சத்திஸ்கரில் நக்சலைட்டுகளின் அதிரடித்தாக்குதலில் 30 போலீசார் பலி, மாவோயிஸ்டுகள் தாக்குதல் - சி.பி.எப் வீரர்கள் 11 பேர் பலி, நாடு முழுவதும் மாவோயுஸ்ட் அமைப்புக்கு மத்திய அரசு chitambaram_00தடை, மாவோயிஸ்ட் தடையை எதிர்த்து 5 மாநிலங்களில் 3 நாள் பொது வேலைநிறுத்தத்திற்கு நக்சலைட்டுகள் அழைப்பு - இயல்பு வாழ்க்கை பாதிப்பு, நாடு முழுவதும் கெரில்லாத்தாக்குதல் நடத்த மாவோயிஸ்டுகள் திட்டம், என்றெல்லாம் வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் வரும் தொடர் செய்திகளை நாம் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருக்கும் தருண‌த்தில் இன்னும் ஒரு செய்தி 76 போலீசார் பலி. முன்பு எப்போதுமில்லாத அளவிற்கு 76 போலீஸார் பலி என்றும், 40 லட்சம் மத்திய அரசும், தலா 5 லட்சம் மாநில அரசும் என முன்னர் மாவோஸ்டுகளால் கொல்லப்பட்ட போலீசாருக்கு கிடைக்கப்பெறாத சலுகையாக அறிவிக்கப்படுவதின் நோக்கமும், முக்கியத்துவம் படுத்துவதின் மர்மமும் தெரியவில்லை.

மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட், சத்திஸ்கர், ஒரிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா என இந்தியாவில் பத்துக்கும் மேற்பட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகளால் மாநில போலீஸ் மீதும், இராணுவப்படைகளின் மீதும் பெருந்தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசும் மாவோயிஸ்டுகளை ஒழித்துக்கட்ட பெருந்திட்டங்களைத் தீட்டி தனது படைகளை ஏவுகிறது. இது அன்றாட நிகழ்வாகவே மாறியுள்ளது. மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களுக்காண காரணத்தை அறிவதற்கு முன்பாக நியூட்டனின் முன்றாம் விதியை நினைவில் கொள்ள‌வேண்டியது அவசியமாகிறது - ஒவ்வொரு விசைக்கும் சமமான நேரெதிர் விசை உண்டு.

இந்தியாவின் மையப்பகுதியான மிக நீண்ட தண்டகாரண்யா வனப்பகுதி மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், சத்திஸ்கர், ஒரிசா உள்ளிட்ட மாநிலங்களில் பரவியுள்ள வனப்பகுதி ஏராளமான இயற்கை வளங்கள் மற்றும் கனிம வளங்கள் நிறைந்த வளமான பகுதி. இங்கு மாடியா கோண்டு, கோவரி, கொண்டா ரெட்டி, நயாகபூ, தோர்லா, மூர்யா கோயா, ஒடிய புருஜா, குடிஜார்சா, புட்டார், துர்வா போன்ற பல்வேறு பழங்குடி மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களின் தொன்மையான பண்பாட்டு மரபுகளைக் கொண்டு நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் நீண்டகாலமாக தங்கள் உரிமைக்கான போராட்டங்கள் நடத்தியதின் மூலமாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் சில மாவட்டங்களைப் பிரித்து சத்திஸ்கர் என்ற தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டது.

இயற்கை எழில்கொஞ்சும் சத்திஸ்கர் மலைப்பிரதேசங்களில் ஏராளமான பாக்சைட், இரும்புத்தாது, டால்மேட், கிரைனைட், பளிங்கு, சுண்ணாம்பு, மைகா, மெக்னீசியம் உள்ளிட்ட பல்வேறு கனிம வளங்கள் இருக்கின்றன‌. இம்மாநிலம் ராஜ்நந்த்காவன், கான்கர், பஸ்தர், தண்டேவாடா போன்ற பல்வேறு பகுதிகளை உள்ளடக்கியது. ஆயினும், இங்கு வாழும் மக்களின் வாழ்க்கைநிலை மிகப் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இம்மக்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான உணவு, உடை, மருத்துவம், கல்வி, வேலை  வாய்ப்புகள், சாலை வசதிகள், போக்குவரத்து மின்வசதி போன்ற எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக இருக்கின்ற‌ன‌ர்.

