்துக்கு இயற்கை உரமாகப் பயன்படுகிறது. உயிர் சுழற்சியின் மையமாகவும், பறவைகள்-மனிதர்கள்-இயற்கை இடையிலான இறுக்கமான பிணைப்பின் அடையாளமாகவும் திகழும் இந்தச் சரணாலயம் அரசின் கவனத்தில் படாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது குளத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படாமல், பறவைகள் வராத நிலையும் சில நேரம் ஏற்பட்டிருக்கிறது.

தமிழக அரசு கூந்தங்குளம் போன்ற மதிப்புமிக்க சரணாலயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். குளங்களில் பருவகாலத்தில் தண்ணீர் நிரம்பியிருக்க வேண்டும். பறவையியல் பயிற்சி மையம் ஒன்று தொடங்கப்பட வேண்டும். இங்கு வரும் அனைத்து பறவைகளின் ஒளிப்படங்கள் விவரக் குறிப்புகளோடு நிரந்தரக் கண்காட்சி அமைக்க வேண்டும். மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் இல்லாத சூழல், பறவை பாதுகாப்பு போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும். இவை அனைத்தையும் உடனே நிறைவேற்றிவிட முடியாது என்பதில் சிறிது நியாயம் இருக்கிறது.

ஆனால் 1981ல் இருந்து பறவைக் காப்பாளராக இருந்த பால்பாண்டியை, அரசு இதுவரை நிரந்தரப் பணியாளராக மாற்றவில்லை. சொற்ப சம்பளத்தில் தன்னார்வத்துடன் வேலை பார்த்து வந்த இந்த இயற்கை காப்பாளரை, என்ன காரணத்தினாலோ தமிழக அரசு வனத்துறை வேலையை விட்டு சமீபத்தில் தூக்கிவிட்டது. கீழே விழுந்த எத்தனையோ குஞ்சுகளைக் காப்பாற்றிய பால்பாண்டி, இன்று கீழே விழுந்த மற்றொரு பறவை ஆகியிருக்கிறார். அவர் காப்பாற்றப்பட வேண்டும்.

- ஆர்.ஆர். சீனிவாசன், காஞ்சனை திரைப்பட இயக்கத்தை நிறுவியவர், ஆவணப் பட இயக்குநர். 

Pin It