சாதி தனது கோரமுகத்தையும், இரத்தக்கறை படிந்த பற்களையும் இந்தியாவில் காட்டுவது என்பது வழமையான ஒன்றாகி விட்டது. சாதிக்காகவும், தனது கௌரவத்திற்க்காகவும் தான் பெற்ற மகள் (அ) மகனைக் கொல்வதும் இந்தியாவில் புதியவை அல்ல. பின் ஏன் இந்த கட்டுரை? சாதிப் பஞ்சாயத்துகள் கொடுக்கும் மரண தண்டனைகளை இந்திய நீதிமன்றம் தடுக்கக் கூடாது, அவ்வாறு தடுத்தால் நீங்கள் எந்த சட்டத்தை வைத்து தடுக்கின்றீர்களோ, அச்சட்டத்தையே மாற்ற எங்களால் முடியும் என அறைகூவல் விடுக்கின்றது ஒரு சாதிப் பஞ்சாயத்து அமைப்பு. ஹரியானாவில் உள்ள கப் () என்றழைக்கப்படும் இந்தப் பஞ்சாயத்து, ஜாட் என்ற ஆதிக்க சாதியினரின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு அமைப்பு.
மனோஜ் பன்வாலாவும், பாப்லி பன்வாலாவும் தங்களது குடும்பங்களின் எதிர்ப்பையும் மீறி காதல் திருமணம் செய்தவர்கள். திருமணமான பின்னர் இவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு வெளியேறி ஒரு நகரத்தில் சென்று வாழ்ந்து வந்தனர். காதல் திரைப்படத்தில் வருவது போலவே இவர்களை தங்களது கிராமத்திற்க்கு அழைத்து வந்த பெண்ணின் குடும்பத்தார் கப் பஞ்சாயத்துத் தலைவர் கங்கா இராமின் தீர்ப்புப்படி கௌரவத்திற்க்காக இவர்கள் இருவரையும் படுகொலை செய்துள்ளனர். படுகொலை செய்யப்பட வேண்டிய அளவிற்கு அவர்கள் செய்த தவறு ஒரே கோத்திரத்தில் பிறந்தது தான். ஜாட் சாதியில் மட்டும் 4830 கோத்திரம் உள்ளதாகவும் மேலும் 100 கோத்திரம் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என கூறுகின்றது கப் பஞசாயத்து. இந்த கோத்திரம் என்பது வேதங்களிலிருந்து தொடர்பவை எனவும் கூறுகின்றனர்.
இந்தப் படுகொலை வழக்கில் ஹரியானாவின் கர்னால் நீதிமன்றம் இந்த ஆண்டு(2010) மார்ச் 30 ஆம் திகதி ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வெளியிட்டது. இந்தப் படுகொலைக்கு உத்தரவிட்ட கப் சாதி பஞ்சாயத்து தலைவர் கங்கா இராமிற்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும், இந்த படுகொலையைச் செய்த பாப்லி பன்வாலா குடும்பத்தினர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த கப் சாதி பஞ்சாயத்துத் தலைவர்கள் அனைவரும் 2010 ஏப்ரல் 13ஆம் திகதி குருசேத்ரா என்ற ஊரில் கூடினர். வாழ்நாள் சிறை தண்டனை வழங்கப்பட்ட கங்கா இராமிற்கு தங்களது முழு ஆதரவையும் நல்கினர். மேலும் இது போன்ற நீதிமன்றத் தீர்ப்புகள் வருங்காலத்தில் வராமல் இருப்பதற்காக ஒரே கோத்திரத்திலும், தனது குடும்ப மற்றும் உறவுகளின் கோத்திரங்களையும் சேர்த்து மொத்தம் ஏழு கோத்திரங்களிலும் யாரும் திருமணம் செய்யக்கூடாது அவ்வாறு செய்வதை சட்டப்பூர்வமாக இந்து திருமணச் சட்டம் தடை செய்ய வேண்டும் என தீர்மானம் இயற்றினர்.