பிரிட்டிசு ஆட்சிக்காலத்தின் போது இங்குள்ள பழங்குடி மக்களுக்கெதிராக கொண்டு வரப்பட்ட பல்வேறு வனப்பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிராகவும், தங்கள் பகுதியின் வனவளங்களைப் பாதுகாக்கவும் தங்களின் பாரம்பரிய உரிமைகளுக்காகவும் பிரிட்டிசு கம்பெனிக்கெதிராக இந்தப் பழங்குடி மக்கள் தீவிரமான ஆயுதப் போராட்டத்தை நடத்தினர் என்பது வரலாறு. 1910 இல் பிரிட்டிசு ஆட்சியை எதிர்த்து பூம்கல் போராட்டத்தில் தொடங்கி 1960 இல் நேரு தலைமையிலான மத்திய அரசு பழங்குடி மக்களின் தேச உரிமையை தங்களின் மன்னரிடமிருந்து பறித்ததற்கு எதிரான போராட்டம், 1970 இல் உலக வங்கியின் நிதியுதவியோடு இங்குள்ள வனப்பகுதிகளை அழித்து, பைன் (தேவதாரு) மரத்தோட்ட திட்டங்களுக்கு எதிரான போராட்டம், 1978 இல் பைலாடில்லா சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்கள் என சத்திஸ்கரின் வரலாறு விரிந்துகொண்டே செல்கிறது.

பொதுவாக இங்கு பெரும்பான்மையாக வாழும் பழங்குடி மக்கள், பழைய பின்தங்கிய நிலையிலேயே அவர்களின் அரசியல் பொருளியல் கட்டமைப்பு தொடர்கிறது. மேலும் பன்னாட்டு கம்பெனிகளால் இந்தப் பகுதியின் கனிம வளங்களும் இன்ன பிற வளங்களும் ஆட்சியாள‌ர்களால் தொடர்ந்து கையகப்படுத்தப் படுகிறது. பல ஆயிரக்கணக்கான பழங்குடிகள் தங்களின் பாரம்பரிய பகுதிகளிலிருந்து மாநில வனத்துறை மற்றும் போலீசு படையினரால் வெளியேற்றப்பட்டனர்.

சத்திஸ்கர் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்திடவும், பழங்குடி மக்களின் தேச உரிமையை அடைந்திடவும் 1980 இல் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி - மாவோயிஸ்ட் அமைப்பில் (அன்று மக்கள் யுத்தம்) சேர்ந்து தங்களின் வல்லாதிக்க - இந்திய அரசுகளுக்கெதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

சத்திஸ்கரில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் கொண்டுவர‌ப்பட்ட வளர்ச்சிப்பாதை திட்டங்கள் யாவும், வல்லாதிக்க அல்லது பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களுக்கு ஆதரவாக இருந்தது. இத் திட்டங்களை எதிர்ப்பவர்கள் யாராயினும் அவர்களை பழங்குடி மக்களின் எதிரிகள் அல்லது வளர்ச்சித் திட்ட எதிர்ப்பாளர்கள் என்று ஆட்சியாளர்களால் கடுமையான ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள பாக்சைட் சுரங்கத் திட்டங்களுக்காக நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிரிருந்து, ஹைட்ரோ மின் திட்டங்களுக்காக 60 க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்தும் பழங்குடி மக்கள், எந்தவித மாற்று நிவாரணமுமின்றி ஆட்சியாளர்களால் வெளியேற்றப்படுகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக மாவோயிஸ்டுகளால் தலைமையேற்று நடத்தப்படும் போராட்டங்களால் மட்டுமே மேற்கூறிய நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

சத்திஸ்கர் உள்ளிட்ட தண்டகாரண்யாவில் வல்லாதிக்க - பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களுக்காக கொண்டுவரப்பட்ட இரும்புத்தாது, பாக்சைட் போன்ற இன்னபிற சுரங்கத் திட்டங்களை நிராகரிக்கும் பழங்குடிமக்கள் மாவோயிஸ்ட்டுகள் தலைமையில் தங்களுடைய அதிகாரத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கும், தங்களுடைய வாழ்வாதாரங்களுக்கான விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியை செயல்படுத்துவதற்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பையும் தருகின்றன‌ர்.

சத்திஸ்கரைப் பொருத்தவரை மாவோயிஸ்ட் இயக்கம் ஒரு மக்கள் இயக்கமாக வளர்ச்சியடைந்துள்ளது. விவசாயத்தைப் பெருக்குவதற்காக ஏரிகளையும், குளங்களையும் சீரமைத்துள்ளனர். மக்கள் போக்குவரத்துக்கான சாலை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான பள்ளிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கான பரஸ்பர நிதி உதவிக் குழுக்கள், விதை வங்கிகள் உள்ளிட்ட சிறிய கூட்டுறவு சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன. மருத்துவமனைகள், நூலகங்கள், விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் என மக்கள் மேம்பாட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

2005 இல் சத்திஸ்கர் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியாளர்கள் வல்லரசு -பன்னாட்டு கம்பெனி திட்டங்களுக்கு தடையாக இருக்கும் மாவோயிஸ்ட் கட்சியின் மீதும் அதன் தலைமையில் அணிதிரளும் பழங்குடி மக்கள் மீதும் அடக்குமுறையைக் கையாளுகின்றனர். மாநில ஆரசு (பா.ஜ.க) உதவி கேட்கும் முன்னே மத்திய அரசு பல பட்டாலியன் துணை இராணுவப் படைகளை சத்திஸ்கருக்கு அனுப்பி, மாவோயிஸ்ட் வேட்டை என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் சல்வாஜூடும் (அமைதி நடவடிக்கை) எனும் பெயரில் மகேந்திர கர்மா என்ற காங்கிரசு கட்சியைச் சேர்ந்தர் தலைமையில் குண்டர் படையை அமைத்து, மாவோயிஸ்ட்டுகளின் ஆதரவாள‌ர்கள் அல்லது ஆதரவாளர் என சந்தேகப்படும் பல நூற்றுக்கணக்கான பழங்குடியினரையும், அவர்களது கிராமங்களையும், கால்நடைகளையும், வயல்வெளிகளையும், தானியங்களையும் சல்வாஜூடும் குண்டர்கள் தீவைத்து கொளுத்தியிருக்கின்றனர். நீர்நிலைகள் balan_india_maoistsகுண்டர்கள் படைகளால் விசமாக்கப்படுகின்றன. எவ்வித விசாரணையுமின்றி பழங்குடியினர் பல மாதங்கள் சிறையிலடைக்கப்படுகின்றனர். இதற்கு காவல்துறையும் உடந்தையாய் நிற்கிறது. இத்தகைய அடக்குமுறைகளை எதிர்த்து எழும் எவ்வித சனநாயகக் குரலையும் எதிர்‍எதிர் கட்சிகள் என்றும் வெவ்வேறு கொள்கைகள் என்றும் நம்மில் பலரால் விமர்சிக்கப்படும் காங்கிரசும், பா.ஜ.கவும் எவ்வித மாறுபாடுமின்றி ஒரேமாதிரியாக ஒடுக்கிவருகிறது. செய்தி ஊடகங்கள் அரசின் கட்டாய தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. சல்வாஜூடும் நடத்தும் கொலைகளுக்கு எதிரான சனநாயக இயக்கங்களும் கடுமையாக ஒடுக்கப்படுகின்றன. (சத்திஸ்கர் அரசின் சல்வாஜூடுமை எதிர்த்துப் போராடிய மக்கள் குடியுரிமை தலைவரும் குழந்தைகள் நல மருத்துவ நிபுணருமான டாக்டர். பினாயக் சென் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று கூறி சிறப்பு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடந்த 2007யில் கைது செய்யப்பட்டார். இதை எதிர்த்து நாடுமுழுவதிலும் சர்வதேச அளவிலும் உள்ள பல்வேறு சனநாயக இயக்கங்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாக, பினாயக் சென் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார்.)

வதைமுகாம்களிலும், கிராமங்களிலும் காவல் துறையினரால் பழங்குடிப் பெண்களை பாலியல் வன்முறை செய்வது அன்றாட நிகழ்வாகியுள்ளது. இத்தகைய தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும், போலீசு, துணை இராணுவப் படையின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்கும் மக்கள், மாவோயிஸ்ட் கெரில்லாப் படையில் இணைந்து எதிர்தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். இத்தகைய பழங்குடி மக்களின் இருத்தல் மீதான தாக்குதல்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி பெரும் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களும், மாநிலந்தழுவிய வேலை நிறுத்தங்களும் பலமுறை நடத்தப்பட்டு பலனற்றுப்போயின. அதன் விளைவாக ஆட்சியாளர்களின் கொடூரமான அடக்குமுறைகள் இருந்தபோதிலும் பழங்குடி மக்கள் தொடர்ந்து மாவோயிஸ்ட்டுகளின் தலைமையில் அணிதிரண்டு வருகின்றனர்.