இந்தக் கூட்டத்திற்கு அப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினரான நவீன் ஜிந்தால் (உயர்குடி(பணக்காரர்களுக்கான) காங்கிரசு கட்சி) சென்று அவர்களின் தீர்மானத்தைப் பற்றி தனது கட்சி மேலிடத்தில் கூறுவதாகவும், உங்களின் ஏழு கோத்திர திருமணத் தடை தீர்மானத்துடன் நான் ஒத்துப் போகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் இவர் கப் போன்ற சாதிய பஞ்சாயத்துகள் மன்னர்களான அசோகர் மற்றும் ஹர்சவர்த்தன் காலத்திலிருந்து செயல்பட்டு வருகின்றனர், இவர்கள் மேலும் நல்ல பணிகளை தொடர வேண்டும் என்றும் கூறியுள்ளார். சற்று இவர்கள்(கப்) செய்த திருப்பணிகளை பார்ப்போம். கடந்த மாதம் கிசார் மாவட்டத்தில் உள்ள மீர்சாப்புர் என்ற கிராமத்தில் இருந்த பெரும்பான்மையான தலித் சமூக மக்களின் குடிசைகளைக் கொளுத்தியது. இதில் மாற்றுத் திறனாளியான பெண் ஒருவரும் அவரது தந்தையும் உயிருடன் எரிக்கப்பட்டனர். மௌகா மற்றும் சிந்தினி என்ற இளம் காதலர்களுக்கு மரண தண்டனை அளித்தது (இவர்கள் இருவரும் அந்த ஏழு கோத்திரங்களுள் வருகின்றனர் என்பதால்). இவையெல்லாம் ஊடகங்களில் கடந்த ஒரு மாதமாக வெளிவந்தவை மட்டுமே !.
இந்தக் கூட்டங்களுக்கு ஹரியானாவின் முன்னாள் முதல்வரான ஒம் பிரகாசும் சென்று தனது முழு ஆதரவை நல்கியுள்ளார். ஏனெனில் ஓம் பிரகாஷ் முதல்வராக இருந்ததற்கு ஜாட் சாதியினரின் பெரும் பங்களிப்பு இருந்தது என்பதாலும், மீண்டும் வெல்வதற்கு கணிசமான அளவு உள்ள ஜாட் சாதியின் ஆதரவு தேவை என்பதற்காகவே இந்த கண்மூடித்தனமான ஆதரவு. இன்னொரு முக்கிய கட்சியான பா.ஜ.க வைப் பற்றி சொல்லவே தேவை இல்லை. இந்து மதமும் வேதங்களும் அவர்களின் இரு கண்கள். ஆகையால் அவர்களின் பரிபூரண ஆதரவை கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள் அறிவித்து விட்டனர்.
ஆதிக்க சாதியின் மிரட்டலுக்குப் (வாக்குகளுக்கு) பயந்து, வரும் நாட்களில் இந்த ஏழு கோத்திர திருமணங்கள் இந்து திருமணச் சட்டத்தில் தடை செய்யப்படலாம், மேலும் அது போல திருமணம் செய்தவர்களை படுகொலை செய்வதும் சட்டப்படி நியாயம் என்றும் ஆகலாம்.
குறிப்பு: இது ஏதோ வடமாநிலத்தில் நடந்த ஒன்று என்றும் இதனால் நமக்கு என்ன என்றும் இருந்து விட வேண்டாம். விஜய் தொலைக்காட்சியின் நீயா நானாவில் திண்டுக்கல்லைச் சார்ந்த சாதி பஞ்சாயத்துத் தலைவர் சொன்ன வார்த்தையான இல்லாமல் (படுகொலை) செய்து விடுவோம் என்பது என்றாவது நமது நீதிமன்றங்களால் தவறு என்று கூறி அவரை சிறையில் அடைத்தால் பின்னர் அந்த ஆதிக்க சாதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மாற்று சாதி திருமணங்களைத் தடை செய்ய வேண்டும் என்று விண்ணப்பித்தால் நமது மாநில முதல்வர் கொள்கை(!) பிடிப்பு உள்ள கருணாநிதி கண்டிப்பாக அவர்களுக்காக இதை சட்டமாக்குவார். ஏனெனில் முதல் முறையாக குளித்தலையில் இருந்து வெற்றி பெறுவதற்கே அவர் ஆதிக்க சாதியான கவுண்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியவர். இதற்கு தமிழகத்தில் முதல் முறையாக எதிர்க் கட்சியின் தலைவி பார்ப்பன மாமியின் ஆதரவும் உறுதியாகக் கிடைக்கும்.
நன்றி : Times of India (Bangalore edition), Tehalka