அன்மையில் சத்திஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூருக்கு வந்துசென்ற அமெரிக்க அயல்நாட்டு பிரதிநிதிக்குழு முதலமைச்சர் இராமன் சிங்கிடமும், அரசாங்கப் பிரதிநிகளிடமும் நக்சல் செயல்பாடுகள் பற்றியும், நக்சல்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் பற்றியும், சத்திஸ்கரில் மூலதனத்தை உருவாக்கும் விதங்கள் பற்றியும் அவர்கள் விசாரித்தனர். இது வெறுமனே தற்செயலான நிகழ்வல்ல; அமெரிக்கப் பிரதிநிதிக் குழுவுடனான இந்த ரகசிய விவாதங்களுக்குப் பிறகு, மாட் பகுதியின் மீது தாக்குதல் தொடுப்பதற்கான உடனடித்திட்டத்தையும், மாவோயிஸ்டுகள் மீது ஆதிக்கத்தை நிலைநாட்ட மிகப்பெரிய இராணுவத் தாக்குதலுக்கான வரைபடம் ஒன்றையும் தயாரித்துக் கொடுத்துள்ளது. அந்த வழிமுறையைப் பின்பற்றி மைய நல காவல் படைகளையும், உள்ளூர் காவல் துறையையும் ஒருங்கிணைக்க மூத்த அதிகாரி ஒருவரை மைய அரசாங்கம் நியமித்துள்ளது. மாநில ஆளுநரான ஈ.எஸ்.எல். நரசிம்மன் (முன்னால் உயர் உளவுப்பிரிவு அதிகாரி) மைய அரசுடன் இரகசியப் போச்சுவார்த்தைகளை நடத்தி சத்திஸ்கர் மாட் பகுதிக்கு 7 மைய நல காவல்படை பட்டாலியன்களையும், பிற மைய படைப்பிரிவுகளையும் உடனடியாக அனுப்புமாறு வலியுறுத்தினார். துணைக்கோள் (சேட்டிலைட்) மூலம் ஒட்டுமொத்த மாட் பகுதியின் திட்டவட்டமான புவி அமைப்பியல் அதாவது சிறு கிராமங்கள், காட்டுவழிப்பாதைகள், நீருள்ள பகுதிகள் ஆகிய அனைத்தையும் கொண்ட வரைப்படத்தை தயாரித்துவிட்டு காவல் துறையும், மைய படைப்பிரிவுகளும் மாவோயிஸ்டு மற்றும் பழங்குடியினர்களுக்கு எதிராக திட்டமிட்ட நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

மிகத் தொன்மையான பழங்குடி இனங்களில் ஒன்றான மாடியா கோண்டுகளின் தாயகமான மாட் பகுதியானது, அவர்களுடைய வாழ்க்கை முறையையும், பண்பாட்டையும், வழக்காறுகளையும் இன்னபிறவற்றையும் தொடர்ந்து பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால் மைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசும், மாநில பா.ஜ.க அரசும் பழங்குடி கிராமங்களை எரிப்பதும் அழிப்பதும் தண்டோவாடாவிலும், பீஜப்பூரிலும் செய்துள்ளதைப்போலவே இம்மக்களையும் அப்பகுதிக்கு வெளியே, அரசாங்கம் அமைத்துள்ள வதை முகாம்களை நோக்கி விரட்டுவது என்ற இவர்களின் திட்டங்களால் இந்தியாவின் மிகத் தொன்மையான பழங்குடிகளின் வளங்களுக்கும், பண்பாட்டுக்கும், வாழ்க்கை முறைக்கும் பெரும் இன்னல்களை உண்டாக்கி கொண்டிருக்கின்றது. ஏறத்தாழ 4,000 சதுர கி.மீட்டர் பரப்பைக் கொண்ட மாட் பகுதி, தண்டகாரண்யாவில் உள்ள ஒரு மண்டலம் ஆகும். இப்பகுதியில் வாழும் பழங்குடிகள் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பிரிட்டிசாரையும் பிற சுரண்டலாளர்களையும் போர்க்குணத்தோடு எதிர்த்து ஆயுதந்தாங்கிய போராட்டம் நடத்திய தீரமிக்க வரலாற்றைப் பெற்றவர்கள்.

இடதுசாரி தீவிரவாதம் முன்னிலைப்படுத்தும் அபாயம் என்று கூறி அண்மையில் 2009 செப்டம்பரில் டெல்லியில் நடந்த உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த அனைத்து மாநில உயர் போலீசு அதிகாரிகள் மாநாட்டைக்கூட்டி மன்மோகன் சிங்கும், சிதம்பரமும் அவ்வப்போது நக்சல் அபாயத்தை குறித்து நாட்டுமக்களுக்கு பீதியூட்டிக் கொண்டிருக்கிறார்கள். நக்சல்கள் நாட்டிலுள்ள கனிம வளங்களையும், பரந்த பின்தங்கிய பகுதிகளிலுள்ள பிற வளங்களையும் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அவர்கள் அடிக்கடி கூறுகின்றனர். மிட்டல், டாடா, ஜிண்டால், எஸ்ஸார் போன்ற மிகப்பெரிய இந்திய கம்பெனிகள் மூலமாக அப்பகுதியிலுள்ள மொத்த கனிம வளங்களையும் எந்தத் தடையுமின்றி அடையும் நோக்கில், அதற்குத் தடையாய் இருக்கும் மாவோயிஸ்டுகளை நசுக்குவதற்காக மத்திய மாநில ஆட்சியாளர்களுக்கு மிகப்பெரும் தொகையை வல்லரசுகள் ஒதுக்குகின்றன‌. இட்லரின் கொள்கைப்பரப்பு செயலாளர் கோயோபோசு கோட்பாட்டின்படி - ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மையாகும் என்பதைப்போல நக்சல்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக இருக்கின்றார்கள் என்றும், சத்திஸ்கர் பழங்குடி பகுதிகளை பின்தங்கிய நிலையிலேயே வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் புனையப்பட்ட பொய்யை ஓயாமல் பரப்பி வருகிறார்கள்.

கடந்த மே மாதம் நடந்து முடிந்த 15 வது பாராளுமன்ற தேர்தலை தொடர்ந்து மீண்டும் ஆட்சிக்கு வந்த காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, நாட்டின் முதன்மை அபாயம் இடதுசாரி தீவீரவாதம் - மாவோயிஸ்டுகள் தான் என்று அறிவித்தது. மேலும் மத்திய உள்துறை அமைச்சரான சிதம்பரம், மாவோயிஸ்டுகளை ஒடுக்குவதற்காக 100 நாள் செயல்திட்டம் ஒன்றையும் அறிவித்தார். 2009 ஜூனில் மேற்குவங்க மாநிலத்தில் மார்க்கிஸ்ட் ஆட்சிக்கெதிராக லால்கர் மக்கள் தொடுத்த வீரதீரமான எதிர் தாக்குதலையடுத்து கலகலத்துப்போன அம்மாநில முதலமைச்சர் புத்ததேவ் தனது ஆட்சியை காப்பாற்றக்கோரி மைய அரசான காங்கிரசுடன் கைகோர்த்ததும் நமக்கு நினைவிருக்கும்.

சத்திஸ்கர் மாநில பாஜக அரசாங்கமும், இந்திய மைய காங்கிரசு அரசும் தாங்கள் முன்மொழிந்த தாக்குதலை நியாயப்படுத்த மாவோயிஸ்டுகளின் இராணுவத் தலைமையகமாக பழங்குடி மக்களின் பிரதேசம் ஆகியுள்ளது என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிசுகாரர்களைப் போல அனைவரையும் கொன்றொழி, அனைத்தையும் கொள்ளையடி, அனைத்தையும் அழி என்று சொல்லவில்லையே தவிர மற்றபடி பாங்குரா - புரூரியா - மிட்னாபூரிலிருந்து வடக்கு ஆந்திராவிலுள்ள விசாகா - சிரிகாகுளம் ஏஜென்சி வரையிலான பழங்குடி பகுதியிலுள்ள கனிம வளங்கள் மீது வல்லாதிக்கம் அல்லது பன்னாட்டு கம்பெனிகள் தங்களுடைய பேராசைமிக்க பார்வையை செலுத்தத் தொடங்கிவிட்டன‌. இத்தகைய இயற்கை வளங்கள் மீது தன் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முடியாதபடிக்கு மாவோயிஸ்டுகள் தடையாக நிற்கின்றனர் என்பதே உண்மை.

இப்போதும் 76 போலீசாரின் படுகொலைக்கு தார்மீக பொறுப்பேற்பதாக சிதம்பரம் சொல்வதும், எங்கோ சிறுதவறு நிகழ்ந்ததாக, நக்சல் விரித்த வலையில் போலீசார் சிக்கிகொண்டதாக மன்மோகன் சிங் சொல்வதும் நமக்கான விசயமாக தோன்ற‌வில்லை. நிதிவுதவியளித்த வல்லரசுகளின் நம்பிக்கையை மீண்டும் பெறமுயற்சிக்கும் வார்த்தைகளாகத்தான் தோன்றுகிறது.

-இரா.பாலன்

Pin It